COVID-19ன்போது தனிமையைப் புரிந்துகொள்ளுதல்

இந்த நேரத்தில் மக்கள் தனிமையாக உணர்வது இயல்புதான்; அந்த உணர்வுகளை நீக்கவேண்டுமென்றால், அவர்களே முன்வந்து தங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதற்கான வழிகளைக் கண்டறியவேண்டும்
COVID-19ன்போது தனிமையைப் புரிந்துகொள்ளுதல்

தனிமை என்பது ஒரு பொதுவான அனுபவம், இது பொதுவாக ஒருவரிடம் ஓர் உணர்வுத் தாக்கத்தைக் கொண்டிருக்கலாம். COVID-19 நோய்ப்பரவலால் பல முடக்கங்கள் வந்துள்ளன, சமூக ஊடாடல்கள் குறைந்துள்ளன, மக்களுடைய வாழ்க்கைகளில் இதற்குமுன் காணாத மாற்றம் வந்துள்ளது.

இந்தக் கட்டாயத் தனிமைப்படுத்தலானது, தனித்திருக்கும் உணர்வுகளை மிகுதியாக்கியுள்ளது, இது ஒருவருடைய உடல் மற்றும் உணர்வு நலனைப் பாதிக்கக்கூடும் என்கிற அளவுக்கு! இதுபற்றி, டொரன்டோவைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளரான ஓமர் பஜ்ஜா அவர்களுடன் வொய்ட் ஸ்வான் அறக்கட்டளையின் அரத்தி கண்ணன் பேசினார், வெவ்வேறு சூழ்நிலைகளில் மக்கள் தனிமையை எப்படி உணரலாம், அதைச் சமாளிப்பதற்கு அவர்கள் என்ன செய்யலாம் என்பதுபற்றிய சில கேள்விகளுக்கு ஓமர் பஜ்ஜா பதிலளிக்கிறார்.

Q

நானும் என்னுடைய குடும்பமும் வெவ்வேறு நகரங்களில் உள்ளோம், நான் தனிமையில் வசிக்கிறேன். இந்த நேரத்தில் நான் என்னைச் சமூகரீதியில் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருப்பதால், நான் நாள்முழுக்கத் தனியாக இருக்கிறேன், மிகுந்த சிரமங்களைச் சந்திக்கிறேன். இந்தச் சூழலில் நான் என்னுடைய மன மற்றும் உணர்வு நலனைக் கவனித்துக்கொள்வது எப்படி?

A

இந்த நேரத்தில் ஒருவர் தன்னைத்தானே கவனித்துக்கொள்வது முக்கியமாகும். மக்களுடைய வாழ்க்கையில் முதன்முறையாக, அவர்களுக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் வகையில், தங்களுக்கு உதவக்கூடிய ஒரு வழியில் அவர்கள் தங்களை நன்கு கவனித்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, வீட்டில் உடற்பயிற்சிகளைச் செய்யலாம், தேநீர் அல்லது சூடான சாக்லெட் பானமொன்றை அருந்தியபடி வசதியாக அமர்ந்திருக்கலாம். ஒவ்வொருவரும் தாங்கள் செய்ய விரும்புவதைச் செய்வதற்கான நேரம் இது, குறிப்பாக, அவர்கள் தங்களுடைய ஆற்றலை வேறெங்காவது செலுத்தவேண்டும் என்று விரும்பினால், அதற்கு இது ஒரு நல்ல உத்தியாக அமையும்.

Q

நாம் எல்லாரும் சமூகத்திலிருந்து விலகியிருப்பதால், என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஆர்வமூட்டும்வகையில் எதுவுமே நடப்பதில்லை என்பதுபோல் நான் உணர்கிறேன், எதை எதிர்நோக்கி நாளைத் தொடங்குவது என்றே எனக்குத் தெரியவில்லை. இந்தச் சூழலில் நான் என்ன செய்யலாம்?

A

தனித்திருத்தலின் பக்க விளைவுகளில் ஒன்று, வாழ்க்கை சலித்துப்போகலாம், நம்முடைய நாட்களைப் பயன்படுத்தி நாம் பெரிதாக எதையும் செய்வதில்லை என்ற உணர்வு மக்களுக்கு வரலாம். இது மக்களுடைய பதற்றத்தை மிகுதியாக்கலாம், மனநிலையை மாற்றலாம், ஏனெனில், “மக்கள் அவர்களுடைய எண்ணங்களுடன் தனியாக விடப்பட்டிருக்கிறார்கள்.” புதிய திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுகளை முயன்றுபார்ப்பதற்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். மக்கள் இவற்றைத் தனியே விளையாடவேண்டியதில்லை, பிறருடன் சேர்ந்து விளையாடக்கூடிய மெய்நிகர் விளையாட்டுகள்கூட உள்ளன. அதேபோல், அவர்கள் ஒரு புதிய செயலை முயலலாம், இணைய வகுப்பொன்றில் சேரலாம், அல்லது, அவர்களுக்கு ஆர்வமளிக்கிற ஏதேனும் ஒன்றில் ஈடுபடலாம், இவையும் அவர்களுக்கு உதவக்கூடும்.

Q

நான் என்னுடைய சமூக உணர்வை இழந்துவிட்டதுபோல் உணர்கிறேன், என்னுடைய நலனுக்கு அது முக்கியம் என்று நினைக்கிறேன். நான் இதை எப்படிச் சமாளிக்கலாம்?

A

வீட்டிலிருந்து வெளியில் செல்லாமலேயே சமூக உணர்வை அனுபவிப்பது சாத்தியம்தான். இயன்றால், நோய்ப்பரவலை எதிர்த்துப் போரிடும் மருத்துவமனைகள், முன்னிலை அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கலாம். தங்களுடைய அக்கம்பக்கத்து வீட்டாருக்கு உரைச்செய்தி அனுப்பலாம், அவர்களை அழைத்துப் பேசலாம், அவர்களுடைய நலனை உறுதிப்படுத்தலாம். தங்களிடம் இருக்கிற ஒரு தகவல் பிறருக்குப் பயன்படக்கூடும் என்று அவர்கள் நினைத்தால், சமூக ஊடகங்களின்மூலமாக உரையாடலாம், உதவலாம். சமூகங்களுடன் ஊடாடுவதற்கும், சொந்தமாக இணைந்திருக்கிற ஓர் உணர்வைப் பெறுவதற்கும் பல வழிகள் உள்ளன.

Q

மனிதர்களைத் தொடர்புகொள்ள இயலாமல் நான் மிகவும் வருந்துகிறேன், அழவேண்டும்போல் இருக்கிறது. இது இயல்பானதா? இந்த உணர்வு நீங்கிவிடுமா?

A

மனிதர்களைத் தொடர்புகொள்ள இயலவில்லையே என்று வருந்துவது ஓர் இயல்பான உணர்வுதான், அதில் ஐயமில்லை. அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமூக உயிரினங்கள். இப்படிதான் மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளார்கள். ஒரு சமூகத்திலிருந்து விலகித் தனியே இயங்கும்வகையில் மனிதர்கள் வளரவில்லை. ஆகவே, இந்த நேரத்தில் வருந்துவது, அழ விரும்புவது போன்றவை இயல்புதான், குறிப்பாக, தனிமைப்படுத்தலின்போது தனியாக வாழ்கிறவர்களுக்கு இந்த உணர்வுகள் வரலாம். இந்த உணர்வு பின்னர் நீங்கிவிடும், குறிப்பாக, இந்த முடக்கம் முடியும்போது இந்த உணர்வும் சென்றுவிடும். அதே நேரம், இயன்றால் அவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கலாம், தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் அவ்வப்போது உரையாடலாம், தங்களால் இயன்ற அளவுக்கு, தாங்கள் விரும்பும் அளவுக்கு அவர்களுடன் அடிக்கடி பேசலாம். அவர்களுடைய தனிமை உணர்வைக் குறைப்பதற்கு இது உதவும்.

Q

நான் எப்போதும் உள்முகம் கொண்டவனாகவே என்னை எண்ணிவந்துள்ளேன்; ஆகவே, இந்தக் காலகட்டம் எனக்கு மிகக் கடினமாக உள்ளதே என்பதை எண்ணி வியக்கிறேன். இது எதிர்பார்க்கப்படுகிற ஒரு விஷயம்தானா? இந்த நேரத்தில் நான் என்ன செய்யலாம்?

A

உள்முகம் கொண்டவர்களுக்கும் இந்தச் சூழ்நிலை கடினமானதாக இருக்கலாம். உள்முகம் கொண்ட மக்களுக்கு அவ்வப்போது தனிமை நேரம் தேவைப்படும், இதைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுடைய சமூக மின்கலன்களை, ஆற்றலைப் புதுப்பித்துக்கொள்வார்கள். அதற்காக, அவர்கள் தனிமைப்படுத்தலை விரும்புகிறார்கள், அல்லது, எப்போதும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட விரும்புகிறார்கள் என்று பொருளில்லை. அத்துடன், அவர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களை எண்ணியும் கூடுதல் பதற்றம் கொள்ளலாம். இந்த நேரத்தில் அவர்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயம், தங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினருடன் மெய்நிகர் வழிகளில் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுதான். உரைச்செய்தியாக இருந்தாலும் சரி, மின்னஞ்சலானாலும் சரி, அல்லது, தொலைபேசி அழைப்புகளானாலும் சரி, தொடர்பில் இருப்பது எப்போதும் நல்லது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், தன்னுடைய அன்புக்குரியவர்களை நலம் விசாரிப்பதற்குத் தனக்கு மிகவும் வசதியான ஊடகம் எது என்கிற வடிவத்தை ஒருவர் தானே தேர்ந்தெடுக்கலாம்.

Q

நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதற்கும், சமூக ஊடகத்தில் பிறருடைய முடக்க வாழ்க்கைகளை நான் எப்படிக் காண்கிறேன் என்பதற்கும் ஓர் இடைவெளியை நான் காண்கிறேன். அவர்கள் பல மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைச் செய்வதாகத் தோன்றுகிறது, எனக்கோ ஒவ்வொரு நாளையும் தள்ளுவதே கடினமாக உள்ளது. நாம் அனைவரும் ஒரே சூழலைத்தான் சந்திக்கிறோம் என்பது எனக்குத் தெரியும், ஆனால், நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன். நான் இதை எப்படிச் சமாளிக்கலாம்?

A

சமூக ஊடகம் மிகவும் ஆர்வம் தருவது. பிறரிடம் எது நேர்விதமாக உள்ளதோ அதைமட்டும்தான் மற்றவர்கள் அங்கு காண்கிறார்கள். அநேகமாக, அவர்களுடைய வாழ்க்கையில் பத்து மிக மகிழ்வான நிமிடங்கள் அமைந்திருக்கலாம், அதை அவர்கள் சமூக ஊடகத்தில் பதிவுசெய்திருக்கலாம், அதன்முலம், அவர்கள் செய்கிற அனைத்தும் ஆர்வமூட்டுபவை என்ற பார்வை வந்திருக்கலாம், அது உண்மையாக இல்லாமலிருக்கலாம். சமூக ஊடகங்கள் ஒருவருடைய வாழ்க்கைமுழுவதையும் பிரதிபலிப்பதில்லை, தங்களை நன்றாகத் தோன்றச்செய்கிற விஷயங்களைதான் மக்கள் முதன்மையாகப் பதிவு செய்கிறார்கள். சமூக ஊடகம் தூண்டலாக அமைகிறது என்றால், அதைப் பார்ப்பதைக் குறைத்துக்கொள்வது நல்லது, அந்த நேரத்தில் தன்னைக் கவனித்துக்கொள்வதில் கவனம் செலுத்தலாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org