தாய்மை

தாய்மையும் வேலையும்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நான் வேலையிலிருந்து நின்றுவிடவேண்டுமா? நிரந்தரமாக விலகிவிடவேண்டுமா? குழந்தையை ஓர் ஆயாவிடம் விட்டுவிட்டு அலுவலகம் செல்வது சரியா? இந்தக் கேள்விகள் எவற்றுக்கும் இதுதான் சரியான விடை என்று எதுவும் இல்லை. உங்களுக்கு எது சரிப்படுகிறதோ அதுதான் சரியான விடை என்கிறார் சக்ரா வேர்ல்ட் ஹாஸ்பிடலில் ஆலோசனை வழங்கும் மனநல மருத்துவரான டாக்டர் சபீனா ராவ். மூன்று குழந்தைகளின் தாயான இவர், தன்னுடைய மருத்துவமனையின் மருத்துவ இயக்குநருக்கு நன்றிசெலுத்துகிறார். காரணம், இவர் கர்ப்பமாக இருந்தபோதும், அதன்பிறகும் தனக்கு வசதிப்பட்ட நேரங்களில் பணியாற்ற இயன்றது, அதற்கு அந்த இயக்குநர் அனுமதியளித்தார். நகர்ப்புறங்களில் வாழும் பெண்கள் சந்திக்கும் குழப்பங்களைப்பற்றியும், அவர்கள் குற்றவுணர்ச்சியை ஜன்னலுக்கு வெளியே வீசவேண்டியதன் அவசியத்தைப்பற்றியும் பேசுகிறார் டாக்டர் ராவ்.

இன்றைக்குக் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது வாழ்க்கையையே மாற்றும் ஒரு தீர்மானமாகிவிட்டது. புதிய பெற்றோர் தங்களுக்குள் என்னவெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்?  

இன்றைய காஸ்மோபாலிட்டன் நகரங்களில், திருமணமானவுடன் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற அழுத்தம் குறைந்துவிட்டது. காரணம், இன்றைய தம்பதிகள் தங்களுடைய பெற்றோர்/மாமனார், மாமியாரிடமிருந்து தனித்து வாழ்கிறார்கள், ஆகவே, 'எப்போ குழந்தை பெத்துக்கப்போறீங்க' என்று அவசரப்படுத்த யாரும் அருகே இல்லை. இன்றைய இளைஞர்களிடையே சுதந்தரச் சிந்தனை அதிகரித்துள்ளது.  இப்போது, பெண்களும் நிதி விவகாரங்களைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உதாரணமாக: குழந்தை பிறந்தபின் அவர் வேலைக்குத் திரும்ப இயலுமா? இந்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது சரிதானா? சில பெண்கள் தங்களைத்தாங்களே இப்படியும் கேட்டுக்கொள்கிறார்கள்: 'உணர்வுரீதியில் பார்க்கும்போது, கர்ப்பமாவது என்றால் என்ன? நான் கர்ப்பமாகத் தயாராக உள்ளேனா?' இந்த விஷயத்தில் நிறுவனங்களின் சிந்தனையும் கொஞ்சம் மாறியிருக்கிறது. அவர்கள் பெண் ஊழியர்களைச் சுமையாக எண்ணுவதில்லை, சிறந்த முதலீடாகக் கருதுகிறார்கள். ஆனால், பெரும்பாலான பெண்களின் முக்கியமான கவலை: நான் வேலைக்குச் செல்லும்போது குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஆக, குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பது நிஜமாகவே வாழ்க்கையை மாற்றும் தீர்மானம்தான். இதனால் ஒரு பெண்ணில் பல விஷயங்கள் மாறிவிடுகின்றன: அவரது உடல், அவரது உணர்வுகள், தான் யார் என்கிற அவரது உணர்வுகூட!

அப்படியானால், நேரம் எடுத்துக்கொண்டு சிந்தித்துத் திட்டமிடுவதுதான் சரியா?

ஆனால், பல தம்பதியருக்கு, இதுபற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்பே கிடைப்பதில்லை. நன்றாகப் படித்த பெண்கூட, சமூகத்தின் அழுத்தம், குடும்பத்தினர் அழுத்தத்துக்குப் பணிந்துவிடுகிறார். பல பெண்கள் "இதுதான் சரி" என்று நம்புகிறார்கள். சிறுவயதுமுதல் அவர்கள் இதையே கேட்டு வளர்ந்திருக்கிறார்கள்: திருமணம் செய்துகொண்டால் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும், அதுதான் "சரி".  ஒருவர் எப்போதும் குழந்தைக்குத் தயாராக இருக்கமுடியாது என்று சொல்வார்கள். இது உண்மைதான். பெற்றோராகத் தங்கள் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை ஒருவரால் ஊகிக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாது. ஆனால், இதுதொடர்பாகச் சில அம்சங்களைக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக: அவர்களது நிதிநிலைமை என்ன?  கர்ப்பமாகும் பெண் வேலையிலிருந்து விலகப்போகிறாரா? அவர் திரும்ப வேலைக்குச் செல்லும்போது என்னமாதிரி ஆதரவு கிடைக்கும்? இதைத் திட்டமிடுவதால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல இயலாது. ஆனால், சில விஷயங்கள் எளிதாகும். சில விஷயங்கள் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை, உதாரணமாக: அவரது உடல் கர்ப்பத்தை எப்படி ஏற்றுக்கொள்ளும், கர்ப்பம் சுலபமாக இருக்குமா, அதாவது, சிக்கல்கள் இல்லாமலிருக்குமா...

பணிக்குச் செல்லும் பெண்கள் கர்ப்பமாவதால் வரும் அழுத்தங்கள் என்ன?

இந்தியாவில் ஒரு பெண் ஊழியர் குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டால், பெரும்பாலான நிறுவனங்கள் அவருக்குப் பெரிய ஆதரவு அளிப்பதில்லை. இன்னொருபக்கம், குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் அமைப்புகள், ஆயாக்கள் போன்ற ஆதரவு அமைப்பும் வலுவாக இல்லை. இதை எண்ணி ஒரு பெண் அவநம்பிக்கை கொள்வது சாத்தியமே.  அந்தக் கோணத்தில் பார்த்தால், நகரங்களில் வாழ்கிற, தனிக்குடித்தனமாக இருக்கும் பெண்கள் இந்தப் பிரச்னைகளை அவர்களேதான் சந்தித்தாகவேண்டும். சிலருக்குக் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கிறது. ஆனால், குழந்தை பெற்றுக்கொள்பவரின் வயது அதிகமாக ஆக, அவருடைய மாமனார், மாமியார், தந்தை, தாயின் வயதும் அதிகமாகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பணிக்குச்செல்லும் ஒரு பெண் என்னதான் செய்வார்? ஆகவே, இந்தப்பொறுப்பு அவருடைய பணியிடத்தைச் சேர்கிறது. அதிக நாள் பேறுகால விடுமுறை, பணியிடங்களில் குழந்தைப் பராமரிப்பு அமைப்புகள் போன்ற சில வழிகளின்மூலம் நிறுவனங்கள் தங்களுடைய பெண் ஊழியர்களை ஆதரிக்கலாம். பெண்களும் ஆண்களுக்கு இணையாகப் பணிபுரிகிறவர்கள்தான் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஒரு நிறுவனம் தன்னுடைய பெண் ஊழியர்களின் தாய்மைக் கடமைக்கு நேரமும் இடமும் அளித்தால், அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள், இன்னும் சிறப்பாகப் பணிபுரிவார்கள்.

இன்னொரு பிரச்னை, ஒரு பெண் தன்னுடைய குழந்தையைக் குடும்பத்தினர் அல்லது ஆயாவிடம் தந்துவிட்டு வேலைக்குச் சென்றால், அவரைச் சமூகம் இழிவாகப் பார்க்கிறது. இவை அனைத்தும் ஒரு பெண்ணின் மனத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால், அவர் குழந்தைப்பேறுபற்றித் தீர்மானிப்பது மிகவும் அழுத்தம்தருகிற செயலாகிவிடுகிறது.

அப்படியானால், குற்றவுணர்ச்சி ஒரு பெரிய விஷயமா?

இந்தக் குற்றவுணர்ச்சி உலகெங்கும் உள்ளது. உதாரணமாக, IT துறையில் வேலைசெய்யும் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்வதற்காகச் சில மாதங்கள் வேலைக்கு வராவிட்டால், அவருக்காக அந்தத் துறை காத்திருக்காது. தொழில்நுட்பம் தொடர்ந்து மாறிக்கொண்டுதானிருக்கும். தங்களுடைய பணிவாழ்க்கைக்காக வாழ்நாள்முழுவதும் கஷ்டப்பட்டுப் பணிபுரிந்த பெண்கள், குழந்தைக்காக ஓராண்டு அல்லது இரண்டாண்டு இடைவெளி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், தொழில்நுட்பரீதியில் அவர்கள் பின்தங்கிவிடுகிறார்கள். அதேசமயம், அவர்கள் பந்தயத்தில் தொடரத் தீர்மானித்தால், தங்களுடைய அழகான குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறோமே, அதனுடன் அன்புப்பிணைப்பை உருவாக்கிக்கொள்ள அதிக நேரம் செலவிடவில்லையே என்கிற குற்றவுணர்ச்சி வருகிறது. இதனால், குழந்தைகளுக்கு இரண்டு பக்கமும் குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. இதுபற்றி நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின்படி, வேலைக்குச்செல்லும் தாய்மார்களின் குழந்தைகள் நல்ல தன்னம்பிக்கையோடு வளர்கிறார்கள். ஒரு தாய் தன்னைப்பற்றிச் சிறப்பாக உணர்கிறார் என்றால், தன்னுடைய குழந்தையின் தேவைகளைப் பூர்த்திசெய்கிற ஒரு தாயாக அவர் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். தாய்மார்கள் உணர்வுரீதியில் ஆரோக்கியமாக உணரவேண்டும். ஆகவே, அந்தக் குற்றவுணர்வை அவர்கள் உதறவேண்டும்.

பெண்கள் தங்களுக்கு எது சரிப்படுகிறதோ அதுதான் சரியான தீர்மானம் என்று புரிந்துகொள்ளவேண்டும். ஒரு பெண் தன்னை முழுமையாக, சாதித்தவராக உணர்வதற்கு வேலைசெய்ய விரும்புகிறார் என்றால், அவர் அதைச் செய்யவேண்டும். இன்னும் சில பெண்கள், குழந்தையைக் கவனித்துக்கொள்வது, வளர்ப்பதுதான் தங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்று தீர்மானிக்கிறார்கள். அவர்கள் இதற்கு எதிரான அழுத்தத்தைச் சந்திக்கிறார்கள். சுற்றியிருக்கிறவர்கள் இவர்களைப்பார்த்து, 'உன்னுடைய படிப்பை வீணாக்குகிறாயே' என்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் எல்லாவற்றிலும் வெல்லவேண்டும் என்று உணர்கிறார்கள்: எல்லாவற்றையும் செய்யவேண்டும், எல்லாவற்றையும் வெற்றிகரமாக மாற்றிமாற்றிச் சாதிக்கவேண்டும். அது மிகவும் சிரமம். தாங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயங்களைதான் அவர்கள் செய்யவேண்டும். இது ஓர் அழுத்தம் மிகுந்த நேரம். இதில் குழப்பமும் முரண் சிந்தனைகளும் ஏற்படுவது சகஜம்தான்.

இந்த வெளி அழுத்தங்கள், சமூக அழுத்தங்கள் பெண்களின் மன நலனைப் பாதிக்கின்றனவா?

கண்டிப்பாகப் பாதிக்கின்றன. பல பெண்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்தப் பெண்களுக்குப் பதற்றமும் மனச்சோர்வும் மிக எளிதில் வரக்கூடும். பேறுகாலத்துக்குப் பிந்தைய ப்ளூஸ் என்பது மிகவும் பொதுவான ஒரு விஷயம். பல நேரங்களில் வெளி அழுத்தங்கள் இதனை அதிகரிக்கச்செய்கின்றன. இதனால், ஏற்கெனவே பேறுகாலத்துக்குப்பிந்தைய ப்ளூஸால் அவதிப்பட்டுக்கொண்டு குழந்தையைக் கவனித்துக்கொண்டிருக்கும் தாய், இயன்றவரை விரைவாக வேலைக்குச் செல்லவேண்டிய அழுத்தத்தை உணர்கிறார். உதாரணமாக, அவரைச்சுற்றியிருக்கிற பலர், 'நீ அவ்ளோ படிச்சுப் பட்டமெல்லாம் வாங்கி என்ன பயன்? இப்படி வீட்டுல உட்கார்ந்திருக்கறதுக்கா நீ படிச்சே?' என்று கேட்கலாம்.

இது மிகவும் சவாலான ஒரு நேரமாக இருக்கலாம். குழந்தை பிறந்தபிறகு, பெண்கள் தங்களுக்கு ஆறு வாரங்கள் ஓய்வு தர முயற்சிசெய்யவேண்டும். ஒருவேளை அவருடைய நிறுவனத்தில் பேறுகால விடுமுறை குறைவு என்றால், அவர் தன் மேலாளரிடம் பேசி இதனை அதிகரிக்கச்செய்ய முயற்சிசெய்யலாம். அப்படிக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை.

இதில் கணவரின் பொறுப்பு என்ன?

இந்தத் தீர்மானத்தில் கணவரே மிக முக்கியப் பங்காற்றுகிறார். பல நேரங்களில் தாய்மை என்பது ஒரு பெண்ணின் "பிரச்னை" என்று சொல்லப்பட்டுவிடுகிறது.  இதனால், கர்ப்பம், பிரசவம் ஆகியவற்றில் பங்கேற்பதைப்பற்றிச் சராசரி இந்திய ஆண் சிந்திப்பதே கிடையாது. இன்றைய காலகட்டத்தில், ஆண்கள் நிதி ஆதரவைவிட, உணர்வு ஆதரவை அதிகமாக வழங்கவேண்டும். குழப்பத்திலிருக்கும் தன் மனைவியுடன் அவர் உட்கார்ந்து பேசவேண்டும், தங்களுடைய நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும். தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும்போதே இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவேண்டும். ஆரம்பத்திலிருந்தே கணவரும் இதில் பங்கேற்கவேண்டும்: படிப்பது, திட்டமிடுவது, உணவூட்டுவது, உடைமாற்றுவது, எல்லாவற்றிலும் அவர் பங்கேற்கவேண்டும். ஆண்களே, குழந்தைவளர்ப்பில் பங்கேற்கத் தொடங்குங்கள், இதுவும் ஆண்மையின் அடையாளம்தான்.

குழப்பத்திலிருக்கும் பெண்கள் யாரிடம் பேசுவார்கள்?

ஒருவேளை அவருடைய தாய் அல்லது மாமியார் அவரது எண்ணங்களைப் புரிந்துகொள்ளாவிட்டால், இதேபோன்ற அனுபவத்தைச் சந்தித்திருக்கும் பெண்களை அவர்கள் தேடலாம். உதாரணமாக, சக ஊழியர் ஒருவர், அடுக்கக வளாகத்திலிருக்கும் இன்னொருவர், பக்கத்துக் கட்டடத்தைச் சேர்ந்த ஒருவர்... இவர்களெல்லாம் எப்படி அலுவலகத்தையும் வீட்டையும் நன்கு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதை ஆராயலாம். ஆனால், எந்த இரண்டு நபர்களுக்கும் ஒரேமாதிரி பிரச்னைகள் இருக்காது, ஒரேமாதிரி பலன்களும் கிடைக்காது என்பதை நினைவில் வைக்கவேண்டும். சில நிறுவனங்களில் பெண்களுக்குத் தார்மிகரீதியில், உணர்வுரீதியில் ஆதரவு வழங்குவதற்கென்றே ஆலோசகர்கள், மூத்த மேலாண்மைக்குழுவைச் சேர்ந்த பெண்கள் இருப்பார்கள். இதுபற்றிப் பெண்கள் ஓர் ஆலோசகரிடமும் பேசலாம்.

பெண்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்வது எப்படி?

பெரும்பாலான பெண்கள் குழந்தை பெற்றபின் களைத்திருக்கிறார்கள், தூக்கம் போதாத நிலையில் இருக்கிறார்கள், அப்போது அவர்களுடைய கணவர், குடும்பத்தினரின் ஆதரவு அவர்களுக்கு அதிகம் தேவை. அவர்கள் வீட்டில் வழக்கமான பணிகளுக்குத் திரும்புவது சவாலாக இருக்கலாம். வேறு சில பெண்கள் சில வாரங்களுக்குள் வழக்கமான பணிக்குத் திரும்பிவிடுகிறார்கள், சில வாரங்களில் கர்ப்பகாலக் கூடுதல் எடை அனைத்தையும் குறைத்துவிடுகிறார்கள், இவர்களுக்குக் குழந்தை பிறந்திருந்தாலும், எல்லாம் இவர்களுடைய முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் தோன்றுகிறது. அப்படிப்பட்ட உதாரணங்களைக் கேள்விப்படும் மற்ற பெண்கள் ஊக்கமிழக்கக்கூடாது. ஒவ்வொரு பெண்ணின் அனுபவமும் வெவ்வேறுவிதமானது என்பதை அவர்கள் நினைவில்கொள்ளவேண்டும்.

இவர்கள் தங்களுக்குத்தாங்களே உதவிக்கொள்வதற்கான சில குறிப்புகள்: தங்களுடைய கால அட்டவணையை எழுதலாம், ஒவ்வொரு நாளையும் ஒழுங்காக அமைக்கலாம், இயன்றால், அது குழந்தையைச்சுற்றி அமையும்படி செய்யலாம். இயன்றவரை ஓய்வெடுக்கலாம். இப்படிப் பட்டியல் போட்டபிறகு, அந்தப் பட்டியலில் உள்ளவற்றில் பாதியைக்கூட அவரால் செய்ய இயலாமல்போகலாம், அப்போது அவர்கள் வருந்தக்கூடாது. தங்களைக் கவனித்துக்கொள்வதற்கான எல்லாவற்றையும் செய்யவேண்டும். வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு அவரிடம் பேச நேரமில்லாவிட்டால், தன்னுடைய எண்ணங்களை ஒரு நாட்குறிப்பில் எழுதலாம். மிகவும் அழுத்தமாக, மனச்சோர்வாக அல்லது பதற்றமாக உணர்ந்தால், ஒரு மனநல நிபுணர் அல்லது ஆலோசகரைச் சந்திக்கலாம்.

பணிக்குத் திரும்பச்செல்லத் திட்டமிடும் தாய்மார்கள், தாய்ப்பால் ஆலோசகர் ஒருவரைச் சந்திக்கவேண்டும். அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்காகத் தாய்ப்பாலை பம்ப் செய்து சேமிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம்: அவர்கள் குழந்தை பெறுவதற்குமுன்பு இருந்ததைப்போல் இப்போது இல்லை, அதைவிடச் சிறப்பாக இருக்கிறார்கள்! இதை எண்ணி அவர்கள் பெருமைப்படவேண்டும்!

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org