மனநலப் பிரச்னைகளைப் பதிவுசெய்தல்: ஊடகங்களின் பொறுப்பு

மனநல பாதிப்பு கொண்டவர்கள் பிறர்மீது வன்முறையைப் பிரயோகிப்பார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள், ஆனால் உண்மையில், அவர்கள் வன்முறையைச் சந்திப்பதற்குதான் வாய்ப்புகள் அதிகம், அதாவது, மனநிலை நன்றாக உள்ள பிறர், மனநிலை பாதிக்கப்பட்டோர்மீது வன்முறையைப் பிரயோகித்துத் துன்புறுத்துகிறார்கள்

பொதுவாகவே வன்முறைச்சம்பவங்களைப்பற்றிப் பத்திரிகைகளில் எழுதுவது சவால்தான். குறிப்பாக, அவற்றில் ஒரு மனநலப் பிரச்னை சார்ந்த கோணமும் இருக்கும்போது, இது இன்னும் பெரிய சவாலாகிவிடுகிறது. உதாரணமாக, நாடெங்குமுள்ள செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சானல்களில் சமீபத்தில் வந்த ஒரு செய்தி: மனநல மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒருவர், திடீரென்று கையில் துப்பாக்கியோடு தோன்றியிருக்கிறார், சிலரைச் சுட்டிருக்கிறார். சில செய்தியாளர்கள் அவருக்கு என்னவிதமான மனநலப் பிரச்னை இருந்திருக்கக்கூடும் என்று ஊகங்களை வெளியிட்டார்கள், வேறு பலர் தாங்கள் பார்க்காத ஒரு காட்சியை விதவிதமாக வர்ணித்துப் பரபரப்பைக் கூட்டியிருந்தார்கள். இதுபோன்ற தவறான செய்திப்பதிவுகளால், மனநலப் பிரச்னை கொண்டவர்கள் வன்முறையாகதான் நடந்துகொள்வார்கள் என்கிற பொதுமக்களின் தவறான நம்பிக்கைக்குத் தீனி போடப்படுகிறது. இந்தக் களங்கத்தைத் துடைக்க முயன்றுகொண்டிருப்பவர்களுக்கு இது பெரிய பின்னடைவாகும். மனநலப் பிரச்னைகளைப்பற்றிய செய்திகளை எப்படிப் பதிவுசெய்யலாம் என்பதுபற்றி, NIMHANS உளவியல்துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் வி செந்தில் குமார் ரெட்டியுடன் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் பேசியது.

மனநலப் பிரச்னை கொண்டவர்கள் ஏதேனும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால், அவற்றை நுண்ணுணர்வுடன் பதிவுசெய்வது எப்படி?

மனநலப் பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்கள் துரதிருஷ்டவசமாக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டால், அல்லது, தற்கொலை செய்துகொண்டால், அந்தச் செய்தி ஊடகங்களில் சரியானமுறையில் பதிவுசெய்யப்படுவதில்லை. சிலர் உண்மைகளைத் துண்டுதுண்டாகப் பதிவுசெய்கிறார்கள், சிலர் தவறான விவரங்களை வெளியிடுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில், அந்த நிகழ்வின் தன்மையைப்பற்றிய பொதுவான உண்மைகளை வெளியிடுவது அவசியம். மிக நுணுக்கமான விவரங்களை வழங்கி, அந்த நிகழ்வை மீண்டும் நடத்திக்காட்டவேண்டியதில்லை.

இதுபோன்ற நிகழ்வுகளைப் பதிவுசெய்யும்போது, ஊடகங்கள் இன்னும் நுண்ணுணர்வுடன் நடந்துகொள்வது எப்படி? மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்மீது சமூகம் சுமத்தும் களங்கத்தை அவர்கள் எப்படித் தடுக்கலாம்?

நடந்த சம்பவத்தைப்பற்றிய நுணுக்கமான விவரங்களை அவர்கள் தரவேண்டியதில்லை; அங்கே என்ன நடந்தது என்பது கண்ணெதிரே தெரியவேண்டும் என்று வாசகன் எதிர்பார்க்கப்போவதில்லை, அப்படியே எதிர்பார்த்தாலும், அதைத் துல்லியமாகப் பதிவுசெய்வது சிரமம். அங்கே நடந்தது என்ன என்பதுபற்றிய சில உண்மைகள் தெளிவாக இல்லாமலிருக்கலாம், அல்லது, தெரியாமலிருக்கலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதிகம் புறநிலையிலிருந்து பதிவு செய்யவேண்டும்: இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்று சொல்லலாம், அதில் யாருக்காவது காயம்பட்டதா, இல்லையா என்று சொல்லலாம். அங்கே நடந்த நிகழ்ச்சிக்கு, ஒருவருடைய மனநலக் குறைபாடுதான் காரணம் என்று எண்ணிவிடக்கூடாது, அதற்கு வேறு காரணங்களும் இருந்திருக்கலாம் என்கிற உண்மையைப் பொதுமக்களுக்குச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மனநலக் குறைபாடு கொண்டவர்கள் வன்முறையாகதான் நடந்துகொள்வார்கள் என்கிற தவறான நம்பிக்கையை மாற்றுகிற விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம், வன்முறைக்குப் பங்களிக்கும் மற்ற பிரச்னைகளைப்பற்றிப் பேசலாம்.

ஒருவேளை, இந்தச் செய்திகள் தவறாகப் பதிவுசெய்யப்பட்டால் என்ன ஆகும்?

இதுபோன்ற தவறான செய்திகளால், மனநலக் குறைபாடு கொண்டவர்கள்மீது சமூகம் வைத்திருக்கும் களங்கவுணர்வு அதிகமாகும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர வன்முறையில் ஈடுபடுவார்கள், அதற்குக் காரணம் அவர்களுடைய மனநலப் பிரச்னைதான் என்று மக்கள் தவறாக எண்ணுவார்கள். இதனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்மீது சமூகத்தினர் வன்முறையைப் பிரயோகிக்கக்கூடும். அதாவது, 'மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என்னை அடிக்குமுன் நான் அவரை அடித்துவிடவேண்டும், அப்போதுதான் அவரைக் கட்டுக்குள் வைக்க இயலும், அவரைக் கட்டுப்படுத்த அதுதான் ஒரே வழி' என்பதுபோல் பொதுமக்கள் நினைக்கக்கூடும், இதனால் எந்தத் தவறும் செய்யாத, வன்முறை எண்ணமே இல்லாத மனநலம் பாதிக்கப்பட்டோர்கூட அடிவாங்கி வருந்துவார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே வன்முறையில் அதிகம் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது. இது உண்மையா?

இல்லவே இல்லை. சொல்லப்போனால், இந்த விஷயத்தில் உண்மை நேரெதிராக இருக்கிறது. இதை நான் வெறுமனே ஒரு கருத்தாகச் சொல்லவில்லை, இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள், கண்டறியப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் சொல்கிறேன். இந்த ஆய்வுகள் உலகெங்கும் செய்யப்பட்டிருக்கின்றன. மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்மத்தியில், மிகச்சிலர்தான் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். சுமார் ஐந்து முதல் பதினைந்து சதவிகிதம் என்று சொல்லலாம். அதாவது, மனநலம் பாதிக்கப்பட்ட நூறு பேரில், வெறும் ஐந்து பேர், அல்லது, அதிகபட்சம் பதினைந்து பேர்தான் வன்முறையாக நடந்துகொள்ளக்கூடும். ஒருவேளை அவர்கள் வன்முறையாக நடந்துகொண்டாலும், அதை எதிர்கொள்கிறவர்கள் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள்தான். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தெருவுக்கு வந்து யாரையோ பிடித்து அடிக்கப்போவதில்லை. இப்படி இவர்கள் வன்முறையாக நடந்துகொள்வதற்கு இவர்களது மனநலப் பிரச்னைதான் காரணம் என்றும் சொல்லிவிட இயலாது. பிறருடனான உறவுகளில் இருக்கும் சிக்கல்களில் தொடங்கி இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வேறு சில ஆய்வுகளில், வன்முறைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட சிலர் ஆராயப்பட்டுள்ளனர். இவர்களில் வெறும் நான்கு சதவிகிதப்பேர்தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். அதாவது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் மிகக்குறைவு. இது திரும்பத்திரும்பப் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கிற 96 சதவிகிதக் குற்றங்களை நிகழ்த்துகிறவர்களுக்கு, எந்த மனநலக் குறைபாடும் இல்லை. ஆக, வன்முறைக் குற்றங்களைச் செய்கிற பெரும்பாலானோர் நல்ல மனநிலையில் உள்ளவர்கள்தான். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைவிட அதிகம் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மையல்ல. ஒருவருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறது என்பதாலேயே அவர் வன்முறையில் ஈடுபடுவார், பிறரைத் தாக்குவார் என்றெல்லாம் எண்ணவேண்டியதில்லை.

மனநலப் பிரச்னையாலேயே ஒருவர் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் வன்முறையில் ஈடுபட வேறு என்ன காரணங்கள் இருக்கலாம்?

ஒரே மனநலப் பிரச்னை கொண்டவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபடுகிறார்கள், சிலர் ஈடுபடுவதில்லை. இது ஏன் என்று தெரிந்துகொள்வதற்காக இருதரப்பினரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சிலரிடம்மட்டும் வன்முறை காணப்படுவது ஏன்? இதுபற்றித் தொடர்ந்து ஆராய்ந்தபோது, சில காரணிகள் தெரியவந்தன:

  • மது அல்லது போதைப்பொருள்களை அதிகம் உட்கொள்ளுதல்: பொதுவாக போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்கள் அல்லது, பிறருடைய துன்புறுத்தலை அனுபவித்தவர்களிடம் வன்முறைச் செயல்பாடுகள் அதிகம் காணப்பட்டன.
  • எதையும் அனிச்சையாகச் செய்தல், தீவிரத்தன்மை, கல்வியறிவின்மை, ஏழைமை, குறைவான சமூக-பொருளாதார நிலை போன்ற சில ஆளுமைப் பண்புகள் 

இந்தக் காரணிகளால், யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடும், அவர்களுக்கு மனநலப் பிரச்னை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. ஆக, மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரிடம் இந்தக் காரணிகள் காணப்பட்டால், அதே மனநலப் பிரச்னை கொண்ட, ஆனால் இந்தக் காரணிகள் இல்லாத இன்னொருவரைவிட இவர்கள் அதிகம் வன்முறையில் ஈடுபடக்கூடும்.

மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பேசும்போது, ஊடகங்கள் எப்படிப்பட்ட மொழியைப் பயன்படுத்தவேண்டும் என நீங்கள் சிபாரிசு செய்வீர்கள்?

'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்பதுபோல் சொல்லாமல், அந்தப் பிரச்னைக்கான சரியான மருத்துவச்சொல்லைப் பயன்படுத்துவது நல்லது. 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்ற சொல், எல்லா மனநலப் பிரச்னைகளையும் ஒரேமாதிரி அணுகுகிறது. சில குறிப்பிட்ட மனநலக் குறைபாடுகளைக் கொண்டவர்களிடம்மட்டும்தான் வன்முறைக்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. தீவிர மனச்சோர்வு அல்லது பதற்றக் குறைபாடு கொண்ட ஒருவருடைய மனநலப் பிரச்னை, அவரை வன்முறையாகச் செயல்படச்செய்யாது. ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள்கூட, பிறருடைய வன்முறையால் பாதிக்கப்படுகிறவர்களாகவே இருக்கிறார்கள், இவர்கள் வன்முறையில் ஈடுபடுவது குறைவு. ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டோரைச் சமூகத்தினர் அடிக்கிறார்கள்.

இதேபோன்ற வன்முறை பல பின்னணிகளில் காணப்படுகிறது. ஒரு வன்முறைச் சம்பவத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்டிருந்தால், ஊடகம் அதனை நுணுக்கமான விவரங்களுடன் பதிவுசெய்கிறது, மற்ற நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது. இப்படிப் பரபரப்புக்காக எழுதினால், பதிவுசெய்யப்பட்ட நிகழ்வு அப்படியே பிரதியெடுக்கப்படலாம், அல்லது, அதில் சம்பந்தப்பட்டவர் பாதிப்புக்குள்ளாகலாம். இங்கே பாதிக்கப்படுவது மனநலப் பிரச்னை கொண்டவர்மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர், நண்பர்கள்மீதுகூட களங்கம் சுமத்தப்படுகிறது. மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரை நெருங்கியிருப்போர் என்ற காரணத்தாலேயே அவர்களும் களங்கத்தைச் சந்திக்கநேர்கிறது.

மனநலம் மற்றும் வன்முறை சம்பந்தமான செய்திகளைப் பதிவுசெய்வதற்கான நெறிமுறைகள்

மனநலப் பிரச்னை கொண்டோர் சம்பந்தப்பட்ட செய்திகளைப் பதிவுசெய்யும் ஊடகவியலாளர்கள் பின்வரும் சிபாரிசுகளைப் பின்பற்றவேண்டும் என நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள்:

செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை
அந்த மனநலப் பிரச்னையைச் சரியான மருத்துவப் பெயருடன் குறிப்பிடுதல் 'மனநலம் பாதிக்கப்பட்டவர்', 'மனநலம் சரியில்லாதவர்' அல்லது 'மனநலம் சிதைந்தவர்' என்பதுபோன்ற பொதுவான சொற்களைப் பயன்படுத்துதல்
செய்தியை உள் பக்கங்களில் வெளியிடுதல் முதல் பக்கத்தில் செய்தியை வெளியிடுதல் அதற்குத் தேவையற்ற முக்கியத்துவம் தருவதைத் தவிர்த்தல்
புறநிலையான, உண்மையான விவரங்களை வெளியிடுதல், அடைச்சொற்கள் வேண்டாம்

மனநலப் பிரச்னையால்தான் வன்முறை ஏற்பட்டது என்று குறிப்பிடுதல்

பாதிக்கப்பட்டவருடைய மனநலக் குறைபாடைக் குறிப்பிடுவது மிகவும் அவசியம் என்றால், 'ஸ்கிஜோஃப்ரெனியா கொண்ட ஒருவர்' அல்லது, 'இருதுருவக் குறைபாடு கொண்ட ஒருவர்' என்பதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்

நிகழ்வுகள் இப்படிதான் நடந்திருக்கும் என்று ஊகித்தல், அல்லது, அதனைத் திரும்ப நிகழ்த்திக்காட்டுதல், அல்லது, நுணுக்கமான விவரங்களை வழங்குதல்
பிரச்னையைப்பற்றிய துல்லியமான விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம், அதைப்பற்றிய தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகளை விளக்கலாம். மனநிலை பாதிக்கப்பட்டவர், மேனியாக், ஸ்கிஜோஃப்ரெனியா கொண்டவர், மதுவுக்கு அடிமையானவர் என்பதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துதல் இது, ஒருவரை அவருடைய பிரச்னையாகவே வரையறுக்கிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org