தற்கொலையைத் தடுத்தல்

தற்கொலை: நம் பிரச்னையும்தான்

குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் சமூகத்தினரும் நினைத்தால், பல உயிர்களைக் காப்பாற்றலாம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

எழுதியவர்: டாக்டர் ஜி குருராஜ்

கடந்த சில ஆண்டுகளில், தற்கொலைகள் ஒரு பெரிய பொது ஆரோக்கியப் பிரச்னையாகியுள்ளன. இதனால் இந்தியாவில் ஏராளமான மரணங்கள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், சமூக-பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள், தற்கொலை எண்ணங்கள்/ நடவடிக்கைகள் பொதுவாகக் காணப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கைதான் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.

ஒருவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார் என்றால், குறைந்தபட்சம் பத்து முதல் பதினைந்து பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்கள், நூறுக்கும் மேற்பட்டோர் அதைப்பற்றி யோசித்துள்ளார்கள் என்கின்றன சில ஆய்வுகள். ஆனால், சமூகத்தில் பெரும்பான்மையானோர் இத்தகைய சிந்தனைகளை, நடவடிக்கைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, ஆகவே, இந்த எண்ணங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமலே போய்விடுகின்றன, ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் இருப்பதை யாரும் கண்டறிவதில்லை, இதனால், மேலும் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்யக்கூடும், அல்லது, தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளக்கூடும். ஆகவே, தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு மருத்துவர்களுக்கும் அரசாங்கத்துக்கும்மட்டுமல்ல, சமூகத்துக்கும் உண்டு. இந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்றவேண்டுமென்றால், நம்மைச் சுற்றித் தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்களை அடையாளம் காண்பதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

தற்கொலைத் தடுப்புபற்றிய இந்தப் பிரிவில், பொது ஆரோக்கியப் பிரச்னையான தற்கொலைகளைத் தடுக்க நீங்கள் எப்படி உதவலாம் என்று தெரிந்துகொள்வோம்.

அதற்குமுன்னால், இந்தப் பிரச்னையின் தீவிரத்தன்மையைக் கொஞ்சம் புரிந்துகொள்வோம். இந்திய அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சகத்தைச் சேர்ந்த தேசியக் குற்றவியல் ஆவணங்கள் வாரியத்தின் (NCRB) அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, 2013ம் ஆண்டில் 1,34,799 பேர் தற்கொலைமூலம் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே தற்கொலைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துவந்துள்ளது. 1985ல் சுமார் 40,000 என்ற அளவில் இருந்த இந்த எண்ணிக்கை, 2013ல் கிட்டத்தட்ட 1,35,000 ஆகிவிட்டது. தேசிய அளவில், ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சம் பேரில் 11 பேர் தற்கொலைமூலம் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள்.

உலகச் சுகாதார அமைப்பு (WHO), பிற சர்வதேச அமைப்புகளின் தனித்தனி ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கை துல்லியமானதல்ல என்று தெரிகிறது, உண்மையான தற்கொலை எண்ணிக்கையும் இந்தப் பிரச்னையும் நாம் நினைப்பதைவிட மிகப் பெரியவையாக இருக்கவேண்டும்.

தற்கொலைகள் இன்னும் மருத்துவம்-சட்டம் சார்ந்த பிரச்னைகளாகவே கருதப்படுவதால், அவற்றைப்பற்றி அதிகப்பேர் புகார் செய்வதில்லை, காவல்துறை, நீதிமன்றம், சமூகக் களங்கவுணர்வை எண்ணிப் பேசாமல் இருந்துவிடுகிறார்கள்.

இங்கே கவனிக்கவேண்டிய இன்னோர் அம்சம், தற்கொலை முயற்சிகள். இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிகழ்ந்துள்ள ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது, ஒருவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார் என்றால், குறைந்தபட்சம் பத்து முதல் பதினைந்து பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள் என்று பொருள். இவர்களுக்குப் போதுமான நலப்பராமரிப்பு கிடைத்திருக்கலாம், கிடைக்காமலும்போயிருக்கலாம். ஆகவே, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 1,500,000 முதல் 2,000,000 தற்கொலை முயற்சிகள்வரை நிகழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்கொலை எண்ணம் அல்லது அதுசார்ந்த நடவடிக்கைகளைக் கொண்டோரின் எண்ணிக்கையை, நாம் ஊகித்துதான் அறிய இயலும். காரணம், இந்தியாவில் இந்தப் பிரச்னையின் அளவைக் கணிக்கக்கூடிய அளவுக்குப் பெரிய, மக்கள்தொகை அடிப்படையிலான ஆய்வுகள் இதுவரை நிகழவில்லை. இந்த விவாதத்தின் மையக் கேள்வி, 'மக்கள் ஏன் தற்கொலைமூலம் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள், அல்லது, ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்?' என்பதுதான். இது சிக்கலான கேள்வியாகும். அதிகாரப்பூர்வமான அறிக்கைகளின்படி, நூற்றுக்கு 15.6 தற்கொலைகளின் காரணம் யாருக்கும் தெரிவதில்லை. கொஞ்சம் ஆழச்சென்று விசாரித்தால், குடும்பப் பிரச்னைகள், நோய், பொருளாதாரக் காரணங்கள், வரதட்சணைக் கொடுமை என்று பொதுவாகச் சொல்லி மழுப்புவார்கள். இதை வைத்துக் குறிப்பான, இலக்கு அடிப்படையிலான தலையீடுகளை உருவாக்க இயலாது.

மதுப்பழக்கம், குடும்ப வன்முறை, தீவிர நெருக்கடிச் சூழல்கள், மற்றும் மனச்சோர்வு போன்ற மன நலப் பிரச்னைகளும் தற்கொலைக்குக் காரணமாகலாம். இவற்றுடன், ஒருவருக்கு நெருக்கடியான சூழல் ஏற்படும்போது, அவருடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தினர் அவர்களுக்கு ஆதரவு வழங்கவில்லை என்றால், அதுவும் தற்கொலைக்குக் காரணமாகக்கூடும். பல ஆண்டுகளாக, உலகெங்கும் பல்வேறு நிறுவனங்கள் தற்கொலைகளைப்பற்றிய ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளன. இவற்றின்படி, பல சமூக, கலாசார, பொருளாதார மற்றும் ஆரோக்கியம் தொடர்பான காரணிகளின் சிக்கலான தொகுப்பால்தான் தற்கொலைகள் நிகழ்கின்றன என்பது தெரியவந்துள்ளது. இவை பெரும்பாலும் தனிநபர், குடும்பம் அல்லது சமூகத்தில் உள்ள ஆபத்துக் காரணிகளால் நிகழ்கின்றன என்பதும் தெரிகிறது.

இவை அனைத்தும் சேர்வதால், ஒருவர் தனக்கு எதுவும் உதவப்போவதில்லை என்று எண்ணுகிறார், நம்பிக்கை இழக்கிறார், தன் வாழ்வு மதிப்பற்றது என்று கருதுகிறார், ஆகவே, அவர் தற்கொலைமூலம் தன் வாழ்வை முடித்துக்கொள்ளத் துணிகிறார்.

தற்கொலை எதனால் நிகழ்கிறது என்பதுபற்றிப் பல விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதேசமயம், அவற்றை முன்கூட்டியே அறிவதும் தடுப்பதும் சாத்தியம் என்பதில் சந்தேகமே இல்லை.

சில பெரிய தலையீடுகள் தற்கொலையைப் பெருமளவு தடுத்துள்ளன. உதாரணமாக, பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் எளிதில் கிடைப்பதைத் தடுத்தல், தற்கொலை முயற்சி செய்தவர்களுக்குச் சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கச்செய்தல், குழப்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கிடைக்கச்செய்தல், தற்கொலை எண்ணம் கொண்டோருடன் பேசி அதனைத் தடுக்கக்கூடிய உதவித் தொலைபேசி எண்களை உருவாக்குதல், தற்கொலைசார்ந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறிதல், நேர மேலாண்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம். தற்கொலையை முன்கூட்டியே கண்டறிவதற்காக, கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், சமூகங்களில் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம், இதன்மூலம் தற்கொலைபற்றிய மக்களின் களங்கவுணர்வைக் குறைக்கலாம்.

சிரமமான சூழ்நிலைகளை நாம் எவ்வாறு சமாளிக்கலாம் என்பதைப்பற்றி ஊடகங்கள் சிறப்பாகச் சொல்லிவருகின்றன. இது தற்கொலை எண்ணத்தைக் குறைக்க உதவியுள்ளது. தற்கொலை தடுப்புக் கொள்கைகள், திட்டங்களை நன்கு கலந்து அமல்படுத்தி, அத்துடன் பொதுமக்களின் பங்கேற்பைச் சேர்க்கும்போது, சிரமமான சூழ்நிலைகளில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிடலாம் என்று மக்கள் எண்ணுகிற போக்கைத் தலைகீழாக மாற்றலாம், தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

டாக்டர் ஜி குருராஜ், NIMHANS நோய்த்தொற்றியல் பிரிவுப் பேராசிரியர் மற்றும் தலைவர்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org