புதிய தாய்மை: தாய்ப்பாலூட்டுவதுபற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவை

புதிய தாய்மை: தாய்ப்பாலூட்டுவதுபற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவை

தாய்ப்பாலை அருந்துவதால் குழந்தை நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் வலிமையைப் பெறுகிறது; அத்துடன், இது தாய்-சேய் பிணைப்பையும் மேம்படுத்துகிறது. பாலூட்டல் ஆலோசகர் டாக்டர் ஷைப்யா சல்தான்ஹா பவித்ரா ஜெயராமனுடன் பேசுகையில், தாய்ப்பாலூட்டுவது குழந்தையின் மனநலனுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறார், பாலூட்டுவதில் ஏற்படும் சிரமங்களால் உண்டாகும் அழுத்தத்தைப் புதிய தாய்மார்கள் எப்படிச் சமாளிக்கலாம் என்று விளக்குகிறார். அந்தப் பேட்டியிலிருந்து சில சுருக்கக் குறிப்புகள்:

தாய்ப்பாலூட்டுவதற்கும் மனநலனுக்கும் என்ன தொடர்பு?

தாய்ப்பாலூட்டுவது குழந்தையின் நலனுக்கு அவசியமானது. துரதிருஷ்டவசமாக, அது பல சிரமங்கள், கவலைகள் மற்றும் பதற்றங்கள் நிறைந்ததாக ஆகிவிட்டது; இதனால், பல நேரங்களில் அது தோல்வியடைவதாகத் தோன்றுகிறது. தாய்ப்பாலூட்டுவது என்பது, கர்ப்பம் மற்றும் பிரசவத்துக்கு அடுத்த படிநிலை; ஆகவே, அது சரியாக வேலைசெய்யாவிட்டால், அல்லது, அதுபற்றி நிறையக் கவலைகள், பதற்றங்கள் இருந்தால், தாய் மிகவும் வருத்தமடையலாம், அதிர்ச்சியடையலாம், கவலையடையலாம்.

நகர்ப்புறப் பெண்கள் பாலூட்டுவதில் சந்திக்கும் சவால்கள் எவை?

மனிதர்கள் செய்கிற பெரும்பாலான செயல்கள் கற்றுக்கொண்ட பழக்கங்களாக இருப்பது இயல்பு. ஆகவே, கையால் சாப்பிடுவதா அல்லது கத்தி, முட்கரண்டி கொண்டு சாப்பிடுவதா, கழிப்பறைக்குச் சென்றுவந்தபின் நீரால் சுத்தப்படுத்திக்கொள்வதா அல்லது டிஷ்யூ தாளால் சுத்தப்படுத்திக்கொள்வதா என்பதுபோன்ற பழக்கங்கள் அனைத்தும் கற்றுக்கொள்ளப்பட்டவை, இவற்றை யாரும் அனிச்சையாக அறிந்திருப்பதில்லை. ஒரு கிராமத்துப் பெண் அல்லது சேரிகளில் வளர்ந்த ஒரு பெண்ணுடன் ஒப்பிடும்போது, நீங்கள் ஒரு நகரத்துப் பெண்ணைக் குறிப்பிட்டுக் கேட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில், இங்கு வளர்ந்துள்ள நடுத்தரக் குடும்பக் கலாசாரமானது தாய்ப்பாலூட்டுதலைத் தனிப்பட்ட செயலாக வைக்கவேண்டும் என்கிறது, குடும்பச் சூழலுக்குள் அது செய்யப்படுவதில்லை என்று வலியுறுத்துகிறது. நகர்ப்புற சூழலில் வளரும் ஒரு பெண், யாரும் தாய்ப்பாலூட்டுவதைப் பார்த்ததில்லை; அதேசமயம், ஒரு கிராமத்தில் அல்லது சேரிகளில் வளரும் ஒரு பெண், தன்னுடைய தாய் தன் உடன்பிறந்தோருக்குத் தாய்ப்பாலூட்டுவதைப் பார்த்துள்ளார்; தன்னுடைய சகோதரி மற்றும் அண்ணி போன்றோர் தங்களுடைய குழந்தைகளுக்குப் பாலூட்டுவதைப் பார்த்துள்ளார். ஆகவே, குழந்தையை எப்படிப் பிடித்துக்கொள்ளவேண்டும், குழந்தைக்கு ஏப்பம் வரச்செய்வது எப்படி, குழந்தையைச் சமாதானப்படுத்துவது எப்படி என்பதையெல்லாம் அவர் ஏற்கெனவே கற்றுக்கொண்டுவிட்டார்; அவர் இதனை உணராவிட்டாலும், அவருக்குள் இவையெல்லாம் உள்ளன. இந்தக் 'கற்றுக்கொண்ட அறிவு' குறைவாக உள்ள நகர்ப்புறப் பெண்களுக்குப் பாலூட்டல் ஆலோசகர் ஒருவர் தேவைப்படுகிறார்.

ஒருவகையில், பாலூட்டல் ஆலோசகர் என்பவர் நிலைகளை, பால் உற்பத்திச் செயல்முறையை விளக்குவதன்மூலம் பெண்களுக்கு உதவுகிறார்; ஏனெனில், முதல் 24மணிநேரத்துக்குத் தங்களுக்குத் தாய்ப்பால் வருவதில்லை என்பது பல பெண்களுக்குத் தெரிந்திருப்பதில்லை. இரண்டாவது நாளில், சுமார் 20-30மிலி பால் வருகிறது. மூன்றாவது நாளில்தான் பால் உற்பத்தி தொடங்குகிறது; மார்பகம் பெரிதாகிறது; இது அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை. ஆகவே, அவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்; உடனடியாக, அனைத்துக் குழந்தைகளும் தாங்கள் பிறந்த எடையைவிட முதல் 3-4 நாட்களில் 10 சதவிகித எடையை இழக்கின்றன. ஆனால், இது அச்சத்தை உண்டாக்குகிறது. காரணம், அவர்கள் "கடவுளே, குழந்தையின் எடை குறைந்துவிட்டது. இப்படி நிகழக்கூடாதே!" என்கிறார்கள். ஆகவே, அவர்கள் குழந்தைக்கு ஃபார்முலா உணவைத் தரத்தொடங்குகிறார்கள்; தாய்ப்பாலூட்டலை அவமதிக்கிறார்கள்.

தாய்ப்பாலூட்டலுக்கான முன்தயாரிப்பு எப்போது தொடங்கவேண்டும்?

பிரசவத்துக்குப்பிறகு, ஒரு பெண்ணின் தையல்கள் வலிக்கத்தொடங்குகின்றன; அவருடைய மார்பகங்கள் பெரிதாகியுள்ளன; அவருக்குத் தூக்கம் வருவதில்லை; இந்த நேரத்தில் அவருக்குத் தாய்ப்பாலூட்டுதலைப்பற்றி விளக்க இயலாது. பிள்ளைப்பேற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இது நிகழ்ந்திருக்கவேண்டும். அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் அமர்ந்து பேசியிருக்கவேண்டும்; தாய்ப்பாலூட்டுதல் என்பது ஒரு குடும்பப் பணி. ஆகவே, அவருடைய துணைவர், தாய், மாமியார், அவரைக் கவனித்துக்கொள்வதில் உதவப்போகும் மற்றவர்கள் எல்லாரும், அவர் தாய்ப்பாலூட்டும்போது சந்திக்கக்கூடிய பிரச்னைகளைக் கற்றுக்கொள்வதில் பங்கேற்கவேண்டும். இன்னொரு விஷயம், தவறான நம்பிக்கைகள். சில நேரங்களில், "நீங்கள் எதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்பது மிகவும் முக்கியம். ஏனெனில், அவர்களிடமிருந்து பலவிதமான பதில்கள் வரும். "என் தோழிக்குப் பாலே வரவில்லை" என்பார் ஒருவர்; "குழந்தை பாலை உறிஞ்சவே இல்லை" என்பார் இன்னொருவர்; "குழந்தை இரவுமுழுக்க அழுதது" என்று சிலர் சொல்வார்கள்... இப்படிப் பல விஷயங்கள் வெளிவரும். இவை ஏற்கெனவே நிறைய அழுத்தத்தை உண்டாக்கியுள்ளன; அவர்கள் ஏற்கெனவே இந்தக் கவலைகளுடன் உள்ளார்கள்; இதனால், அந்தக் கவலைகளே உண்மையாகிவிடுகின்றன.

தாய்ப்பாலூட்டுதல் ஏன் அழுத்தம் நிறைந்ததாகிறது?

கர்ப்பத்தின்போதும் அதன்பிறகும் ஒரு பெண்ணிடம் மிகுதியாகக் காணப்படும் உணர்வுகள், அழுத்தம் மற்றும் பதற்றம். இதற்கு எளிய காரணம், பெரும்பாலான பெண்கள் குழந்தைக்காகத் திட்டமிட்டிருக்கக்கூட மாட்டார்கள். குழந்தை பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பாவிட்டாலும், அதற்கு அவர்கள் தயாராக இல்லாவிட்டாலும், அவர்களுடைய குடும்பத்தினர் வற்புறுத்தி அவர்களைக் கர்ப்பமாகச்சொல்கிறார்கள். பிறகு, அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள், அதாவது, அவர்கள் உண்மையில் விரும்பாத ஒரு குழந்தையைப் பெறுகிறார்கள். இதற்குமேல், பாலினம் மாறிவிட்டால், அதாவது, பெண் குழந்தையை விரும்பியவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டால், அல்லது, ஆண் குழந்தையை விரும்பியவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துவிட்டால், அல்லது, குழந்தையின் வண்ணம் மாறியிருந்தால், அவர்கள் மிகவும் வருந்துகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவரும் அவருடைய கணவரும் குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ந்தார்கள். பிரசவத்துக்குப்பின் அவர் உடனடியாகத் தாய்ப்பாலூட்டத்தொடங்கினார். இரண்டாவது நாள் நான் அவரைக் காணச்சென்றபோது, அவர் அழுதுகொண்டிருந்தார், அவருடைய குழந்தையும் நலமின்றி இருப்பதாகத் தோன்றியது. "குழந்தை இரவுமுழுக்க அழுதது; பால் குடிக்கவே இல்லை" என்றார் அவர். அவருடைய தையல்களில் வலி ஏற்பட்டுள்ளதா என்று நான் கண்டறிய முயன்றேன்; அந்த அறையில் ஏதோ சரியில்லை என்பதை நான் கண்டறிந்தேன். இதுபற்றி நான் அவரை மேலும் விசாரித்தபோது, உண்மை வெளிவந்தது. குழந்தையைப் பார்க்க வந்த ஓர் அத்தை, "அடடா, கருப்புக் குழந்தையாகப் பிறந்துவிட்டதே. பெண் குழந்தை கருப்பாக இருந்தால் கஷ்டம்தான்" என்று சொல்லியிருக்கிறார். அதுதான் எல்லாப் பிரச்னைகளையும் தொடங்கியிருக்கிறது. அதுவரை அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்; நன்றாகத் தாய்ப்பாலூட்டத்தொடங்கியிருந்தார். இப்போது அது பூஜ்ஜியத்துக்குச் சென்றுவிட்டது. காரணம், உறவினர் ஒருவர் சொன்ன தீவிரமான, நுண்ணுணர்வற்ற ஒரு கருத்து.   

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்கிக்கொள்வதற்குத் தாய்ப்பாலூட்டுதல் எப்படி உதவுகிறது?

தாய்ப்பாலூட்டும்போது சுரக்கும் முதன்மையான ஹார்மோனின் பெயர், ஆக்ஸிடானின். அது "அணைப்பு ஹார்மோன்" என்றும் அழைக்கப்படுகிறது, காதலர் தினக் கொண்டாட்டங்களின்போது இந்தச் சொல்லை அடிக்கடி கேட்கலாம். இந்த ஹார்மோன் உண்மையிலேயே தாய்க்கும் குழந்தைக்கும் பிணைப்பைக் கொண்டுவர உதவுகிறது. தாய்ப்பாலூட்டும்போது, தாயின் உள்ளம் தளர்வாகிறது; தன்னுடைய குழந்தைக்காக அவர் மிகுந்த வசதிகளை உண்டாக்குகிறார். ஒன்பது மாதங்களாகத் தான் அமர்ந்திருந்த இயற்கைச் சூழலிலிருந்து வெளிக்கொண்டுவரப்பட்ட குழந்தை இப்போது தாயின் மார்பகத்தில் தஞ்சம் புகுகிறது; அது உண்மையில் தாயின் இதயத்துடிப்பைக் கேட்கிறது; முந்தைய ஒன்பது மாதங்களாக அந்தக் குழந்தையின் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருந்த ஒலி, அந்தத் தாயின் இதயத்துடிப்புதான். ஆகவே, தாய்ப்பாலூட்டுவது இயல்பாகவே தாயையும் குழந்தையையும் அமைதிப்படுத்துகிறது. அங்கிருந்து பிணைப்பு நிச்சயம் அதிகமாகிறது. ஆனால் அதைவிட முக்கியம், தாய்ப்பாலூட்டுவது மிகவும் எளிது. விரும்பிக் குழந்தை பெற்றுக்கொண்ட, குழந்தையை எண்ணி மகிழ்ச்சியாக உள்ள பல பெண்கள் ஆரம்பத் தடுமாற்றங்களைச் சமாளித்துவிடுகிறார்கள். மனிதர்களைப் பொறுத்தவரை, தாய்ப்பால் உண்பது எப்படி என்று குழந்தைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். நாய்க்குட்டிகளுக்கும் பூனைக்குட்டிகளுக்கும் இதை யாரும் சொல்லித்தரவேண்டியதில்லை; மனிதக் குழந்தைகளுக்குமட்டும்தான் இது தேவைப்படுகிறது. ஆகவே, குழந்தையை எப்படிப் பிடித்துக்கொள்வது, எப்படித் தூக்குவது... இவை அனைத்தும் ஒரு மாற்றத்தை உண்டாக்குகின்றன.

தாய் பணிக்குத் திரும்பியபிறகும் தாய்ப்பாலூட்டுவது சாத்தியமா?

தாய்ப்பாலூட்டுவதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முக்கியமான காரணம், தொழில்மயமாக்கம். அதிகப் பணியாளர்களுக்கான தேவை ஏற்பட்டபோதுதான் ஃபார்முலா உணவுகள், புட்டிப்பால் போன்றவை அறிமுகமாகின. அது உண்மையில் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஓராண்டுக்குத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். பல அரசு அலுவலகங்களில் தாய்மைப்பேற்று விடுமுறையானது 84 நாட்களுக்குமேல் வழங்கப்படுவதில்லை; தனியார் நிறுவனங்களில் இது இன்னும் குறைவு. இவை அனைத்தும் குழந்தைக்கு மிகுந்த பாதிப்பை வழங்குகின்றன. இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும், உறுதியாக இருக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கலாம். ஒரு தாய் இரவுமுழுவதும் தாய்ப்பாலூட்டுகிறார் என்று வைத்துக்கொண்டால், ஒவ்வோர் இரவிலும் அவர் 500-600மிலி பால் தருகிறார்; பகல் நேரத்தில் அவர் தன்னுடைய பாலையே சேமித்துவைத்துக் குழந்தைக்கு வழங்கலாம், குழந்தையின் வயதுக்கேற்ற பிற இயற்கை உணவுகளை வழங்கலாம், புட்டிப்பால் மற்றும் ஃபார்முலா உணவுகளை முற்றிலும் தடுத்துவிடலாம்.

மனநலப் பிரச்னை கொண்ட தாய்மார்கள் தாய்ப்பாலூட்டலாமா?

இதில் முதலாவதாகக் கேட்கவேண்டிய கேள்வி, அந்தப் பெண் மனநலப் பிரச்னையால் துன்புற்றுள்ளார் என்றால், கர்ப்பமடைவது, குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்கான உணர்வுரீதியிலான, உடல்ரீதியிலான தகுதி அவருக்கு உள்ளதா? இதுதான் மிகப்பெரிய கேள்வி. ஏனெனில், துரதிருஷ்டவசமாக, குறிப்பாக நம்முடைய இந்தியக் கலாசார அமைப்பில், மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்து ஒரு குழந்தை பிறந்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இரட்டைப் பாதிப்பை உண்டாக்குகிறது. ஆகவே, மனநலப் பிரச்னைகளைப் பொறுத்தவரை, தாய் மற்றும் அவருடைய துணைவருடைய முழு இணக்கத்தின்மூலம் அது நன்கு கட்டுப்படுத்தப்படும்போதுதான் கர்ப்பம் தொடங்கவேண்டும். அவர்களுக்கு இன்னும் அதிக ஆதரவு, நிறைய அக்கறை தேவை. குறிப்பாக, எந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். குழந்தை பிறந்தபின்னரும், மனநலப் பிரச்னை கொண்ட ஒரு பெண் மருந்துகளை உட்கொண்டபடி எந்தப் பிரச்னையும் இல்லாமல் தாய்ப்பாலூட்டலாம்.

புதிய தாயை ஆதரிப்பதில் குடும்பத்தின் பங்கு என்ன?

குழந்தை பெற்றுக்கொண்ட ஒரு பெண்ணுக்கு, அவருடைய குடும்பம் மற்றும் மருத்துவருடைய முழு ஆதரவு கிடைக்கும்போது, உணவளிப்பது, குழந்தையைக் கவனித்துக்கொள்வது, அவரால் தாய்ப்பாலூட்ட இயலும் என்று தன்னம்பிக்கை அளிப்பது போன்றவற்றில் அவருக்கும் அவருடைய குழந்தைக்கும் உதவுவதற்கு அவர்கள் துணையாக இருக்கும்போது, தாய்ப்பாலூட்டுதல் வெற்றியடைகிறது. ஒரு பெண் தன்னம்பிக்கையுடன் தாய்ப்பாலூட்டும்போது, தாய்ப்பாலூட்டுதலின் இரு செயல்முறைகளையும் அவர் மகிழ்ந்து அனுபவிக்கிறார்: குழந்தையையும் அவர் நேசிக்கிறார், பிரசவத்துக்குப்பிந்தைய வாழ்க்கையையும் அவர் விரும்புகிறார். இதனால், அவருக்கு இருவழிகளில் மிகுந்த வளம் உண்டாகிறது: அவர் மற்ற எவ்வகையிலும் அனுபவித்திருக்காத ஓர் உணர்வு அனுபவத்தைப் பெறுகிறார், அவருடைய குழந்தையின் வாழ்க்கை அருமையானமுறையில் தொடங்குகிறது.

உண்மையில், பல நேரங்களில் தாய்ப்பாலூட்டுவதுதான் குழந்தைக்கு முதல் தடுப்பூசி என்று நாங்கள் கருதுகிறோம். குழந்தைக்குக் கிடைக்கும் உணர்வு நிலைத்தன்மை, நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் திறன், குழந்தைக்குக் கிடைக்கிற பிணைப்பு மற்றும் வலிமை (தற்போது நாம் இதனை முதன்மையாகக் கவனித்துக்கொள்பவருடனான இணைப்பு என்று கருதுகிறோம்) ஆகியவை தாய்ப்பாலூட்டுவதால் மிகவும் மேம்படுகின்றன. ஆனால், தாய் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுதல் என்பது, குடும்ப இயக்கவியலின் ஒரு சிறு பகுதி என்பதை மக்கள் புரிந்துகொள்ளாவிட்டால், இது சாத்தியமில்லை. இதன் பொருள், தாய்மார்கள், மாமியார்கள், பாட்டிகள் எல்லாரும் புதிய தாயை ஆதரிக்கவேண்டும். இந்த ஒட்டுமொத்தச் செயல்முறையிலும் கணவர் பங்கேற்பது மிகவும் முக்கியம். ஏனெனில், தன் குழந்தைமீது தன் கணவர் காட்டும் உணர்வு ஆதரவானது ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது. 

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org