ஆட்டிசம்

Q

ஆட்டிசம் என்றால் என்ன?

A

ஆட்டிசம் என்பது சாதாரணமான மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு, இது ஒருவருடைய தகவல் தொடர்பு, சமூக ஊடாடல், அறிவாற்றல் மற்றும் அவர் நடந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கிறது.

ஆட்டிசத்தைப் பலதரப்பட்ட தன்மையைக்கொண்ட ஒரு குறைபாடு என்பார்கள். காரணம் இதன் அறிகுறிகளும் பண்புகளும் குழந்தைகளில் பலவிதமாகக் காணப்படுகின்றன, அவர்களை வெவ்வேறு வகைகளில் பாதிக்கின்றன. சில குழந்தைகளுக்கு இதைச் சமாளிப்பதில் பெரிய சவால்கள் ஏற்படக்கூடும், அவர்களுக்குப் பிறருடைய உதவி தேவைப்படும், ஆனால் வேறு சில குழந்தைகள் தங்களுடைய பெரும்பாலான வேலைகளைச் சுதந்தரமாகச் செய்வார்கள், அபூர்வமாகச் சில சிறிய உதவிகள்மட்டுமே இவர்களுக்குத் தேவைப்படும்.

முன்பு இந்த நிலைகள் ஒவ்வொன்றும் (ஆட்டிஸ்டிக் குறைபாடு, வேறு விதத்தில் குறிப்பிடப்படாத, பரவிய வளர்ச்சிக் குறைபாடு (PDD-NOS) மற்றும் ஆஸ்பெர்கர் குறைபாடு) தனித்தனியே குறிப்பிடப்பட்டுவந்தன, ஆனால் இப்போது இந்த நிலைகள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து ஆட்டிசம் வகைக் குறைபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.            

உண்மைகள்

 • ஆட்டிசம் என்பது உலகில் அதிகம் காணப்படும் வளர்ச்சிக் குறைபாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
 • ”ஆட்டிசத்துக்கான செயல்பாடு” என்ற குழுவினர் நடத்திய ஒரு நோய் விவர ஆய்வின்படி, தற்போது 1.7 மில்லியன் பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் (சுமார் 250 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பிரச்னை உள்ளது).
 • ஆட்டிசத்தைக் குணப்படுத்தும் சிகிச்சை ஏதும் இல்லை.

Q

ஆட்டிசத்தின் அடையாளங்கள் என்ன?

A

ஒரு குழந்தை பிறந்தது முதல் அதற்கு மூன்று வயதாகும்வரை ஆட்டிசத்தின் அடையாளங்களைக் காணலாம். இந்த அடையாளங்கள் மிதமாக இருக்கலாம், நடுத்தர அளவில் இருக்கலாம், தீவிரமாகவும் இருக்கலாம் அடையாளங்கள் குழந்தைக்குக் குழந்தை மாறிவிடலாம், குழந்தை வளர வளர இந்த அடையாளங்களும் மாறக்கூடும். உதாரணமாக, தீவிர அறிவாற்றல் குறைபாடு மற்றும் இயக்கத் திறன்களில் பிரச்னை கொண்ட ஒரு குழந்தைக்கு வலிப்பு நோய் வரலாம். அதேசமயம் இந்த நிலையை சுட்டிக்காட்டுவதற்குச் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் உள்ளன.

ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சிக் காலகட்டத்தில் பின்வரும் பண்புகளை அதனிடம் காணலாம்.

ஆட்டிசத்துடன் இருக்கக்கூடிய பிரச்னைகள்: மனநிலை பாதிப்பு, அதீத செயல்பாடு, இயக்கவியல் பிரச்னைகள், வலிப்பு, கற்றல் குறைபாடுகள், காதுகேட்டல் அல்லது கண்பார்வைக் குறைபாடுகள் போன்றவையும் ஆட்டிசத்துடன் இருக்கக்கூடும்.    

ஆட்டிசம் பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குத் தகவல் தொடர்பில் பின்வரும் பிரச்னைகள் இருக்கக்கூடும்:

 • இவர்களுக்கு நிறைய சொற்கள் தெரிந்திருக்கும், ஆனால் அர்த்தமுள்ள வாக்கியங்களை அமைக்க இயலாமல் மிகவும் சிரமப்படுவார்கள்
 • இவர்கள் தாங்கள் கேட்கும் சொற்களை அல்லது வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லலாம்
 • சில செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யலாம்
 • பேசும்போது சைகை மொழியைப் பயன்படுத்தலாம்
 • தகவல் தொடர்புக்கான மொழியைக் கற்றுக்கொள்ளலாம் அல்லது கற்றுக்கொள்ளாமல் இருக்கலாம்
 • தங்களுடைய தேவைகள், உணர்வுகள், உணர்ச்சிகளை இவர்களால் விளக்க இயலாமல் போகலாம்
 • உரையாடல்களை, குரல்களை, முகக்குறிப்புகளை, உடல் மொழிகளை இவர்களால் புரிந்துகொள்ள இயலாமல் போகலாம்
 • யாராவது பேசும்போது அவர்களுடைய கண்ணைப் பார்க்க இயலாமல் சிரமப்படலாம்

ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகள் சமூகத்தில் பிறருடன் பழகும்போது பின்வரும் பிரச்னைகளைச் சந்திக்கலாம்:

 • அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும்போது சிரிக்காமல் இருக்கலாம், ஒரு பெரியவர் தன்னருகே வரும்போது, தன்னைத் தூக்கிக்கொள்ளுமாறு எதிர்பார்த்துக் கையை விரித்துக்காட்டாமல் இருக்கலாம்
 • சமூக திறன்களைக் கற்றுக்கொள்ளுதல் அல்லது பிறருடன் உரையாடுதலில் இவர்களுக்குப் பிரச்னைகள் இருக்கலாம்
 • பிறரை நண்பர்களாக்கிக்கொள்ளாமலிருக்கலாம், யாருடனும் சேராமல் தனியே விளையாடலாம்
 • கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசாமல் இருக்கலாம்
 • தன்னை சுற்றியுள்ள பிறருடைய உணர்வுகள் அல்லது உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள இயலாமல் இருக்கலாம், அதனால் அவர்கள் முறைப்படி பதில் சொல்லாமல் இருக்கலாம்
 • வழக்கமான ஒரு விஷயம் மாறும்போது அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள சிரமப்படலாம்
 • பொருள்களின் வாசனை, சுவை, தோற்றம், உணர்வு அல்லது ஒலிக்கு ஏற்ப எதிர்வினை செய்யாமல், வேறுவிதமாக நடந்துகொள்ளலாம்

Q

வகையீட்டுக் கண்டறிதல் என்றால் என்ன?

A

வகையீட்டுக் கண்டறிதல் என்பது, பின்வருவனபோன்ற குறைபாடுகள் ஒருவருக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்த நடத்தப்படுகிறது:

 • குழந்தைப் பருவத்தில் தொடங்கிய ஸ்கிஜோஃபிரேனியா
 • பிறவியிலேயே காதுகேளாமல் இருத்தல், காதுகேட்பதில் தீவிர பிரச்னை
 • தீவிர மனநிலை பாதிப்பு: ஆட்டிசத்துக்கும் மனநிலை பாதிப்புக்கும் முதன்மையான வித்தியாசம், மனநிலை பாதிப்பு உள்ள குழந்தைகள் பொதுவாகத் தங்களுடைய மன வயதுக்கேற்ப பெரியவர்களுடன் தகவல் தொடர்பில் ஈடுபடுவார்கள், மற்றும், பிறருடன் தகவல் தொடர்பு கொள்வதற்குத் தங்களுடைய மொழியைப் பயன்படுத்துவார்கள்.
 • மன, சமூகரீதியில் ஒரு குழந்தைக்கு இழப்பு ஏற்பட்டிருந்தால், அந்தக் குழந்தை உணர்ச்சியற்று, எதிலும் ஆர்வமில்லாமல் தனிமையில் காணப்படலாம்.

ஆட்டிசம் குறைபாடு கொண்ட ஒரு குழந்தைக்கு சில தனித்துவமான பலங்கள் மற்றும் திறன்கள் இருக்கும். பெற்றோரும் ஆசிரியர்களும் இந்த நேர்விதமான அம்சங்களைக் கண்டறிந்து அவற்றில் கவனம் செலுத்தவேண்டும், அவற்றைப் பயன்படுத்தி அந்தக் குழந்தை நன்கு வெற்றி அடைய ஊக்கம் தரவேண்டும்.

Q

பலங்கள் மற்றும் திறன்கள்

A

பல நேரங்களில், நாம் ஒருவருடைய பலவீனங்களைதான் கவனிக்கிறோம், அவருடைய பலத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆட்டிசம் பிரச்னை கொண்ட ஒரு குழந்தைக்குச் சில திறன்களும் நாட்டங்களும் இருக்கின்றன, அதைப் பெற்றோர், தெரபிஸ்ட்கள், ஆசிரியர்கள் அடையாளம் காணவேண்டும், தன்னுடைய திறன்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு குழந்தையை ஊக்கப்படுத்தவேண்டும்.

குழந்தைக்குப் பின்வரும் திறன்கள் இருக்கலாம்:

 • நல்ல பார்வை மற்றும் வெளி சார்ந்த ஞாபகத்திறன்
 • விஷயங்களை முறைப்படியும் ஒழுங்காகவும் செய்தல்
 • நுட்பமான கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல்
 • தங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் சிறந்து விளங்குதல்
 • விவரங்களில் கவனம் செலுத்துதல்
 • மொழிகளில் ஆர்வம் (நன்கு பேசக்கூடிய குழந்தைகளில்)

Q

ஆட்டிசம் எதனால் ஏற்படுகிறது?

A

ஆட்டிசத்துக்கான உறுதியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது, பல மரபு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இது நிகழலாம் என தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் காரணிகளுக்கு உதாரணங்களாக, மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய பல்வேறு நிலைகளைக் குறிப்பிடலாம். இவை பிறப்புக்கு முன்னால் நிகழலாம், பிறப்பின்போது நிகழலாம், அல்லது பிறந்தபிறகு நிகழலாம். குழந்தைப் பருவத்தில் மைய நரம்பு மண்டலத்துக்கு ஏற்படக்கூடிய எந்த ஒரு சேதமும் ஆட்டிசத்தை ஏற்படுத்தலாம் என்றும் கண்டறியப்படுள்ளது.

Q

ஆட்டிசத்துக்குச் சிகிச்சை பெறுதல்

A

ஆட்டிசம் வாழ்நாள்முழுவதும் தொடரக்கூடிய ஒரு நிலை, அதற்குச் சிகிச்சை இல்லை. ஆனால், ஒரு குழந்தைக்குச் சரியான சிகிச்சை அல்லது தலையீட்டை வழங்குவதன்மூலம், அது தன்னுடைய வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான திறன்களை கற்றுக்கொள்ளும். குழந்தைக்கு 18 மாதமாகும்போது, அல்லது, அதற்குமுன்பாகவே ஆட்டிசத்தைக் கண்டறியலாம் என்பதால், மிகச் சீக்கிரமாகவே பெற்றோர் அதன் வளர்ச்சிக்கு உதவலாம், சிறந்த பலன் பெறலாம்.

பெற்றோருக்கு முக்கியமான குறிப்பு: ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களுடைய குழந்தையின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து பரிசோதிக்குமாறு பெற்றோர் தங்களது குழந்தை மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் அந்தக் குழந்தை வளர்ச்சி மற்றும் மொழி சார்ந்த இலக்குகளை அவ்வப்போது சரியாக எட்டுகிறதா என்பதைப் பரிசோதிக்கலாம்.

Q

ஆட்டிசம் எப்படி கண்டறியப்படுகிறது?

A

ஆட்டிசத்தைக் கண்டறிவதற்கென்று ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பரிசோதனை ஏதும் இல்லை. ஆனால், இந்த நிலையை உறுதிப்படுத்துவதற்குப் பல மதிப்பீடுகள் உள்ளன. இந்த மதிப்பீடுகளில் சில:

 • உடல் மற்றும் நரம்பு மண்டல (நரம்பு சார்ந்த) பரிசோதனை
 • ஆட்டிசம் கண்டறிதல் நேர்முகத்தேர்வு – மேம்படுத்தப்பட்டது (ADI-R)
 • ஆட்டிசம் கண்டறிதல் அவதானிப்பு கால அட்டவணை (ADOS)
 • குழந்தை பருவ ஆட்டிசம் மதிப்பீட்டு அளவுகோல் (CARS)
 • கிலியம் ஆட்டிசம் மதிப்பீட்டு அளவுகோல்
 • பரவிய நிலை முன்னேற்றக் குறைபாடுகளை கண்டறியும் தேர்வு
 • குரோமோசோம் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கான மரபணுப் பரிசோதனை
 • தகவல் தொடர்பு, மொழி, பேச்சு, இயக்கத் திறன்கள், கல்விச் செயல்திறன் மற்றும் முன்னேற்றம், அறிவாற்றல் திறன்கள் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள்

Q

ஆட்டிசத்துக்கான பரிசோதனைகளின் வகைகள்

A

இந்தச் சிகிச்சையின் நோக்கம், ஆட்டிசம் பிரச்னை கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் சேர்ந்து படித்தல், அர்த்தமுள்ள உறவுகளை உண்டாக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்த உதவுதல், அவர்கள் பெரியவர்களானபிறகு யாரையும் சார்ந்திராமல் சுதந்திரமாக வாழ்வதற்கான சாத்தியங்களை அதிகரித்தல், இவற்றுக்கு உதவும் நடவடிக்கைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல்.

இந்தச் சிகிச்சைத் தலையீடுகள் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளன: சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய மற்றும் சமூக ரீதியில் நன்றாகக் கருதப்படுகிற (ஒருவர் சமூகத்தில் ஒப்புக்கொள்ளப்படுதல் மற்றும் நட்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நேர்வித நடவடிக்கைகள்) நடவடிக்கைகளை அதிகரித்தல், பொருந்தாத நடத்தைகளை குறைத்தல் மற்றும் பேச்சு மற்றும் பேச்சு அல்லாத நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.

ஆட்டிசம் பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குச் சரியான கட்டமைப்பையும் ஒரே மாதிரியான தன்மையையும் கொண்ட உளவியல் தலையீடுகள் கிடைத்தால், அவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

பிரயோகப் பயன்பாட்டு ஆய்வு (ABA): ஒரு குழந்தை அறிவாற்றல், சமூகம், பழக்கவழக்கங்கள், சிறந்த இயக்கவியல், விளையாட்டு மற்றும் சுய உதவித் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு உதவுவதற்காக, அதனுடன் நிபுணர் தனியாகப் பேசுவார். குழந்தைக்கு எளிய செயல்களில் தொடங்கிச் சிக்கலான செயல்கள்வரை ஒரு கட்டமைப்பில் அமைந்த செயல்களை எப்படிச் செய்வது என்பது சொல்லித்தரப்படும். ஒவ்வொரு செயலையும் சிறு செயல்களாகப் பிரித்து, ஒவ்வொரு துணைச் செயலையும் எப்படிச் செய்வது, அவற்றை எப்படிப் பூர்த்தி செய்வது என்பதைக் கற்றுக்கொண்டு, அதன்படி செயல்படுவதற்குக் குழந்தைக்குக் கற்றுத்தரப்படுகிறது. குழந்தை விரும்பப்படும் நடத்தைகளையும் திறன்களையும் கற்றுக்கொண்டு பின்பற்றுவதற்கு உதவுவதற்காக இந்த முறையில் பரிசுகள் அல்லது பாராட்டு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. குழந்தையின் முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு அளக்கப்படுகிறது. ABAவின் வகைகள்:

 • தனித்து இயங்கும் பரிசோதனைப் பயிற்சி (DTT): இந்தக் கல்வி முறையில், ஒரு குழந்தை எந்தவிதமாக நடந்துகொள்ளவேண்டும் அல்லது எந்தவிதமாகப் பதில் சொல்லவேண்டும் என்பதன் ஒவ்வொரு படிநிலையும் வெவ்வேறு பரிசோதனையின்மூலம் விளக்கப்படுகிறது. பாடங்கள் மிகச் சிறிய அளவில் பிரிக்கப்பட்டுச் சொல்லித்தரப்படுகின்றன, குழந்தை சரியான விடையைச் சொல்லும்போது மற்றும் சரியாக நடந்துகொள்ளும்போது அதற்கு நேர்விதமான பாராட்டு வழங்கப்படுகிறது. ஒருவேளை அது தவறான பதில்களை அளித்தால், நிபுணர்கள் அந்தத் தவறுகளைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

 • தொடக்க காலத் தீவிர நடத்தைக் குறுக்கீடு (EIBI): ஐந்து வயதைவிடக் குறைவான, மூன்று வயதுக் குழந்தைகளுக்குகூடப் பயன்படுத்தப்படும் ABAவின் ஒரு வகை.

 • முக்கிய எதிர்வினைப் பயிற்சி (PRT): ஒரு குழந்தை கற்றுக்கொள்ளுதல், தான்  நடந்துகொள்ளும் விதத்தைத் தானே கவனித்தல், பிறருடன் தகவல் தொடர்பைத் தொடங்குதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இவை நேர்விதமாக மாற மாற, மற்ற விஷயங்களிலும் பரவலான தாக்கங்களைக் காணலாம்.

 • சொல் நடத்தைத் தலையீடு (VBI): இந்தப் பயிற்சி, மொழியின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பிரிவையும் துணைப்பிரிவுகளாகப் பிரித்துச் சொல்லித்தருவதில் கவனம் செலுத்துகிறது.

 • ஆட்டிஸ்டிக் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல் தொடர்புக் குறைபாட்டைக் கொண்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை மற்றும் கல்வி அளித்தல் முறை (TEACCH): இந்த முறை, குழந்தைக்கு ஏற்கனவே தெரிந்த திறன்களைப் பயன்படுத்தி அவர்கள் சுதந்தரமாக இயங்க உதவுகிறது. குழந்தைகள் தங்களுடைய தினசரி வேலைகளை முடிந்தவரை சுதந்தரமாகச் செய்வதற்கு இந்த உத்திகள் சிறப்பாகப் பயன்படும்: அவர்களுடைய சூழலை ஒழங்குபடுத்துதல், தினசரி நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், தெளிவான எதிர்பார்ப்புகளை அமைத்தல், தகவல் தொடர்புக்குக் காட்சிப்பூர்வமான பொருள்களைப் பயன்படுத்துதல்.

Q

ஆட்டிசத்துக்கான சிகிச்சை வகைகள்

A

குறிப்பு: இந்தச் சிகிச்சைகள் அல்லது தலையீடுகள் அனைத்தும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை சந்திக்கக்கூடிய வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் சிலவற்றைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆட்டிச பாதிப்பு கொண்ட ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறுவிதமான சவால்களைச் சந்திக்கிறது என்பதால், பெற்றோரும் நிபுணர்களும் சேர்ந்து விவாதித்து, அந்தக் குழந்தைக்குச் சிறந்த, பலன்தரக்கூடிய சிகிச்சை எது என்று தீர்மானிக்கிறார்கள், அதனைத் தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள். இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஒரு குழந்தைக்கு நல்ல பலனைத் தரும் ஒரு சிகிச்சை இன்னொரு குழந்தைக்குப் பலன் தராமல் இருக்கலாம், இதற்குக் காரணம் ஆட்டிசம் வெவ்வேறு குழந்தைகளை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது.

ஆட்டிசம் பிரச்னை கொண்ட ஒரு குழந்தைக்கான முழுமையான சிகிச்சைத் திட்டத்தில் இடம்பெறும் சில சிகிச்சைகள்:

 • வளர்ச்சி சார்ந்த, தனித்துவமான வித்தியாசங்கள், உறவுகள் அடிப்படையிலான அணுகுமுறை (DIR, இதனை "ஃப்ளோர்டைம்" என்றும் அழைப்பார்கள்): இது உணர்வு மற்றும் உறவு வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது (உணர்வுகள், தன்னைக் கவனித்துக்கொள்ளுவோருடன் உறவுகள்). அத்துடன், தான் பார்ப்பவை, கேட்பவை, முகர்பவற்றை ஒரு குழந்தை எப்படிப் புரிந்துகொள்கிறது, எப்படிக் கையாள்கிறது என்பதிலும் இந்தச் சிகிச்சை கவனம் செலுத்துகிறது.   
 • செயல் சார்ந்த சிகிச்சை: ஒரு குழந்தை தன்னால் இயன்றவரை சுதந்தரமாக இயங்குவதற்குத் தேவையான திறன்களைக் கற்றுத்தரும் சிகிச்சை இது. உதாரணமாக, தானே உடுத்திக்கொள்ளுதல், சாப்பிடுதல், குளித்தல் மற்றும் பிறருடன் பேசுதல் போன்ற திறன்கள் இதில் சொல்லித்தரப்படும்.
 • புலன் ஒருங்கிணைப்பு சிகிச்சை: காட்சிகள், ஒலிகள் மற்றும் மணங்கள் போன்ற புலன் சார்ந்த விவரங்களைக் குழந்தைகள் முறையாகக் கையாள்வதற்கு இந்தச் சிகிச்சை உதவுகிறது. சில குழந்தைகள் ஒரு சில ஒலிகளைக் கேட்டு பயப்படும், அல்லது, பிறர் தன்னைத் தொடுவதற்கு அனுமதிக்காது, அதுபோன்ற குழந்தைகளுக்குப் புலன் ஒருங்கிணைப்புச் சிகிச்சை உதவலாம்.
 • பேச்சுச் சிகிச்சை: ஒரு குழந்தை தன்னுடைய தகவல் தொடர்பை மேம்படுத்திக்கொள்வதற்குப் பேச்சுச் சிகிச்சைகள் உதவுகின்றன. இந்தச் சிகிச்சைகளில், சைகை காட்டுதல், பட அட்டைகளைப் பயன்படுத்துதல்போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தி ஒரு குழந்தை தன்னுடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் பிறருக்குத் தெரிவிப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 • இசைச் சிகிச்சை: இந்த வகைச் சிகிச்சையில் பாடுதல், இசையமைத்தல் மற்றும் மேடையில் இசைத்தல் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
 • படங்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு (PECS): தகவல் தொடர்பைக் கற்றுத்தருவதற்குப் படச் சின்னங்களோ அட்டைகளோ பயன்படுத்தப்படுகின்றன.
 • ஆரம்பத் தலையீடுகள்: ஆட்டிசம்பற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளில், எவ்வளவு சீக்கிரத்தில் குழந்தைக்குச் சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவு பலன் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது இதற்கு ஆரம்பத் தலையீடு பயன்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டவுடனேயே இந்தத் திட்டத்தைத் தொடங்கிவிடலாம். ஆறு மாதக் குழந்தைக்குக்கூட இதனைப் பயன்படுத்தலாம். இந்தத் தலையீட்டுச் சிகிச்சை, ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறது: சமூகத் திறன்கள், மொழி மற்றும் தகவல் தொடர்பு, போலச்செய்தல், விளையாடும் திறன்கள், தினசரி வாழ்வியல் மற்றும் இயக்கவியல் திறன்கள். இந்தத் திட்டத்தில் பெற்றோர் தொடர்ந்து பங்குபெறுகிறார்கள், தீர்மானம் எடுத்தல், சிகிச்சையை வழங்குதல் என அனைத்திலும் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஆகவே ஒரு குழந்தைக்கு ஆட்டிசமோ வேறு வளர்ச்சி சார்ந்த பிரச்னையோ இருக்கலாம் என்று அதன் பெற்றோர் நினைத்தால், அவர்கள் எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவரிடம் பேசுவது முக்கியம்.    
 • பெற்றோருக்கான பயிற்சி: தங்களுடைய குழந்தைக்கு ஆட்டிசம் வந்திருக்கிறது என்று தெரிந்தவுடன், பல பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகிறார்கள், இவர்களுக்கு ஆதரவும் ஆலோசனையும் தேவை. பழக்க வழக்கங்களை மாற்றும் கொள்கைகளையும் திறன்களையும் பற்றிப் பெற்றோருக்குப் பயிற்சி அளித்தால், அவர்கள் தங்களுடைய குழந்தைகளின் சிகிச்சையில் உதவுவார்கள், அவர்களுடன் இணைந்து பணிபுரிவார்கள். அதைவிட முக்கியமாக, குழந்தைக்குத் தாங்கள் கண்டிப்பாக உதவுவோம் என்று பெற்றோர் காட்டும் உறுதி, அந்தக் குழந்தையின் கல்வி, அறிவாற்றல் திறன்கள் மற்றும் சமூக நடத்தைகளைக் கணிசமாக முன்னேற்றக்கூடும்.

Q

ஆட்டிசம் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்

A

தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் வந்திருப்பது தெரிந்தால் அந்தப் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மிகவும் மன அழுத்தத்தை, வருத்தத்தைச் சந்திக்கிறார்கள். இதுபோன்ற குழந்தைகளுடைய பெற்றோர் பெரும்பாலான நேரத்தைக் குழந்தையுடன்தான் செலவிடுகிறார்கள், குழந்தையை ஆலோசகரிடம் சிகிச்சைக்கு அழைத்துச்செல்கிறார்கள், தலையீட்டு நிகழ்ச்சிகள், பள்ளி போன்றவற்றுக்கு அழைத்துச்செல்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர், குறிப்பாகத் தாய்மார்கள் வேலைக்குச் செல்லாமல் முழு நேரமும் தங்கள் குழந்தையையே கவனித்துக்கொள்கிறவர்களாக மாறிவிடுகிறார்கள். இதற்காக வீட்டிலும் பல மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது, உடன் பிறந்தோர் தங்களுடைய சகோதரன் அல்லது சகோதரிக்கு ஏற்பத் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள், குடும்ப உறுப்பினர்கள் கூடுதல் ஆதரவை வழங்குகிறார்கள், குழந்தையின் ஆர்வங்களைக் கருத்தில் கொண்டு செயல்களும் திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன, இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் மாறுகின்றன. ஆட்டிசம் பிரச்னை கொண்ட ஒரு குழந்தையை வளர்ப்பது பெரிய சவால்தான். அதேசமயம் இந்த குறைபாடுபற்றிச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட்டால், குழந்தைக்கு எது மிகச் சிறந்தது என்று புரிந்துகொண்டு பெற்றோரும் வழிகாட்டிகளும் அவர்களுக்கு உதவ இயலும்.

இந்தச் சூழ்நிலையில் பெற்றோர், குழந்தையைக் கவனித்துக்கொள்வோர் செய்யக்கூடியவை:    

 • தங்களால் இயன்றவரை ஆட்டிசத்தைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ளுதல்.
 • தினசரி நடவடிக்கைகள் அனைத்தையும் திட்டமிட்டு, ஒரு வழக்கமான ஒழங்கைக் கொண்டுவருதல்.
 • இந்தச் சூழ்நிலையை சமாளிப்பதற்கு அவர்களுக்கும் ஆலோசனை தேவைப்படலாம்.
 • விசேஷத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் பெற்றோருடைய உணர்வுகளை, அதேமாதிரி பிரச்னையைச் சந்திக்கும் மற்ற பெற்றோரால்தான் புரிந்துகொள்ள இயலும், அதுதான் இயற்கை. ஆகவே, ஆட்டிசம் பிரச்னை கொண்ட குழந்தைகளுடைய பெற்றோர், இதுபோன்ற  பெற்றோருக்கான ஆதரவுக் குழுக்களில் இணையலாம், பிற பெற்றோருடன் பேசலாம், உதவி பெறலாம்.
 • ஏதேனும் பிரச்னை என்றால் நிபுணரின் உதவியை நாடலாம்.
 • பழக்கங்களை மாற்றும் முறைகளைப்பற்றிக் கற்றுக்கொள்வதற்கான பயிற்சித் திட்டங்களில் பங்குபெறலாம், இதன்மூலம் தங்களுடைய குழந்தை தன் சிரமங்களைச் சமாளிப்பதற்கு அவர்கள் மிகவும் உதவலாம்.
 • இப்படிப்பட்ட பெற்றோர் தங்களுக்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும், தங்களுடைய உடல் நலம் மற்றும் மன நலத்தை கவனித்துக்கொள்ளவேண்டும்.

ஆட்டிசம் பிரச்னை கொண்ட ஒரு குழந்தையின் தாய் சொல்கிறார்: ”என்னுடைய மகனுக்கு ஆட்டிசம் இருக்கிறதுதான், ஆனால் அவன் ஒரு நல்ல குழந்தை, அவன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவனுடைய முன்னேற்றங்களைக் கண்டு பெருமைப்படவிரும்புகிறேன், அவனோடு சேர்ந்து சிரித்து மகிழந்தபடி ஒவ்வொரு விநாடியையும் அனுபவிக்க விரும்புகிறேன்.”

Q

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி

A

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் விசேஷத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்குச் சம வாய்ப்புகளையும், அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்தித் தருவது அவசியம். இதற்கான சட்ட நெறிமுறைகள் ஏற்கனவே இருக்கின்றன, மாற்றுத் திறனாளிகளான குழந்தைகளுக்கு அரசுத் திட்டங்களும் இருக்கின்றன, ஆனாலும், பல கல்வி நிறுவனங்கள் இத்தகைய குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ள விரும்புவதில்லை, இவர்களுக்காகத் தனித்துவமான கல்வித்திட்டம், மாற்றுக்கல்வி முறைகள் போன்ற கூடுதல் வசதிகளை வழங்க விரும்புவதில்லை. இது மிகவும் தவறு. இந்தக் குழந்தைகளையும் உள்ளடக்கிய கல்விமுறையை எல்லாக் கல்வி அமைப்புகளும் வழங்கவேண்டும்.

Q

ஆதாரங்கள்

A

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org