விழிப்புணர்வு தேவை

இவை அனைத்தும் 2000ம் ஆண்டில் நாங்கள் ராஜஸ்தானின் ஜோத்பூரில் இருக்கும்போது தொடங்கியது. நான் என்னுடைய 12ம் வகுப்புத் தேர்வை முடித்துக் கல்லூரியில் அடியெடுத்துவைத்திருந்தேன்; நான் பட்டயக் கணக்குப் படிப்பிற்கும் சேர்ந்திருந்தேன். எங்களுடையது சிறிய, நடுத்தர குடும்பம். 1989ல் என்னுடைய தந்தை இளவயதில் மறைந்தபிறகு, நாங்கள் சிறிது கடினமான வாழ்வை எதிர்கொண்டோம். புது தில்லியில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய என்னுடைய தாய் என்னையும் என்னுடைய சகோதரியையும் வளர்த்தார். எங்கள் உறவினர்களிடமிருந்து எந்த ஆதரவும் இல்லை.

என்னுடைய தாய்க்கு இதற்குமுன் எந்த மனநோயும் இல்லை, இருப்பினும் நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போது, வீடு முறையாகப் பூட்டியுள்ளதா, எரிவாயு அடுப்பு அணைந்துள்ளதா என்று திரும்பத் திரும்பச் சோதிக்கும் பிரச்னை கொண்டிருந்தார். வெகுகாலத்திற்கு பின்னே நாங்கள் இதனைத் தீவிர செயல்பாட்டுக் குறைபாடு (OCD) என்று உணர்ந்துகொண்டோம்.

2000ல், என்னுடைய தாய் தன்னுடைய தலைக்குள் இரைச்சல் கேட்கிறது, யாரோ ஒருவர் தன்னுடன் பேசுவதுபோல் உள்ளது என்றார். முதலில் நாங்கள் இதனைப் புரிந்து கொள்ள இயலாமல் பயந்தோம். அவர் வீட்டில் ஏதேனும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்று சோதிக்க்க காவல்துறையைக்கூட அழைத்தார். காலப்போக்கில் அது அவருக்கு ஒரு வழக்கமாகத் தொடங்கியது, அவர் தலையசைப்பதன் மூலமும் பதிலளிப்பதன்மூலமும் அந்தக் குரல்களில் ஒன்றாகத் தொடங்கினார். குழந்தைகளாக நாங்கள் ஸ்கிசோஃப்ரெனியாவைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. மேலும் அதுபோன்ற நோய் என்னுடைய தாயைப் பாதிப்பதையும் கற்பனை செய்து பார்த்ததில்லை. எனவே, நாங்கள் அது போய்விடும் என நினைத்தோம். இருப்பினும், அது மோசமாக மட்டும் ஆனது.

நாட்கள் கடந்ததும், அம்மா ஒரு படி முன்னேறி அந்தக் குரல்கள் அதைச் செய் இதைச் செய் என்று கேட்கும் கட்டளைகளுக்கு ஏற்ப நடக்கத் தொடங்கினார். சில நேரங்களில் குரல்கள் அவரைச் சாப்பிட வேண்டாம் என்று கூறின, சில நேரங்களில் தூங்க வேண்டாம் என்று கூறின, இன்னும் மோசமாக யாரோ அவரைக் கொல்ல முயற்சிப்பதாகவோ, அவர்தான் அனுமன் (ஓர் இந்திய தெய்வம்) என்றோ கூறின. மெதுவாக, அந்தக் குரல்கள் அவர்மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கின. குழந்தைகளாக இருந்ததால் நாங்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பினோம். கடந்த காலத்தில் உறவினர்களுடன் கசப்பான அனுபவம் கொண்டிருந்ததால் நாங்கள் உறவினர்களிடமிருந்து எந்த ஆதரவையும் எதிர்பார்க்க முடியவில்லை, நாங்கள் பக்கத்து வீட்டுகாரர்களையும் அணுக நினைக்கவில்லை. பிறருடன் சகஜமாகப் பழகாத நான், இந்தப் பிரச்னையை மனம் திறந்து கூறக்கூடிய நண்பர்களும் இல்லை.

பல நேரங்களில், நான் ஒரு குழந்தை தாயைத் திட்டுவதுபோல் என்னுடைய அம்மாவுக்கு உணர்வைக் கொண்டுவர முயற்சிசெய்தேன். அவர் இதிலிருந்து வெளிவர வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் அப்போது விஷயங்கள் கைமீறின. என்னுடைய தாய் குரல்களை உண்மையில் நம்பத் தொடங்கினார், மேலும் நான் கூறுவதையே கேட்கவில்லை; இப்போது அவர் எதையும் செய்யும் நிலையில் இல்லை என நான் நினைக்கிறேன். அவர் சாப்பிட மறுத்தார், அல்லது குரல்கள் கட்டளையிட்ட அளவு மட்டுமே சாப்பிட்டார் (அது பொதுவாக அரைச் சப்பாத்திக்குமேல் இருந்ததில்லை); அவர் வலுவிழக்கத் தொடங்கினார், அவருடைய எலும்புகள் தெரியத் தொடங்கின.  

ஒருநாள், அவர் வீட்டிலிருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக வெளியே எறியத் தொடங்கினார். அப்போதுதான் பக்கத்து வீட்டு அம்மா தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் தாயுடன் ஆலோசிக்கத் தன்னுடைய மகளை அனுப்பினார். நாங்கள் அவர்களிடம் மனம் திறந்து கூறியதும், கூடுதல் பிரச்னைகளை வரவேற்றோம் (அதை நாங்கள் பின்பு உணர்ந்தோம்). அந்த பெண் கீர்த்தனங்களுக்கு ஒன்றுகூடும் நண்பர்களைக் கொண்டிருந்தார். அவர்கள் எங்களைப் போல் நோயைப் பற்றி அறியாமல் இருந்தனர், அந்தப் பெண்கள் அது என்னுடைய தாயின் உடலைப் பிடித்து இருக்கும் கெட்ட ஆன்மாவின் நிகழ்வு என்று முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ஓஜாக்கள் மற்றும் பாபாக்களின் தொடர் வருகை தொடங்கியது. எனவே நாங்கள் பெரும் கூட்டத்தினர்முன் சொற்பொழிவாற்றும் பாபாவை  வாரந்தோறும் சந்தித்தோம், அவர் எந்த நோயையும் குணப்படுத்தும்  பாபுத்தியை கொடுத்தார்.

ஆனால், அது செயல்படவில்லை. ஒவ்வொரு சந்திப்புக்குப்பிறகும் நிலமை மோசமானது. ஒருவர் என்னை ஜோதிடரிடம் ஆலோசிக்கும்படி கூறினார். அந்த ஜோதிடர் இதுபித்ர் தோஷத்தால் நடைபெறுகிறது என்று கூறிப் பூஜை செய்யும்படி கூறினார். எனவே நான் அதற்கு இணங்கி அஜ்மீரின் புஷ்காருக்குச் சென்றேன்.  புனிதக் குளத்தில் நான் பூசை செய்யும் போது என்னுடைய கால் தவறியது, ஏனெனில் எனக்கு நீந்தத் தெரியாது, நான் கிட்டத்தட்ட மூழ்கிவிட்டேன்! அவ்வளவு நெருக்கமாக மரணத்துடன் உரசல்.

பின்னர், நடந்து கொண்டிருந்த எல்லா முட்டாள் தனங்களையும் மிஞ்சும் ஒன்று நடந்தது. ஒரு நாள் அதிகாலையில், அம்மா பினாயில் புட்டியைக் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அதிர்ச்சியடைந்து, அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரிடம் கேட்டேன். குரல்கள் தன்னை அப்படிச் செய்யும்படி கூறுவதாக அவர் கூறினார். நான் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு திரவம் அவருடைய உடலிலிருந்து வெளியிலெடுக்கப்பட்டது. கடவுள் அருளால் அவர் உயிர்பிழைத்தார்.

நடந்தது நடந்து விட்டது. விடியலுக்கு முன் இரவு கருப்பாக  இருக்கும் என்று கூறுவார்கள். என்னுடைய உறவினர்களுள் ஒருவர் அவரை மனநல நிபுணரிடம் அழைத்துச் செல்லப் பரிந்துரைத்தார். இப்போது யோசித்தால், இது தெய்விகச் செயல். தாமதம் இல்லாமல், நாங்கள் அவரை மனநல நிபுணரிடம் கூட்டிச் சென்றோம். முதல் ஆலோசனை, ஒரு மணிநேரம் நீண்ட அமர்வு, அதில் என்னுடைய தாய் கடந்த ஆண்டுகளில் தன்னுடைய எல்லா அனுபவங்களையும் தெளிவாக நினைவுக்குக் கொண்டுவந்தார; தலையில் உள்ள குரல்கள், யாரோ ஒருவர் அவருடைய நரம்புகளை நொறுக்குவது போன்றவற்றைச் சொன்னார். மருத்துவர் கடவுள் அனுப்பியவர்போலவும் எங்கள் வலியை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தவராகவும் இருந்தார். அவர் உடனடியாக மருந்துகளைப் பரிந்துரைத்தார்.

நல்லவேளையாக, மருந்துகள் உடனடிப் பலனளித்தன. தாயின் தலையிலிருந்த குரல்கள் ஒடுங்கின, அவருடைய உணவு சாப்பிடும் திறன் திரும்பியது அவர் தன்னுடைய வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பினார்; அவர் வீட்டு வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார், நாங்கள் எந்த உதவியும் இல்லாதபோது எங்கள் உதவிக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நேரம் செலவழிக்கத் தொடங்கினோம்.

15 ஆண்டுகள் கடந்துவிட்டன, என்னுடைய தாய் இன்று வரை மருந்து எடுக்கிறார். மேலும் நோயும் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பாதையில் ஏற்றங்களும் இறக்கங்களும் இருந்தன, ஆனால் அவை எவையும் 2000 -2001போல் இல்லை. என்னுடைய ஒரே வருத்தம் நோயைக் கண்டறிவதிலிருந்து மருந்துகளைத் தொடங்குவது வரையில் தாமதத்திற்குக் காரணமான விழிப்புணர்வின்மை மட்டுமே, ஒருவேளை நாங்கள் விழிப்புணர்வோடு இருந்திருந்தால், என்னுடைய தாயின் நிலையில் குறிப்பிடத்த வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

நான் இந்தக் கடும் சோதனையைக் கடந்து வந்ததால், நோயாளியின் குடும்பத்தினரும் நோயாளியுடன் வலியை கடந்து வருகின்றனர் என்பதை உணர்கிறேன். எனவே கவனித்துக்கொள்கிறவர்களும் தங்களுடைய வலி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு தங்களுக்கு முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள வலிமையாக உணர்வதற்காகச் சில வகை ஆதரவுக் குழுக்கள் தேவை. மக்கள் மனநோயை மற்ற நோய்களான இதய நோய் அல்லது பார்க்கின்சன் போல் கருதி, அதனால் வருந்துபவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரைச் சுதந்தரமாகப் பேச அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் நாம் அதன் மோசமான விளைவுகளை நிறுத்த முடியும்.

நான் என்னுடைய கதையை இவ்வாறு நிறைவுசெய்கிறேன், என் தாய் அவருடைய கல்லூரி நாட்களில் ராணி லட்சுமிபாய், என்று அறியப்பட்டார், அதுவே அவருடைய ஆளுமை. அவர் தன்னுடைய வாழ்நாளின் மோசமான போராட்டங்களை ஒரு வீராங்கனை போல், நம்பிக்கையிழக்காமல் எதிர்கொண்டார் இன்னமும் எதிர்கொள்கிறார். இந்தச் செயல்முறையில் அவர் எனக்குக் கற்பித்தது அவருடைய வாழ்க்கையின் தத்துவம், அதனை இரு வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறலாம்: “ஹிம்மத் சே” (“துணிவுடன் இரு”)!!

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org