கருச்சிதைவு ஒரு பெண்ணின் மனநலனைப் பாதிக்குமா?

சில ஆண்டுகளுக்குமுன் டைம் இதழில் வெளியான ஒரு கட்டுரையில், கர்ப்பங்களில் 30 சதவிகிதம் கருச்சிதைவுகளில் முடிகின்றனஎன்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றிய வேறு சில மதிப்பீடுகளின்படி, அமெரிக்காவில் குறைந்தது நான்கில் ஒரு பெண் வாழ்வில் எப்போதாவது கருச்சிதைவைச் சந்திப்பார் என்று தெரிகிறது. இந்தியாவில் 2400 பெண்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 32 சதவிகிதப் பங்கேற்பாளர்கள்ஒரு கருச்சிதைவைச் சந்தித்திருப்பது தெரியவந்தது.

கருச்சிதைவு என்பது, பொதுவில் ஒப்புக்கொள்ளப்படுவதைவிட அதிகம் நிகழ்கிறது, கருச்சிதைவை அனுபவிக்கும் பெண் உடலளவிலும் உணர்வளவிலும் பாதிக்கப்படுகிறார். இதிலிருக்கும் உணர்வுத் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக, மகப்பேறு நிபுணர்கள் டாக்டர் ஷைப்யா சல்தன்ஹாடாக்டர் அருணா முரளிதர்மற்றும் உளவியலாளர்டாக்டர் அஷ்லேஷா பகாடியாஆகியோருடன் பேசியதுவொய்ட் ஸ்வான் அறக்கட்டளை.

கருச்சிதைவு என்பது, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க இழப்பாகலாம்

பல வழிகளில், கருச்சிதைவு என்பது ஒரு குழந்தையை இழப்பதைப்போல. இதை அனுபவிக்கும் தாய் தீவிரமான சோகம், வருத்தத்தை உணரலாம், இழப்பிலிருந்து மீள்வதற்கு அவருக்குச் சிறிது நேரம் தேவை. கருச்சிதைவைப்பற்றிச் சமூகத்தில் உருவாகியிருக்கும் விலக்கப்பட்ட உணர்வால், பல நேரங்களில் தன்னுடைய சோகத்தை அல்லது தன் வலியைக் கையாள அந்தத் தாய்க்கு அதிக இடமோ வாய்ப்போ இருப்பதில்லை. இதனால், அவர் தன்னுடைய இழப்பைத் தாங்கிக்கொள்வது இன்னும் கடினமாகலாம்.

கருச்சிதைவானது கர்ப்பத்தின் பிற்பகுதியில் நிகழ்ந்தால், அதைக் கையாள்வது இன்னும் கடினமாக இருக்கலாம்.

கர்ப்பம் வளர வளர, தாய் பல ஸ்கான்களை எடுக்கிறார், குழந்தையின் உருவத்தை அவற்றில் 'பார்க்கிறார்', குழந்தையுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளத் தொடங்குகிறார், ஓர் இணைப்பை உருவாக்கிக்கொள்கிறார். இதனால், இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டர்களில் நிகழும் கருச்சிதைவுகள் தாயிடம் அதிக உணர்வுத் தாக்கத்தை உண்டாக்குகின்றன.

பல பெண்கள், தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ணுகிறார்கள், அது உண்மையில்லை.

கருச்சிதைவை அனுபவிக்கும் பெண் குற்றவுணர்ச்சியாக உணரலாம், வருந்தலாம், ஒரு முக்கியமான விஷயத்தில் தான் தோல்வியடைந்துவிட்டோம் என்று எண்ணலாம். தான் செய்த எதுவோதான் இதற்குக் காரணம் என்று அவர் நினைத்துத் தன்னைத்தானே குற்றம் சாட்டிக்கொள்ளத் தொடங்கலாம். நிறைய வேலை செய்வதால், பயணம் செய்வதால், அல்லது, பப்பாளிப்பழம் சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படும் என்று பொதுவாக நம்பப்படுகிறது; இவற்றில் உண்மையில்லை. திட்டமிடப்படாத கர்ப்பங்களின்போது கருச்சிதைவு ஏற்பட்டால், தான் அந்தக் குழந்தையைப் போதுமான அளவு விரும்பவில்லை, அதனால்தான் இப்படி நேர்ந்துவிட்டது என்று அந்தத் தாய் எண்ணக்கூடும். ஆனால், பெரும்பாலான ஆரம்ப நிலைக் கருச்சிதைவுகள் க்ரோமோசோம் அசாதாரணங்களால் நிகழ்கின்றன.

சில குறிப்பிட்ட கருச்சிதைவுகளை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம்.

சில கருச்சிதைவுகள் ரத்தப்போக்கு, இடுப்பு வலி, பின் முதுகு வலி போன்ற வழக்கமான முறைகளில் நிகழ்கின்றன, வேறு சில கருச்சிதைவுகள் வெளிப்படையான உடல் அறிகுறிகள் இல்லாமல் நிகழக்கூடும். இதனால், பெண்கள் இதை ஏற்றுக்கொள்வது இன்னும் கடினமாகிறது: அவர்கள் இன்னும் சில ஸ்கான்கள் எடுத்துப்பார்க்க நினைப்பார்கள், சான்றுக்காக இதயத்துடிப்பைச் சரிபார்க்கச் சொல்வார்கள்.

ஆரம்பநிலைக் கருச்சிதைவுகளின்போது, அவர் தனிமையில் சோகத்தை அனுபவிக்கவேண்டியிருக்கலாம்.

கருச்சிதைவு முதல் ட்ரைமெஸ்டரில் நிகழ்ந்தால், அந்தப் பெண் இச்செய்தியைத் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினரைத்தவிர வேறு யாரிடமும் பகிர்ந்துகொண்டிருக்கமாட்டார். ஒருவிதத்தில் இது நல்ல விஷயம், அவர் 'மோசமான செய்தியை' எல்லாரிடமும் சொல்லவேண்டியதில்லை. ஆனால் இன்னொருபக்கம், அவருடைய சோகம் மிகவும் தனிமையில் நிகழ்கிறது, தன்னுடைய இழப்பைப்பற்றிப் பொதுவில் பேச இயலாமல் அவர் வருந்தலாம்.

கருச்சிதைவைப்பற்றிய பேச்சுகளின் தொனி, தாயின் மனநலனைப் பாதிக்கலாம்.

இந்நிகழ்வைக் குடும்பம் எப்படி எடுத்துக்கொள்கிறது என்பது, அந்தத் தாயின் சமாளிக்கும் திறனைக் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கும். குடும்பத்தினர் இந்தக் கருச்சிதைவுக்குத் தாய்தான் காரணம் என்று குற்றம் சாட்டினால், கருச்சிதைவைத் தூண்ட அவர் ஏதாவது செய்திருக்கவேண்டும் என்று குறிப்பால் உணர்த்தினால், தாய் அந்தச் சோகத்திலிருந்து மீள்வது கடினமாகும். அந்தப் பெண்ணைச்சுற்றி ஓர் அன்பான, ஆதரவான சூழல் இருந்தால், அவர் நடந்ததை ஜீரணித்துக்கொள்ளவும், அதைப்பற்றிய தன்னுடைய உணர்வுகளை ஆற்றிக்கொள்ளவும் இயலும்.

கருச்சிதைவைச் சந்திப்பவர் தன்னுடைய மனநலனைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

கருச்சிதைவைச் சந்திக்கும் ஒருவர் தன்னுடைய உடல்நலனையும் மனநலனையும் கவனித்துக்கொள்வது முக்கியம். அவர்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள்:

1.     போதுமான அளவு ஓய்வெடுக்கலாம். இப்படிப்பட்ட இழப்பைச் சந்தித்திருக்கும் ஒருவருக்கு (சிலர் இதற்காக ஒரு மருத்துவச் செயல்முறையையும் சந்தித்திருக்கக்கூடும்) ஓரிரு வாரங்கள் ஓய்வு கிடைத்தால், அவருடைய உடல் குணமாகும்.

2.     இந்த இழப்பைப்பற்றி யாரிடம் பேசுவது என்பது அவருடைய சொந்த உரிமை, அதை அவர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவேளை, அவர் இதைப்பற்றிப் பேச விரும்பாத ஒருவர் இந்தப் பேச்சைத் தொடங்கினால்? தான் இதைப்பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாகவும் இதமாகவும் சொல்லிவிடவேண்டும்.

3.     தான் நம்பும் ஒருவரிடம் அவர் பேசலாம்: எடுத்துக்காட்டாக, தன்னுடைய துணைவரிடம், குடும்ப உறுப்பினர் ஒருவரிடம், அல்லது நண்பர் ஒருவரிடம் பேசலாம். துணைவரிடம் இதைப்பற்றிப் பேசுவது நல்லதுதான், காரணம், அவர்களும் இந்த இழப்பை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

4.     அவர் தன்னுடைய உணர்வுகளை எந்த வழியில் வெளிப்படுத்த விரும்புகிறாரோ அந்த வழியைப் பயன்படுத்தலாம்: எழுதலாம், ஓவியம் வரையலாம், வேறு படைப்புணர்வுள்ள செயல்களில் ஈடுபடலாம்.

5.     இழப்பை அடையாளம் காண, குறித்துவைக்க உதவுகிற ஒரு வழியை அவர் கண்டறியவேண்டும், அந்தச் சோகத்திலிருந்து வெளியே வருவதற்கான வழியையும் கண்டறியவேண்டும்.

'சோக'த்துக்குமேல்

குழந்தையை இழந்த ஒரு தாய், தீவிரமான உணர்வுகளை அனுபவிக்கக்கூடும், ஆனால், பல நேரங்களில், சோகத்தின் தீவிரம் இரண்டு வாரங்களில் குறைகிறது, தாய் உடலளவிலும் உணர்வளவிலும் தான் மேம்பட்டிருப்பதாக உணர்கிறார். அதேசமயம், சில பெண்களுக்கு இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளக் கூடுதல் உதவி தேவைப்படலாம். அதற்கான சில அடையாளங்கள்:

·       ஒழுங்கற்ற தூக்கம்: மிகக்குறைவாகத் தூங்குதல் அல்லது மிக அதிகமாகத் தூங்குதல்

·       தொடர்ந்த கூற்றவுணர்வு ("நான்தான் ஏதோ தவறு செய்திருக்கவேண்டும்" அல்லது "இதற்குக் காரணம் நான்தான்")

·       ஒரே எண்ணங்கள் திரும்பத்திரும்ப வருதல் ("இனி எனக்குக் குழந்தையே பிறக்காது")

·       இழப்பைப்பற்றி யாரிடமும் பேச இயலாதிருத்தல்

·       மனச்சோர்வின் பிற அறிகுறிகள்: அடிக்கடி அழுதல், நம்பிக்கையற்று உணர்தல், விளக்க இயலாதபடி திடீரென்று ஏற்படும் உடல்சார்ந்த நலப்பிரச்னைகள்

·       மரணம் அல்லது இறத்தலைப்பற்றி எண்ணுதல்

யாருக்காவது தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குமேல் இந்த அறிகுறிகள் இருந்தால், தயவுசெய்து அவர்களை ஓர் உதவித் தொலைபேசி எண்ணை அழைக்கச்சொல்லுங்கள் அல்லது, ஓர் ஆலோசகருடன் பேசச்சொல்லுங்கள்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org