fallback 
கவனித்துக்கொள்ளுதல்

வயதான நேரத்தில், உடன்பிறந்தோரைக் கவனித்துக்கொள்வது சவால்தான்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஆட்டிஸம் போன்ற ஒரு வளர்ச்சிக் குறைபாடு கொண்ட ஒரு குழந்தையை வளர்த்தல், அல்லது, ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற மனநலப் பிரச்னை கொண்ட ஒரு வளரிளம்பருவத்தினரைக் கவனித்துக்கொள்ளுதல் பெற்றோருக்கு மிகவும் சிரமமாக இருக்கக்கூடும், காரணம், இந்த இரு சூழல்களிலும் அவர்கள் வாழ்நாள்முழுக்கக் கவனித்துக்கொள்ளுதலை வழங்கவேண்டியிருக்கலாம்.

மனநலப் பிரச்னைக்கும் வளர்ச்சிக் குறைபாட்டுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ஸ்கிஜோஃப்ரெனியா அல்லது இருதுருவக் குறைபாடு போன்ற தீவிர மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர், பொருத்தமான சிகிச்சையைப் பெற்றால் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழக்கூடும். ஆனால், ஆட்டிஸம் அல்லது புத்திசாலித்தனக் குறைபாடு போன்ற நடுத்தர மற்றும் தீவிர வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்டவர்களுடைய மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது, இதனால் அவர்களுடைய தகவல்தொடர்பு மற்றும் சமூக ஊடாடல் பாதிக்கப்படுகிறது. இவற்றைக் குணப்படுத்துவதும் சாத்தியமில்லை. 

வளர்ச்சிக் குறைபாடு கொண்ட குழந்தைகளை வளர்ப்பதும், மனநலப் பிரச்னை கொண்ட ஒரு வளரிளம்பருவத்தினரை வளர்ப்பதும் வெவ்வேறு. (பெரும்பாலான மனநலப் பிரச்னைகள் வளரிளம்பருவத்தில்தான் வெளிப்படுகின்றன). வளர்ச்சிக் குறைபாடுள்ள ஒரு குழந்தையைக் கவனித்துக்கொள்கிறவர்கள், அதற்குத் தனிப்பட்ட சுத்தம், தன்னைக் கவனித்துக்கொள்ளும் அடிப்படைத் திறன்களைச் சொல்லித்தருகிறார்கள்: பல் தேய்த்தல், குளித்தல், முறையாக உடுத்துதல் போன்றவை. ஸ்கிஜோஃப்ரெனியா அல்லது இருதுருவக் குறைபாடு போன்ற ஒரு தீவிர மன நலப் பிரச்னை கொண்ட ஒரு குழந்தையைக் கவனித்துக்கொள்கிறவர்கள், அது தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களைச் சமாளிக்கச் சொல்லித்தருகிறார்கள், பிரச்னையோடு தொடர்புடைய அவர்களுடைய நடவடிக்கைகளைச் சமாளிக்கிறார்கள். தீவிர மனநலப் பிரச்னை கொண்ட பெரும்பாலானோர் முழுமையான, பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள்; அவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்களுடைய ஆதரவு தேவை.

அதேசமயம், இந்த இரு சூழ்நிலைகளிலும் உள்ள பிள்ளைகள் வளர்ந்தபிறகு பெற்றோர் சந்திக்கும் பிரச்னைகள் சில, இங்கே:

1. தனக்குப்பிறகு தன் குழந்தையை யார் கவனித்துக்கொள்வார்கள்: மனநலப் பிரச்னை கொண்ட தங்கள் குழந்தைகளை நெடுநாள் கவனித்துக்கொண்டபிறகு, பெற்றோருக்கு வயதாகிறது. அப்போது அவர்கள் சந்திக்கும் முதல் கவலை, இப்போது வளர்ந்துவிட்ட என்னுடைய குழந்தையை இனி யார் கவனித்துக்கொள்வார்கள்? குழந்தையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, நேரத்துக்கு மருந்துகளைக் கொடுத்து, அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளுக்கு அழைத்துச்சென்று, அவர்கள்மீது அன்புசெலுத்துகிற யாராவது வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தங்களுக்குப்பிறகு இவற்றை யார் செய்வார்கள் என்று யோசிக்கிறார்கள். இதைப்பற்றி நாம் இங்கே விரிவாகப் பேசுவோம்.

​2. தங்களுடைய சொந்த நாள்பட்ட நோய்களைக் கையாளுதல்: வயதானோருக்கு நீரிழிவு, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நாள்பட்ட நோய்கல் வரக்கூடும். இதுபோன்ற நேரங்களில், தங்களுடைய நோயைச் சமாளித்தபடி வளர்ந்த குழந்தையைக் கவனித்துக்கொள்வது சிரமமாகவும் அழுத்தம் தருவதாகவும் ஆகலாம்.

3. தரமான கவனிப்புச் சேவைகள் இல்லாதிருத்தல்: பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் தொழில்முறை நிபுணர்களைத் தேர்ந்தெடுக்குமுன் பல குழப்பங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் செயல்திறனோடு வேலைசெய்வார்களா, வீட்டில் தாங்கள் கவனித்துக்கொள்வதுபோலவே குழந்தையைக் கவனித்துக்கொள்வார்களா என்றெல்லாம் அவர்கள் யோசிக்கலாம். நம் நாட்டில் பொதுவாகவே மறுவாழ்வு வசதிகள் குறைவு, அப்படி இருக்கும் அமைப்புகளும் மக்களுக்கு அதிகம் தெரியாதவையாக உள்ளன.

4. அவர்களுக்கு மனநலப் பிரச்னைகள் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்தல்: தீவிர மனநலப் பிரச்னை கொண்ட குழந்தைகளின் பெற்றோர், மனநலப் பிரச்னைகளோடு தொடர்புடைய களங்கவுணர்வு காரணமாகச் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தனிமை, தொடர்ந்து குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் வேலை ஆகியவை இந்தப் பெற்றோரைக் குழந்தையிடமிருந்து உணர்வுரீதியில் தூரக் கொண்டுசென்றுவிடலாம், கவனித்துக்கொள்ளுதலை இயந்திரமயமாக்கலாம். தொலைநோக்கில் பார்த்தால், இதனால், கவனித்துக்கொள்கிறவர் களைத்துவிடக்கூடும்.

5. வாழ்க்கையின் எதார்த்தங்களை விளக்குதல்: ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற நோய்களைக்கொண்ட குழந்தைகள் வளரும்போது, தங்களுடைய சமவயதில் இருக்கும் பிறருக்குத் திருமணமாவதை, அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதை, அவர்கள் தங்கள் பணியில் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்க்கிறார்கள். சில அபூர்வமான சூழல்களில், அவர்கள் செயலுள்ள ஒரு வாழ்க்கையை வாழாமலிருக்கலாம், அப்போது, வயது முதிர்ந்த பெற்றோர் வாழ்க்கையின் எதார்த்தத்தைப்பற்றித் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லச் சிரமப்படுவார்கள், அதாவது, அவர்களுடைய பிரச்னையைப்பற்றி, அத்துடன் தொடர்புடைய சமூகக் களங்கத்தைப்பற்றி எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் கலங்குவார்கள். இத்தகைய சவாலைச் சந்திக்கும் பெற்றோர், ஒரு மன நல நிபுணரைச் சந்திக்கலாம், அவர்களிடம் இதுபற்றி உரையாடி ஆலோசனை பெறலாம்.

6. தனியாகக் கையாளுதல்பல நேரங்களில், ஒரு குழந்தைக்கு நீண்டநாள் கவனிப்பைக் கோரும் ஒரு பிரச்னை இருக்கிறது என்பது தெரியவரும்போது, அதன் பெற்றோரிடையிலான உறவில் விரிசல் ஏற்படலாம். சில சூழ்நிலைகளில், அவர்கள் பிரிந்துவிடுகிறார்கள்; அவர்களில் ஒரு பெற்றோர் குழந்தையை நீண்டநாள் பராமரிப்பவராக ஆகிறார். நிதி விவகாரங்களைக் கையாள்வதுபற்றிய அச்சம், குழந்தையின் எதிர்காலம்பற்றிய அச்சம், தங்களுடைய ஆரோக்கியப் பிரச்னைகள் போன்றவை அந்த ஒற்றைப்பெற்றோருக்குப் பெரும் அழுத்தத்தைத் தரலாம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில்  செய்யலாம்?

பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஒரே ஒருவரிடம் இல்லாமலிருப்பது பரிந்துரைக்கப்படுகிறது, அவர்கள் ஆதரவு பெற வேறு வழிகள் இருப்பது நல்லது, அப்போதுதான் அவர்கள் சோர்ந்துவிடாமல், களைத்துவிடாமலிருப்பார்கள்.

1.     இயன்றவரை, அவர்கள் வேளாவேளைக்குச் சாப்பிடவேண்டும், தேவையான அளவு தூங்கவேண்டும். ஒருவேளை அவர்களுக்கே நாள்பட்ட ஒரு பிரச்னை இருந்தால், அதைக் கையாளவேண்டியிருந்தால், அதனைப் புறக்கணித்துவிடக்கூடாது. கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்து அவ்வப்போது விடுபட்டு நண்பர்களைச் சந்திக்க, அவர்களுடன் உரையாட முயற்சி செய்யலாம்.

2.     கவனித்துக்கொள்ளும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வளங்களைக் கண்டறியலாம். பகல்நேரப் பராமரிப்பு வசதியைக் கொண்ட ஆசுவாசப் பராமரிப்புச் சேவைகளைத் தேடலாம். இதனால் அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட மற்றும் தொழில்சார்ந்த பொறுப்புகளையும் பூர்த்தி செய்ய இயலும்.

3.     அவர்களுடைய குடும்பத்திலோ, நண்பர்கள்மத்தியிலோ ஓர் ஆதரவு அமைப்பு இருந்தால், கவனித்துக்கொள்கிறவர்கள் தனிமையாக உணரமாட்டார்கள், வருங்காலத்தில் அந்த ஆதரவு அமைப்புகளிடமிருந்து சில உதவிகளைப் பெறுவார்கள் என்று நம்பலாம். இது அவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கலாம்.

4.     கவனித்துக்கொள்கிறவர்களுக்கு நாள்பட்ட களைப்பு, தூக்கமின்மை, தொடர்ச்சியான சோக உணர்வு, எரிச்சல், நம்பிக்கையின்மை போன்ற உணர்வுத் துயரங்களின் அறிகுறிகள் இருந்தால், அவர்கள் ஒரு மன நல நிபுணரைச் சந்தித்து உதவி பெறுவது நல்லது.

பார்வைகள்

1.     நீண்ட நாள் உளவியல் நோயாளிகள் மத்தியில் குடும்பச் சுமை, ஜே. ராய்சௌத்ரி, டி. மோண்டல், ஏ.போரல், டி பட்டாச்சார்யா

2.     மன நலப் பிரச்னை கொண்ட தங்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் முதிய பெற்றோரின் சவால்கள், ப்ரேரணா சிதானந்த், டினா சுங், 2013

மனநலப் பிரச்னைகளை ஆயுர்வேதம் குணமாக்குமா?