சமூகத்தை மீண்டும் கட்டமைத்தல்: நம்பிக்கைக்கு ஆதரவான ஒரு வாதம்

தங்களுடைய வழக்கமான ஆதரவு அமைப்புகளை இழந்துவிட்ட மக்கள், உணர்வு இணைப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் புதிய வழிகளைக் கண்டறிகிறார்கள்

இந்தியாவில் COVID-19 நோய்ப்பரவலால் உலகின் மிகக் கண்டிப்பான முடக்கம் செயல்படுத்தப்பட்டது. இது மக்களுடைய வாழ்க்கைகளைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது; பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்தார்கள், அவர்களுடைய வாழ்க்கைகள், வாழ்வாதாரங்களுக்குச் சரிசெய்ய இயலாத இழப்பு ஏற்பட்டது. இந்தக் கண்டிப்பான நடவடிக்கைகளால், உணர்வு, சமூக மற்றும் பொருள் சார்ந்த உதவிக்காக மக்கள் அணுகிய, நம்பிய சமூகங்கள் துண்டிக்கப்பட்டன. இந்த நேரத்தில் ஒருவிதமான இழப்புணர்வைச் ச்னதித்த மக்கள், இந்த இன்மையை நிரப்புவதற்காக ஒரு புதிய இடத்தை உருவாக்கிய நிகழ்வுகளை இந்தக் கட்டுரை ஆசிரியர் சந்தித்தார்.

“நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”

“நான் இதைச் செய்யத் தொடங்கியபோது, என்ன எதிர்பார்ப்பது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால், நேரம் செல்லச் செல்ல, அது முக்கியமானது. இதற்காக நான் நாள்தோறும் வரவேண்டியிருந்தது, பிறருக்காக இடத்தைப் பிடித்துவைக்கவேண்டியிருந்தது” என்கிறார் வொய்ட் ஸ்வான் அறக்கட்டளைக் குழுவின் உள்ளடக்க எழுத்தாளரான ரஞ்சிதா ஜெயுர்கர். வழக்கமான வாழ்க்கையிலிருந்து முடக்கத்துக்கு மாறுவது அவருக்குக் கடினமாக இருந்தது, அதுபற்றி நண்பர்களுக்குச் செய்திகளை அனுப்பினார், அவர்களும் இப்படிதான் உணர்கிறார்கள் என்று தெரிந்துகொண்டார். தனித்திருத்தல், தனிமையில் இருத்தல், எதுவும் உறுதியாகத் தெரியாத நிலைமை, பதற்றம் ஆகியவற்றின் பொது இழையால், ஒவ்வொரு நாளும் அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை எழுதத் தொடங்கினார், அதன் பெயர், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” அடுத்து நடந்தவை என்னென்ன என்று பார்த்தால், சில மக்கள் அவருடைய பதிவை எப்போதும் ‘விரும்பி’னார்கள், சிலர் எப்படியாவது ஏதாவது ஒரு பதிலை எழுதினார்கள், இன்னும் சிலர், ‘இந்தப் பதிவுகளைப் படிப்பது எங்களுடைய தனிமையுணர்வைக் குறைக்கிறது’ என்று அவருக்கு எழுதினார்கள். சமூக ஊடகத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பழக்கமான பகுதி, மக்கள் தங்களுடைய மனத்தில் உள்ளவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கான, அவர்களுடைய சொந்த வாழ்க்கைகளில் வெளிப்படுத்துவதற்கான இடத்தைக் கண்டறிய இயலாத விஷயங்களைச் சொல்வதற்கான ஒரு வழக்கமான இடமாக ஆகிவிட்டது.

தனிமைப்படுத்தல் வானொலி

தர்ஷனா மித்ராவும் அவருடைய நண்பர் குழுவொன்றும் சேர்ந்து, ‘தனிமைப்படுத்தல் வானொலி’ என்ற ஒரு சமூக வானொலி நிலையத்தை உருவாக்கினார்கள், இதில் ஒரு சிறுவர் நிகழ்ச்சி, கதைசொல்லல் நிகழ்ச்சிகள், ஓர் இசை நிகழ்ச்சி, பேட்டிகளின் வழியான சமூக விவரிப்பு ஆகிய வடிவங்களில் உண்மை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த வானொலியைத் தொடங்கியதற்கான காரணத்தைத் தர்ஷனா மித்ரா விளக்குகிறார். “பல மாதங்களாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாகவும், அது எப்படி மக்களைப் பாதிக்கும் என்பது தொடர்பாகவும் அணிதிரட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவந்தன, திடீரென்று அந்தப் பணி முழுவதும் நின்றுவிட்டது. இது மிகவும் விநோதமான உணர்வாக இருந்தது."

கொல்கத்தாவிலிருக்கும் தேசிய நீதித்துறை அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் மித்ரா, இதைத் தொடங்குவதற்கான மையக் காரணம், “ஒருவரோடொருவர் தொடர்பில் இருப்பதுதான்” என்று ஒப்புக்கொள்கிறார்.

அவருக்கும் பிறருக்கும் இது எப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது என்று கேட்கப்பட்டபோது, “அதை விளக்குவது கடினம்” என்கிறார் அவர், அதே நேரம், இதைப் பகிர்ந்துகொள்கிறார்: அவருடைய உறவினருடைய நண்பரும் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றுகிறவருமான ஒருவர் அவரைத் தொடர்புகொண்டு, தான் பாடுவதைப் பதிவு செய்து வானொலியில் பகிர்ந்து கொள்ள இயலுமா என்று கேட்டாராம். “நீங்கள் ஒலிபரப்பியே ஆகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, என் குரல் நன்றாக இருந்தால்மட்டும் வானொலியில் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றார் அந்த விமானப் பணிப்பெண். அவருடைய குரல் மிக நன்றாக இருந்ததால், அந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. பின்னர், அந்தப் பெண் அவரை மீண்டும் அழைத்தார், நன்றி தெரிவித்தார், இது தனக்குள் ஏற்படுத்திய நல்லுணர்வுகளை விளக்கினார். அந்தப் பெண் வெளிநாட்டில் சிக்கியிருந்தார், கொல்கத்தாவில் தனியாக இருந்த அவருடைய தந்தையுடன் தொடர்புகொள்வதற்கு இது ஒரு வழியாக அமைந்தது. இதையும் அவர் விளக்கினார்.

காக்வொர்க்ஸ்

பெங்களூரிலிருக்கும் அண்ணாசுவாமி முதலியார் மருத்துவமனையில் நரம்பியல் உளவியலாளர் ஜ்வாலா நாராயணன் ‘காக்வொர்க்ஸ்’ஐத் தொடங்கினார், இதை உளவியலாளர் பிரியங்கா குப்புசாமியும் பிற உளவியலாளர்கள், தன்னார்வலர்களும் நிர்வகிக்கிறார்கள். அல்சைமர்’ஸில் தொடங்கி டிமென்சியாவரை பல நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட முதியவர்கள் வாரம் இருமுறை ஒன்றுகூடுகிற, மூன்று மணி நேரத்தைச் செலவிடுகிற இடம் இது. இங்கு அவர்கள் கலை மற்றும் நகர்தல் சிகிச்சையின் ஒரு கலவையைப் பெறுகிறார்கள். இந்த இடம், அதன் கட்டமைப்பு மற்றும் ஒழுங்கின் வழியாக, ஆழமாகப் பின்னப்பட்ட ஒரு சமூகம் உண்டாகியுள்ளது, இதற்காகச் சிகிச்சையளிப்போர் அதிகம் மெனக்கெடவோ தலையிடவோ வேண்டியிருக்கவில்லை, இது இயல்பாக நிகழ்ந்தது.

இந்த இடத்தில் ஒரு முதியவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையைப்பற்றியும் பிரச்னைகளைப் பற்றியும் பேசலாம், அவர் சந்திக்கிற பிரச்னையைப் புரிந்துகொள்ளக்கூடிய பிறரிடம் அதை விவரிக்கலாம். டிமென்சியா கொண்ட முதியவர்கள் சந்திக்கும் தனிமைப்படுத்தல் மற்றும் தனிமையுணர்வு மிகுதியாக உள்ள சூழ்நிலையில், பிறருடன் ஒரு குழுவில் இணைகிற இந்த அம்சம் அவர்களுடைய நலனுக்கு உதவுகிறது. “அவர்கள் ஆடுகிறார்கள், விளையாடுகிறார்கள், தங்கள் கதைகளை நாட்குறிப்பில் எழுதுவதுபற்றிப் பேசுகிறார்கள், சில நேரங்களில், தங்கள் நினைவாற்றல் இழப்பைக் கேலி செய்துகொள்கிறார்கள்” என்கிறார் பிரியங்கா.

முடக்கத்தின்போது காக்வொர்க்ஸை அணுக இயலாததால், பங்கேற்பாளர்கள் மிகவும் வருந்துகிறார்கள். சிகிச்சையளிப்பவர்கள் அவர்களிடம் மாற்றங்களைக் கவனித்துள்ளார்கள், எடுத்துக்காட்டாக, செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஊக்கம் குறைதல், சமூகத்திலிருந்து விலகியிருத்தல், வீட்டில் தகவல்தொடர்பு குறைதல் போன்றவை. அவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்கிறவர்களிடம் ‘காக்வொர்க்ஸுக்குச் செல்லவேண்டும்’ என்று அடிக்கடி நினைவுபடுத்துவதாகவும், குழுவிலுள்ள மற்றவர்களைப்பற்றி விசாரிப்பதாகவும் இவர்களுக்கு அறிக்கைகள் வந்துள்ளன. அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களில் சிலர், அவர்களுடைய பரபரப்புணர்வைக் கட்டுப்படுத்த இயலாமல் சிரமப்படுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதனால், சிகிச்சையாளர்கள் இப்போது ஓர் ஒருமணிநேர இணைய நிகழ்ச்சியை உருவாக்க முயல்கிறார்கள், இதில் குழு உறுப்பினர்கள் பங்கேற்கக்கூடிய பல செயல்பாடுகள் இடம்பெறும். இது வழக்கமான நிகழ்வுகளுக்கு ஒரு மாற்றாகிவிடாது, அதே சமயம், இந்த நேரத்தில் அவர்களுடைய உணர்வுகளைச் சமாளிக்க உதவும்.

சமூகம் மற்றும் அதன் நலத் தாக்கம்

சமூக இணைந்திருத்தலின் முக்கியத்துவம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, 309,000க்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து கிடைத்த தரவுகளை ஆராய்ந்த ஓர் ஆய்வு, வலுவான உறவுகள் மனிதர்களுடைய உயிர்பிழைத்தல் வாய்ப்புகளை 50% அளவு மிகுதியாக்குகின்றன என்கிறது. மாறாக, இந்த இணைப்புகள் இல்லாவிட்டால் ஒருவருடைய இறக்கும் ஆபத்து மிகுதியாகிறது, அவ்வாறு மிகுதியாகும் விகிதம், ஒரு நாளைக்கு 15 சிகரெட்களைப் பிடிப்பதற்குச் சமம்.

நாடகச் சிகிச்சையில் சிறந்து விளங்கும் ஆலோசனை உளவியலாளரான மைத்ரி கோபாலகிருஷ்ணா, ‘இந்த நேரத்தில், முடக்கத்தை எப்படிக் கையாள்வது என்பதுபற்றி நான் ஆலோசனை வழங்குவதில்லை, அதற்குப் பதிலாக, என் வாடிக்கையாளர்கள் என்ன செய்கிறார்க என்பதைக் கவனிப்பதில் கவனம் செலுத்துகிறேன்' என்கிறார். ‘அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு உதவுவதன்மூலம் புதிய உறவுகளை அமைக்கிறார்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள், நேரடி உரையாடல்களுக்குப் பதிலாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள், இந்த நேரத்தில் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும்படி விடப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருள் பங்கீட்டுப் பொதிகளை வழங்குவதற்கான உதவிப் பணியை ஒருங்கிணைக்கிறார்கள்.

“இவர்களில் பலர், இதுபோன்ற ஒரு பணியை முதன்முறையாகச் செய்கிறார்கள், இதற்குமுன் அவர்கள் இதுபோன்ற ஒரு சமூக நோக்கத்துக்காகப் பணியாற்றிப் பழகியதில்லை” என்கிற அவர், இந்த முயற்சிகளின் ஒரு முக்கியப் பகுதியாக அமைகிற சமூக அம்சத்தை அடிக்கோடிட்டுக்காட்டுகிறார்.

ஒரு தேவையை நிறைவுசெய்தல்

மும்பையைச் சேர்ந்த சிகிச்சையாளரான அபர்ணா மேனன், காதல் உறவுகளில் பரவலாக உள்மயமாக்கப்பட்டுவிட்ட சமூக இயல்பைப்பற்றிப் பேசுகிறார், “தனியாக இருப்பது சரியில்லை என்று நம்பும்படி சமூகம் மக்களைத் தயார்செய்துள்ளது.” ஒருவர் அன்புக்கான தன்னுடைய முதன்மை மூலமாக ஒரு காதல் தோழரை எண்ணுவதால், காதல் தோழர் இல்லாதது ஒரு முழுமையற்ற நிலை, அதை மாற்றவேண்டும் என்ற உணர்வு உண்டாகலாம். இந்த மனநிலையை மறுகற்பனை செய்யவேண்டும் என்கிற எண்ணத்தை அவர் முன்வைக்கிறார்: “மக்களுடைய மூளைக்கு ஒரு தேவை நிறைவு செய்யப்படுகிறதா என்பதுதான் முக்கியம், அது எங்கிருந்து நிறைவு செய்யப்பட்டது என்பதைப்பற்றி மூளை கவலைப்படுவதில்லை.” இதன் பொருள், ஒருவர் தன்மீதே செலுத்தும் அன்பு, நெருங்கிய உறவுகளில், தான் விரும்பித் தேர்ந்தெடுத்த ஒரு சமூகத்தில் காண்கிற கதகதப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய உணர்வுகளும் மன நிறைவுக்கான ஓர் உண்மை மூலமாக அமையலாம்.

இதனால், சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது மக்களுடைய மனத்தில் தோன்றுகிற வழக்கமான காட்சிகளைப்பற்றிச் சிந்திக்கவேண்டியிருக்கிறது. முன்பைப்போல் எளிதில் இடங்களை அணுகுவது சாத்தியமில்லாத ஓர் உலகத்தில், மக்கள் மாற்றுகளை உருவாக்குகிறார்கள். இப்போதைக்கு, மக்களில் பலர், இந்த மாற்றுகளைத் தடுப்பு மருந்து கண்டறியப்படும்வரையிலான தாற்காலிக ஏற்பாடாகதான் கருதுகிறார்கள்.

இந்த மாற்றுகளின் செயல்திறனைப்பற்றிச் சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கலாம். இதன் பொருள், ஒருவர் ஒரு மாறிய உலகத்தில் வலுவான பிணைப்புகளைக் கட்டமைப்பதாக, தன்னால் கட்டமைக்க இயலும் என்று அவர் நம்புவதாக இருக்கலாம்.

நோய்ப்பரவலுக்கு முன்னால் சமூகத்தை அணுகும்போது மக்கள் எப்படி உணர்ந்தார்களோ, அதேபோல் அவர்களை இப்போது உணரச்செய்ய இந்தப் புதிய இடங்களால் உண்மையிலேயே இயலுமா? இதைக் கண்டறிய ஒரே ஒரு வழிதான் உள்ளது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org