களங்கவுணர்வைக் குறைக்கவேண்டும்

மனநலப் பிரச்னைகளைப்பற்றிய களங்கவுணர்வைக் குறைக்கச் சிறந்த வழி, நம்மைப்போன்ற எவருக்கும் இந்தப் பிரச்னைகள் வரலாம் என்பதை உணர்வதுதான்!

டாக்டர் நார்மன் சர்டோரியஸ் பதினாறு ஆண்டுகள் (1977-93) உலகச் சுகாதார அமைப்பின் (WHO) மனநலப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றினார். அவரிடம், 'மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்துகையில், அதன் முன்னேற்றத்தைத் தடுக்கிற முதல், மிகப்பெரிய காரணம் என்ன?' என்று கேட்டபோது அவர் சொன்ன பதில், 'களங்கவுணர்வு'. சர்டோரியஸ் உலக உளவியல் கழகத்தின் முன்னாள் தலைவரும் ஆவார், அவர் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் பவித்ரா ஜெயராமனுக்கு வழங்கிய இந்தப் பேட்டியில், களங்கவுணர்வை அகற்றுவதற்கான சிறந்த முறைகளைப்பற்றியும், இதைப்பற்றி நல நிபுணர்களோடு பொதுமக்களுக்கும் சொல்லித்தரவேண்டியதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் பேசுகிறார்.

மனநலத்தைப்பற்றி மக்கள் புரிந்துகொள்ள இயலாதபடி தடுக்கிற மிகப்பெரிய தடை எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

என்னைப்பொறுத்தவரை, மனநலப் பிரச்னை கொண்டவர்களுக்கு உரிய பராமரிப்பு கிடைக்காதபடி தடுக்கிற, அவர்கள் சமூகத்தில் இணைந்துவாழ இயலாதபடி செய்கிற மிகப்பெரிய தடை, களங்கவுணர்வுதான். மனநலப் பிரச்னை கொண்டவர்கள், களங்கவுணர்வைச் சுமக்கிறார்கள். அவர்களுக்கு வந்திருக்கிற பிரச்னையால், பிறர் அவர்களைவிட்டு ஒதுங்கிச்செல்கிறார்கள், அவர்களைப்பார்த்துப் பயப்படுகிறார்கள், அவர்கள் ஆபத்தானவர்கள் என்று நினைக்கிறார்கள், அவர்களை மனிதர்களாகக்கூட எண்ணுவதில்லை. இதனால், அவர்களுக்காக நாம் என்ன செய்ய நினைத்தாலும், அது பெரிய சிரமமாகிவிடுகிறது. ஆகவே, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப்பற்றியும், அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றியும் இந்தச் சமூகம் கொண்டிருக்கிற தோற்றத்தை மாற்றவேண்டும், இல்லாவிட்டால், நாம் முன்னேறுவது மிகவும் சிரமம். ஆகவே, மனநலப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு உள்ள மிகப் பெரிய தடை, களங்கவுணர்வுதான் என்று நான் சொல்வேன்.

இதில் மனநல நிபுணர்களின் பங்கு என்ன?

களங்கவுணர்வு அநேகமாக எல்லா இடங்களிலும் இருக்கிறது. மருத்துவர்கள்மத்தியில், காவல்துறையினர்மத்தியில், பொதுமக்கள்மத்தியில்... மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப்பற்றிய களங்கவுணர்வு எங்கும் உள்ளது. இவர்கள் எல்லாரும், 'மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது, அவர்களுடைய நிலை எப்போதும் மேம்படாது, அவர்கள் ஆபத்தானவர்கள், அவர்களைத் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது' என்றுதான் நினைக்கிறார்கள். இதனால், அவர்கள் மிகவும் குழம்பிப்போகிறார்கள். மனநல பாதிப்பு இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மனநல பாதிப்பு கொண்டவர்கள், அல்லது மனச்சோர்வு கொண்டவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு குறைவு. அதாவது, மனநல பாதிப்பு இல்லாதவர்கள்தான் அதிக ஆபத்தானவர்கள்! ஆனால், மக்கள் அப்படி எண்ணுவதில்லை. களங்கவுணர்வு காரணமாக, அவர்கள் உண்மையைக் கேட்பதில்லை, உண்மையைப் பார்ப்பதில்லை. இந்த நிலையை மாற்றினால்தான் நாம் முன்னேற இயலும்.

இந்தக் களங்கவுணர்வைப் போக்குவது எப்படி?

களங்கவுணர்வைப் போக்குவதற்கு மிகச்சிறந்த வழி, சமூகத் தொடர்புகள்தான். அதாவது, மனநலப் பாதிப்பு கொண்டவருடன் அமர்ந்து பேசவேண்டும். அப்போதுதான், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் எதுவும் இல்லை என்று நமக்குப் புரியும். ஒருவருக்கு ஏதாவது நோய் இருக்கிறது என்றால், அவரிடம் சில மாற்றங்கள் இருக்கும்தான். ஆனால், இது எல்லாவகை நோய்களுக்கும் பொருந்தும். உதாரணமாக, ஒருவருக்குத் தீவிரமான நுரையீரல் பிரச்னை அல்லது இதய நோய் இருக்கிறது என்றால், அவர்களிடம் சில மாற்றங்கள் தென்படும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அவர்கள் மற்ற சாதாரண மனிதர்களைப்போலவேதான் நடந்துகொள்வார்கள், அவர்களிடம் எந்த மாற்றங்களும் தெரியாது. இதைத் தெரிந்துகொண்டால், இந்தப் புரிந்துகொள்ளுதல் ஓரளவு மாறும். ஆனால் முழுவதுமாக மாறிவிடாது. இதை ஒருவருக்குச் சொல்லித்தந்தால், அவர்கள் சில விஷயங்களைமட்டும் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். அதாவது, தங்களுடைய கருத்துக்குப் பொருந்துகிற விஷயங்களைமட்டும் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். ஆகவே, இந்தக் கருத்தை, மனப்போக்கை மாற்றுவதுதான் முதல் வேலை.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் போன்ற ஓர் அமைப்பு, களங்கவுணர்வைக் குறைக்க என்ன செய்யலாம்?

பல விஷயங்களைச் செய்யலாம். உதாரணமாக, மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரை உங்களுடைய சொற்பொழிவாளர்களில் ஒருவராக ஆக்கலாம். இதனை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரைப் பள்ளிகள், நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று, அவருடைய பிரச்னையைப்பற்றி அவரையே பேசச்செய்தால், மக்கள் அவரைக் கவனிப்பார்கள், 'அட, இவர் இவ்வளவு நன்றாகப் பேசுகிறாரே, இவருக்கா மனநலப் பிரச்னை இருந்தது?' என்று வியப்பார்கள், மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் இப்படிதான் இருப்பார், அவரிடம் மாற்றம் ஏதும் இருக்காது என்று அவர்கள் கருதியதை மாற்றிக்கொள்வார்கள். இதுபோன்ற பணிகள் உங்கள் நிறுவனத்தை நேர்வழியில் அழைத்துச்செல்லும் என நான் நினைக்கிறேன்.

இன்னொரு விஷயம், நலப்பணித்துறையில் இருக்கும் இளைஞர்களுக்கு இதைப்பற்றிச் சொல்லித்தருவது, இதன்மூலம் அவர்களே களங்கவுணர்வை உண்டாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கலாம். நலப்பணித்துறையில் இருப்பவர்களும் மற்ற பொதுமக்களைப்போலதான். சமீபத்தில் நான் கவனித்த ஒரு விஷயம், களங்கவுணர்வைச் சரிசெய்யச் சிறந்த வழி, பொதுவான ஒரு செய்தியை எல்லாருக்கும் சொல்வது அல்ல, ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட செய்தியைச் சொல்வது. உதாரணமாக, மனநலப் பிரச்னைகளைப்பற்றி ஒரு காவல்துறை அதிகாரிக்குச் சொல்வதும், ஒரு பத்திரிகையாளருக்குச் சொல்வதும், ஒரு மருத்துவருக்குச் சொல்வதும் ஒரேமாதிரி இருக்காது. கேட்கிற நபரைப்பொறுத்து இது மாறுபடும். இதுதான் நீங்கள் கவனிக்கவேண்டிய இரண்டாவது முக்கிய அம்சம். முதலில், மனநலப் பிரச்னை கொண்டவர்களை உங்களுடன் அழைத்துச்சென்று, பொதுமக்களிடம் பேசச்சொல்லுங்கள். அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச்சொல்லுங்கள், இதன்மூலம், மக்களிடையே மனநலப் பிரச்னைகளைப்பற்றிய களங்கவுணர்வு குறையும். இரண்டாவதாக, வெவ்வேறுவகை மக்களிடம் பேசும்போது, அவர்கள் தினசரிவாழ்க்கையில், தங்களது வேலையின்போது மனநலப் பிரச்னைகளை எப்படிக் காணக்கூடும் என்று யோசித்து, அவர்களால் அப்போது என்ன செய்ய இயலும் என்று கற்பனை செய்து, அதன் அடிப்படையில் அவர்களுடன் பேசுவதற்கான திட்டங்களை உருவாக்குங்கள்.

மனநலப் பிரச்னை கொண்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், அவர்களுடைய குடும்பத்தினரையும் நீங்கள் கவனிக்கவேண்டும். அவர்களும் ஓர் இழப்பைச் சந்தித்துள்ளார்கள், திடீரென்று, அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருடன் வாழவேண்டியிருக்கிறது, இதை எண்ணி அவர்கள் வருந்துவார்கள். இந்த நோய்க்குத் தாங்களும் காரணமோ என்று எண்ணி அவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ளக்கூடும், வெட்கப்படக்கூடும், பயப்படக்கூடும், இவை அனைத்தும் அவர்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கும். ஆகவே, மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்களுடன் நீங்கள் பேசலாம்.

உளவியல்துறை இப்போது நன்கு முன்னேறியுள்ளது. ஆனால், இதில் இன்னும் நிறைய முன்னேற்றத்துக்கு இடமுள்ளது. இந்தத் துறை இப்போது என்ன நிலையில் இருக்கிறது?

உளவியல் பிரச்னைகளைப்பற்றிய சாத்தியங்கள் மற்றும் ஞானம் சரியானபடி பயன்படுத்தப்படுவதில்லை என்று நான் நினைக்கிறேன். கடந்தகாலமானது களங்கவுணர்வைமட்டும் கொண்டுவரவில்லை, களங்கத்தின் விளைவுகளையும் கொண்டுவந்துள்ளது. உதாரணமாக, வளங்களை விநியோகித்தல். பல நாடுகளில், பல அமைப்புகளில் மனநலப் பாதுகாப்பை வலியுறுத்துவது, மனநலப் பிரச்னைகளைத் தடுப்பதற்காக வழங்கப்படும் முக்கியத்துவம் மிகக் குறைவு, ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம், அவ்வளவுதான். இன்றைக்கு, உலகில் உள்ள ஊனங்களில் குறைந்தபட்சம் ஐந்தில் இரண்டுபங்கு மனநலப் பிரச்னை சம்பந்தப்பட்டவை என்று நமக்குத் தெரியும். ஆனால், உளவியல்துறைக்காக அந்த அளவுக்கு வளங்கள் செலவிடப்படுவதில்லை, இந்தப் பிரச்னைகள் சரியானபடி குணப்படுத்தப்படாததால் மேலும் பல தொல்லைகள் முளைக்கின்றன. இதனால், முன்னேற்றம் பெருமளவு தடைபடுகிறது. நமக்கு விவரங்கள் தெரிந்திருந்தாலும், முன்னேற இயலுவதில்லை. இன்றைக்கு நமக்குத் தெரிந்த பல விஷயங்களும், மனநலப் பிரச்னை கொண்டோருக்குப் பயன்படுவதில்லை. குறிப்பாக, மனநலப் பிரச்னைகளைத் தடுப்பதற்கான பணிகளுக்கு ஏகப்பட்ட இடைஞ்சல்கள். சில விஷயங்களை இன்னும் சிறப்பாகச் சொல்லலாம் என்று நமக்குத் தெரியும். ஆனால் மக்கள் அப்படிச் சொல்வதில்லை, தயங்கி நின்றுவிடுகிறார்கள். இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம், மனநலப் பிரச்னைகள் பெரும்பாலும் உளவியலாளர்களால் தடுக்கப்படுவதில்லை, பிறரால்தான் தடுக்கப்படுகின்றன. உதாரணமாக, சில குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை இருக்கலாம், அந்தப் பிரச்னையைச் சீக்கிரம் கவனித்துச் சரிசெய்யவில்லையென்றால், அவர்களால் சரியாகப் படிக்க இயலாது, அவர்கள் மெதுவாகப் படிக்கிறவர்கள், சரியாகப் படிக்க வராதவர்கள் என்று முத்திரை குத்தப்படலாம். இதனால், அவர்களுடைய மொத்த வாழ்க்கையும் பாதிக்கப்படக்கூடும். அவர்கள் பிரச்னைக்குரிய ஒருவராக வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால், அவர்கள் இன்னும் நிறையக் கற்றுக்கொள்வார்கள். ஆனால், சில நாடுகளில் உள்ள பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகள் கண்ணாடி அணிவது பிடிப்பதில்லை. காரணம், பெண்கள் கண்ணாடி அணிந்தால் அழகு குறைந்துவிடும், ஆண்கள் கண்ணாடி அணிந்தால் பலவீனமாகத் தோன்றுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆகவே, அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கண்ணாடிகளைத் தருவதில்லை. இதனால், அவர்கள் இந்த உலகிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்கள் குறைகின்றன, அவர்களது வளர்ச்சி குறைகிறது, முன்னேற்றம் குறைகிறது. இது ரொம்ப மோசமான விஷயம், அதேசமயம், இது ஒரு மிக எளிய நடவடிக்கைதான். உளவியல்துறையில் இதுபோல் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. இவை எல்லாமே மிக எளிய நடவடிக்கைகள்தான். ஆகவே, என்னைப்பொறுத்தவரை, இன்றைய உளவியல்துறையில், நமக்குத் தெரிந்தவற்றுக்கும், அவை பயன்படுத்தப்படுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது, இன்றைக்கு நமக்குத் தெரிந்த பல விஷயங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. மனநலப் பிரச்னை கொண்டோரைக் குணப்படுத்துதலைப் பொறுத்தவரை, நாம் நன்கு முன்னேறியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களில் சிலர், வாழ்நாள்முழுக்கச் சிகிச்சை பெறவேண்டியிருக்கலாம். ஆனால், பெரும்பாலானோருக்கு, இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது, அவர்களைச் சரியான நேரத்தில் தகுதிபெற்ற நிபுணரிடம் அழைத்துவந்தால் போதும், அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது, அவர்கள் குணமாகிவிடுகிறார்கள், அதன்பிறகு, இந்தப் பிரச்னையின் சுவடே இல்லாமல் அவர்களால் வாழ இயலுகிறது. ஆகவே, இப்போதைய உளவியல்துறையின் நிலையை, நான் 'தவறவிட்ட வாய்ப்புகளின் காலம்' என்று அழைப்பேன்.

பல மனநலப் பிரச்னைகளுக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

உதாரணமாக, குழந்தைகளுக்கு வரும் மனநலப் பிரச்னையை எடுத்துக்கொள்வோம். குழந்தைகளுக்கு மனநலப் பிரச்னை ஏன் வருகிறது என்று பார்த்தால், பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, தாய்க்கு வரும் மனநலப் பிரச்னை, பெற்றோரில் ஒருவருக்கு இருக்கும் குற்றச்சிந்தனை, அதிகக்கூட்டத்தின் மத்தியில் வசித்தல், ஏதாவது ஓர் உடல்சார்ந்த பிரச்னைக்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லுதல்... இப்படிப் பல காரணங்கள் உள்ளன. ஒரு குழந்தையிடம் இவற்றில் ஏதேனும் ஒரு காரணம்மட்டும் காணப்படும்போது, அந்தக் குழந்தைக்கு மனநலப் பிரச்னை வருவதற்கான சாத்தியங்கள் அதிகமில்லை. இந்த ஆபத்து சாத்தியங்களில் பலவும் ஒரே குழந்தையிடம் காணப்படும்போது, அதற்குப் பிரச்னை வருகிற சாத்தியமும் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்னையை ஆய்வாளர்கள் அலசவேண்டும். இந்தக் குழந்தைகளுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவியாக, அவர்களுக்குத் தரக்கூடிய மிகப்பெரிய நம்பிக்கையாக அது அமையும். பெற்றோருக்கு இருக்கும் குற்றச்சிந்தனையை நம்மால் மாற்ற இயலாது. ஆனால், மற்ற விஷயங்களை நாம் மாற்றலாம். குழந்தை வாழும் விதத்தை நாம் மாற்றலாம், குழந்தையின் தாய் அதனைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்ளூமாறு செய்யலாம், குழந்தையின் பள்ளியில் ஏதும் பிரச்னைகள் வராதபடி பாதுகாக்கலாம். இப்படி மனநலப் பிரச்னைக்குக் காரணமாக அமையக்கூடிய பல காரணிகள் உள்ளன, அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடித்து நீக்கினாலும், பிரச்னைக்கான சாத்தியத்தை நாம் குறைப்போம். சிலவற்றை நம்மால் நீக்க இயலாது. அதைப்பற்றிக் கவலைப்படாமல், நாம் பிற விஷயங்களைக் கவனிக்கலாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org