கர்ப்பம்: குழந்தை பெறப்போகும் ஒரு பெண் தன் ஆரோக்கியத்தைப்பற்றி, குழந்தையின் ஆரோக்கியத்தைப்பற்றிக் கவலைப்படுவது பதற்றக் குறைபாட்டின் அடையாளமா?

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கவலைப்படுவது பொதுவான விஷயம்தான். தாங்கள் உண்ணக்கூடியவை, உண்ணக்கூடாதவை, குடிக்கக்கூடியவை, குடிக்கக்கூடாதவை, செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை... இவற்றைப்பற்றி ஒரு கர்ப்பிணிப்பெண் கவலைப்படுவது மிகவும் இயல்புதான். ஒரே நேரத்தில் பரவசத்தையும் அச்சத்தையும் தரக்கூடிய காலகட்டம் இது. அதேசமயம், இந்தக் கவலை அவருடைய அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடத்தொடங்கினால், அதைப் பாதிக்கத்தொடங்கினால், அது ஒரு பதற்றக் குறைபாட்டின் அடையாளமாக இருக்கலாம்.

கர்ப்பத்தின்போது உண்டாகும் பதற்றக் குறைபாடுகளுக்கான சில அறிகுறிகள்:

  • தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்லும் கவலை எண்ணங்கள்
  • எந்நேரமும் நிலையற்ற உணர்வு, எரிச்சலுணர்வு அல்லது பதற்ற உணர்வு
  • திகைக்கவைக்கும் அச்சத் தாக்குதல்கள் மற்றும் அதீதமான அச்ச வேதனை
  • தசைகள் இறுகுதல்; அமைதியாக இருக்கச் சிரமப்படுதல்
  • இரவில் தூக்கம் வராமலிருத்தல்

கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுடைய கவலைகள் எளிய தொந்தரவுகளாக இல்லாமல் பெரிய பிரச்னைகளை உண்டாக்கினால், இந்த அறிகுறிகளில் சிலவற்றைத் தான் அனுபவிப்பதாக அவர் உணர்ந்தால், அவர் ஒரு நிபுணரின் உதவியை நாடுவதுபற்றிச் சிந்திக்கவேண்டும். ஒரு மன நல நிபுணரைச் சந்திப்பதுபற்றி அவர் தன்னுடைய துணைவர் அல்லது ஒரு குடும்ப உறுப்பினருடன் பேசலாம்.

கர்ப்பத்தின்போது ஒரு பெண் கடந்துவரும் மன மற்றும் உடல் மாற்றங்களின் அளவை வைத்துப் பார்க்கும்போது, பல பெண்களுக்குப் பதற்றம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகள் வருகிற வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலான பெண்களால் இதைச் சமாளிக்க இயலுகிறது; இதற்கு எந்தத் தலையீடும் தேவைப்படுவதில்லை. ஆனால், சில பெண்களுக்கு இது மிகத் தீவிரமாகிவிடுகிறது. கர்ப்பத்தின்போது ஒரு பெண்ணுக்குப் பதற்றக் குறைபாடு வருகிற வாய்ப்பை அதிகரிக்கும் சில ஆபத்துக் காரணிகள்:

  • ஏற்கெனவே பதற்றக் குறைபாட்டால் துன்பமடைந்திருத்தல்
  • அவருடைய குடும்பத்தில் யாருக்கேனும் பதற்றக் குறைபாடுகளின் வரலாறு இருத்தல்
  • முந்தைய கர்ப்பத்தின் எதிர்மறை அனுபவம்
  • வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதீத அழுத்தம்

இது இயல்பு

அநேகமாக இது பதற்றக் குறைபாடு

குழந்தையின் நலனைப்பற்றி, தான் ஒரு நல்ல பெற்றோராக இருப்போமா என்பதுபற்றி, குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஆகும் செலவைப்பற்றி, இதுபோன்ற பிற விஷயங்களைப்பற்றிக் கவலைப்படுதல்.

இந்தக் கவலை, அவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்த இயலாதபடி சிரமத்தை உண்டாக்குதல்; அலுவலகத்தில் அல்லது வீட்டில் சரியாகச் செயல்பட இயலாதபடி அவர் சிரமப்படுதல்; முன்பு அவர் மகிழ்ந்து அனுபவித்துச் செய்துவந்த விஷயங்களை இப்போது மகிழ்ந்து அனுபவிக்க இயலாமலிருத்தல்; அல்லது, அவருக்கு அடிக்கடி அச்சம் மற்றும் பீதியின் வேதனை வருதல்.

சில நாள் தூக்கம் இல்லாததால் சிறு வலிகள்

அடிக்கடி, தசை இறுக்கம் மற்றும் களைப்பை உண்டாக்கும் படபடப்புகள்

சிகிச்சை

பதற்றத்தின் மிதமான அறிகுறிகளில் தொடங்கி நடுத்தர அறிகுறிகள்வரை அனுபவிக்கிற பெண்களுக்கு உணர்வு ஆதரவும், அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) அல்லது, மக்களுக்கிடையிலான பழக்கச் சிகிச்சை (IPT) போன்ற சில உளவியல் சிகிச்சைகளும் போதுமாக இருக்கும். அச்சம் தரும் எண்ணங்கள் தங்களுக்கு ஏன் வருகின்றன என்பதற்கான வேரைக் கண்டறியவும், தங்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ளவும் இந்தச் சிந்தனைகள் அவருக்கு உதவும். இன்னும் தீவிர அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு மருந்துகளும் தேவைப்படலாம். மிகக்குறைந்த ஆபத்துச் சாத்தியங்களுடன் மிக அதிக பலன்களைத் தரும் மருந்துகளைத்தான் உளவியலாளர் பரிந்துரைப்பார். (குறைந்த மருந்து அளவு, அதையும் தேவைப்பட்டால்தான் பயன்படுத்தவேண்டும்.)

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org