குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு ஆம், நான் அதைப்பற்றிப் பேசுகிறேன். இல்லை, நான் இதை எண்ணி நாணப்படவில்லை

குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு ஆம், நான் அதைப்பற்றிப் பேசுகிறேன். இல்லை, நான் இதை எண்ணி நாணப்படவில்லை

ஃபேஸ்புக்கில் என்னுடைய, என் குழந்தையுடைய புகைப்படங்களை நீங்கள் பார்த்தீர்களானால், என்னுடைய கர்ப்பமானது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, என்னுடைய பிரசவம் மிகக் கச்சிதமாக நடைபெற்றது, எல்லாம் கனவுபோல் சிறப்பாக நிகழ்ந்தன என்றுதான் நீங்கள் எண்ணுவீர்கள்.

ஆனால், அந்த எண்ணத்தில் சிறிதும் உண்மையில்லை. என்னுடைய கடைசி மும்மாத ட்ரைமெஸ்டரில் நான் மிகுந்த மனச்சோர்வைச் சந்தித்தேன்; இதனைக் குழந்தைப்பேற்றுக்கு முந்தைய மனச்சோர்வு என்பார்கள். பிரசவத்துக்குப்பிறகும் அதே அளவு தீவிரமான மனச்சோர்வை நான் சந்தித்தேன். இதைக் குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு (PPD) என்பார்கள்.

என்னுடைய இயல்புக்குத் திரும்புவதற்கு எனக்கு நெடுநாட்களாயின. இதைப்பற்றி நான் எழுத விரும்புகிறேன் என்று தீர்மானிப்பதற்கும் அதே அளவு நெடுநாட்களாயின. ஆனால், நான் என்னுடைய கதையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்; PPDபற்றிய விழிப்புணர்வை உண்டாக்க அது உதவும் என்று நம்புகிறேன். இல்லை, நான் இதைப்பற்றி நாணப்படவில்லை. இந்த உலகில் எந்தப் பெண்ணுக்கும் PPD நிகழலாம். அது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வருகிறது; அதைச் சந்திக்க யாரும் தயாராக இருப்பதில்லை.

நான் கர்ப்பமாக இருந்தபோது, நான் தென்னாப்பிரிக்காவில் ஒரு மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை; பிரச்னை வருவதற்கான காரணங்களும் இருக்கவில்லை. என்னுடைய கர்ப்பத்தின் கடைசி மும்மாத ட்ரைமெஸ்டரில், நான் ஹைதராபாதுக்கு இடம்பெயர்ந்தேன், அங்குதான் என் குழந்தை பிறப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. என் கணவர் பெயர் ரவி. அவரும் என்னுடன் ஹைதராபாதுக்கு வந்தார். சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு என்னோடு தங்கினார். அதன்பிறகு, ஜோஹனர்ஸ்பெர்கில் பணிகளை முடித்துவைப்பதற்காக அவர் திரும்பிச்சென்றார். இந்தக் காலகட்டத்தில் நான் அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது; அதை எண்ணி நான் ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால், ஜோஹனர்ஸ்பெர்கிலிருந்து ஹைதராபாத் வந்த பயணமானது என்னுடைய கால்களை வீங்கச்செய்தது; எனக்கு மிகுந்த களைப்பைத் தந்தது; கிட்டத்தட்ட ஒருமாதத்துக்கு நான் உடல்நலமில்லாமல் இருந்தேன்.

நான் என்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தபோது, மனச்சோர்வு தொடங்கியது. தூக்கமின்மையால் நான் எரிச்சலடைந்தேன்; என்னால் ஏன் தூங்க இயலவில்லை என்று அடிக்கடி யோசிக்கத் தொடங்கினேன். வீட்டில் எனக்குப் போரடித்தது. என்னால் வெளியில் எங்கும் செல்ல இயலவில்லை; காரணம், எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது. வானிலை மாற்றமும், நகரப் போக்குவரத்தும் எனக்குக் குமட்டலைத் தந்தன. என் உறுதி குறைந்துகொண்டேயிருந்தது, என் பசியும்தான். ஆனால், இவையெல்லாம் ஹார்மோன்களால் நிகழ்பவை என்றும், இவை இயல்பானவை என்றும் நான் நினைத்தேன். நான் எட்டு மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது, இவை ஹார்மோனால்தான் நடக்கின்றன, ஆனால், இவை இயல்பானவை இல்லை என்று நான் உணர்ந்தேன்.

என்னுடைய மனம் இப்போது என் கட்டுப்பாட்டில் இல்லை என்று நான் உணர்ந்தேன். நான் இன்னொரு மனிதரைப்போல் உணர்ந்தேன்; உண்மையான எனக்கும் இந்த மனிதருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. எனக்கு ஏதோ நடக்கிறது என்பதை என்னால் உணர இயன்றது, ஆனால், அதைத் தடுக்கும் ஆற்றல் எனக்கு இல்லை என்று நான் உணர்ந்தேன். என்னால் தூங்க இயலவில்லை, சாப்பிட இயலவில்லை, நான் எப்போதும் பரபரப்பாக, பதற்றமாக, சோகமாக இருந்தேன், இதையெல்லாம் என்னால் புரிந்துகொள்ளவே இயலவில்லை. என் கணவர் என்னருகே இல்லாததை எண்ணும்போது, நான் பாதுகாப்பில்லாததுபோலவும் உணர்ந்தேன். என்னால் இந்தச் சூழலைத் தாங்கிக்கொள்ள இயலாதபோது; நான் என்னுடைய மருத்துவப் பணியாளரைத் தொடர்புகொண்டேன், எனக்குள் என்ன நடக்கிறது என்பதை அவருக்குச் சொன்னேன். அது வெறும் உளவியல், உணர்வுசார்ந்த விஷயமாக இல்லை; அது உடல்சார்ந்த பிரச்னையாகவும் இருந்தது: என் கைகள், கால்களில் நரம்புகள் பலவீனமாக இருப்பதாகத் தோன்றியது; இதனால், என்னால் நிற்கவோ வழக்கமான பணிகளைச் செய்யவோ இயலவில்லை. படுக்கையிலிருந்து எழுவதற்கோ, என்னுடைய சலிப்பைத் தீர்ப்பதற்கு ஏதாவது செய்யலாம் என்பதற்கோகூட எனக்கு ஆற்றல் இல்லை.

கர்ப்பம், குழந்தைப் பிறப்பு போன்றவை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ‘மகிழ்ச்சி’க் கணங்களாக இருக்கவேண்டும் என்று பெரும்பாலானோர் எண்ணுகிறார்கள். அப்படி இல்லாவிட்டால், யாரும் அதைப்பற்றிப் பேச விரும்புவதில்லை. ‘இந்தப் பெண்ணுக்குப் பரிதாபம் தேவைப்படுகிறது, இவருக்கு உதவுவதற்கு யாரும் இல்லை’ என்று சமூகத்தினர் எண்ணிவிடுவார்களோ என்ற அச்சத்தால், பெண்கள் தங்களுடைய உணர்வுகளை மறைத்துக்கொள்கிறார்கள்.

நான் அப்படி என்னுடைய உணர்வுகளை மறைத்துக்கொள்ள விரும்பவில்லை; ஆகவே, என்னுடைய மருத்துவ உதவியாளரிடம் என் உணர்வுகளைப்பற்றிப் பேசத் தீர்மானித்தேன். அவர் மிகவும் இரக்கத்துடன் பேசினார்; தன்னுடைய சொற்களால் எனக்கு ஆறுதலைத் தந்தார். பெரும்பாலான பெண்கள் இதுபற்றிப் பேசுவதில்லை என்பதால், என்னுடைய துணிச்சலான தீர்மானத்தையும், நானாக முன்வந்து பேசியதையும் அவர் பாராட்டினார். PPD என்பது ஒரு நிறமாலை என்றும், கர்ப்பமாக இருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் இதைப் பல நிலைகளில் உணர்கிறார்கள் என்றும் அவர் எனக்குச் சொன்னார். எனக்குக் குழந்தைப்பேற்றுக்கு முந்தைய மனச்சோர்வு வந்திருப்பதையும், வேறு பல பெண்களுக்கும் இது வருகிறது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.  

எனக்கு இப்படி ஒரு பிரச்னை வந்திருக்கிறது என்று கண்டறியப்பட்டபோது, என் தாய் அதற்கு முற்றிலும் தயாராக இல்லை. என்னுடைய பழக்கவழக்கத்தில் இருக்கும் இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள இயலாமல் அவர் தடுமாறினார்; காரணம், அவர் தன்னுடைய வாழ்க்கையில் இதைப் பார்த்ததோ, இதுபற்றிக் கேள்விப்பட்டதோ இல்லை. புரிந்துகொள்ளல் இல்லாததால், நான் இன்னும் எரிச்சலடைந்தேன்.

நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினேன், என் சிறு குழந்தையை வரவேற்க விரும்பினேன். நான் இருந்த நிலைமையில், என்னுடைய குழந்தையை நான் எப்படிக் கவனித்துக்கொள்வேன் என்று நான் அஞ்சினேன். அது மிகவும் கொடுமையான அனுபவமாக இருந்தது. ரவி தன்னுடைய பயணத்தேதியை முன்கூட்டியே மாற்றினார், வழக்கத்துக்கு முன்பாகவே இந்தியா திரும்பினார். ஆனால், என்னருகில் யார் இருந்தாலும் சரி, அவர்கள் எனக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் சரி, நான் பரிதாபகரமாகதான் உணர்ந்தேன். அற்ப விஷயங்களை எண்ணி நான் பொருளில்லாத அச்சங்களைக் கொண்டிருந்தேன்; அடிக்கடி சில நிமிடங்களுக்கு வெறுமையை உணர்ந்தேன்.

என்னுடைய பிரசவம் மற்றவர்களுக்கு ஒரு கச்சிதமான பிரசவமாகத் தோன்றக்கூடும். எனக்கு எந்த மருந்துகளும் தரப்படவில்லை. ஆனால், உளவியல்ரீதியில், நான் வேறு எங்கோ இருந்தேன். அப்போதுதான், என்னுடைய மருத்துவப் பணியாளர் என்னிடம் சொன்னார், ‘நீங்கள் ஒரு மருத்துவ உளவியலாளரைச் சந்திக்கலாமே.' துரதிருஷ்டவசமாக, அவர் பரிந்துரைத்த மருத்துவ உளவியலாளர் ஊரில் இல்லை; ஆகவே, இன்னொரு முதியவரை அவர் எனக்குப் பரிந்துரைத்தார்.

அப்போது நான் தாய்ப்பாலூட்டிக்கொண்டிருந்தேன்; என் உடல் ஆறிக்கொண்டிருந்தது. ஆனால், அவரைச் சந்திப்பதற்காக நான் செல்லவேண்டியிருந்தது. அவர் நான் சொன்னதைக் கேட்டார்; உளவியல் பரிசோதனைகளை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். நான் என்னுடைய குழந்தையைக் காரில் என் தாயிடமே விட்டுவிட்டுப் பரிசோதனைகளுக்குச் செல்லவேண்டியிருந்தது; அவ்வப்போது காருக்குச் சென்று குழந்தைக்குப் பாலூட்டவேண்டியிருந்தது.

அந்தச் சிகிச்சையைப்பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை; ஆனால், மருத்துவரிடம் செல்வது என்பதே ஒருவரைச் சோர்வாக உணரச்செய்யக்கூடும். எனக்குப் பிள்ளைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு வந்திருப்பது கண்டறியப்பட்டது. அவர் தசைத் தளர்வுக்கான (மீட்டெடுக்கும் ஒருவிதமான யோகா உத்தி) இரண்டு நிகழ்வுகளைப் பரிந்துரைத்தார். என்னை அமைதிப்படுத்துவதற்காக ஒரு மருந்தைத் தருமாறு நான் அவரிடம் கிட்டத்தட்ட கெஞ்சினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்; தாய்ப்பாலூட்டும் ஒருவருக்கு மருந்துகளைத் தர இயலாது என்றார் அவர். இதைக் கடவுளின் ஒரு தண்டனையாக எண்ணிக்கொள்ளும்படி அவர் என்னிடம் கேட்டார்; ஆறு மாதங்களுக்கு இதைப் பொறுத்துக்கொள்ளச்சொன்னார். ஒரு தாய் என்றமுறையில் என்னுடைய கடமையானது, நான் அனுபவிக்கும் வலியைவிட அதிக முக்கியமானது என்று அவர் சொன்னார்; ஆறு மாதங்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லாவிட்டால் தன்னிடம் திரும்ப வருமாறு சொன்னார்.

நான் எரிச்சலடைந்தேன். நான் மிகுந்த வலியில் இருந்தேன்; அந்த வலி எப்படியாவது தீர்ந்துவிடாதா என்று விரும்பினேன்; ஆனால், மருந்துகளை எண்ணியும் நான் அஞ்சினேன்; ஒருவேளை நான் மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கினால், வாழ்நாள்முழுக்க அந்த மருந்துகளைச் சாப்பிடவேண்டியிருக்கும் என்று கருதினேன். மருந்துகள் என்னைச் சோம்பலாக்கும், என்னால் என் மகளைப் பார்த்துக்கொள்ள இயலாது என்று நான் கவலைப்பட்டேன். நான் கடினமான பாதையில் செல்லத் தீர்மானித்தேன்; இயற்கையானமுறையில் குணமாகத் தீர்மானித்தேன். நான் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பியபிறகுதான், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான பாதுகாப்பான மருந்துகள் உள்ளதைப்பற்றி நான் தெரிந்துகொண்டேன். இப்போது அதைப்பற்றி யோசித்தால், ஒருவேளை, நான் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், என்னால் இந்தப் பிரச்னையை இதைவிட எளிதில் சமாளித்திருக்க இயலும் என்று தோன்றுகிறது.

இந்தச் சமூகம், கர்ப்பத்தை மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்ட ஒரு காலகட்டமாக எண்ணுகிறது. கர்ப்பமானது, அது கொண்டுவரும் பொறுப்பைப்பற்றி எண்ணும்போது பதற்றத்தையும் உண்டாக்கலாம் என்பதைச் சமூகம் ஏற்பதில்லை. சில நேரங்களில், அந்த அழுத்தம் மிக அதிகமாகிவிடுகிறது. பல பெண்கள் குழந்தைப்பேற்றுக்கு முந்தைய, குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வைச் சந்திக்கிறார்கள்; ஆனால், எல்லாரும் ஒரு மருத்துவரிடம் செல்லத் தீர்மானிப்பதில்லை. காரணம், அதுபற்றிய களங்கம்தான். நான் ஒரு மருத்துவரைச் சந்திக்கத் தீர்மானித்தேன்; ஆனால் அப்போதும், அது மிகவும் குழப்பமான அனுபவமாக இருந்தது. எனக்கு உதவி கிடைக்கவில்லை; எனக்குத் தேவைப்பட்ட வழிகாட்டுதல் கிடைக்கவில்லை.

பிரசவத்துக்குப்பிறகு, நான் முன்பைவிடச் சிறப்பாக உணர்வதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆயின. அது ஒரு நீளமான, கடினமான மற்றும் சவாலான பயணமாக இருந்தது. அதேசமயம், அதன் நிறைவில், என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதுபற்றி என்னால் உடனே தீர்மானிக்க இயலவில்லை; பின்னர் ஒருவழியாக, இது பிறருக்கு உதவும் என்பதற்காக, இதைச் சொற்களில் விவரிப்பதற்குத் தேவையான துணிச்சலை வரவழைத்துக்கொண்டேன், எழுதத்தொடங்கினேன்.

பூர்ணா கௌமுடி வொகெட்டி ஒரு மென்பொருள் வல்லுநர்; தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜொஹன்னெஸ்பர்கில் வசிக்கிறார். அவருடைய ஆர்வங்களில் சில: கலை, இசை மற்றும் வலைப்பதிவுகளை எழுதுதல்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org