டைம் பத்திரிகை வெளியிட்டிருக்கும் ’செல்வாக்கு மிகுந்த 100 பேர்’ பட்டியலில் பேராசிரியர் விக்ரம் படேல் தேர்வாகியுள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நான்கு இந்தியர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவாவைச் சேர்ந்த NGOவான சங்கத் அமைப்பின் இணைநிறுவனர் இவர், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் ட்ராபிகல் மெடிசினில் உள்ள சர்வதேச மனநல மையத்தின் இணைநிறுவனர், மனநலம்பற்றிய சர்வதேசப் பார்வையில் ஒரு மாற்றத்தைத் தூண்டிவந்தவர்.
இந்தியாவின் அடிமட்டநிலையில் பணிபுரிந்துவரும் இவர், சமூக மனநலப் பராமரிப்புக்கான தேவையை வலியுறுத்துகிறார், குறைந்த வருவாய் உள்ள சமூகங்களில் வாழும் சாதாரண மக்களுக்கு மனச்சோர்வு, ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற பிரச்னைகளைக் கையாளக் கற்றுத்தந்து மாற்றம் உண்டாக்கப் பாடுபடுகிறார். இவர் எழுதிய 'மனநல மருத்துவர் இல்லாத இடத்தில்' என்ற புத்தகம், நிபுணரல்லாத நலப்பராமரிப்பு ஊழியர்களுக்கான ஒரு கையேடு ஆகும், இது வளரும் நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இவர் சர்வதேச மனநலத்துக்கான அமைப்பு ஒன்றையும் உருவாக்கினார், இது பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் குடிமையியல் அமைப்புகளின் வலைப்பின்னலாக உள்ளது, மனநலத்தை அடிப்படை மனித உரிமையாக வலியுறுத்திவருகிறது, மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கைகளை மேம்படுத்துவதற்காகப் பணியாற்றிவருகிறது. இந்தச் சாதனைகளின் அடித்தளத்தில் உள்ளவை, ஆராய்ச்சிக்காக அவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள தன்மை, சிறப்பாகத் தகவல்தொடர்புகளை நிகழ்த்தும் திறன் ஆகியவை.
இவரது முதன்மையான நோக்கம், மனநலப் பிரச்னைகளுக்கான சிகிச்சை இடைவெளியைக் குறைப்பது, அதாவது, மனநலப் பிரச்னைகளால் சிரமப்படுகிறவர்களின் எண்ணிக்கை, அதற்காக உண்மையில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் இருக்கும் வித்தியாசத்தைக் குறைப்பது. இந்தியாவில் மனநலப் பிரச்னை கொண்டோர், மனநல நிபுணர்கள் இடையிலான விகிதத்தை ஒப்பிட்டுப்பார்த்தால், பெரிய அதிர்ச்சிதான் கிடைக்கும். இங்கே பின்தங்கிய மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் மனநல ஆதரவு என்பது கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம். இப்படிப்பட்ட ஒரு நாட்டில் விக்ரம் படேல் போன்ற ஒரு முன்னோடி எதிர்நீச்சல் போட்டு முன்னேறிக்கொண்டிருப்பது நமது அதிர்ஷ்டம்தான்.