துயரத்தைச் சமாளிக்க உதவும் ஆதரவுக் குழுக்கள்

துயரத்தைச் சமாளிக்க உதவும் ஆதரவுக் குழுக்கள்

ஆதரவுக்குழு என்பது என்ன?

ஆதரவுக்குழுக்கள் என்பவை, ஒரேமாதிரியான துன்பங்களை(அல்லது வாழ்க்கை அனுபவங்களை)ச் சந்திக்கிற மக்களுடைய குழுவாகும். இந்தக் குழுக்கள், தங்களுடைய உறுப்பினர்களைத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு ஊக்குவிக்கின்றன, அவர்கள் தங்களை வெளிப்படுத்த, இணைந்திருப்பதாக உணர ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குகின்றன, சமாளிப்பதற்கான எதார்த்த வளங்களை வழங்குகின்றன. இதன்மூலம் அவை வசதியுணர்வை உண்டாக்கும் சிறந்த மூலங்களாக இருக்கலாம்.

ஆதரவுக்குழு என்பது, எந்தத் தலைப்பைப்பற்றியதாகவும் இருக்கலாம்: புற்றுநோயில் தொடங்கி, பணியிட அழுத்தத்தைச் சமாளிப்பதுவரை. ஒரு குழு சந்திக்கும் பிரச்னையின் தன்மையைப் பொறுத்துக் குழுக்கள் வெவ்வேறுவிதமாக அமையலாம், வெவ்வேறு வடிவமைப்புகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, ஒரு குழுவை மனநல வல்லுனர் ஒருவர் வழிநடத்தலாம், அக்குழு ஒரு குறிப்பிட்ட முறையில் இயங்கலாம், அல்லது, தன்னார்வலர் உறுப்பினர்கள் குழுவை நடத்தலாம். கூட்டங்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்க்கும்படி நடைபெறலாம், அல்லது, இணையத் தளங்களில் நடைபெறலாம்.

ஓர் ஆதரவுக் குழுவில் என்ன நடக்கிறது?

குழுக்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் (வாரந்தோறும் முதல் மாதந்தோறும்வரை) சந்திக்கின்றன, உறுப்பினர்கள் தங்களுடைய அன்றாடப் போராட்டங்களை விவாதிக்கிறார்கள், பிற உறுப்பினர்கள் பச்சாத்தாபத்துடன் அவர்களுக்குக் காது கொடுக்கிறார்கள், சாத்தியமுள்ள படிநிலைகள், அவர்களுக்கு உதவக்கூடிய வளங்களைப் பரிந்துரைக்கிறார்கள். பெரும்பாலான ஆதரவுக் குழுக்களுடைய நோக்கம், கதகதப்பான ஓர் இடத்தை வழங்குவது, உறுப்பினர்கள் பொதுவாக வெளியில் எங்கும் காண இயலாத புரிந்துகொள்ளலை வழங்குவது. சில நேரங்களில், அவர்கள் ஒரு வல்லுனரை அழைத்துப் பேசச்சொல்லலாம்; சமாளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகளைப்பற்றியோ, கவனித்துக்கொள்பவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகளைப் புரிந்துகொள்வதுபற்றியோ அவர் பேசலாம். எடுத்துக்காட்டாக, கவனித்துக்கொள்வோருடைய ஆதரவுக் குழுவொன்று, வல்லுனர் ஒருவரை அழைத்து, நோயைச் சந்திக்கும் தங்களுடைய அன்புக்குரியவருடன் இன்னும் சிறப்பாகத் தகவல்தொடர்பை நிகழ்த்துவதுபற்றிப் பேசச்செய்யலாம்.

ஆதரவுக்குழுக்கள் எப்படி உதவுகின்றன?

சக மனிதர்கள் நிறைந்த ஆதரவுக் குழுக்கள், அவற்றின் உறுப்பினர்களிடம் ஒரு நேர்விதமான தாக்கத்தை உருவாக்கலாம் என்று ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை தெரிவிக்கிறது. உணர்வுத் துயரம் அல்லது ஒரு மன நலப் பிரச்னையைச் சந்திக்கும் ஒருவர் தனிமையாக உணரலாம். அவர்கள் தங்களுடைய வாழ்க்கைகளை மீண்டும் கட்டமைக்க, தங்களுடைய சூழலை ஏற்றுக்கொள்ளச் சிரமப்படலாம். அதுபோன்ற ஒரு நேரத்தில், தன்னைப்போன்ற ஒரு சூழ்நிலையைச் சந்தித்திருக்கும் இன்னொருவர் தனக்காக இருக்கிறார் என்ற எண்ணம், தன்னுடைய சூழ்நிலையில் உறுதியைக் கண்டறிய, புதிய சமாளிக்கும் அமைப்புகளைக் கற்றுக்கொள்ள, ஒரு புதிய பார்வைக்கோணத்தைப் பெறக்கூட அவர்களுக்கு உதவலாம். 

ஆதரவுக் குழுக்கள் புதிய உறுப்பினர்களுக்கு வழிகாட்டவும் உதவலாம்; இவை அவர்களுக்கு ஓர் உறுதியுணர்வை, நோக்கத்தை, ஒட்டுமொத்த நல்ல அனுபவ உணர்வை வழங்கலாம். ஒருவர் செயல்படுத்த முயலும் தகவமைப்பு நடவடிக்கைகளைப் பயிற்சியெடுப்பதற்கான, சக உறுப்பினர்களிடமிருந்து பின்னூட்டம் பெறுவதற்கான ஒரு நல்ல தளத்தையும் இவை வழங்கலாம்.

ஆதரவுக் குழுக்கள் போதாதபோது

ஆதரவுக் குழுக்கள் எப்போதும் சிறப்பாகப் பலன் தரும் என்று சொல்ல இயலாது. சில சூழ்நிலைகளுக்கு ஆதரவுக் குழுக்கள் பொருந்தாமலிருக்கலாம், எடுத்துக்காட்டாக:

  • ஒருவர் சமூகச் சூழல்களில் பதற்றத்தை அனுபவிக்கிறார் என்றால், அவர்கள் இணையக் குழுக்களின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்களா என்பதை மதிப்பிடவும் கருதவும் விரும்பலாம்.
  • குழு உறுப்பினர்கள் எல்லைகளைப் பின்பற்றாவிட்டால். அது சில உறுப்பினர்களை மோசமாகப் பாதிக்கலாம்.
  • கூட்டங்களுக்கு அடிக்கடி வரும் அளவுக்கு உறுப்பினர்கள் அர்ப்பணிப்பைக் காட்டாவிட்டால், காலப்போக்கில் குழுவிலிருந்து உறுப்பினர்கள் விலகிவிடலாம், குழு மூடப்படலாம். இதனால், பல குழு உறுப்பினர்கள் இழப்பைச் சந்திக்கலாம்; இதன் விளைவாக, அவர்கள் சோகத்தைச் சந்திக்கலாம்.
  • குழு வடிகட்டப்படாவிட்டால், குழுவில் நிறைய பலவகைத்தன்மை இருக்க வாய்ப்புண்டு. இதனால், குழுவில் நிறைய முரண்கள் வரலாம், இந்த முரண்களைத் தீர்ப்பதில் நிறைய நேரத்தைச் செலவிடவேண்டியிருக்கலாம். அப்போது, பெரும்பாலான உறுப்பினர்கள் பாதுகாப்பாக உணராமலிருக்கலாம்; கூட்டங்களில் கலந்துகொள்வதைச் சுமையாகக் கருதலாம்.

ஓர் ஆதரவுக் குழுவை அமைப்பது எப்படி?

ஒருவரால் எந்த ஆதரவுக் குழுவையும் அணுக இயலவில்லை, அல்லது, அவர் அணுகும் ஆதரவுக் குழுக்கள் அவர் நெருக்கமாக உணரும் காரணத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால், அவரே ஓர் ஆதரவுக் குழுவை உருவாக்குவதுபற்றிச் சிந்திக்கலாம். ஆதரவுக் குழுக்களை அமைப்போர் நினைவில் கொள்ளவேண்டிய சில குறிப்புகள்:

பொது நோக்கம்:ஒரு குழு வெற்றிகரமாக வளரவேண்டுமென்றால், பொதுவான அனுபவம் அல்லது ஒரு பொது நோக்கம் தேவை.

வழிநடத்துநர்: வழிநடத்துநர் என்பவர், விவாதங்களை வழிநடத்துபவராவார். இவர்கள்தான் கூட்டங்களை அமைக்கிறார்கள், தேவைப்பட்டால் வல்லுனர்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள், விவாதம் பயனுள்ளதாக இருப்பதை உறுதிசெய்கிறார்கள், ஒரு பாதுகாப்பான சூழலை ஊக்குவிக்கிறார்கள், உறுப்பினர்களுக்கிடையிலான முரணைக் கையாள்கிறார்கள், குழு தன்னுடைய வரம்புகளை, வரையறைகளைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதிப்படுத்துகிறார்கள்.

உறுப்பினர்கள்: குழுவானது ஓர் அடிப்படையைக் கொண்டு தன்னுடைய உறுப்பினர்களை வடிகட்டலாம், அல்லது, ஆர்வமுள்ள யாரையும் அழைக்கலாம். உறுப்பினருக்குக் குழுவின் விதிமுறைகளைத் தெளிவாக விளக்கவேண்டும்: குழு எப்படி ஒரு பாதுகாப்பான இடம் என்பதைப்பற்றி, ரகசியத்தன்மையைப் பராமரிக்கவேண்டியதன் முக்கியத்துவம், பச்சாத்தாபத்துடன் இருத்தல், பிற உறுப்பினர்களைப்பற்றித் தீர்ப்புச்சொல்லாமல் இருத்தல் மற்றும் அவர்கள் கேட்காதபோது அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதைத் தவிர்த்தல் ஆகியவற்றைப்பற்றிப் பேசுதல்.

கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்: சந்திப்புகள் வாராவாரம் நடைபெறவேண்டுமா, மாதம் இருமுறையா, அல்லது மாதந்தோறும் நடைபெறவேண்டுமா என்று தீர்மானிக்கவேண்டும். கூட்டங்கள் ஒரே இடத்தில் நடைபெறுவதை உறுப்பினர்களும் வழிநடத்துநர்களும் உறுதிசெய்யவேண்டும்; ஒருவேளை இந்த இடம் மாறினால், உறுப்பினர்களுக்கு இதைப்பற்றி முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டால், அவர்களுக்குப் போதுமான இடம் இருப்பதை உறுதிசெய்யவேண்டும். சில உறுப்பினர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்பவர்களாக இருக்கலாம்; அவர்களை விடுவதற்கு ஒரு பாதுகாப்பான இடம் இவர்களுக்கு இல்லாமலிருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆதரவுக் குழுக்களைப்பற்றிய கூடுதல் தகவல்களுக்கு,  WHO வழிகாட்டுதலை வாசிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org