மனநலம்பற்றிப் பிரபலங்கள் பேசவேண்டும்

இதன்மூலம், மனநலப் பிரச்னை கொண்டோர் உதவி கேட்கத் தயங்கமாட்டார்கள், அது ஓர் இயல்பான விஷயம்தான் என நம்புவார்கள்.
Published on

மனநலப் பிரச்னைகள் மனத்துக்குள் நிகழ்கின்றன, யாருக்கும் தெரிவதில்லை. ஆகவே, அவற்றை யாரும் பிரச்னையாகக் கருதுவதில்லை. இந்தியாவின் முன்னணி உளவியல் ஆய்வாளர், சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளரான டாக்டர் சுதிர் கக்கர் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த மனோஜ் சந்திரனிடம்  பேசியபோது, ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்திருக்கிறது என்பதை அவர்மட்டும் உணர்ந்தால் போதாது, அவருடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் அதனை உணரவேண்டும், பிரச்னையைக் குணப்படுத்துவதற்குத் தேவையான உதவியை விரைவில் நாடவேண்டும் என்றார். பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

'மனநலம்' என்று சொன்னவுடன், பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இந்தச் சொல்லைக் கேட்டவுடன், பொதுமக்களுக்குப் பெரும்பாலும் பயம்தான் வருகிறது. அதே மக்கள் ஒரு மனநல நிபுணரை அணுகும்போது, அவர்களுக்குள் பயத்தோடு நம்பிக்கையும் பிறக்கிறது. ஆகவே, அந்தப் பயத்தைவிட, நம்பிக்கையின் அளவை அதிகரிக்கவேண்டும். அதற்கு, மருத்துவர் சரியானபடி விவரங்களைச் சொல்லவேண்டும், அல்லது, உங்களுடைய இணையத்தளம்போன்ற ஓர் இடத்தில் அவர்கள் இதனைப் படித்து அறிந்துகொள்ளலாம், அதன்மூலம், இந்தப் பிரச்னையைக்கண்டு பயப்படாமல், நம்பிக்கை பெறலாம். இதுதான் முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

மனநலப் பிரச்னைகளையும் மூளையையும் இணைத்துப்பார்ப்பது சிரமமாக இருக்கிறதே, அது ஏன்? 

அதற்குக் காரணம், 'மூளை' என்பது மிகவும் நவீனமான ஒரு கருத்து. அதற்குமுன், மக்கள் மனத்தைப்பற்றிதான் பேசிக்கொண்டிருந்தார்கள், அதற்கும் மூளைக்கும் தொடர்பு இல்லை என்று அவர்கள் நினைத்தார்கள். மூளைக்கும் மனத்துக்கும் தொடர்பு உண்டு என்பது மிக, மிகப் புதிய சிந்தனை. ஆகவே, இந்த மூளையால் அப்படிப்பட்ட ஒரு தாக்கம் ஏற்படும் என்று மக்களுக்குப் புரிவதில்லை. நாம் இதனை இப்படி அணுகலாம்: மூளைதான் மனம், காரணம், மூளை என்பது மனத்தின் ஒரு பகுதி, அல்லது, மனத்தை உருவாக்குவதே மூளைதான். இப்படிச் சிந்தித்தால், 'மனம்' என்பது பல பொருள்களைத் தரும் ஒரு சொல்லாக மாறும். 'மூளை' என்பது மிகவும் புதிய ஒரு சொல், மிகவும் அறிவியல்பூர்வமானது, பொதுமக்களுக்கு அது எளிதில் புரியாது.

மனநலப் பிரச்னை என்றால், மக்கள் உடனே தீவிரமான பிரச்னைகளைதான் நினைக்கிறார்கள். அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பொதுவான மனக் குறைபாடுகளைப்பற்றி எண்ணுவதில்லை. காரணம், அவை வாழ்க்கையின் ஒரு பகுதி என்று நாம் நினைக்கிறோம். இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்யலாம், குணப்படுத்தலாம் என்கிற விழிப்புணர்வை நாம் எப்படி உருவாக்கலாம்?

இது ஒரு சிரமமான கேள்வி. காரணம், மனநலப் பிரச்னைகளை யாராலும் காண இயலாது. அவை உடலுக்குள், மக்களின் மனத்தில் நடக்கின்றன. அவை மிகவும் தீவிரமானவையாகி, வெளிப்படையாகத் தெரிந்தால்மட்டுமே மக்கள் அதனைக் கவனிக்கிறார்கள். அதற்குள் அது மிகப்பெரிய பிரச்னையாகிவிடுகிறது. ஆகவே, வெளியே தெரியாத, ஆனால் பொதுவாக எல்லாருக்கும் ஏற்படுகிற மனநலப் பிரச்னைகளை யாரும் பிரச்னையாகவே கருதுவதில்லை. சமூகத்தில் அவற்றைப்பற்றி யாரும் பேசுவதில்லை, பிரச்னைகளைக் கண்டுகொள்வதில்லை. ஒரு பிரச்னையைப் பிரச்னையாகக் கருதவேண்டுமென்றால், அதனை ஒருவர்மட்டும் உணர்ந்தால் போதாது, அவரது சமூகக் குழுவும் அதனை அடையாளம் காணவேண்டும்.. அது ஓர் அடையாளத்தைப்போல, நான் யார் என்று நான்மட்டும் சொன்னால் போதாது, மற்றவர்களும் சொல்லவேண்டும், அப்போதுதான் அது என் அடையாளமாகும். மனநலப் பிரச்னைகள் வெளிப்படையாகத் தெரியவரும்போது, அவை மிகவும் சிக்கலாகிவிடுகின்றன. உதாரணமாக, ஸ்கிஜோஃப்ரெனியா, தீவிர மனச்சோர்வு போன்றவை. இவை பிரச்னைகளாக அடையாளம் காணப்படுகின்றன. ஒருவருக்கு வந்திருக்கும் பிரச்னையை அவரது சமூகக்குழு ஒப்புக்கொள்ளாவிட்டால், அவர் அதை ஒரு பிரச்னையாகக் கருதமாட்டார்.

அதாவது, மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தோடு வாழவேண்டுமென்றால், உதவியை நாடவேண்டுமென்றால், அவரைச் சுற்றியிருக்கிறவர்களும், அவருடைய அன்புக்குரியவர்களும் அதில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறார்கள்.

அது ஒரு முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். சமூகக் குழுவில் உள்ளவர்கள் அவரை ஊக்குவிக்கவேண்டும், 'உங்களால் இதைச் சமாளிக்க இயலும்' என்று சொல்லவேண்டும், அது ஒரு முக்கியமான பங்களிப்பு. அவரால்மட்டும் தனியாக இதைச் செய்ய இயலாது.

நீங்கள் பல பத்தாண்டுகளாக உளவியல் ஆய்வுகளை நிகழ்த்திவருகிறீர்கள். கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் மனநலப்பிரிவில் நீங்கள் கண்டுள்ள முக்கியமான, முன்னுதாரணமான மாற்றங்கள் என்ன?

மனநலப் பராமரிப்புப்பிரிவு என்பது, பாதி நிரம்பிய குடுவையைப்போல, அல்லது, பாதி காலியாக உள்ள குடுவையைப்போல. இதைப் 'பாதி காலி' என்று சொல்லக்காரணம், இந்தியாவின் அளவையும் இங்குள்ள பிரச்னைகளின் அளவையும் வைத்துப்பார்க்கும்போது, இந்தத்துறையில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அதேசமயம், இதைப்பற்றிப் பலரும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே, இதனைப் 'பாதி நிரம்பிய குடுவை' என்றும் சொல்லலாம். குறிப்பாக, நகர்ப்புறங்களில் மனநலம், மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பலர் உணர்ந்துள்ளார்கள். இந்த நிலைமையை நான் 50-50 என்று அழைப்பேன். நகர்ப்புறங்களில், படித்தவர்கள்மத்தியில் இதுபற்றிய அறிவு அதிகரித்துள்ளது. ஆனால், அதற்குவெளியே பெரும்பாலானோருக்கு மனநலம்பற்றித் தெரிந்திருப்பதில்லை. அரசு, பிற அமைப்புகள்கூட இதுபற்றித் தெரிந்துகொள்வதில்லை.

மனநலத்தைப் பொறுத்தவரை, நாம் பலவிதமான மறுப்புகளைக் கொண்டிருக்கிறோம்; அது ஒரு பெரிய பிரச்னை இல்லை என்று நினைக்கிறோம், அதைப்பற்றி நமக்கு ஏற்கெனவே தெரியும் என்று நினைக்கிறோம், நமக்கு அல்லது நமக்குத்தெரிந்த ஒருவருக்கு அந்தப் பிரச்னை இல்லை என்பதால், அது ஒரு பெரிய கவலையே இல்லை என எண்ணுகிறோம். மனநலத்தின் முக்கியத்துவத்தை எல்லாரும் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

என்னுடைய முந்தைய பதிலிலேயே இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். மனநலப் பிரச்னை என்பது, வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்னைகள் இருக்கின்றன, அவ்வளவுதானே என்று மக்கள் நினைத்துவிடுகிறார்கள். அது முகத்துக்கு எதிரே வந்து நின்றால்தான் அதைக் கவனிக்கிறார்கள். மனநலப் பிரச்னைகள் என்பவை, ஒருவருடைய செயல்திறனை, அவர் சமூகத்தில் பழகும் விதத்தை, அவரது வெற்றியைப் பாதிக்கின்றன. இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், மனநலப் பிரச்னைகளைச் சந்தித்து வென்றவர்கள் அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசவேண்டும், லட்சிய பிம்பங்களாக மாறவேண்டும்.

ஒரு பெரிய நடிகர் சிக்ஸ்-பேக் வைக்கிறார் என்றால், பலரும் அதைப்பார்த்து உடல்கட்டின்மீது ஆர்வம் கொள்கிறார்கள். ஆனால், அதுபோல், மன உறுதிக்கு லட்சிய பிம்பங்கள் யாரும் இல்லை. அபூர்வமாகச் சிலர், மனநலப் பிரச்னைகளைப்பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். உதாரணமாக, நடிகர் திலீப் குமார் 10 அல்லது 20 வருடங்கள் உளவியல் தெரபி பெற்றிருக்கிறார். இதுபோன்ற விஷயங்கள் நிறையப் பதிவு செய்யப்படவேண்டும், மனநலப் பிரச்னைகளைச் சந்தித்த பிரபலங்கள் இதைப்பற்றிப் பேசவேண்டும், தங்களுக்கு என்ன பிரச்னை வந்தது, அதற்குத் தாங்கள் எப்படி உதவி நாடினோம் என்பதுபற்றிச் சொல்லவேண்டும். அத்துடன், இந்த லட்சியபிம்பங்களுக்கும் நிறைய ஊக்கம் தேவை. எனக்குத் தெரிந்து, ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு தொழிலிலும், ஒவ்வொரு சமூகத்திலும் வெற்றியடைந்தவர்கள் பலர் இப்படி ஏதாவது ஒரு பிரச்னையைச் சந்தித்துதானிருப்பார்கள்; பலர் இவற்றுக்கு உதவி பெற்று குணமாகியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்களா என்றால், சந்தேகம்தான். பலர் இதைப்பற்றிப் பேசவேண்டும். மாற்றத்தின் தூதுவர்களாக, முன்னோடிகளாக, லட்சிய பிம்பங்களாக அவர்கள் திகழவேண்டும்.

மனநலப் பராமரிப்பு எல்லாருக்கும் கிடைக்கவேண்டுமென்றால், உளவியல் ஆய்வு அதற்கு எப்படி உதவக்கூடும்?

உளவியல் ஆய்வுகளின் பெரிய நன்மை, மக்கள் அறிந்திராத பிரச்னைகளைப்பற்றி அவர்களைச் சிந்திக்கச்செய்கின்றன. நமது மனத்தில் நம்மையும் அறியாமல் பல பிரச்னைகள் எழுகின்றன, அவற்றை நாம் அறிந்திருப்பதில்லை, ஆனால், அறிந்திருக்கவேண்டும். அத்துடன், பல பிரச்னைகள் நமது ஆரம்பகால உறவுகளிலிருந்து வருகின்றன, சிறுவயதில் குடும்பத்தினர், பெற்றோருடன் நாம் கொண்டிருந்த உறவுகள்... அவற்றை நாம் கவனிக்கவேண்டும். ஆக, ஓர் உள்நோக்கிய மனநலச் சிகிச்சை தேவை, அதாவது ஒருவர் தன்னைப்பற்றியும் தன் வாழ்க்கையைப்பற்றியும் சிந்திப்பது நல்லது. நமது பாரம்பரியமும் நமக்கு இதைதான் சொல்லித்தருகிறது: நம்மை நாமே அலசவேண்டும், அதன்மூலம் மனநலப் பிரச்னைகள் அல்லது குறைபாடுகளை நாம் அறியலாம், சரிசெய்யலாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org