கர்ப்பம்: மகிழ்ச்சியாகவும் பூரிப்போடும் இருக்கவேண்டிய கர்ப்பிணிப் பெண் சோர்வாக இருப்பது ஏன்? அவருக்கு மனச்சோர்வுப் பிரச்னை இருக்கிறதா?

கர்ப்பம்: மகிழ்ச்சியாகவும் பூரிப்போடும் இருக்கவேண்டிய கர்ப்பிணிப் பெண் சோர்வாக இருப்பது ஏன்? அவருக்கு மனச்சோர்வுப் பிரச்னை இருக்கிறதா?
Published on

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகச் சிக்கலான காலகட்டம், தாய்மை. இந்தக் காலகட்டத்தில் அந்தப் பெண்ணின் உடல் மற்றும் மன நலம் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, தாயாகப்போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தக் காலகட்டத்தில் கவனமும் பச்சாத்தாபமும் தேவை.

பெரும்பாலான பெண்களுக்கு, கர்ப்பம் என்பது ஒரு மகிழ்ச்சியான காலகட்டம். ஆனால் சிலருக்கு, அது சவாலானதாக இருக்கலாம். பல உயிரியல் மற்றும் உளவியல் காரணிகளால் அவர்களுக்கு மனச்சோர்வு, பதற்றம், OCD மற்றும் குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய சைக்கோசிஸ் போன்ற மன நலப் பிரச்னைகள் வரலாம்.

கர்ப்பிணிப் பெண்களுடைய உளவியல் நலனானது அவர்களுடைய உடல்சார்ந்த நலத் தேவைகளுக்கு இணையாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும், வழக்கமான கர்ப்பகாலப் பராமரிப்பில் சேர்க்கப்படவேண்டும்.  

கர்ப்பம்

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிற ஒன்பது மாதக் காலகட்டத்தை ‘Antenatal period’ என்பார்கள். இந்தக் காலகட்டத்தில், பல உயிரியல் மற்றும் உளவியல் சமூகவியல் காரணங்களால் பெண்களுக்கு மனச்சோர்வு மற்றும் பதற்றம் வருகிற ஆபத்து இருக்கலாம். அதேசமயம், இந்த மன நலப் பிரச்னைகள் பல நேரங்களில் கண்டறியப்படுவதில்லை மற்றும் அலட்சியப்படுத்தப்படுகின்றன, காரணம், மனச்சோர்வின் அறிகுறிகள் கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் உடல்சார்ந்த புகார்களைப்போலவே இருப்பதுதான். எடுத்துக்காட்டாக, எரிச்சல், களைப்பு, தூக்கமின்மை அல்லது பசியின்மை போன்றவை.

கர்ப்பக் காலகட்டத்தில் மனச்சோர்வை உண்டாக்கக்கூடிய சில ஆபத்துக் காரணிகள்:

  • மோசமான திருமண உறவு
  • திட்டமிடாத அல்லது விரும்பாத கர்ப்பம்
  • குடும்ப வன்முறை (உடல்சார்ந்தது, பாலியல்சார்ந்தது மற்றும் உணர்வுசார்ந்தது)
  • அவருக்கு அல்லது அவருடைய குடும்பத்தில் யாருக்காவது மனச்சோர்வு, இருதுருவக் குறைபாடு, குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய சைக்கோசிஸ் அல்லது பிற தீவிர மனநலப் பிரச்னைகள் இருந்த வரலாறு
  • ஒரு பெண்ணுக்கு இதற்குமுன் மனநலப் பிரச்னை இருந்திருந்தால், கர்ப்பகாலத்தில் அது அதிகரிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, OCD அல்லது அதிர்ச்சிக்குப்பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD).
  • இதற்குமுன் கண்டறியப்பட்ட மனநலக் குறைபாட்டுக்கான மருந்துகளைக் கர்ப்பத்தின்போது குறைத்தல் அல்லது நிறுத்துதல்
  • முந்தைய கர்ப்பத்தின்போது சந்தித்த சிக்கல்கள் அல்லது சோகம்
  • நிதிச்சுமை
  • மது, சட்டத்துக்குப் புறம்பான மருந்துகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு அடிமையாதல்
  • ஒரு கிராமப்பகுதியிலிருந்து ஒரு சிறுநகரத்துக்கோ பெருநகரத்துக்கோ குடிபெயர்தல், அங்கு குடும்ப அல்லது சமூக ஆதரவு இல்லாதிருத்தல்
  • பணி அழுத்தம் மற்றும் கெடுத்தேதிகளால் அதீத அழுத்தம்

கர்ப்பம் சார்ந்த சவால்கள் : இவை இயல்பானவை

இவை இயல்பில்லை

கர்ப்பத்தின்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அறிகுறிகளில் சில வரக்கூடும், இது பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது.

  • வாந்தி/குமட்டல், குறிப்பாகக் கர்ப்பத்தின் முதல் மும்மாதப் பகுதியில் (First Trimester)
  • மனநிலை மாற்றங்கள், அழுகை அல்லது உணர்ச்சிமயம்
  • எரிச்சல்
  • குறைந்த சுயமதிப்பு
  • உடல் தோற்றம்பற்றிய கவலைகள்
  • தூக்கத்தில் தொந்தரவுகள், குறிப்பாகக் கர்ப்பத்தின் மூன்றாவது மும்மாதப் பகுதியில் (Third Trimester)
  • களைப்பு, முதல் மற்றும் மூன்றாவது மும்மாதப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் (First and Third Trimester)
  • நெருங்கிவரும் பிரசவம், குழந்தையின் நலன்பற்றிய பதற்றம்

இந்த அறிகுறிகள் ஒரு பெண்ணிடம் காணப்பட்டால், அவருக்குக் கர்ப்பகால மனச்சோர்வு இருக்கக்கூடும்:

  • எடை இழப்பு அல்லது கர்ப்பத்தின்போது உடல் எடை ஏறாமலிருத்தல்
  • ‘காலை நேர வாந்தி’ப் பிரச்னையிலிருந்து குணமானபிறகும் தொடர்ந்து பசி குறைவாகவே இருத்தல்
  • தூங்கும் பாணி மாறுதல்
  • படபடப்பு அல்லது அமைதியின்மை
  • சோர்வு அல்லது ஆற்றலின்மை
  • மதிப்பற்றவராக அல்லது குற்றவுணர்ச்சியை உணர்தல்
  • அன்ஹெடோனியா (ஆர்வமின்மை அல்லது மகிழ்ச்சியின்மை அல்லது மகிழ்வின்மை)
  • குறிப்பிடத்தக்கவகையில் கவனம் குறைதல்
  • மரணம் அல்லது தற்கொலையைப்பற்றி அடிக்கடி நினைத்தல்

கர்ப்பமாக இருக்கும் ஒருவர் தன்னிடம் இந்த மாற்றங்களைக் கவனித்தால், அல்லது, தன்னுடைய மனைவி/மகள் கர்ப்பமாக இருக்கும்போது அவரிடம் இந்த மாற்றங்களைக் கவனித்தால், நிபுணருடைய உதவியை நாடுவது நல்லது.

முக்கியம்: கர்ப்பகால மனச்சோர்வைக் கண்டறிவது எளிதாக இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு இந்தப் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டால், அவருடைய குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அவர் நன்கு குணமாகிவிடக்கூடும்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org