தாய்மைக்குத் தயாராதல்: மனநலப் பிரச்னை உள்ள ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா?

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று, தாயாகத் தீர்மானிப்பது. அந்தப் பெண்ணுக்கு ஒரு மனநலப் பிரச்னை இருந்தால், அல்லது, முன்பு அவருக்கு ஒரு மனநலப் பிரச்னை இருந்திருந்தால், இந்தத் தீர்மானம் இன்னும் குறிப்பிடத்தக்கதாகிறது. உளவியல் பிரச்னை கொண்டவர்கள், அல்லது, அதைச் சந்தித்துக் குணமானவர்கள் பலவிதமான பிரச்னைகளைக் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் ஒரு குழந்தைக்குத் திட்டமிடுமுன் தங்களுடைய மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த விவாதத்தில் ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது அவருடைய துணைவரும் பங்கேற்பது உதவியாக இருக்கும்; ஏனெனில், சில நேரங்களில் இதுபற்றிய தகவல்களின் அளவு, ஒருவரைத் திகைக்கவைக்கலாம். அவர்கள் விவாதிக்கவேண்டிய சில பிரச்னைகள்:

  • முன்பு மனநலப் பிரச்னையைச் சந்தித்த ஒருவர், கர்ப்பம்தரிப்பதால் மீண்டும் இன்னொரு பிரச்னையைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதா? கர்ப்பம்தரிப்பது அவருடைய மனநலனில் எப்படிப்பட்ட தாக்கத்தைக் கொண்டிருக்கும்? முன்பு அவர் மருந்துகளை உட்கொண்டிருந்தால், அது கருவைப் பாதிக்குமா?
  • அவர் இன்னும் மருந்துகளை உட்கொண்டுவருகிறார் என்றால், குழந்தையிடம் அது எப்படிப்பட்ட தாக்கத்தைக் கொண்டிருக்கும்? அதனால் தீவிரத் தாக்கங்கள் ஏற்படும் என்றால், வேறு மாற்று மருந்துகள் உள்ளனவா? அல்லது, அவர் மருந்துகளை நிறுத்தலாமா?
  • இந்த மருந்துகளால் தாய்ப்பாலூட்டுவதில் என்ன தாக்கம் உண்டாகும்? அது குழந்தையின் நலனைப் பாதிக்குமா?
  • குழந்தைக்கும் இதே அல்லது இதேபோன்ற மனநலப் பிரச்னை உண்டாகுமா?
  • குழந்தை பெற்றுக்கொண்டபிறகு ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமா? கவனத்தில் கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கைகள் எவை?
  • அவர் தன்னுடைய மகப்பேற்று மருத்துவருடன் விவாதிக்கவேண்டிய பிரச்னைகள் என்னென்ன?

நிலைமையை நன்கு கையாள்வதன்மூலம், மனநலப் பிரச்னை கொண்ட பெண்கள் வசதியானமுறையில் கர்ப்பம்தரிக்கலாம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அந்தப் பெண்ணின் கர்ப்பத்தினால் வரக்கூடிய ஆபத்துகள் மற்றும் பலன்களை மனநல மருத்துவர் ஆராய்வது முக்கியம். ஏனெனில், ஒருவர் பல காலம் இயல்பாக இருந்துவந்தாலும், மனநலனுக்கான ஆபத்து அதிகம். சில நேரங்களில், சில மாதங்கள்பொறுத்திருந்தபின் அவர் கர்ப்பம்தரிப்பதைப்பற்றிச் சிந்திக்கலாம் என்று ஆலோசனை வழங்கப்படலாம். இதற்குச் சாத்தியமுள்ள காரணங்கள்: சமீபத்தில் அவருக்கு ஒரு மனநலப் பிரச்னைச் சூழல் ஏற்பட்டிருக்கலாம், அல்லது, அவருக்கு மனநலப் பிரச்னைகள் அடிக்கடி வருகிற சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம். இருதுருவக் குறைபாடு, ஸ்கிஜோஃப்ரெனியா, பிற மனநலப் பிரச்னைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான ஆபத்துக் காரணிகள் உள்ளன; ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்வதுபற்றிச் சிந்திக்குமுன் இவற்றைத் தன்னுடைய உளவியலாளரிடம் விவாதிப்பது முக்கியம்.

பராமரிப்புத் திட்டம்

மனநலப் பிரச்னையின் வரலாற்றைக் கொண்ட ஒருவர் கர்ப்பம்தரிப்பதுபற்றிச் சிந்திக்கிறார் என்றால், ஒரு பராமரிப்புத் திட்டம் மிக அவசியமாகிறது. அவர் தன்னுடைய மனநல மருத்துவர் மற்றும் மகப்பேற்று மருத்துவருடன் சேர்ந்து இந்தத் திட்டத்தை உருவாக்குவது சிறப்பாக இருக்கும். இந்தத் திட்டமானது, கர்ப்பத்தின்போது சரியான நேரத்தில் பரிசோதனைகளை நிகழ்த்துவதன்மூலம் அவருடைய ஆரோக்கியத்தை இன்னும் சிறப்பாகக் கண்காணிக்க அவர்களுக்கு உதவும். கர்ப்பம்தரிக்க விரும்பும் பெண், அவருடைய துணைவர் அல்லது குடும்பத்தினருக்கு அவர்கள் கவனிக்கவேண்டிய சின்னங்களைப்பற்றித் தெரிவிக்கப்படும்; ஏதாவது பிரச்னை வந்தால் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லித்தரப்படும்; நெருக்கடிச் சூழல்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு திட்டம் வழங்கப்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அவருடைய குடும்பத்தினருக்கு எப்போதும் ஒரு மாற்றுத் தொடர்பு நபர் இருப்பதையும் இது உறுதிப்படுத்தும்.

சிக்கல்கள் ஒருபக்கமிருக்க, மனநலப் பிரச்னை கொண்ட பெண்கள் வசதியாகக் கர்ப்பம்தரிக்கிறார்கள்; சிறந்த தாய்மார்களாகத் திகழ்கிறார்கள். இதில் மிக முக்கியமான விஷயம், தயாராக இருப்பது, அனைத்தையும் நன்கு அறிந்திருப்பது, அதன்மூலம் அஞ்சி நடுங்கும் சூழ்நிலைகளைத் தடுப்பது.  

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org