பேட்டி: நம்முடைய சமூகம் இளம் பெண்களை ஓர் அச்சுறுத்தலாகக் காண்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக மைய நீரோட்ட ஊடகத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் உடல்சார்ந்த வன்முறைபற்றிய பல நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.   இதுபற்றிக் கலாசார உளவியலாளர் மற்றும் எழுத்தாளர் டாக்டர் சுதிர் காக்கர் அவர்களுடன் வொயிட் ஸ்வான் அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்ரீரஞ்சிதா ஜவுர்கர் பேசினார். இந்த உரையாடலின்போது, பெண்களுடைய விடுதலை மற்றும் சமூகக் கட்டுப்பாட்டின் இழப்பு காரணமாகதான் வன்முறை உண்டாகிறது என்கிறார் டாக்டர் சுதிர் காக்கர்.  

இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்திருக்கிறது என்று நம்புகிறீர்களா?

ஊடகங்களை வைத்துப் பார்க்கும்போது நிச்சயமாக ஒரு பெரும் அதிகரிப்பு நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது.   உண்மையான அதிகரிப்பு எந்த அளவு என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது, இது ஓர் ஊகமாகமட்டும்தான் இருக்கும்.  ஆம், பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்திருக்கிறது என்றுதான் நான் சொல்வேன், ஆனால் ஊடகம் அதனை எந்த அளவு அதிகரித்துக் காட்டுகிறதோ அந்த அளவு இது அதிகரிக்காமல் இருக்கலாம்.  

இதன் பொருள், இந்த நிகழ்வுகளைப்பற்றி நாம் அதிகமாகக் கேள்விப்படுகிறோம்… 

அது உண்மைதான். இதுபோன்ற நிகழ்வுகள் பொதுமக்களுடைய பார்வைக்கு வருவது மிகவும் நல்ல விஷயம், ஆனால் அதேசமயம், மிக அதிகமான வன்முறை இருப்பதான ஒரு தோற்றத்தை அது கொடுக்கிறது.  வன்முறை அதிகரித்துள்ளது, ஆனால் ஊடகங்கள் காட்ட விரும்புவதைப்போல் அது எங்கு பார்த்தாலும் இருப்பதில்லை.

வன்முறையின் அதிகரிப்பு, நம்முடைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஏதோ ஒருவகை மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. அது ஒரு பெரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது, அந்தப் பெரிய மாற்றம், ஒரு மிக நேர்விதமான மாற்றம்.  நம்முடைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றம், வன்முறை இல்லை, அந்தச் சமூகத்திலிருக்கும் பெண்களுடைய விடுதலைதான்.  முதலில், பெண்கள் கல்வி கற்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது, பெண்கள் வேலைக்குச் செல்வது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது, அதுவும் வழக்கமாகப் ‘பெண்களுக்கான வேலைகள்’ என்று நம்பப்படுகிற ஆசிரியப்பணி, செவிலியர் பணிபோன்றவற்றில் மட்டுமில்லாமல் எல்லாவிதமான பணிகளையும் அவர்கள் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.  இப்போது, இந்த வன்முறையின் ஒரு பகுதி பெண் விடுதலைக்கு எதிரானது என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் எவையெல்லாம் மேலே வருகின்றனவோ அவற்றையெல்லாம் கண்டு அஞ்சும் சக்திகள் இருக்கின்றன; இந்த விஷயத்தில், நடப்பதைப் பார்த்து ஆண்கள் அஞ்சுகிறார்கள்.   

இரண்டாவது பகுதி, வன்முறையானது சமூகக் கட்டுப்பாட்டின் இழப்பால் நிகழ்கிறது.    நாம் ஒரு கிராமம் சார்ந்த சமூகச் சூழலில் இருந்து பகுதி அளவு நகரம் சார்ந்த சமூகச் சூழலுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம், குடும்பம், சாதி எனக் கிராமம் சார்ந்த சமூகங்களைக் கட்டுப்படுத்திய அம்சங்கள் இப்போது இல்லை, இந்த அம்சங்கள்தான் ஆண்களுக்குப் பெண்கள்மீது இருந்த வன்முறைத் துடிப்புகளை தடுத்திருந்தன அல்லது தடைசெய்து வைத்திருந்தன.     நகரங்களில் குடிபெயர்ந்த இளம் ஆண்கள் ஒன்றாக வாழ்கிறார்கள், அவர்களுக்கிடையில் எந்தவிதமான சமூகக் கட்டுப்பாடும் இல்லை.  நம்முடைய சமூகம் பொதுவாகத் தனிப்பட்ட, உள்கட்டுப்பாட்டைவிடச் சமூகக் கட்டுப்பாட்டைச் சார்ந்துதான் அதிகம் இயங்கிவந்துள்ளது.      அந்தச் சமூகக் கட்டுப்பாடுகள் இப்போது இல்லை என்பதால், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் மிக அதிகமாகிவிட்டன.

பாலியல் வன்முறையைக் கூர்ந்து கவனிக்கிறபோது அதன் நேர்விதமான பகுதி, அதிகரித்துவரும் திருமண வயது; அதேசமயம் அத்துடன் பல விஷயங்களைச் சேர்த்துபார்க்கும்போது, அது வன்முறைக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியமுள்ள ஒரு கலவை வகையாகிவிடுகிறது; வெவ்வேறு பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையில் சுதந்திரமான ஊடாடல் இல்லை, அதனால் தங்களுடைய பாலியல் நாட்டங்களுக்கான வாய்ப்புகள் இல்லாத இளம் நபர்கள் சிரமப்படுகிறார்கள், அத்துடன் அவர்களுடைய சமூக கட்டுப்பாடு நீங்கிவிட்டது, நிகழ்வதைப் பார்த்து அவர்கள் கோபமடைகிறார்கள்.    

ஆகவே, பல வழிகளில் இதனைப் பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் இடையிலான ஒரு முரண் என்று சொல்லலாம்

ஆம், சில கோணங்களில் நாம் அவ்வாறு சொல்லலாம்.

ஒரு கலாசார உளவியலாளர் என்ற முறையில், நீங்கள் நம்முடைய சமூகத்தை ஆராய்ந்துவருகிறீர்கள்.   இந்தப் போக்குக்கு வழிவகுத்துள்ள மாற்றங்கள் எவை?

இந்தப் போக்கின் பின்னணியில் பல பொருளாதாரங்கள் உள்ளன.   முதலில் பணம் என்கிற கருத்து அல்லது அதன் மதிப்பு மாறியுள்ளது, அதாவது, அதிக வருவாய் தேவைப்படுகிறது; ஆண்களுடைய வருவாய்மட்டுமில்லை, ஒட்டுமொத்தமாகவே அதிக வருவாய் தேவைப்படுகிறது. ஆகவே பெண்கள் பணிக்குச் செல்லவேண்டும் என ஊக்கப்படுத்தப்படுகிறார்கள், அதன் பொருள், அவர்களுக்குக் கல்வியும் கிடைக்கவேண்டும், அது நிச்சயமாக ஒரு முக்கியப் போக்காக உள்ளது: பணம் சம்பாதிப்பது மற்றும் பொருள் சார்ந்த செல்வத்தை நம்முடைய சமூக மதிப்புகள் எந்த இடத்தில் வைந்திருந்தனவோ, அதைவிட உயர்ந்த ஓர் இடத்துக்கு அவை மாறியுள்ளன.  

இரண்டாவது மாற்றம், மேற்கத்தியத் தாக்கம்போன்ற மற்ற சக்திகளுடன் கடந்த 100 ஆண்டுகளாக நம்முடைய சமூகம் பழகிவருகிறது, அதனால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, அந்தச் சமூகங்களில் ஆண்கள் மற்றும் பெண்களூடைய பங்குகள் மிகவும் மாறுபட்டுள்ளன.    இந்த மதிப்புகளைச் சந்தித்தல் மற்றும் புரிந்துகொள்ளுதல், மற்றும் தன்னுடைய சொந்த மதிப்பீடுகளைக் கேள்விகேட்டல்.  ஏற்கனவே நம்முடைய சமூகத்தில் பெண்களுக்கான ஆற்றல் வழங்குதலை முன்னிறுத்தும் போக்கு உள்ளது.  ஆகவே இவையெல்லாம் ஒன்றாகச் சேரும்போது மிக அதிக வலுவான ஒரு சக்தி உண்டாகிறது.  இப்படிப்பட்ட பல சக்திகள் சேர்ந்து இந்த மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்கெதிராக அடிக்கடி நிகழ்ந்துவரும் இந்த வன்முறைப் பிரச்னையானது ஏன் முக்கியமாகிறது?   இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளவேண்டும்?

இதிலிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும். இதில் சிந்திக்கவேண்டிய இன்னொரு விஷயம், இந்த வகைப் பெண்கள் நம்முடைய பின்னணியில் இல்லை.   நம்முடைய பின்னணியில் தாய்மார்கள், மனைவிமார்கள், மகள்கள் இருக்கிறார்கள்.  வன்முறையானது தாய்மார்களுக்கெதிராக நிகழ்வதில்லை, இளம் பெண்களுக்கெதிராக நிகழ்கிறது.  ஆகவே இளம் பெண்களுக்கெதிரான வன்முறை ஒரு மிகப் பெரிய விஷயமாக இருப்பது ஏன் என்பதை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.  மகள்களுக்கெதிராகக்கூட, வன்முறையானது பெருமளவு புறக்கணிப்பைச் சார்ந்திருக்கிறது, அதை நாம் புரிந்துகொள்ளமுடிகிறது, அதற்குப் பல பொருளாதாரக் காரணங்கள் உள்ளன: மகள் ஒரு சுமையாகப் பார்க்கப்படுகிறார், ஏனெனில் அவருடைய திருமணத்துக்குப் பெற்றோர் வரதட்சணை தரவேண்டியிருக்கிறது, வேறு பல செலவுகளைச் செய்யவேண்டியிருக்கிறது, அந்த அழுத்தங்கள் குறைவான பிறகு இவை மாறும் என நம்பலாம்.    

ஆனால் இளம் பெண்களுக்கெதிராக வன்முறை ஏன் நடக்கிறது?  அது எதனால் நடக்கிறது? அவர் ஓர் அச்சுறுத்தலாகக் காணப்படுவது ஏன்? இதைத்தான் நாம் ஆழமாகச் சிந்திக்கவேண்டும், நம்முடைய மக்களுக்குச் சொல்லித்தரவேண்டும். இளம் பெண்களால் அச்சுறுத்தப்படும் குடும்பங்களைப்பற்றி ஒரு கேள்வி இருக்கிறது: ஓர் இளம் பெண் குடும்பத்தை உடைத்துவிடுவார் என்று குடும்பம் அஞ்சுகிறது, ஒரு பாலியல் சார்ந்த அச்சுறுத்தல் முன்வைக்கப்படுகிறது, ஆனால் அதைப்பற்றி இப்போது நாம் பேசப்போவதில்லை.  ’இந்தியப் பெண்கள்’ என்று சொல்வதே தவறு, இதை நான் எப்போதும் எதிர்த்துவந்துள்ளேன். இந்தியப் பெண்கள் என்று ஒரு வகையே கிடையாது, வெவ்வேறு பொறுப்புகள் இருக்கின்றன, வெவ்வேறு பொறுப்புகளில் பல பெண்கள் இருக்கிறார்கள், அவர்களைப்பற்றிச் சமூகம் வெவ்வேறுவிதமான மனப்போக்குகளைக் கொண்டிருக்கின்றது. 

நம் சமூகத்தில் பெண்கள் ஏற்கிற வெவ்வேறு பொறுப்புகளைப்பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள்.   அதைப்பற்றிச் சற்று அதிகம் சொல்ல இயலுமா

நான் சொன்னதுபோல், தாய்மார்கள்மீது மிகுந்த மதிப்பு இருக்கிறது.  ஆகவே தாய்மார்களுக்கு எதிராக எந்த வன்முறை நிகழ்ந்தாலும் அதனைச் சமூகம் தாழ்வாகப் பார்க்கும்.   மகள்களுக்கு எதிரான வன்முறையும் அப்படிதான், அது குறைவாகவே நிகழ்கிறது.  கன்னி பூசை போன்ற பல சடங்குகளையும் நாம் காண்கிறோம்.  வன்முறை என்பது பெரும்பாலும் ஓர் இளம்பெண்ணுக்கு எதிராக நிகழ்கிறது, காரணம், அவர் ஓர் அச்சுறுத்தலாகக் காணப்படுகிறார்.  அவர் குடும்பத்துக்குள் வருகிறார்; அவர் அந்தக் குடும்பத்திலிருந்து தன்னுடைய கணவரைப் பிரித்து எடுத்துச் சென்றுவிடக்கூடும்.  அவர் இனிமேலும் ஒரு மகனாக இருக்கமாட்டார், ஒரு கணவராகதான் இருப்பார்.   ஆகவே இங்கு நிகழும் மிகப் பெரிய மாற்றம், குடும்ப வாழ்க்கையின் ஆதாரம் மாறுகிறது, முன்பு அது பெற்றோர் மற்றும் மகன்களாக இருந்தது, அவர்கள் அதில் மனைவிமார்களைக் கொண்டுவருகிறார்கள்.    தம்பதியர் இரண்டாம் நிலையாகவே பார்க்கப்பட்டார்கள்.  ஆனால் இப்போது தம்பதியர் முதன்மையாகிவிடுகிறார்கள்.  இப்போது நிகழ்கின்ற மிகப் பெரிய முரண் அதுதான், இளம் பெண் அதற்கு ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறார்.    அவர் குடும்ப வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை உண்டாக்குவதாகக் காணப்படுகிறார், அதனால்தான் அவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்படுகிறது.  தன்னுடைய வாழ்க்கைக்கும் தன்னுடைய கணவருடைய வாழ்க்கைக்கும் தம்பதியரை அதிக மையமாக ஆக்குவதற்கு அவர் ஒரு விசையை வெளிவிடுகிறார்.  அவர் முன்பும் அதனைச் செய்ய முயன்றார், அதனால்தான் மாமியார்-மருமகள் விவகாரங்கள் நடந்துகொண்டிருந்தன.  இப்போது அது அதிகம் ஏற்கப்படுகிறது, குடும்ப வாழ்க்கையின் மையம் மாறிக்கொண்டிருக்கிறது, இதில் அந்த இளம்பெண் அல்லது மனைவி ஒரு மிகப் பெரிய பங்கை ஆற்றுவதாகக் காணப்படுகிறது, அது பாராட்டுதல், வன்முறை ஆகிய இரண்டையும் ஈர்க்கிறது.

நம் சமூகத்தை மாற்றுவதற்குத் தனி நபர்கள் என்ன செய்யலாம்

தங்களை மாற்றிக்கொள்ளலாம்.  தனிப்பட்ட செயல்கள் தனிப்பட்டவர்களுக்குமட்டுமே சாத்தியம்.   அவர்கள் ஏதேனும் ஒன்றை நம்புகிறார்கள் என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லலாம், வாழ்ந்து காட்டலாம்.   ஒவ்வொரு தனி நபரும் செய்யக்கூடிய விஷயம், ஒரு லட்சிய பிம்பமாக இருத்தல்.  அவர்கள் லட்சக்கணக்கானோருக்கு லட்சிய பிம்பமாக இருக்கவேண்டியதில்லை, தன்னுடைய சிறிய குடும்பம் மற்றும் நண்பர்கள்போன்ற சிறிய வட்டத்துக்கு லட்சிய பிம்பமாக இருக்கலாம். 

எதிர்காலம் எப்படித் தோன்றுகிறதுநீங்கள் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று நினைக்கிறீர்களா?

உண்மையில், எதிர்காலத்தில் நான் நல்ல விஷயங்களைமட்டும்தான் காண்கிறேன்.  ஓரிரு தவறான விஷயங்கள் நடக்கலாம், ஆனால் நிகழ்ந்து வரும் மாற்றங்களில் நல்ல விஷயங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org