பணியிடம்

சக ஊழியரின் உயிர்காத்திடுங்கள்

மனத்துயரில் இருக்கும் ஒருவரைக் காப்பாற்றும் திறமை, HR பணியாளர்கள் அல்லது மனநல நிபுணர்களுக்குமட்டும்தான் உண்டா? உதவியைக் கோருகிற உங்கள் சக ஊழியருக்கு நீங்கள் எப்படி உதவலாம், ஆதரவளிக்கலாம்?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நாளுக்கு நாள் நமது தினசரி வாழ்க்கையில் அழுத்தம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆகவே, அலுவலகங்களில், பிற பணியிடங்களில் தற்கொலையெண்ணத்தைக் கண்டறிந்து தடுக்கவேண்டியது அவசியமாகிறது. பணியிடத்தில் தற்கொலையைத் தடுப்பதுபற்றி நாங்கள் வெளியிடவுள்ள நான்கு கட்டுரைகளில் இது மூன்றாவது. இதில் தற்கொலை எண்ணங்களுடன் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஆதரவு வழங்குவது எப்படி, அதன்மூலம் தற்கொலையைத் தடுப்பது எப்படி என்று விளக்குகிறார் ஶ்ரீரஞ்சிதா ஜெய்ர்கர்

ஒருவர் மனத்துயரில், மனச்சோர்வில் உள்ளபோது, அல்லது, தற்கொலையைப்பற்றி எண்ணுகிறபோது, அவருக்கு அருகிலுள்ளவர்கள்தான் இதனை உடனடியாக உணர இயலும். நம்முடைய பணியிடங்களில், நமது குழுத் தலைவர்கள் அல்லது HR மேலாளர்களைவிட, நமது சக ஊழியர்களுடன்தான் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம்.  ஓர் ஊழியர் தடுமாற்றத்தில் உள்ளார், வீட்டிலோ அலுவலகத்திலோ அவருக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றால், அவரருகே உள்ளவர்கள்தான் அதை முதலில் தெரிந்துகொள்வார்கள். இந்தச் சூழ்நிலைகளில், அவர்கள் நுண்ணுணர்வுடன் நடந்துகொண்டால், தங்களது சக ஊழியர்களுக்கு உதவலாம், தற்கொலையைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றலாம்.

பாதுகாவலர் என்பவர் யார்?

பாதுகாவலர் என்பவர், தற்கொலையைத் தடுக்க இயலும் என்று நம்புகிறவர், அதற்காகத் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளவர். உதாரணமாக, ஓர் ஆசிரியர், பெற்றோர், வார்டன், பக்கத்து வீட்டுக்காரர், முதலாளி, வாட்ச்மேன், பேருந்து நடத்துநர், கடைக்காரர் அல்லது ஒரு சமூகத் தலைவர் பாதுகாவலராகச் செயல்படலாம். பாதுகாவலராகச் செயல்படும் ஒருவர், தன்னருகே இருக்கிறவர்களைக் கூர்ந்து கவனிக்கவேண்டும், யாராவது மிகவும் மனத்துயரத்துடன் காணப்பட்டால், உடனே எச்சரிக்கைக் கொடியை உயர்த்தவேண்டும், அவர்களுக்கு ஆரம்பகட்ட உணர்வுநிலை ஆதரவை வழங்கவேண்டும், அதன்பிறகு, அவர்களை ஒரு மனநல நிபுணரிடம் அனுப்பவேண்டும். ஒருவர் தற்கொலையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறார் என்று ஒரு பாதுகாவலர் கருதினால், அவரிடம் "இந்த வாழ்க்கையை வாழ்வது அவசியம்தானா என்று எப்போதாவது நினைக்கிறீர்களா?" என்பதுபோன்ற ஒரு கேள்வியைக் கேட்கலாம். இதன்மூலம், அவர்கள் தங்களது தற்கொலை எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் ஏற்படும். சாதாரணமாக இருக்கும் ஒருவரிடம் இப்படிக் கேட்டால், அவருக்குள் தற்கொலை எண்ணங்கள் தூண்டப்பட்டுவிடுமோ என்று பலர் பயப்படுகிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. சொல்லப்போனால், இதுபோன்ற கேள்விகள்தான் ஒருவரை மனம் திறந்து பேசவைக்கும், அவர்கள் மனத்தில் தற்கொலை எண்ணங்கள் இருந்தால், அதைச் சொல்லவைக்கும். பொதுவாக, தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஒருவர், அந்த எண்ணங்களுக்காக வெட்கப்பட்டுக்கொண்டுதான் இருப்பார். தன்னைப்பற்றித் தீர்ப்புச் சொல்லாமல், தன்னைப் பலவீனமாக எண்ணாமல் ஒருவர் இதைப்பற்றி விசாரிக்கிறார் என்றால் அவர் நிம்மதியடைவார், தன் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவார்.

ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் காணுங்கள்

தற்கொலை என்பது, திடீரென்று நிகழ்ந்துவிடுவதில்லை. பொதுவாக ஒரு நிகழ்ச்சியோ, சிக்கலான சில நிகழ்ச்சிகள் அடங்கிய ஒரு வாழ்க்கைச்சூழலோதான் ஒருவரைத் தற்கொலைபற்றிச் சிந்திக்கவைக்கிறது. இவை பொதுவாக வாழ்க்கையையே மாற்றும் நிகழ்வுகளாக இருக்கின்றன. உதாரணமாக, அன்புக்குரிய ஒருவருடைய மரணம், ஓர் உறவு முறிதல், சொத்தை இழத்தல், பணத்தை இழத்தல், தனக்கு அவமானமாக அல்லது மதிப்புக்குறைவாக ஒருவர் எண்ணும் ஓர் அனுபவம் போன்றவை. இந்தியாவில் தற்கொலையைத் தூண்டும் மிகப் பொதுவான விஷயங்கள், மனச்சோர்வு, உறவுப் பிரச்னைகள் மற்றும் தீவிர இழப்புகள்.

தற்கொலையைப்பற்றி யோசிக்கும் ஒருவரிடம் இந்த நடவடிக்கைகள் காணப்படலாம்: அவர்கள் பிறருடன் பழகாமல் தனித்திருக்கலாம், வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்ளலாம், மற்றவர்கள் சாதாரணமாக நினைக்கும் விஷயங்களுக்கு அதீதமாக உணர்ச்சிவயப்படலாம்.

ஒருவர் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறார் என்று எச்சரிக்கை மணி விடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள்:

 • இறப்பு, தற்கொலைமூலம் உயிரை முடித்துக்கொள்ளுதலைப்பற்றிப் பேசுதல், வாழ விருப்பமில்லாததுபோல் பேசுதல், வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்பதுபோல் பேசுதல்
 • கொல்லுதல், இறத்தல் அல்லது தற்கொலைமூலம் வாழ்க்கையை முடித்துக்கொள்ளுதலைப்பற்றிய விவரங்களை அறிவதில் அதீத ஆர்வம் காட்டுதல்.
 • தான் பயனற்று வாழ்வதாகவும், குடும்பத்தினர், நண்பர்களுக்குச் சுமையாக இருப்பதாகவும் பேசுதல்
 • தற்கொலைமூலம் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கான முறைகளைப்பற்றி ஆராய்தல், வெவ்வேறு தற்கொலை முயற்சிகளின் நன்மை, தீமைகளை அலசுதல்
 • வழக்கத்துக்குமாறாகப் பல நாள் அடங்கியிருத்தல் அல்லது மனச்சோர்வுடன் காணப்படுதல்
 • அடிக்கடி மனோநிலை மாறுதல்
 • மது, போதைப்பொருள்கள் போன்றவற்றை அதிகம் சார்ந்திருத்தல்
 • வழக்கத்துக்கு மாறாக வேலையில் அசட்டையாக இருத்தல், தனிப்பட்ட சுத்தத்தைக் கவனிக்காமலிருத்தல், பொறுப்புகளை அலட்சியப்படுத்துதல்
 • இறப்பு தொடர்பான எதார்த்தமான அம்சங்களில் ஆர்வம் காட்டுதல்: ஓர் உயில் எழுதிவைத்தல், வாழ்க்கைக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களைப்பற்றிப் பேசுதல், தங்களுடைய இறுதிச்சடங்குக்குத் திட்டமிடுதல்

உங்களுடைய சக ஊழியர் யாராவது உணர்ச்சிமயமாக அல்லது மனத்துயருடன் இருக்கிறார் என்பதற்கான துப்புகள் உங்களுக்குக் கிடைத்தால், அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு மோசமான அனுபவம் நிகழ்ந்திருப்பதை நீங்கள் அறிந்திருந்தால் (உறவுப் பிரச்னைகள், திடீர் சோகம், துணைவர் அல்லது பெற்றோருடன் பிரச்னைகள், நிதி சார்ந்த பிரச்னைகள்), அவர்களுக்கு உதவ நீங்கள் முன்வரலாம்.

HR மற்றும் மேலாளர்கள் நினைவில் வைக்கவேண்டிய ஒரு விஷயம், தற்கொலைபற்றிய சிந்தனையில் இருக்கக்கூடிய ஒருவரை அடையாளம் காண்பதற்கு வேறு சில துப்புகளும் உள்ளன:

 • ஒருவர் திடீரென்று அடிக்கடி வேலைக்கு வராமலிருத்தல், அல்லது, வேலை பாணிகளில் மாற்றங்கள். உதாரணமாக, ஒருவர் பொதுவாக சரியான நேரத்தில் வேலைக்கு வந்துவிடுவார், உரிய நேரத்துக்கு முன்பாகவே தன்னுடைய வேலைகளை முடித்துவிடுவார் என்று வைத்துக்கொள்வோம், திடீரென்று அவரால் நேரத்துக்கு அலுவலகத்துக்கு வர இயலவில்லை, வேலைகளை நேரத்துக்குச் செய்துமுடிக்க இயலவில்லை என்றால், ஏதோ பிரச்னை இருக்கிறது என்று பொருள்.
 • நிறுவனத்தில் ஆட்குறைப்பு நிகழ்கிறபோது, அல்லது, பொறுப்புகள் மாறும்போது: ஒருவர் வேலையை இழக்கக்கூடிய சூழ்நிலை வருதல், அல்லது, அவரது பொறுப்புகள் குறிப்பிடத்தக்க அளவு மாறுதல்
 • வேறு இடத்திலிருந்து மாறிவந்து வேலை செய்கிறவர்கள், புதிய பொறுப்புகளுக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்வதற்காக, வாழ்க்கைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அனுபவித்துள்ளவர்கள்

இங்கே அவசியம் நினைவில் வைக்கவேண்டிய ஒருவிஷயம், இந்த ஆபத்துகளைக் கொண்ட எல்லாருமே தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள் என்று அர்த்தமல்ல. இவர்கள் தங்களுடைய புதிய சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கூடுதல் உதவி தேவைப்படலாம் என்பதைமட்டுமே இவை குறிப்பிடுகின்றன.

ஆரம்பத் தயக்கத்தை உடைத்தல்

யாராவது நம்மிடம் உதவி கேட்டால், அல்லது, யாராவது பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், நாம் அவர்களுக்கு உதவி செய்யத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், சில கவலைகள் அல்லது தடைகள் நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன. நாம் ஏதாவது விசாரித்தால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று தயங்குகிறோம், நாம் உதவிசெய்ய முன்வந்தால் அவர் என்ன எண்ணுவாரோ என்று யோசிக்கிறோம், இப்போது எதார்த்தமாக அவர்களுக்கு உதவி செய்யப்போய், அவர்களுடைய பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பு நம் தலையில் விழுந்துவிடுமோ என்று தயங்குகிறோம்.

பாதுகாவலர்கள் என்றமுறையில், ஒரு சக ஊழியர் அல்லது நண்பரை அணுகுமுன், நம்முடைய சொந்தத் தடைகளைப் புரிந்துகொள்ளவேண்டும், அமைப்பில் இருக்கும் தடைகளையும் அறிந்துகொள்ளவேண்டும். நமது சொந்தத் தடைகள் என்பவை, நமது பயங்கள், கவலைகள்:

 • நான் உதவிசெய்யப்போய், அவருக்குக் கோபம் வந்துவிட்டால்?
 • அவர் தன்னுடைய பிரச்னையைச் சொன்னபிறகு, அவருக்கு என்ன ஆலோசனை சொல்வது என்று எனக்குத் தெரியாவிட்டால்?
 • அவர்களுடைய பிரச்னைகள் என்னையே பாதித்து, நான் செய்வதறியாது நின்றுவிட்டால்?
 • அவர்கள் சொல்லும் விஷயங்களை நான் ரகசியமாக வைத்திருக்கவேண்டும், அதேசமயம் அவருக்கு உதவியும் செய்யவேண்டும், இது எப்படிச் சாத்தியம்?
 • இவருக்கு மனத்துயரம் இருப்பதையும், இவர் தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ள எண்ணுவதையும் நிறுவனத்தினர் அறிந்தபிறகு, அவர்கள் அவரை வேறுவிதமாகப் பார்க்கத்தொடங்கினால் என்ன ஆகும்? இப்படிப்பட்ட பிரச்னைகளைக் கொண்டோருக்கு நிறுவனம் தருகிற ஆதரவு அமைப்புகள் என்ன?
 • ஒருவேளை, நிறுவனம் இதனை HR பிரச்னையாகக் கருதினால்? இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களில் சக ஊழியர்கள் தலையிடக்கூடாது என்று சொன்னால்?

இவற்றையெல்லாம் சிந்திக்காமல் ஒருவர் உதவிசெய்ய முன்வந்தால், பின்னர் திகைத்துநிற்க வேண்டியிருக்கும், என்னசெய்வது என்று புரியாமல் யோசிக்கவேண்டியிருக்கும்.

அதுபோன்ற சூழ்நிலைகளில், உங்களிடம் என்னென்ன வளங்கள் உள்ளன என்பதை மதிப்பிடுவது நல்லது: நீங்கள் இதுபற்றிப் பேசியபிறகு, எந்தவிதத்தில் உங்களால் அவர்களுக்கு உதவ இயலும்? நீங்கள் அவர்களை யாரிடம் அனுப்ப இயலும்? அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, தேவைப்பட்டால் சிகிச்சையும் அளிக்கக்கூடிய நிபுணர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?

பாதுகாவலர்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை

பிரச்னையைச் சரிசெய்தல், தீர்வைக் கண்டறிதல் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தவேண்டாம். சிலசமயங்களில், அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களுடைய மனத்துயரத்தை உறுதிசெய்வதே போதுமானதாக இருக்கும்.

 • மற்றவருடைய பிரச்னையை மிகவும் சிறியதாக்கிப் பேசாதீர்கள். நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான சகிப்புத்தன்மை உண்டு. ஏதாவது தவறாகிவிட்டால், அதை நாம் சமாளிக்கும்விதமும் ஒருவருக்கொருவர் மாறுபடும்.
 • 'நீங்க நிச்சயமா சமாளிச்சுடுவீங்க', 'தைரியமா இருங்க', 'தற்கொலை தீர்வாகாது', 'எல்லாருக்கும்தான் பிரச்னைங்க இருக்கு' என்பதுபோன்ற வெற்றுரைகளைப் பேசவேண்டாம்.
 • அவர்களை விமர்சிப்பதுபோல், அவர்கள்மீது தீர்ப்புச் சொல்வதுபோல் எதையும் பேசவேண்டாம்: 'தற்கொலை செய்வது தவறு' அல்லது 'கோழைத்தனமா நடந்துக்காதீங்க'.
 • அவர்களுக்கு எந்த வியூகங்களையும் சிபாரிசு செய்யாதீர்கள்: 'நீங்க இதை முயற்சிசெஞ்சுபார்த்தீங்களா...?'
 • அவர்கள் தங்களுடைய சிந்தனைகளை எண்ணிக் குற்றவுணர்ச்சியோ வெட்கவுணர்ச்சியோ கொள்வதுபோல் எதையும் சொல்லாதீர்கள். உதாரணமாக, 'நீ இப்படிச் செஞ்சா உன் அப்பா, அம்மா, குடும்பத்தினர் எவ்ளோ கஷ்டப்படுவாங்கன்னு யோசிச்சுப்பாரு...'
 • அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள், அவர்கள்மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். விமர்சனமாகக் கருதப்படக்கூடிய விஷயங்களைச் சொல்லவேண்டாம்: 'இதைவிடப் பெரிய பிரச்னைகளைச் சமாளிச்சு வாழ்ந்தவங்க இருக்காங்க', அல்லது, 'நீ அநாவசியமா ரொம்ப உணர்ச்சிவயப்படறேன்னு நினைக்கறேன்...'
 • அவர்களாகக் குறிப்பிட்டுக் கேட்டாலன்றி, அவர்களுக்கு எந்த அறிவுரையோ ஆலோசனையோ சொல்லவேண்டாம். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும், அதன்பிறகு, தேவைப்பட்டால் ஆலோசனைகளைச் சொல்லவேண்டும், அது போதும்.
 • இதற்குமுன் அவர்கள் இதுபோன்ற பிரச்னைகளைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள், அவர்கள்மீதே அவர்களை நம்பிக்கைவைக்கச்சொல்லுங்கள்.
 • அவருடைய மனத்துயரை ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ விரும்புவதற்கான காரணங்களை விசாரியுங்கள். இதற்காக, அவர் ஒரு பட்டியலைத் தயாரிக்கலாம், எப்போதாவது மனம் தளர்ந்திருக்கும்போது, அந்தப் பட்டியலை எடுத்துப்பார்க்கலாம், இந்தக் காரணங்களால் தான் வாழவேண்டும் என்று நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
 • அவர்களுடைய பலங்களில் கவனம் செலுத்துங்கள், அவர்களுக்குள், அவர்களைச்சுற்றி இருக்கும் வளங்களை அடையாளம் காணுங்கள்.
 • அவருடைய நேர்விதமான சமாளிக்கும் திறன்களை அடையாளம் காணுங்கள். இதற்குமுன் அவர்கள் பிரச்னைகளை எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே நினைவுபடுத்துங்கள்.
 • நிபந்தனையற்ற ஆதரவை வழங்குங்கள்
 • அவர்களுக்காக நேரம் செலவிட்டு உதவ முன்வாருங்கள். எப்போதாவது மனத்துயரம் மிகவும் அதிகமாகிவிட்டால், அவர்கள் எந்த நேரத்திலும் உங்களை அழைக்கலாம் என்று சொல்லுங்கள்.

ஒருவர் உணர்வுக் கொந்தளிப்பைச் சந்திக்கிறார், அந்தக் கணத்தில் அவரால் அதைச் சமாளிக்க இயலவில்லை என்றால், அவருக்குள் தற்கொலை எண்ணங்கள் எழுகின்றன. ஒருவருடைய துயரத்தைக் குறைத்து, சமாளிக்கக்கூடிய அளவுக்குக் கொண்டுவந்துவிட்டால், அவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிற சாத்தியம் குறையும். அவர்களுடைய துயரத்தைக் குறைக்கும் வழிகள்: அவர்கள் சொல்வதைக் கேட்பது, உதவிசெய்ய முன்வருவது, ஓர் ஆதரவு வலைப்பின்னலை உருவாக்குவது.

பாதுகாவலர்கள் திகைத்துநிற்கும்போது

சில நேரங்களில், ஒருவருடைய உயிரைக் காக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரும் பாதுகாவலர்கள் அதை எண்ணித் திகைத்துநிற்கக்கூடும். அதுபோன்ற நேரங்களில், அவர்கள் மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டிய சில விஷயங்கள்:

இதை நீங்கள்மட்டும் தனியாகச் செய்யவேண்டியதில்லை. சில நேரங்களில், ஒருவரிடம் சில நிமிடங்கள் பேசினாலே போதும், அது அவர்களிடம் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கக்கூடும், அவர்கள் தங்களுடைய தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யக்கூடும்.

உங்களிடம் தன்னுடைய நெருக்கடியைச் சொல்கிற ஒருவருக்கு, உங்களால் அதைத் தீர்த்துவைக்க இயலாது என்பதும் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அவர்கள் உங்களை அணுகக் காரணம், அவர்கள் தனிமையாக உணர்கிறார்கள், தங்களுக்கு யாரும் உதவவில்லை என எண்ணுகிறார்கள், அவர்களுக்கு உணர்வுநிலை ஆதரவு தேவைப்படுகிறது. நீங்கள் அவர்களுடைய எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்கவேண்டியதில்லை; இப்போதைய நெருக்கடியை அவர்கள் சமாளிக்க உதவினால் போதும்.

பணியிடத்தின் பொறுப்பு

ஒவ்வொரு நிறுவனமும், தன்னிடம் பணிபுரிகிறவர்களில் பாதுகாவலர்களாகச் செயல்படுகிறவர்கள் அணுகிப்பேசுவதற்கு ஒருவரை நியமிக்கவேண்டும், இவர் ஒரு HR பணியாளராக இருக்கலாம், அல்லது, ஒரு மனநல நிபுணராக இருக்கலாம், பிரச்னை வரும்போது, பாதுகாவலர்கள் இவர்களை அணுகிப் பேசவேண்டும், தேவையான ஆதரவைப் பெறவேண்டும், அதற்கான ஓர் அமைப்பை அந்நிறுவனம் உண்டாக்கவேண்டும்.

இந்த அமைப்பு பாதுகாவலர்களுக்கு நம்பிக்கை தருகிறது. பிரச்னையில் உள்ள ஒருவரிடம் பேசியபிறகு, என்ன செய்யலாம் என்று அவர்களுக்குத் தெளிவு ஏற்படுகிறது. இல்லாவிட்டால், இதுபோன்ற விஷயங்கள் அலுவலகம்முழுவதும் பரவி, கிசுகிசுவாக மாறிவிடும். அதனைத் தடுக்க, இப்படிப்பட்ட ஓர் அமைப்பு தேவை. யார்வேண்டுமானாலும் பாதுகாவலராகலாம், சிறிது பயிற்சி தேவை, அவ்வளவுதான். ஊழியர் நலனைக் கருத்தில்கொண்டு, ஒரு நிறுவனம் பல பாதுகாவலர்களை உருவாக்கவேண்டும், அவர்கள் பல்வேறு இடங்களில் பணிபுரிகிறவர்களாக இருக்கவேண்டும், அப்போதுதான் மனத்துயரை அனுபவிக்கும் ஊழியர்கள் சட்டென்று அருகிலுள்ள ஒரு பாதுகாவலரை அணுகிப் பேச இயலும்.

நிறுவனத்தில் பாதுகாவலர்களை உருவாக்குதல்

சென்னையில் உள்ள SNEHA, பெங்களூரில் உள்ள NIMHANS நல மையம் போன்ற அமைப்புகள் பாதுகாவலர்களுக்குப் பயிற்சிகளை வழங்குகின்றன. இந்தப் பயிற்சி பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துகிறது: தற்கொலை அபாயத்தை அடையாளம் காணுதல், ஆபத்து நிலையை மதிப்பிடுதல், வளங்களை, தற்கொலைக்கு எதிரான காரணிகள் அல்லது பாதுகாக்கும் காரணிகளை அடையாளம் காணுதல், உரிய நிபுணர்களுக்குத் தெரிவித்தல், மற்றும் உணர்வுக் கொந்தளிப்பைக் குறைப்பதற்கான உத்திகள்.

இந்தத் தொடர் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனால் தொகுக்கப்பட்டது. இதற்கான கருத்துகளை வழங்கியவர்கள்: டாக்டர் குருராஜ் கோபாலகிருஷ்ணா, தொற்றுநோயியல் பிரிவுத் தலைவர், NIMHANS, டாக்டர் பிரபா சந்திரா, உளவியல் பேராசிரியர், NIMHANS, டாக்டர் சீமா மெஹ்ரோத்ரா, மருத்துவ உளவியல் கூடுதல் பேராசிரியர், NIMHANS, டாக்டர் பூர்ணிமா போலா, உதவிப் பேராசிரியர், மருத்துவ உளவியல் துறை, NIMHANS, டாக்டர் செந்தில் குமார் ரெட்டி, உளவியல் துணைப் பேராசிரியர், NIMHANS.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org