அனைத்துவிதமான வன்முறைகளும் (பாலியல்ரீதியிலானவை, மற்றவை) ஆற்றலால் தூண்டப்படுகின்றன

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர், கல்வித்துறையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகிறவர்களுடைய பெயர்களைத் தொகுக்க நினைத்தார், அந்தப் பட்டியலில் பெயர்களைச் சேர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார், யார் எந்தப் பெயரைச் சேர்த்தார்கள் என்ற குறிப்பு இல்லாமல் திரட்டப்பட்ட இந்தப் பட்டியலைக் கண்டு உலகெங்குமுள்ள கல்வித்துறையினர் அதிர்ந்துபோனார்கள். என்னுடைய சமூகச்சூழலில் இருந்த பல ஆண்கள் (பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பணியில் உள்ள நிபுணர்கள், தந்தைமார்கள்) தங்களுடைய நற்பெயர் பாதுகாக்கப்படுமா என்று கேட்கத்தொடங்கினார்கள், மாணவிகள் அல்லது பெண் ஊழியர்களுடன் பேசும்போது அவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமோ என்று எண்ணத்தொடங்கினார்கள்.

நான் பேசிய ஆண்களுக்கெல்லாம் இந்த எச்சரிக்கைச் சிந்தனை புதிதாக இருந்தது; அதைக் கேட்டபோது, நான் அடிக்கடி கவனிக்கிற, சலுகை மற்றும் ஆற்றலுக்கு நடுவிலான ஓர் அடிப்படை வேறுபாட்டை நான் உணர்ந்தேன். பெண்கள் இளம் வயதிலிருந்தே அநேகமாக ஒவ்வொரு நாளும் கவனமாக, எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது, எடுத்துக்காட்டாக, பள்ளியிலிருந்து வீட்டுக்கு நடந்துவருவது, உடை உடுத்துவது, எதிர்பாலினருடன் பேசுவது போன்றவற்றில். இப்படி எச்சரிக்கையாக இருப்பது, அல்லது, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே என்னுடைய ஆண் நண்பர்கள், சக ஊழியர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது, குறிப்பாக, பெண்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது அவர்களுக்கு மிகப் புதிய விஷயம். அவர்கள் எதிர்பாலினருடன் பேசும்போது இயல்பாகதான் உணர்ந்தார்கள், வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட வகையில் பேசவேண்டும், அல்லது, உரையாடல்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை, ஆனால், பெண்கள் பாரம்பரியமாகவே அப்படி நினைக்கவேண்டியுள்ளது. பெண்கள் வளர்ந்துவரும்போது, அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்கள், மூத்தவர்கள் அவர்களைக் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கச்சொல்கிறார்கள், குறிப்பாக, அவர்கள் ஆற்றல்மிக்க தலைமைப் பதவிகளின் பொறுப்பை ஏற்கிறபோது, அல்லது, அதிக ஆபத்துக்குள்ளாகக்கூடியவர்கள் அல்லது சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களுடைய வாழ்க்கையில் தாக்கம் உண்டாக்கக்கூடிய பதவிகளின் பொறுப்பை ஏற்கிறபோது. இது சலுகை மற்றும் ஆற்றல் கொள்கைகளுடன் பொருந்துகிறது. இங்கு, சலுகையுடன் இருப்பவர்களுக்கு அது தெரிவதே இல்லை, அல்லது, அதை அவர்களால் அடையாளம் காண இயலுவதில்லை. உண்மையில், ஒருவர் ஆதிக்கக் குழுவின் உறுப்பினராக இருக்கிறார் என்கிற ஒரே காரணத்தால் மக்களுக்குச் சலுகைகள் வழங்கப்படலாம், அவர்கள் அந்தச் சலுகைகளை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி.

ஒருவர் தன்னுடைய சொந்தச் சலுகை மற்றும் ஆற்றலின் அளவை, குறைந்த ஆற்றல் மற்றும் சலுகை கொண்டவர்களை அது எப்படிப் பாதிக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கவேண்டுமென்றால், அவரே விரும்பி இதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும், தற்காப்பு எண்ணமில்லாமல் யோசிக்கவேண்டும், வலியச்சென்று விழிப்புணர்வை உண்டாக்கிக்கொள்ளவேண்டும், உரையாடத்தொடங்கவேண்டும். சமீபத்தில், சமூக ஊடகங்கள் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன, இதன்மூலம் இந்த எண்ணத்துக்கான ஓர் இடம் உருவாகியுள்ளது, இதுபற்றிய உரையாடல்கள் நிகழ்கின்றன. இதனால், வன்முறையைத் தூண்டும் காரணிகளைத் தாங்கள் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதுபற்றி உளவியலாளர்கள், மனநல நிபுணர்கள், பாதுக்கப்பட்டோருக்காகக் குரல்கொடுப்போர், கல்வித்துறை நிபுணர்கள் மீண்டும் சிந்திக்கிற சூழ்நிலை உண்டாகியிருக்கிறது. மனநலத்துறையினுள், வன்முறை நிகழும் சூழ்நிலைகளைப்பற்றிய ஆராய்ச்சி விரிவடைந்துள்ளது, ஒரு குறிப்பிட்ட உறவில் (கணவர்:மனைவி, மேலாளர்:ஊழியர், பேராசிரியர்:மாணவர், பெரியவர்:குழந்தை) வன்முறை அல்லது வன்முறைக்கான மிரட்டல் இருக்கும்போது, அங்கு நிகழும் ஆற்றல் அடிப்படையிலான இயக்கவியலை இன்னும் முழுமையாகத் தெரிவிக்கும் துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கான விவரிப்புகளை நோக்கிக் கவனமான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

பல நேரங்களில், ஆற்றலை வலியுறுத்துவதுதான் துன்புறுத்தும் நடவடிக்கைகளைத் தூண்டும் விசையாக உள்ளது, வன்முறை அல்லது துன்புறுத்தல் அடிக்கடி நிகழ்வதற்கும் தொடர்வதற்கும் இதுவே முதன்மைத் தூண்டுதலாக இருக்கிறது. 'ஆற்றல் அடிப்படையிலான தனிப்பட்ட வன்முறை' என்ற சொல் இந்தக் கோணத்தின்கீழ் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது, துன்புறுத்தல் நிகழ்வதில் ஆற்றல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக இது அடையாளம் காண்கிறது. ஆற்றல் அடிப்படையிலான தனிப்பட்ட வன்முறை என்பது அனைத்தையும் தன்னுள்கொண்டிருக்கும் ஒரு சொல்லாகும்: குடும்ப மற்றும் நெருங்கிய துணைவர் வன்முறை, பின்தொடர்தல், உணர்வுத் துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல், மூத்தோரைத் துன்புறுத்தல், பாலியல் கடத்தல், பாதிக்கப்பட்டவரைக் குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்துதல், அச்சுறுத்துகிற, கட்டுப்படுத்துகிற நோக்கத்துடன் கற்றுத்தரப்படும் நடவடிக்கைகள் போன்றவை. இந்த வன்முறைச்செயல்களை நிகழ்த்துவதற்குப் போதைப்பொருள்கள், மது போன்றவை உதவக்கூடும். பாலியல் வன்முறையைப்பற்றிய ஆய்வுகளில், இதற்கு முதன்மைத் தூண்டுதல் பாலியல் விழைவு இல்லை எனத் தெரியவந்துள்ளது. இங்கு பாலியல் செயலானது இன்னொருவரை அவமானமடையச்செய்கிற, அவருக்கு வலியை உண்டாக்குகிற, அவர்மீது ஆதிக்கம் செலுத்துகிற, அல்லது கட்டுப்படுத்துகிற, அச்சுறுத்துகிற ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆபத்துக் காரணிகள்

சமூகங்களுக்குள் வன்முறை நிகழ்வதற்கான சாத்தியங்களை அதிகரிக்கும் சில ஆபத்துக் காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் காரணிகளில் சில: தனிப்பட்ட மற்றும் சமூக அளவில் பெரிய பாலியல் சமநிலையின்மை, சமநிலையற்ற பாலியல் சமூகமயமாக்கல், ஆண்கள், பெண்கள்/பையன்கள், சிறுமிகளுக்கான மாறுபட்ட சமூக எதிர்பார்ப்புகள், குழந்தைப்பருவத்தில் வன்முறையைச் சந்தித்தல், அதைத் தொடர்ந்த முன்னேற்ற பாதிப்புகள், குடும்பத்தில் அதிக முரண், அழுத்தத்தை வன்முறையில்லாத வழிகளில் சமாளிப்பதற்கான திறமைகள் இல்லாதிருத்தல், மற்றும் சமூக, பொருளாதார அழுத்தங்கள். கூடுதல் வன்முறையைத் தடுக்கும் நோக்கம் இருந்தால், இந்தப் பிரச்னைகளில் பெரும்பாலானவற்றை முன்கூட்டியே கண்டறிந்துவிடலாம்.

ஆற்றல் அடிப்படையிலான தனிப்பட்ட வன்முறை என்ற சொல், பெண்கள், சிறுமிகளுக்கு எதிராகமட்டுமே வன்முறை நிகழ்கிறது என்ற ஊகத்தைத் தாண்டிச் சிந்திக்கச்சொல்கிறது. வன்முறையின் வீச்சைப்பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலை நாம் இன்னும் விரிவாக்கவேண்டும், அதில் இன்னும் பல விஷயங்களைச் சேர்த்துப் புரிந்துகொள்ளவேண்டும், இது பாரம்பரியமற்ற மற்றும் எதிர்பாலினமல்லாத உறவுகளிலும் உள்ளது, பையன்கள், ஆண்கள், திருநங்கையர், இருமையாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாத நபர்களும் வன்முறையைச் சந்திக்கிறார்கள். ஆற்றல் அடிப்படையிலான தனிப்பட்ட வன்முறை என்பது உறவுகளுக்கு வெளியில் நடக்கும் வன்முறையையும் குறிக்கிறது: முன்பின் தெரியாதவர்கள் அல்லது தெரிந்தவர்களால் இது நிகழலாம், ஒருவர் இன்னொருவர்மீது தன்னுடைய ஆற்றலை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இது நிகழ்த்தப்படலாம்.

துன்புறுத்தலின் தாக்கமானது ஒருவருடைய சமாளிக்கும் அமைப்புகளை உடைத்துவிடுகிறது, அவர்கள் அழுத்தத்தை எப்படிச் சந்திக்கிறார்கள் என்பதைச் சிக்கலாக்குகிறது, இதற்குத் தொலைநோக்கில் பல உணர்வு, உளவியல் மற்றும் உடல்சார்ந்த நல விளைவுகள் உண்டு (அதிர்ச்சி அழுத்த ஆய்வுகளுக்கான சர்வதேச அமைப்பு, ISTSS). பாதிக்கப்படுவதன் உளவியல் தாக்கத்தால், ஒருவர் தன்னுடைய பாதுகாப்புணர்வை இழக்கலாம், பிறர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கலாம், செயல்திறன் உணர்வை இழக்கலாம், சுயமதிப்பை இழக்கலாம், பணித்திறனை இழக்கலாம். பல நேரங்களில், முழுமையான உறவுகளை உருவாக்குவது, பராமரிப்பது இவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது, இவர்களுக்கு மனச்சோர்வு, பதற்றம், PTSD (அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு), பாலியல்ரீதியில் பரவக்கூடிய தொற்றுகள் போன்ற மருத்துவப் பிரச்னைகள் வரலாம், இவை அனைத்துக்கும் உணர்வுரீதியிலான, நலம் தொடர்பான, நிதி சார்ந்த விலை உண்டு. இத்துடன், ஆற்றல் அடிப்படையிலான தனிப்பட்ட வன்முறையால், பாதிக்கப்பட்டவர் சார்ந்திருக்கும் குடும்பக் கட்டமைப்பு, அமைப்புகள், சமூகங்களும் பாதிக்கப்படக்கூடும்.  

ஆற்றல் அடிப்படையிலான வன்முறை நாள்தோறும் நிகழ்வதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், வன்முறையைச் செயல்திறனோடு எதிர்ப்பது, வன்முறை நிகழ்வதைக் குறைப்பது ஆகியவை தொடர்ச்சியான, பெரிய சவால்கள்: சமூகமானது இந்தப் பிரச்னைமீது அதிகக் கவனத்தைக் கொண்டுவர உழைக்கவேண்டும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்மீது கூடுதல் பச்சாத்தாபத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும், ஆற்றல் அடிப்படையிலான வன்முறை அதிகரித்துவருவதைப்பற்றியும், அதைத் தடுக்கும் வழிகளைப்பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும்.

அமெரிக்காவில் நாஷ்வில்லெயில் உள்ள வான்டெர்பில்ட் பல்கலைக்கழகத்திலிருந்து சமீபத்தில் பெங்களூருக்குக் குடிபெயர்ந்திருக்கும் மருத்துவ உளவியலாளர் திவ்யா கண்ணன், Ph.D., இவர் அமெரிக்காவில் வன்முறையைச் சந்தித்த வயதுவந்தோருடன் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் பெங்களூரில் மருத்துவ சேவை வழங்கிவருகிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org