கர்ப்பம்: தூக்கப் பிரச்னைகள் இயல்பானவையா?

கர்ப்பமாக உள்ள ஒரு பெண் பல ஹார்மோன் மற்றும் உடல்சார்ந்த மாற்றங்களைச் சந்திக்கிறார்; இவை அவருடைய தூக்கத்தரத்தைப் பாதிக்கலாம். அவருடைய கர்ப்பம் வளர வளர, இந்தத் தூக்கத் தொந்தரவுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. கர்ப்பத்தின்போது உண்டாகும் சில பொதுவான தூக்கத் தொந்தரவுகள்:

  • கர்ப்பத்தின் உணர்வு மற்றும் உடல்சார்ந்த அழுத்தத்தால் தூக்கம் பாதிக்கப்படுதல்
  • ப்ரோஜெஸ்டெரோன் நிலைகள் அதிகரிப்பதால் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்லவேண்டியிருத்தல்
  • கரு வளர்வதால் பொதுவான அசௌகர்யம், வலிகள் மற்றும் நோவுகள்
  • இரவில் நல்ல தூக்கம் இல்லாததால் பகல்நேரத்தில் தூக்கம் அதிகரித்தல்
  • பொதுவான களைப்பால் மற்றும் கூடுதல் எடையைச் சுமக்கவேண்டியிருப்பதால் கால்களில் பிடிப்புகள்
  • அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல், இது இரவில் படுத்திருக்கும்போது அதிகம் நிகழும்
  • மூக்குச் சவ்வு உள்பட, உடல்முழுவதும் அதிகக் கன அளவுள்ள ரத்தம் சுழற்சிக்குள்ளாவதால் மூக்கடைப்பு
  • கால்களில் தொடர்ச்சியாக ஒரு கூச்ச உணர்வு உண்டாகி, அவற்றை நகர்த்தவேண்டும் என்று தூண்டுவதால் ஏற்படும் நிலையற்ற கால் நோய்க்குறி (RLS).
  • மூக்கடைப்பால் உண்டாகும் தூக்க அப்னியா மற்றும் குறட்டை
  • பதற்றம் அதிகரிப்பதால் உண்டாகும் தூக்கமின்மை

தூக்கத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்?

கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணுக்குத் தூக்கம் மிகக்குறைவாகவே வருகிறது என்றால், அல்லது, அவருக்கு வேறு தூக்கப் பிரச்னைகளால் துன்பம் ஏற்பட்டால், அதுபற்றி அவர் தன்னுடைய மருத்துவரிடம் பேசலாம். அவர் தன்னுடைய தூக்கத்தை மேம்படுத்திக்கொள்ள உதவக்கூடிய சில வியூகங்கள்:

  • உடற்பயிற்சியானது தூக்கத் தரத்தை மேம்படுத்தலாம்; ஆனால், தூங்கச்செல்வதற்குச் சற்று முன்பாக உடற்பயிற்சி வேண்டாம்.
  • கஃபைன் கொண்ட பொருட்கள் தூக்கத்தைப் பாதிக்கும்; அவற்றைப் பயன்படுத்தாமலிருக்கலாம்
  • சர்க்கரையும் ஒருவருடைய ஆற்றல் அளவுகளை அதிகப்படுத்தும்; அதையும் இரவில் பயன்படுத்தாமலிருக்கலாம்
  • தூங்கச்செல்லுமுன் மனத்தைச் சற்று தளர்வாக்கிக்கொள்ள முனையலாம். எடுத்துக்காட்டாக, ஒரு கதகதப்பான குளியல், சிறிது நேரம் மெல்லிசை கேட்டல், அல்லது, அவருடைய அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய எந்தவொரு செயல்பாடும்
  • பகல் நேரத்தில் நிறையத் திரவங்களைக் குடிக்கவேண்டும்; தூங்கும் நேரம் நெருங்க நெருங்க, திரவம் உட்கொள்ளும் அளவைக் குறைக்கவேண்டும்
  • பகல் நேரத்தில் தூங்குவதென்றால், அது முற்பகலில் இருக்கட்டும்; தூங்கும் நேரத்துக்கு மிக அருகில் இருக்கவேண்டாம்
  • தூங்குவதற்குமுன்னால் கொஞ்சம் நொறுக்குத்தீனிகளை உட்கொண்டால், நள்ளிரவில் பசி வேதனை ஏற்படாது
  • கூடுதல் தலையணைகளைப் பயன்படுத்துவது முதுகில், வயிற்றில் அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்

கர்ப்பமாக உள்ள பெண் அனுபவிக்கக்கூடிய எந்தவொரு பிரச்னையையும் தன்னுடைய மருத்துவரிடம் தெரிவிப்பது முக்கியம். மருத்துவருடைய ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளவேண்டாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org