உண்மைக்கதை: தாய்மை என்னுடைய நட்புகளை மறுவரையறை செய்தது

உண்மைக்கதை: தாய்மை என்னுடைய நட்புகளை மறுவரையறை செய்தது
Published on

என்னுடைய பழைய தோழி ஒருவரும் நானும் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கு வருகிற பொருளற்ற, ஆனால் கவர்ந்திழுத்துத் திரும்பத்திரும்பப் பயன்படுத்தத் தூண்டுகிற விநாடிவினாக்களில் ஒன்றை நாங்கள் விளையாடினோம். அதன் தலைப்பு, “இப்போதிலிருந்து 10 ஆண்டுகளில் நீங்கள் எப்படி அறியப்படுவீர்கள்?” என் தோழி, என்னைவிட 5 வயது இளையவர், அப்போதுதான் அவருக்குத் திருமணமாகியிருந்தது. அவர் மிக இயல்பாகச் சொன்னார், “10 வருடம் கழித்து நாம் எல்லாரும் ஒரு தாயாகதான் அறியப்படுவோம், இல்லையா?”

தாய் என்பது ஓர் உறுதியான விஷயம்தான். ஆனால், அப்போது என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத காரணங்களுக்காக, என்னுடைய தோழியின் கருத்து என்னைக் காயப்படுத்தியது. தாய்மையால் குழம்பியிருந்த என்னுடைய மூளையில் அது இரு தொகுப்பான காட்சிகளை உருவாக்கியது; ஒன்றில் இந்தத் தோழியும் நானும் லண்டனில் ஒரு விருந்தில் கலந்துகொள்கிறோம், நேரத்தை நன்கு அனுபவித்து மகிழ்கிறோம். இன்னொன்றில், நான் ஒரு கழிப்பறையில் அமர்ந்து சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கிறேன், என் மடியில் என் குழந்தை இருக்கிறது. இவற்றுடன், மூன்றாவதாக ஒரு காட்சியும் வந்தது. நானும் என்னுடைய குழந்தையும் ஏதுமில்லாத ஒன்றுக்காகக் கட்டுப்படுத்த இயலாமல் சிரிக்கிறோம், அந்தக் காட்சி கவனத்தைக் கோரியபடி முன்னால் வந்தது, என்னுடைய மூளையில் நடந்த போட்டியில் அந்தக் காட்சிதான் வென்றது.

அதேசமயம், இதனால் நான் அந்தத் தோழியிடமிருந்து இன்னொரு படி பின்னால் செல்லவேண்டியிருந்தது. இப்படி நான் பின்னால் வந்த இன்னொரு தோழி அவர்.

ஒருவர் தாயாக மாறும்போது, தன்னுடைய மிக நெருங்கிய நட்புகளை எப்படிக் கையாள்வது என்பதை அவருக்கு யாரும் சொல்லிக்கொடுத்து எச்சரிப்பதில்லை. தாய்மை என்பது எந்த அளவு தனிமையான ஒரு பயணம் என்பதையும் அவருக்கு யாரும் சொல்வதில்லை. தாய்மையை உலகெங்கும் பெண்களால் நன்கு பகிர்ந்துகொள்ளப்படுகிற அனுபவம் என்கிறார்கள். ஆனால், வாழ்க்கையை மாற்றுகிற, மிகவும் களைப்பூட்டுகிற, ஆன்மாவை உறிஞ்சுகிற இந்த ‘விஷயம்’, பெண்களுக்கிடையில் மேம்பட்ட ஒரு நட்பைக் கொண்டுவரும் வழியாக இருக்கவேண்டாமோ? அதற்குப்பதிலாக, கடல்போன்ற நண்பர்களுக்குமத்தியில் நான் தன்னந்தனியாக இருந்தேன். எனக்குக் குழந்தை பிறந்த நேரத்தில், பள்ளியில் என்னோடு படித்த சிறந்த தோழியுடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அவர் என்னுடைய குழந்தைபற்றிய கவலைகளை அலட்சியமாக ஒதுக்கினார், (கவலைப்படாதே! இதெல்லாம் முதல் குழந்தை பிறக்கும்போது நடப்பதுதான் என்று அவர் என்னுடைய கவலைகளைக் கேலிசெய்தார்). எனக்கு நினைவிருக்கும் இன்னொரு விஷயம், அப்போது என்னுடைய பழைய சக ஊழியர் ஒருவர் என்னைக் காண வந்திருந்தார், ஒரு பிற்பகல்முழுவதும் நான் அவரோடு செலவிட்டேன், அந்த நேரம்முழுவதும் என்னுடைய குழந்தையின் ஏப்பங்கள், சிரிப்பொலிகளைப்பற்றிய கதைகளைதான் நான் பேசிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, இப்படி என்னைப்பற்றிய பேச்சிலேயே நேரத்தை வீணடித்துவிட்டேனே என்று நாணப்பட்டேன், குற்றவுணர்ச்சி கொண்டேன். அப்படிதான் தாய்மை என்னை மாற்றியது: நான் ஏற்கெனவே பிறருடன் அவ்வளவாகப் பழகமாட்டேன், தாயாக ஆனதால் நான் இன்னும் என்னுடைய கூட்டுக்குள் ஒடுங்கினேன். எனக்குக் கிடைத்த குறைந்த நேரத்தை நான் எனக்காகமட்டும் செலவிட விரும்பினேன், அந்த நேரத்தில் எந்த மனிதரும் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றேன், பெரும்பாலும் அந்த நேரங்கள் நன்கு தூங்குவதற்குப் பயன்பட்டன.

ஆனால், அது என்னை மிக நன்றாக உணரச்செய்யவில்லை. என்னுடைய சமூகத் திறன்கள் தீவிரமாக வரம்புக்குட்படுத்தப்பட்டன - என்னுடைய உரையாடல்களெல்லாம் சின்னக் குழந்தையின் பூ, மூ என்ற ஒலிகளோடு நின்றுவிட்டன, என்னருகில் இருக்கும் பெரியவர்களோடு நான் பேசினாலும், அந்தப் பேச்சில் குழந்தைக்கு உணவு தருவது, தூங்கவைப்பது, சிறுநீர், மலம் கழிக்கச்செய்வது போன்றவைதான் இடம்பெற்றன. நான் சொல்வதைத் தவறாக எண்ணிவிடாதீர்கள்; தாய்மை என்பது நான் உளப்பூர்வமாக விரும்பிய ஒன்றுதான், ஆனாலும், நான் என்னைத் தனிமையாக உணர்ந்தேன், ‘வேறு ஏதோ ஒன்றை’ விரும்பினேன்.  வேறு எதையும் ‘உணர்வதற்கு’ எனக்கு நேரமில்லை; என் மூளைமுழுக்கக் குழந்தைதான். இத்தனைக்கும் என்னுடைய கணவர் நன்கு ஆதரவானவர், என்னுடைய குடும்பம் மிகவும் அன்பானது. முன்பெல்லாம், என்னுடைய தோழிகளுடன் பொருளற்ற விஷயங்களைப் பேசிச் சிரிப்பேன், அதை நினைத்து இப்போது ஏங்கினேன்; யூட்யூபில் நட்சத்திரப் பாடகர்களைப் பார்த்து ஜொள் விட விரும்பினேன்; தொலைந்துபோன மெல்லிசைப் பாடல்களை ஒன்றாகச் சேர்ந்து தேட விரும்பினேன்.

இணையம் எனக்குக் கொஞ்சம் ஆறுதல் தந்தது. எல்லா இடங்களிலும் பெண்கள் இதே நிலையில்தான் இருக்கிறார்கள் என்று இணையம் எனக்குச் சொன்னது. அதன்மூலம், நான் தேடிய சமூக உணர்வை நான் ஒருவழியாகப் பெற்றேன். நான் ‘தாய்மார்களான தோழி’களைத் தேடவேண்டும் என்றும் இணையம் நேரடியாகச் சொன்னது. ஆனால், அது அத்தனை எளிதில்லை. சில இணையத்தளங்கள், ப்ரீஸ்கூல் வாசல்களை முற்றுகையிடச் சொல்லின, உங்கள் குழந்தையின் வகுப்புத்தோழர்களுடன் ‘புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள’ச் சொல்லின. நான் அதையெல்லாம் முயன்றுபார்த்தேன். ஒரே ஒருமுறை.  என் குழந்தையின் ப்ரீஸ்கூல் வாசலில் பல தாய்மார்கள் கச்சிதமாக உடுத்தியபடி குழந்தைகளைப்பற்றியும் பைகளைப்பற்றியும் விவாதிக்கிற கொக்கரிப்புகள் கேட்டன. அப்போதெல்லாம் நான் ஒரு மூலையில் ஒடுங்கிவிடதான் முயன்றேன். நாணவுணர்வு கொண்டவர்களுக்கு இதைப் பரிந்துரைப்பது பயன் தராது.

உண்மை என்னவென்றால், இவ்வழியில் நீங்கள் பல நண்பர்களை இழப்பீர்கள். நான் அப்படிதான் இழந்தேன், இப்போதும் இழந்துகொண்டிருக்கிறேன். சில நட்புகள் மிகவும் வலுவிழந்துவிடும், அதன்பிறகு நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டீர்கள். உங்களுடைய நேரம் நன்றாக இருந்தால் சில, மிகச்சில நட்புகள் இன்னும் வலுவாகும்.

வழக்கமாக இணையத்தில் குவிந்திருக்கும் அறிவுரைகளுக்குப் பெரிய மதிப்பு இருக்காது. ஆனால், இந்த விஷயத்தில் அவற்றைக் கருத்தில் கொள்வது பலன் தரும். ஒருவழியாக, நான் ஒரு ‘தாய்த் தோழி’யைக் கண்டறிந்தேன், ஆனால், ப்ரீஸ்கூல் வாசலில் இல்லை. என்னுடைய அதிர்ஷ்டம், எனக்குக் குழந்தை பிறந்த அதே நேரத்தில் என்னுடைய மிக நல்ல தோழி ஒருவருக்கும் குழந்தை பிறந்தது, ஆகவே, நாங்கள் இயல்பாக மற்றவர் பக்கம் சாய்ந்தோம். என்னுடைய கென்யத் தோழிக்கும் எனக்கும் ஒற்றுமைகளைவிட வேற்றுமைகள்தான் அதிகம். எங்களுடைய பண்பாடு, இனம், மதம், நிறம், வளர்ப்பு… இப்படி இன்னும் பல. ஆனால், இவற்றில் எதையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. நாங்கள் ஒரு கற்பனை அகாசியா மரத்தை உருவாக்கினோம், அதன் நிழலில் ‘மெய்நிகர்’ தேநீர் அருந்தியபடி பேசினோம், நட்பை வலுவாக்கினோம், ஒரு குழந்தையைப் பார்த்துக் கத்தியபிறகு ஒருவர் எவ்வளவு மோசமாக உணர்கிறார் என்பதைப்பற்றிப் பகிர்ந்துகொண்டோம், குழந்தைகளுடைய செயல்பாடுகளைப்பற்றிய நகைச்சுவைக் கதைகளைப் பகிர்ந்துகொண்டோம், குழந்தைவளர்ப்பு என்பது ஒருவிதமான சூதாட்டம் என்று பேசினோம். நாங்கள் பேச விரும்பிய அனைத்தையும் மற்றவரிடம் பேசினோம், அது நல்ல உதவியாக அமைந்தது. உண்மையிலேயே அது நல்ல உதவியாக அமைந்தது.

தாய் என்ற அவருடைய நிலையில், நான் ஒரு புதிய பரஸ்பரப் புரிந்துகொள்ளலை உணர்ந்தேன், அநேகமாக அவரும் என்னிடம் அதையே உணர்ந்திருப்பார். எங்களுடைய உரையாடல்கள் பயமுறுத்தக்கூடியவகையில் உண்மையாக இருந்தன, இப்போதும் அப்படிதான் இருக்கின்றன; எடுத்துக்காட்டாக, ‘இந்த உலகத்திலேயே மிகவும் எரிச்சலூட்டுகிற சிறு உயிர் என்னுடைய குழந்தைதான்’ என்று நான் அவரிடம் சொல்லலாம், ‘ஒரு நீண்ட, தனிமையான விடுமுறையை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாமா என்று உணர்கிறேன்’ என்று அவர் என்னிடம் சொல்லலாம், நாங்கள் இருவரும் அதைவைத்து மற்றவரை எடைபோடமாட்டோம். தூக்கம் போதாமை, மார்புக் காம்பு விரிசல்கள், மலம் கழித்த இரவு ஆடைகள், பல்பொருள் அங்காடியின் அடுக்குகளுக்கிடையில் பிடிவாதங்கள், வயிற்றுவலிகள் என்று பல நாட்களை நாங்கள் ஒன்றாகச் சமாளித்தோம்; இதைப்பற்றியெல்லாம் பேச, அழ, சிரிக்க இயலுகிறது என்பதே எங்களுடைய நட்பை மிகவும் உறுதியாக்கியது, என்னுடைய ஆன்மாவுக்கு உதவியாக இருந்தது.

இந்த உறவின் நேர்மை எனக்குப் புத்துணர்ச்சியூட்டுகிறது, இதைத் தொடரச்செய்கிறது. இது என்னை இன்னும் அன்பான, அமைதியான மனிதராக மாற்றுகிறது, வருங்காலத்தில் இது என்னை இன்னும் மேம்பட்ட ஒரு தோழியாகவும், தெரிந்துகொள்வதற்கு இன்னும் இனிமையான ஒரு மனிதராகவும் ஆக்கும் என்று நான் நம்புகிறேன்.

இன்னொரு விஷயம், இப்போது நாங்கள் பாடும் நட்சத்திரங்களைப்பற்றியும் உரையாடுகிறோம்.  

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org