கர்ப்பம்: தாயின் நலனில் துணைவருடைய பங்கு

இந்தியாவில் ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்றால், அந்த ஆண் அதற்கான நிதியை வழங்குவதோடு நின்றுவிடுவது வழக்கம்; தந்தையாகப்போகும் ஒருவர் அதற்குமேல் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை. கர்ப்பக் காலகட்டத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தாலும், புதிய தாய்மார்கள் குழந்தையின் நலனைப்பற்றி, தங்களுடைய சொந்த நலனைப்பற்றி, தாங்கள் சந்திக்கும் உயிரியல் சிக்கல்கள், சமூக மற்றும் கலாசார அழுத்தங்களைப்பற்றிப் பதற்றம், கவலையும் கொள்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், அந்தப் பெண்ணுக்கு அநேகமாக மிக நெருங்கிய தோழராக இருக்கக்கூடிய துணைவர், தன்னுடைய துணைவியின் வாழ்க்கையில் தன் பங்களிப்பை அதிகரிப்பது முக்கியம். கர்ப்பத்தின்போது கணவர்கள் முழுமையாகப் பங்கேற்காமல் தயங்கக் காரணம், தாங்கள் எப்படி உதவலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை; அத்துடன், பிரசவம், குழந்தைகள், அவற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகள் எல்லாம் 'பொம்பளைங்க சமாசாரம்' என்கிற தவறான நம்பிக்கையும் சேர்ந்துகொள்கிறது. பல நேரங்களில், பங்கேற்கும் துணைவர்களைக் கொண்ட பெண்களுக்கு உளவியல் அழுத்தம் குறைவாக உள்ளது; கர்ப்பக்காலத்திலும் குழந்தை பிறந்தபிறகும் அவர்கள் மற்றவர்களைவிடச் சிறப்பாக உணர்கிறார்கள். அப்படியானால், தந்தையாகப்போகும் ஒருவர் என்ன செய்யலாம்?

  • குழந்தையின் வருகையைத் தாயுடன் இணைந்து திட்டமிடலாம். எடுத்துக்காட்டாக, மருத்துவப் பராமரிப்புக்கான நிதிக்குத் திட்டமிடுதல், பிரசவத்துக்கு முன்பும் அதற்குப்பிறகும் தாய்க்கு வசதியான ஓர் ஆதரவு அமைப்புக்குத் திட்டமிடுதல், புதிய குழந்தையின் வரவுக்கு ஏற்றபடி இல்லத்தைச் சிறப்பாக்குதல் போன்றவை.
  • தாய் தன்னுடைய மகப்பேறு மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போது, தந்தையும் உடன் செல்லலாம்; அவருடைய கர்ப்பம் எப்படி முன்னேறுகிறது, ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா என்று புரிந்துகொள்ளலாம். கர்ப்பமாக இருக்கும் துணைவருடைய தேவைகள், கவலைகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
  • பெரும்பாலான நகர்ப்புறக் குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக உள்ளன; ஆகவே, புதிய தாய் ஓர் ஊட்டச்சத்துத் திட்டத்தைப் பின்பற்றுவதையும், பரிந்துரைக்கப்பட்டிருக்கக்கூடிய மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதையும் உறுதிசெய்வது அவருடைய துணைவருடைய பணி.
  • கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு மனநிலை ஊசலாட்டங்கள் நிகழ்வது இயல்புதான். அதுபோன்ற நேரங்களில் துணைவர்கள் பொறுமையாகவும் ஆதரவாகவும் இருக்கவேண்டும்.
  • நகைச்சுவை, அன்பு மற்றும் கவனத்தின்மூலம் அவர் தன்னுடைய கர்ப்பக்காலத்தை மகிழ்ந்து அனுபவிக்க உதவவேண்டும்.
  • பிற குடும்ப உறுப்பினர்களுடன் முரண் ஏற்படும்போது, தன் மனைவியை ஆதரிக்கவேண்டும். அவர் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டிய விஷயம், இப்போது அவர்கள் ஒரு குழுவாக இயங்கவேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org