உடல் தோற்றம் சார்ந்த பிரச்னைகளைச் சமாளித்தல்

ஒரு பெண் கர்ப்பமாக உள்ளபோது, அவர் இரண்டு பேருக்காகச் சாப்பிடவேண்டும் என்று சொல்லப்படுகிறது, அவரது எடை அதிகரிக்கவேண்டும், அவர் மேலும் ஆரோக்கியமாகவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து, தான் மிகவும் குண்டாக இருப்பதாக அந்தத் தாய் உணர்வார், எடையைக் குறைக்கவேண்டும், பழைய உடல் தோற்றத்தை எட்டவேண்டும் என்று எண்ணுவார்.

இந்த நேரத்தில்தான், பல பெண்கள், 'நான் கவர்ச்சியாக இல்லை' என்று எண்ணத்தொடங்குகிறார்கள், 'நான் குண்டு', 'அசிங்கமா இருக்கேன்' என்றெல்லாம் திரும்பத்திரும்ப நினைக்கிறார்கள். உடல் தோற்றம் சார்ந்த பிரச்னைகள் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்:

·தாய் தன்னுடைய இப்போதைய தோற்றத்தை ஏற்றுக்கொள்ளச் சிரமப்படலாம்

·தனது புதிய பொறுப்புகளை எண்ணி அவர் திகைக்கலாம், முன்புபோல் இயல்பாக இருக்கமுடியவில்லை, தனக்குப்பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடமுடியவில்லை என்று வருந்தலாம்

·தன் கணவர் தினமும் வேலைக்குச்செல்கிறார், தான்மட்டும் வீட்டிலேயே இருக்கிறோமே என்று அவர் எண்ணலாம்

·அவரது நண்பர்கள், உறவினர்கள், 'நீ எடையைக் குறைக்கணும், ஆரோக்கியமா ஆகணும்' என்று சொல்லக்கூடும், அழுத்தம் தரக்கூடும்

·ஊடகங்களில் வரும் பிரபலங்கள், தாங்கள் குழந்தை பெற்றபின்னர் உடனே பழைய தோற்றத்துக்குத் திரும்பிவிட்டதாகச் சொல்லக்கூடும்.

இந்த எண்ணங்கள் எல்லாத் தாய்மார்களுக்கும் வரக்கூடியவைதான். ஆனால், சில பெண்களுக்குமட்டும் இந்த எண்ணங்கள் மனச்சோர்வைத் தூண்டுகின்றன, அல்லது, மனச்சோர்வினால் இந்த எண்ணங்கள் உண்டாகின்றன. அபூர்வமாகச் சில சூழ்நிலைகளில், இதனால் தாய்க்கு ஓர் உண்ணல் குறைபாடு வரக்கூடும். உதாரணமாக, அனோரெக்ஸியா அல்லது புலிமியாவால் அவர் பாதிக்கப்படக்கூடும்.

இது இயல்பான விஷயம்தான்.

இந்தச் சூழ்நிலைகளில் நிபுணரின் உதவியை நாடவேண்டும்

·         தான் கவர்ச்சியாக இல்லை, அசிங்கமாக இருக்கிறோம், குண்டாக இருக்கிறோம் என்று அவ்வப்போது எண்ணுவது

·         தன் உடல்தோற்றத்தைப்பற்றி, C-செக்‌ஷன் தழும்பைப்பற்றி உணர்ந்திருப்பது

·         தன்னைத் தன் நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது, அவர்கள் குழந்தை பெற்றபின் எவ்வளவு விரைவாக நல்ல உடல்தோற்றத்துக்குத் திரும்பினார்கள் என்பதைச் சிந்திப்பது

 

·         உடல் தோற்றத்தைப்பற்றித் தீவிரமாக, திரும்பத்திரும்ப எண்ணுவது

·         தாய் தொடர்ந்து மனச்சோர்வாக உணரும்போது, அல்லது, விடாமல் அழும்போது

·         தீவிரமான உணவுக்கட்டுப்பாடு, அல்லது, ஒரு வாரத்துக்குமேல் மிகுதியாக உண்ணுதல்

உடல் தோற்றம் சார்ந்த பிரச்னைகளைச் சமாளித்தல்

புதிதாகக் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய உடல் தோற்றத்தைப்பற்றிக் கவலைகொண்டால், இவ்வாறு சிந்திக்கலாம், மகிழ்ச்சியாக உணரலாம்:

·குழந்தை பிறந்தவுடன், கூடுதல் எடை குறைந்துவிடாது என்பதை முதலில் நினைவில்கொள்ளவேண்டும். பெரும்பாலான பெண்கள் பழைய தோற்றத்துக்குத் திரும்பப் பல மாதங்கள் ஆகும்.

·எந்தத் தாயும், பிற பெண்களுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்ளக்கூடாது. கர்ப்பத்துக்குமுன், அல்லது கர்ப்பத்தின்போது தான் எப்படி இருந்தோம் என்பதைக்கூடச் சிந்தித்துப்பார்த்து ஒப்பிடக்கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தச் சூழ்நிலைகள் மாறுபடுகின்றன. ஒருவரைப்போல் இன்னொருவருக்கு நடக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

·குழந்தை பிறந்தவுடன் உடற்பயிற்சியில் குதிக்கவேண்டாம். உடற்பயிற்சியைத் தொடங்கவிரும்பும் தாய் இதுபற்றித் தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் பேசவேண்டும், 'நான் எப்போது உடற்பயிற்சி செய்யலாம்?' என்று விசாரிக்கவேண்டும். ஆரம்பத்தில், நீட்டல், வளைத்தல் வகை உடற்பயிற்சிகளைச் செய்யலாம், அல்லது, பூங்காக்களைச் சுற்றி நடக்கலாம். குழந்தையைத் தள்ளிச்செல்கிற வண்டிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் குழந்தையை வெளியே அழைத்துச்செல்லலாம். இதனால், தாய், குழந்தை இருவருக்கும் வெளிக்காற்று கிடைக்கிறது, உடலும் சுறுசுறுப்பாகிறது.

·எடை குறையும்வரை, மற்ற வழிகளில் தாய்மார்கள் தங்களைக் கவனித்துக்கொள்ளலாம். உதாரணமாக, சிகை அலங்காரம், பெடிக்யூர் அல்லது மானிக்யூர், சவுகர்யமான, நன்கு பொருந்தக்கூடிய, தங்களைக் கவர்ச்சியற்றவராகக் காட்டாத உடைகளை அணிதல் போன்றவை. இதனால், அவர் தன் உடல்தோற்றத்தைப்பற்றி மகிழ்வாக உணர்வார், அதிகம் கவலைப்படமாட்டார்.

·குழந்தை பெற்றுக்கொண்ட சில பிரபலங்கள் விரைவில் பழைய தோற்றத்துக்குத் திரும்பிவிட்டதுபோல் தோன்றலாம். ஆனால், அநேகமாக அவர்களுக்கெல்லாம் குழந்தையைக் கவனித்துக்கொள்ள வேறு யாராவது உதவுவார்கள், அவர்கள் பழைய தோற்றத்துக்குத் திரும்ப நிபுணர்களின் உதவியைப் பெறுவார்கள். ஆகவே, அவர்களைப்பார்த்து ஏங்குவது சாதாரண மக்களுக்குப் பொருந்தாது. இரண்டு சூழ்நிலைகளும் வெவ்வேறானவை.

·தாய்மார்கள் இயன்றவரை தங்களுக்காக நேரம் ஒதுக்கவேண்டும். சிறிதுநேரம் வெளியே சென்றுவருதல், சிறிதுநேரம் தூங்குதல், நண்பர்களைச் சந்தித்து காஃபி சாப்பிடுதல்... இப்படி.

·இதுபோன்ற நேரங்களில் குழந்தையை யார் கவனித்துக்கொள்வார்கள் என்று திகைக்கவேண்டாம். இந்தத் தேவைகளை வெளிப்படையாகச் சொல்லலாம், 'நான் உடற்பயிற்சி செய்துவிட்டுத் திரும்பி வரும்வரை குழந்தையைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கணவரிடமோ மற்ற குடும்ப உறுப்பினர்களிடமோ கேட்கலாம்.

கணவர், குடும்பத்தினரின் பொறுப்பு

ஒரு தாய்க்குத் தனது உடல் தோற்றம்பற்றிய பிரச்னை இருக்கிறது என்றால், அதைச் சரிசெய்வதற்கு அவரது கணவரும் குடும்பமும் முக்கியப் பங்காற்றவேண்டும். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? பல குடும்பத்தினர் அந்தத் தாயின் தோற்றத்தைக் கேலி செய்கிறார்கள் அல்லது விமர்சிக்கிறார்கள்.

அந்தத் தாய் மிகவும் பாதுகாப்பற்றவராக உணரும் நேரங்களில், தன்னுடைய கணவரிடமோ மற்ற குடும்ப உறுப்பினர்களிடமோ 'நான் ரொம்ப குண்டா இருக்கேனா?' என்று கேட்கலாம், 'நான் முன்னைப்போல கவர்ச்சியா இருக்கேனா?' என்று விசாரிக்கலாம். அப்போது அவர் எதிர்பார்ப்பது நம்பிக்கையளிக்கும் சொற்களைத்தான். அந்த நேரத்தில், 'இதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதே' என்று சொல்வது தவறு, அவரது கவலைகளைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இதுபற்றி நிபுணர்களிடம் கேட்டால், 'பல நேரங்களில் தாய்மார்கள் தங்கள் உடல்தோற்றம்பற்றிக் கவலைகொள்ளக் காரணமே, சுற்றியிருக்கிறவர்கள் சொல்லும் கருத்துகள்தான்' என்கிறார்கள். ஆகவே, 'நீ ஏன் இன்னும் எடை குறையவில்லை?' என்று ஒரு தாயைப்பார்த்துக் கேட்காமலிருப்பது நல்லது. அதற்குப்பதிலாக, 'நான் சிறிதுநேரம் உன் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறேன், நீ ஓய்வெடு, அல்லது, உடற்பயிற்சி செய், அல்லது, நண்பர்களைப் பார்த்துவிட்டு வா' என்று சொல்லலாம்.

அவருக்கு ஆதரவாகப் பேசலாம், 'ஏதாவது உதவி வேண்டுமென்றால், தயங்காமல் கேள்' என்று சொல்லலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org