மனச்சோர்வுபற்றி மக்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?

மனச்சோர்வுபற்றி மக்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?

மனச்சோர்வு என்றால் என்ன என்பதுபற்றிப் பல தவறான புரிந்துகொள்ளல்கள், அல்லது, முன்கூட்டியே அமைத்துக்கொண்ட கருத்துகள் உள்ளன. அது இருண்ட, அதீத சோகமான ஓர் உணர்வாகக் கருதப்படுகிறது. ஆனால், மனச்சோர்வு என்பது வெறுமனே உணர்தல் இல்லை, ஓர் உணர்ச்சி இல்லை, அல்லது, ஒரு மனநிலை இல்லை. ஒருவருடன் ஒட்டிக்கொள்கிற, அவரால் பிய்த்துப்போட இயலாத ஒரு தடிமனான, இருண்ட மேகமாக நான் மனச்சோர்வை விவரிப்பேன். சில நாட்களில் என்னால் மனச்சோர்வைச் சமாளிக்க இயன்றது; ஆனால் அப்போதும், தீவிரமான சோக உணர்வுகள் இருந்தன, அத்துடன், மதிப்பற்ற உணர்வு, எனக்கு உதவ யாரும் இல்லை என்கிற உணர்வு ஆகியவை சேர்ந்துகொண்டன. அப்போதுதான் நான் ஒரு மன நல வல்லுனரிடம் உதவி கோரினேன்; என்னுடைய மனச்சோர்வைச் சமாளிக்க அவர் எனக்கு உதவினார். என்னுடைய மனத்தைப் புரிந்துகொள்ள இயலாமல் நான் தடுமாறிய நேரத்தைத் திரும்பிப்பார்க்கும்போது, என்னைச்சுற்றியிருந்தவர்கள் என்னுடைய பிரச்னையைப் புரிந்துகொண்டிருந்தால் நிலைமை இன்னும் எளிதாக இருந்திருக்குமோ என்று நான் அடிக்கடி நினைக்கிறேன். அது என்னுடைய குணமாகிற செயல்முறையை விரைவாக்க உதவியிருக்குமோ? மனச்சோர்வை இன்னும் செயல்திறனுடன் கையாள்வதற்கு அது எனக்கு உதவியிருக்குமோ? நான் மனச்சோர்வைப் புரிந்துகொண்டது, என்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி உதவலாம் என்று தெளிவாக விளக்குவதற்கு எனக்கு உதவியுள்ளது. 

1. கண்ணுக்குத்தெரியாத உணர்வுக் காயங்கள்: உடல்சார்ந்த காயங்களைப்போலவே, உணர்வுசார்ந்த காயங்களும் ஆறுவதற்கு நேரமாகும். ஆனால், உடல்சார்ந்த காயங்களைப்போல் இவை வெளியில் தெரிவதில்லை. மனச்சோர்வு ஆபத்துக்கு ஆளாகக்கூடியவர்கள், உணர்வுசார்ந்த காயங்களுக்கு ஆளாகும் ஆபத்தும் அதிகம். 

பச்சாத்தாபம்தான் முதலுதவி: ஆலோசனை வழங்கும் சந்திப்புகளின்போது, தன்னை ஒருவர் புரிந்துகொள்கிறார் என்பது எந்த அளவு பொருளுள்ளது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஒருவருடைய உணர்வை இன்னொருவரால் உண்மையாகப் புரிந்துகொள்ள இயலுகிறது என்றால், உதவியை நாடுவதற்கான பல கதவுகளை அது திறக்கிறது. உளவியலாளர் காட்டும் பச்சாத்தாபமானது, தடுக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எனக்கு உதவியது. உணர்வுக் காயங்களிலிருந்து மீண்டுவருவதற்கான வலிமையை அது எனக்கு வழங்கியது.

2. நினைத்த நேரத்தில் ஒருவரால் அதிலிருந்து வெளியில் வர இயலாது: மனச்சோர்வு என்பது, இரவு தூங்கி எழுந்ததும் காலையில் மறந்துவிடுகிற விஷயமில்லை. நினைத்த நேரத்தில் அதிலிருந்து வெளியில் வருவதும் இயலாது. 

காயம் ஆறுவதற்கு நேரமாகும்: மனச்சோர்வு என்பது ஒரு நோய்; அதைப் புறக்கணித்தால் அது சென்றுவிடாது. உதவியை நாடியபிறகு, என்னுடைய மனச்சோர்வு பல அடுக்குகளைக் கொண்டது என்பதை நான் புரிந்துகொண்டேன். குணமாகும் செயல்முறையின்போது நான் பல அடுக்குகளைப் பிரிக்கவேண்டியிருந்தது, இதற்கு நேரமானது.

3. இது சோம்பேறித்தனமில்லை: மனச்சோர்வு நிலையில் இருப்பதென்பது, நன்றாகச் சாப்பிட்டபின் ஒருவருக்கு வருகிற மயக்கவுணர்வைப்போன்றதில்லை. மனச்சோர்வுடன் தொடர்புடையதாக ஓர் ஊக்கமின்மை உள்ளது; இதனால், வழக்கமான செயல்பாடுகளைச் செய்வது, பணிக்குச் செல்வது, சிரிப்பது, அல்லது கவனம் செலுத்துவது போன்றவை சிரமமாகின்றன. இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், மனச்சோர்வானது மன ஆற்றல்களைக் காயப்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருப்பது காயப்படுத்துகிறது; இது மகிழ்ச்சியான அனுபவமே இல்லை. தான் செய்ய விரும்புகிற விஷயங்களைச் செய்ய இயலவில்லையே என்கிற குற்றவுணர்ச்சியும் இதன்மீது பூசப்படலாம். சோம்பேறித்தனமாக இருத்தல் என்கிற சிந்தனை, குற்றவுணர்ச்சியை வலுவாக்குகிறது, அதை இன்னும் மோசமாக்குகிறது.

புரிந்துகொள்ளுதல் மற்றும் நேர்விதமான உறுதிப்படுத்தலை வழங்குதல்என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் என்னுடைய பிரச்னையைத் தாண்டியும் என்னை ஏற்றுக்கொண்டார்கள்; மனநல மருத்துவர், உளவியலாளரிடம் நான் பெற்ற உதவியை நேர்விதமாக உறுதிப்படுத்தினார்கள். 

4. மதிப்பற்ற உணர்வு, நம்பிக்கையற்ற உணர்வு, யாரும் தனக்கு உதவுவதற்கு இல்லை என்கிற உணர்வு ஆகியவற்றின் சுழல்: மனச்சோர்வு அனுபவத்தின் பொருள், ஒருவர் விரும்பினாலும் மனச்சோர்வாக உணர்வதைத் தடுக்க இயலாது. ஒருவருக்குள் இந்த மனச்சோர்வுக் கருமேகம் இருந்தால், அவர் தன்னை, உலகத்தை, எதிர்காலத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதை அது கட்டுப்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒருவரால் யாரையும் நம்ப இயலாமலிருக்கலாம், யாரிடமும் மனம் திறந்து பேச இயலாமலிருக்கலாம், இதனால், மதிப்பற்ற உணர்வு, நம்பிக்கையற்ற உணர்வு மற்றும் தனக்கு உதவ யாரும் இல்லை என்கிற உணர்வின் ஒரு தீய சுழலுக்கு இது வழிவகுக்கலாம்.

அக்கறை, ஆதரவைக் காட்டுதல்: ஆலோசனையளிக்கும் மனநல மருத்துவர், உளவியலாளர் ஆகியோர் அக்கறையுடனும் ஆதரவுடனும் இருந்தார்கள்; இது எனக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. நான் என்ன உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதைப்பற்றி அவர்கள் என்னை வசதியாக உணரச்செய்தார்கள், அத்துடன், நான் சொல்வதைத் தீர்ப்புச்சொல்லாமல் கேட்டார்கள். அது எனக்குள் நம்பிக்கையை உண்டாக்கியது, நம்புவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org