குறைபாடுகள்

செரிபரல் பால்சி

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

செரிபரல் பால்சி என்றால் என்ன?

செரிபரல் பால்சி என்பது ஒரு குழந்தையின் மூளை வளர்ந்து கொண்டிருக்கும்போது அதற்கு ஏற்படும் காயம் அல்லது தவறான உருவாக்கத்தின் காரணமாக ஏற்படுகின்ற ஒரு நரம்பியல் குறைபாடு ஆகும். செரிபரல் பால்சி உடல் அசைவுகள், தசைக் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு, அனிச்சைச் செயல்கள், நிற்கிற, உட்கார்கிற நிலை மற்றும் சமநிலை ஆகியவற்றைப் பாதிக்கிறது. குழந்தைப் பருவத்தில் சிலர் தீவிர ஊனம் அடைவதற்கு மிகவும் பொதுவான காரணங்களில் செரிபரல் பால்சி ஒன்றாகும்.

செரிபரல் பால்சிக்குப் பின்வரும் தனித்துவமான பண்புகள் உண்டு:

  • குணப்படுத்த இயலாதது, நிரந்தரமானது: செரிபரல் பால்சி வந்தவர்களுடைய மூளைக்கு ஏற்பட்டிருக்கும் காயம் மற்றும் சேதம் நிரந்தரமானவை, அவற்றைக் குணப்படுத்த இயலாது. ஒருவருடைய உடலின் மற்ற பகுதிகளில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது ஆறிவிடும், ஆனால் மூளைக் காயங்கள் அப்படி ஆறுவதில்லை. ஆகவே இதோடு தொடர்புடைய பிற நிலைகள் காலம் செல்லச் செல்ல மேம்படலாம் அல்லது மோசமாகலாம்.
  • வளர்வதில்லை: செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய மூளை அதன் பிறகு மேலும் பாதிப்படையாது.
  • தீவிரமானது: செரிபரல் பால்சி பிரச்னை ஒருவருக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் இந்தப் பிரச்னையோடு வாழவேண்டி இருக்கும்.

    இந்த நிலையில் உள்ளவர்களுக்கு அதோடு தொடர்புடைய பின்வரும் பிரச்னைகள் வரக்கூடும்:

  • இயக்கவியல் குறைபாடு
  • புலன் குறைபாடு
  • கேட்டல் குறைபாடு
  • கவனக் குறைபாடு
  • மொழி மற்றும் உணர்தல் குறைபாடு
  • மனநிலைச் சிதைவு
  • பழக்கவழக்கங்களில் பிரச்னைகள்
  • ஆரோக்கியப் பிரச்னைகள்
  • அடிக்கடி வரும் வலிப்புகள்

முக்கிய உண்மைகள்

குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் மிகத் தீவிரமான உடல்/இயக்கவியல் குறைபாடு செரிபரல் பால்சி. உலக அளவில் சுமார் 17 மில்லியன் பேர் செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

செரிபரல் பால்சிக்கான அடையாளங்கள் என்ன?

செரிபரல் பால்சிக்கான அடையாளங்கள் மூளைக் காயம் அல்லது தவறான உருவாக்கம் காரணமாக ஏற்படுகின்றன. இந்த அடையாளங்கள்தான் ஒரு குழந்தைக்கு செரிபரல் பால்சி வந்திருக்கக் கூடும் என்று காட்டுகிற முறைகள் ஆகும். காரணம் செரிபரல் பால்சி பிரச்னை உள்ள குழந்தை மிகவும் இள வயதாக இருக்கும், அதனால் தன்னுடைய பிரச்னைகளைச் சிறப்பாக விவரித்துச் சொல்ல இயலாது. ஆகவே இந்த அடையாளங்களை வைத்துத் தான் அந்தக் குழந்தைக்கு செரிபரல் பால்சி வந்திருக்கக் கூடும் என்று பெற்றோர், நிபுணர்கள் கண்டறிகிறார்கள். பொதுவாகக் குழந்தையின் இயக்கவியல் முன்னேற்றத்தில் தாமதம் இருப்பதைப் பெற்றோர் கண்டறியலாம், மருத்துவர் அந்தக் குழந்தைக்கு வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்குமா என்று பரிசோதித்து, அவை இல்லை என உறுதி செய்து கொண்டு அதன்பிறகு தான் அதற்கு செரிபரல் பால்சி உள்ளது எனக் கண்டறிவார். இதற்கு மருத்துவ மதிப்பீடுகள் மற்றும் பரிசோதனைகள் பயன்படுகின்றன.

மருத்துவர் இந்தப் பிரச்னை எந்த அளவு குழந்தையைப் பாதித்திருக்கிறது, எந்த இடத்தில் பாதித்திருக்கிறது, எவ்வளவு தீவிரமாகப் பாதித்திருக்கிறது என்பதையும் அதோடு இருக்கக் கூடிய பிற நிலைகளையும் கண்டறிவார். மூளைக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சேதத்தைப் பொறுத்து செரிபரல் பால்சியின் அடையாளங்கள் குழந்தைக்குக் குழந்தை மாறுபடலாம்.

  • தசை இறுக்கம்: இந்தக் குழந்தைகளின் தசை இறுக்கம் அதிகரித்துக் காணப்படலாம் அல்லது குறைவாகக் காணப்படலாம் - கை கால்கள் தளர்வாக இருத்தல், மிகவும் தளர்வான அல்லது மிகவும் இறுக்கமான கை கால்கள், சுய விருப்பமின்றித் தசைகள் சுருங்குதல் அல்லது சில மூட்டுகள் ஒன்றாக இறுகிக் கொண்டு முறையான அசைவுச் சாத்தியமில்லாமல் இருத்தல் போன்றவை. இதனால் அந்தக் குழந்தை பிறருடைய உதவியின்றி நடப்பது, உட்கார்வது அல்லது நிற்பது போன்றவற்றைச் செய்ய சிரமப்படுகிறது.
  • இயக்க ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாடு: தசை இறுக்கம் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்தக் குழந்தையின் கை கால்கள், உடல் அசைவு மற்றும் கட்டுப்பாடு ஆகியவை பாதிக்கப்படுகின்றன. தசைக்கட்டுப்பாடு பாதிக்கப்பட்டிருப்பதால் கை கால்கள் நிரந்தரமாக நீண்டு அமையலாம் அல்லது சுருங்கி அமையலாம் அல்லது கை கால்கள் நடுங்குவது போல் தோன்றலாம். உதாரணமாக ஒரு குழந்தை பிறந்து ஆறு  மாதங்கள் ஆன பிறகும் பிறருடைய உதவியின்றி அதனால் உட்கார இயலாமல் போகலாம், புரள இயலாமல் போகலாம், 12-18 மாதங்களான பிறகும் அதனால் நடக்க இயலாமல் போகலாம் அல்லது எழுதுதல், பல் தேய்த்தல் அல்லது ஷூக்களை அணிதல் போன்ற பணிகளை அதனால் செய்ய இயலாமல் இருக்கலாம்.
  • உடலின் நிலை அமைப்பு: செரிபரல் பால்சி உடலின் நிலை அமைப்பையும் சமநிலையையும் பாதிக்கிறது. உடல் நிலை எதிர்வினை என்பது ஒரு குழந்தையை வெவ்வேறு உட்காரும் நிலைகளில் நாம்  அமர்த்தும்போது அவற்றிடமிருந்து எதிர்பார்க்கப்படும் எதிர்வினை ஆகும். பொதுவாக ஒரு குழந்தையின் உடல்நிலை சமச்சீராக இருக்கும், அதாவது ஒரு குழந்தை இரண்டு கால்களையும் முன்னோக்கி வைத்து அமரும். அதே சமயம் செரிபரல் பால்சி கொண்ட குழந்தைகள் சமச்சீரற்ற முறையில் அமர்வார்கள்.
  • சமநிலை: செரிபரல் பால்சி வந்த குழந்தையின் ஒட்டுமொத்த இயக்கவியல் பண்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களுடைய சமநிலைத்திறன் பாதிக்கப்படக்கூடும். ஒரு குழந்தை உட்காரக் கற்றுக் கொள்வது, ஒரு குறிப்பிட்ட நிலையில் உட்கார்வது, தவழத் தொடங்குவது அல்லது நடக்கத் தொடங்குவது போன்ற நேரங்களில் இந்த அடையாளங்களைப் பெற்றோர் கவனிக்கலாம். பொதுவாகக் குழந்தைகள் வளர வளரத் தங்களுடைய கையைப் பயன்படுத்தி அமர்வார்கள், எதையாவது பிடித்துக் கொண்டு நடப்பார்கள், பிறகு அவர்களுக்குப் பலமும் ஒருங்கிணைப்புத் திறனும் வந்துவிடும், அப்போது அவர்கள் எந்த ஆதரவும் இல்லாமலே உட்கார, நடக்கப் பழகிக் கொள்வார்கள். ஒரு குழந்தையால் இப்படி வேறு எந்த ஆதரவும் இல்லாமல் உட்கார இயலவில்லை அல்லது நிற்க இயலவில்லை என்றால் அது செரிபரல் பால்சியின் அடையாளமாக இருக்கலாம்.
  • ஒட்டுமொத்த இயக்கவியல் செயல்பாடு: ஒரு குழந்தை தன்னுடைய கை கால்கள் மற்றும் தசைத் தொகுப்புகளைப் பயன்படுத்தி பெரிய, ஒருங்கிணைக்கப்பட்ட அசைவுகளை நிகழ்த்தும் திறனை ஒட்டுமொத்த இயக்கவியல் செயல்பாடுகள் என்று அழைக்கிறோம். ஒரு குழந்தையின் மூளையும் உடலும் வளர வளர அவர்கள் சில வளர்ச்சி இலக்குகளை எட்ட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி எதிர்பார்க்கப்படும் காலக் கட்டத்தைத் தாண்டி ஒரு குழந்தை அந்த இலக்குகளை எட்டினால் அல்லது அந்த இலக்கை எட்டிய பிறகும் அதன் அசைவுத் தரம் குறைவாக இருந்தால் (உதாரணமாக தவழும் போது ஒரு பக்கமாகச் சாய்தல், எதையும் பிடித்துக் கொள்ளாமல் நடக்கச் சிரமப்படுதல் போன்றவை) செரிபரல் பால்சிக்கான அடையாளங்களாக இருக்கலாம்.
  • நுணுக்கமான இயக்கவியல் செயல்பாடு: குறிப்பான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட தசை அசைவுகளை நிகழ்த்தும் திறனை நுணுக்கமான இயக்கவியல் செயல்பாடு என்கிறோம். நுணுக்கமான இயக்கவியல் கட்டுப்பாட்டிற்கு ஒரு குழந்தை பல செயல்களைச் செய்யவேண்டியிருக்கும். இவற்றைக் கற்றுக் கொள்வதற்கு அந்தக் குழந்தைக்கு மன (திட்டமிடுதல் மற்றும் புரிந்து கொள்ளுதல்) மற்றும் உடல் (ஒருங்கிணைப்பு மற்றும் புலன் உணர்வு) திறன்கள் தேவை. ஒரு குழந்தை வளர வளர அது வழக்கமான நுணுக்க இயக்கவியல் திறன் இலக்குகளை எட்டுகிறது. ஒரு வேளை ஒரு குழந்தை இந்தத் திறன்களைச் சரியாகக் கற்றுக் கொள்ளாவிட்டல் அல்லது தாமதாகக் கற்றுக் கொண்டால் அது செரிபரல் பால்சியின் அடையாளமாக இருக்கக்கூடும்.
  • பேச்சு இயக்கவியல் செயல்பாடு: ஒரு குழந்தை தன்னுடைய உதடுகள், நாக்கு மற்றும் தாடைகளைப் பயன்படுத்திப் பேசுதல், சாப்பிடுதல் அல்லது குடித்தல் ஆகியவை சரியான வாய் இயக்கவியல் செயல்பாடுகளால் நிகழ்கின்றன. செரிபரல் பால்சி கொண்ட ஒரு குழந்தையின் வாய் இயக்கவியல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும், அந்தக் குழந்தையால் சரியாகப் பேச இயலாது, விழுங்க இயலாது, சாப்பிட இயலாது, மெல்ல இயலாது. வாய் இயக்கவியல் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குழந்தை மூச்சு விடுதல், புரிந்து கொள்ளும்படிப் பேசுதல் மற்றும் அதன் குரல் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படக்கூடும். செரிபரல் பால்சியால் உண்டாகும் நரம்பியல் பேச்சுக் குறைபாடுகள் அப்ராக்ஸியா மற்றும் டிஸ்ஆர்த்தியா போன்ற வகைகளில் அமைகின்றன.

செரிபரல் பால்சியின் அறிகுறிகள் என்ன?

ஒரு குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளுக்குள் செரிபரல் பால்சியின் அறிகுறிகளைக் காணலாம். செரிபரல் பால்சி வெவ்வேறு குழந்தைகளை வெவ்வேறு உடல் பகுதிகளில் வெவ்வேறு தீவிரத் தன்மையுடன் பாதிக்கக் கூடும். சில குழந்தைகளுக்குச் சிறிய பிரச்னைகள் இருக்கலாம், வேறு சில குழந்தைகள் மிகத் தீவிரமாகப் பாதிக்கப்படலாம். இந்தப் பிரச்னை உள்ள ஒரு குழந்தை தன்னுடைய வளர்ச்சி இலக்குகளை மெதுவாக எட்டலாம். உதாரணமாக தவழக் கற்றுக் கொள்ளுதல், உட்காரக் கற்றுக் கொள்ளுதல், நடத்தல் அல்லது பேசுதல் போன்றவை.

பெற்றோர் தங்களுடைய குழந்தையை கவனமாகப் பார்த்துப் பின் வருவன போன்ற அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும்: அடைத்துக் கொள்ளுதல், பொருள்களைப் பற்றுவதில் சிரமம், உணவுப் பொருள்களை விழுங்குவதில் சிரமம், களைப்பு, எதையும் பிடித்துக் கொள்ளாமல் அமர்வது அல்லது நிற்பது ஆகியவற்றில் பிரச்னைகள், கேட்டல் குறைபாடு அல்லது உடலின் சில பகுதிகளில் காயம் ஏற்படுதல் போன்றவை. இது முழுமையான பட்டியல் அல்ல. இப்படிப் பல அறிகுறிகளைப் பெற்றோர் கவனிக்க வேண்டியிருக்கும்.

செரிபரல் பால்சி எதனால் உண்டாகிறது?

செரிபரல் பால்சியின் சரியான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது அல்லது அவருடைய பிரசவத்தின் போது அல்லது அவருக்குக் குழந்தை பிறந்து முதல் மூன்று ஆண்டுகளுக்குள் ஏற்படக்கூடிய மூளைச் சேதம் செரிபரல் பால்சியை உண்டாக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செரிபரல் பால்சி குறைபாடு கொண்ட குழந்தைகளில் சுமார் எழுபது சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை வர முக்கிய காரணம் அவர்கள் கர்ப்பத்தில் இருந்தபோது அவர்களுடைய மூளைக்கு ஏற்பட்ட காயம் தான்.  இந்தக் காயத்தின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவை அந்தக் குழந்தையின் இயக்கவியல் செயல்பாடுகள் மற்றும் புத்திசாலித்தனத் திறன்கள் எந்த அளவு பாதிக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன.

மூளைக் காயத்தை உண்டாக்கக் கூடிய சில சாத்தியமுள்ள காரணங்கள்:

  • கர்ப்பத்தின் போது நோய்த் தொற்று: இதனால் கருவின் வளர்ந்து கொண்டிருக்கும் நரம்பியல் அமைப்பில் சேதம் ஏற்படக்கூடும். மரபணுப் பிரச்னைகள், நோய்த் தொற்றுகள் அல்லது பிரசவத்தின் ஏற்படக்கூடிய பிரச்னைகள் போன்றவையும் செரிபரல் பால்சியை உண்டாக்கலாம்.
  • குழந்தை உரிய காலத்திற்கு முன்பே பிறத்தல்: குழந்தை பிறக்கும் போது உள் ரத்தக் கசிவு ஏற்பட்டால் அதன் மூளைக்குச் சேதம் ஏற்படக்கூடும். இன்னொரு சாத்தியமுள்ள காரணி மஞ்சள் காமாலை. ரத்தத்தில் பிலிருபின் மிக அதிகமாக இருந்தால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. பொதுவாக ஒரு குழந்தையின் கல்லீரல் இந்த பிலிருபினை வடிகட்டி விடுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தையின் கல்லீரல் பிலிருபினைச் சரியாக வடிகட்டுவதற்குச் சில நாள்கள் ஆகும், ஆகவே பிறந்த குழந்தைக்குச் சில நாள்கள் மஞ்சள் காமாலை இருப்பது சாதாரணமான ஒன்றுதான். போட்டோ தெரபி (ஒளிச் சிகிச்சை) மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. ஆனால் சில அபூர்வமான சூழ்நிலைகளில் தீவிரமான, குணப்படுத்தப்படாத மஞ்சள் காமாலையால் மூளையின் செல்கள் சேதமடையலாம்.
  • குழந்தையின் தொடக்க ஆண்டுகள்: இந்தக் காலக் கட்டத்தில் தீவிர நோய்கள், காயம் அல்லது மூளைக்கு ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைக்காத சூழ்நிலை போன்றவை ஏற்பட்டால் மூளையின் செல்கள் பாதிக்கப்படக்கூடும்.

செரிபரல் பால்சி எப்படிக் கண்டறியப்படுகிறது?

செரிபரல் பால்சியை உறுதியாகக் கண்டறிவதற்கு எந்தப் பரிசோதனையும் இல்லை. குழந்தையின் மருத்துவ வரலாறை ஆராய்வது, உடல் பரிசோதனைகள் போன்றவற்றின் மூலம் இந்தப் பிரச்னை பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. இந்தப் பிரச்னையை எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டறிவது நல்லது, அப்போதுதான் குழந்தைக்குத் தேவையான சிகிச்சையைத் தந்து பயன்பெற இயலும். பல நேரங்களில் இந்தப் பிரச்னை தாமதமாகவே கண்டறியப்படுகிறது, காரணம் இந்தக் குறைபாட்டைக் கண்டறிவது சிரமம். அத்துடன் முதல் சில ஆண்டுகளில் குழந்தைக்கு வேறு ஏதாவது உடல் சார்ந்த நோய்கள் இருந்தால் அதனால் அறிகுறிகள் மாறக்கூடும், செரிபரல் பால்சியைக் கண்டறிவதற்கு இன்னும் அதிக நாளாகும். சில குழந்தைகள் செரிபரல் பால்சியால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதைக் கண்டறிவது எளிது; குழந்தை பிறந்து ஒரே மாதத்திற்குள் இதனை நிபுணர்கள் கண்டறிந்துவிடுவார்கள். சில குழந்தைகளுடைய பிரச்னை அந்தக் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்குள் கண்டறியப்படுகிறது, மிதமான பாதிப்பைக் கொண்ட குழந்தைகளுடைய பிரச்னை அவர்களுக்கு 3-4 வயதாகும்வரை கண்டறியப்படாமல் போகலாம். மருத்துவர்கள் குழந்தையின் அனிச்சைச் செயல்கள், தசை இறுக்கம், உடல் நிலை, தசைச் சுருக்கம் மற்றும் பிற பண்புகளைப் பரிசோதிப்பார்கள், இவை அனைத்தும் சில மாதங்களில் அல்லது சில ஆண்டுகளில்  மேம்படலாம். ஒரு குழந்தைக்குத் தொடக்கநிலை நலப் பராமரிப்பை அளிக்கும் மருத்துவர்கள், அக்குழந்தையின் பெற்றோர் இந்தத் துறை சார்ந்த நிபுணர்களைச் சந்திக்க வேண்டும் என்றோ மூளையின் படத்தைப் பெறுவதற்காகச் சில பரிசோதனைகளைச் செய்யவேண்டும் என்றோ சிபாரிசு செய்யலாம். உதாரணமாக MRI (Magnetic Resonance Imaging), கிரானியல் அல்ட்ரா சவுண்ட்கள் அல்லது CT ஸ்கேன்கள் (Computed tomography ஸ்கேன்கள்) போன்றவை.

ஒரு குழந்தை உரிய நாளுக்கு முன்பாகவே பிறந்திருந்தால் அதனை விரைவில் MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அதற்கு மூளையில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவரலாம். ஆனால் அதன் தாக்கம் இப்படித்தான் இருக்கும் என அப்போதே சொல்லிவிட இயலாது. ஒரு குழந்தைக்கு "செரிபரல் பால்சி வருகிற ஆபத்து" இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தால் அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே தேவையான சிகிச்சைகளைத் தொடங்கலாம்.

பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்கள்

ஒரு குழந்தைக்குச் செரிபரல் பால்சி உள்ளதா என்று சந்தேகிக்கும்போது அதைப் போலவே அறிகுறிகளைக்  கொண்ட மற்ற பிரச்னைகள் அந்தக் குழந்தைக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காகச் சில பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

  • MRI ஸ்கேன்: இது ரேடியோ மற்றும் காந்த அலைகளைப் பயன்படுத்தி மூளையை ஆராய்கிறது.
  • அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: இது ஒலி அலைகளைப் பயன்படுத்தி குழந்தையின் மூளைத் திசுக்களைப் படமெடுக்கிறது.
  • CT ஸ்கேன்: இந்தப் பரிசோதனை பல Xகதிர்களைப் பயன்படுத்தி அவற்றை ஒரு கணிணியின் மூலம் ஒழுங்குபடுத்தித் தொகுத்து மூளையின் 3-D படம் ஒன்றை உருவாக்குகிறது
  • எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG): தலையின் மேற்பகுதியில் சிறிய எலக்ட்ரோடுகளை வைத்து அதன் மூலம் மூளையின் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது.
  • எலக்ட்ரோமியோகிராம் (EMG): தசைச் செயல்பாடு மற்றும் புற நரம்புகளின் (மூளையிலிருந்தும் முதுகெலும்பிலிருந்தும் உடலின் பிறபகுதிகளுக்குச் செல்லும் நரம்புகளின் தொகுப்பு) செயல்பாடு பரிசோதிக்கப்படுகிறது.
  • ரத்தப் பரிசோதனை

செரிபரல் பால்சிக்குச் சிகிச்சை பெறுதல்

ஒரு குழந்தை தனது வளர்ச்சி நிலைகளில் ஒன்றை எட்டாவிட்டால் அதை முதலில் கவனிப்பவர்கள் அதன் பெற்றோர் தான். ஏதாவது ஒரு வளர்ச்சி நிலையைத் தங்கள் குழந்தை எட்டாவிட்டால் பெற்றோர் தங்களுடைய குழந்தை மெதுவாகக் கற்றுக் கொள்வதாகவும் விரைவில் அதைக் கற்றுக் கொண்டுவிடும் என்றும் நினைக்கலாம். அதே சமயம் அவர்கள் இதைப்பற்றித் தங்களுடைய குழந்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

செரிபரல் பால்சிக்கு எந்தச் சிகிச்சையும் இல்லை, ஆனால் அதற்கான அறிகுறிகளைக் குணப்படுத்துவதற்குப் பலவிதமான சிகிச்சைகள் உள்ளன. செரிபரல் பால்சியின் வகை, இடம் மற்றும் பாதிப்பின் தீவிரத் தன்மை குழந்தைக்குக் குழந்தை மாறுபடும் என்பதால் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு இணைந்து பணியாற்றி செரிபரல் பால்சி பிரச்னை உள்ள குழந்தைக்கான ஓர் ஒட்டு மொத்த சிகிச்சைத் திட்டத்தை உருவாக்கும். குழந்தை மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், ஆர்த்தோடிஸ்ட்கள் (ஒழுங்காக உருவாகாத பகுதிகளைத் திருத்துவதற்கும் பலவீனமான மூட்டுகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும் சாதனங்களைப் பொருத்திப் பயன்படுத்தச் செய்யும் நிபுணர்கள்), பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர்கள், பணி சார்ந்த சிகிச்சையாளர்கள், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி செரிபரல் பால்சி பிரச்னை கொண்ட குழந்தை தன்னுடைய அறிகுறிகளைக் கையாளவும் இயன்றவரை சுதந்திரமாகச் செயல்படவும் உதவுகிறார்கள்.

  • பிசியோதெரபி: பொதுவாக ஒரு குழந்தைக்கு செரிபரல் பால்சி இருப்பது கண்டறியப்பட்டவுடன் பிசியோதெரபி தொடங்கப்படுகிறது. பிசியோதெரபியின் நோக்கம் தசைகள் மேலும் பலவீனமாகாமல் தடுத்தல், தசைகள் குறுகிப் போவதைத் தடுத்தல், தசைகள் தங்களுடைய வழக்கமான இயக்கவீச்சை இழந்துவிடாமல் தடுத்தல். பிசியோதெரபிஸ்ட்கள் குழந்தைக்குப் பல உடற்பயிற்சிகளைச் சொல்லித் தருவார்கள், அதன்மூலம் அவர்களுடைய தசையை வலுவாக்குவார்கள், நீட்டச்செய்வார்கள். செரிபரல் பால்சி பிரச்னை கொண்ட குழந்தைகள் தங்களுடைய தசைகளை நீட்டவும் உடல் நிலையை மேம்படுத்தவும் விசேஷக் கை அல்லது கால் பிரேஸ்களை(ஆர்த்தோசெஸ்களை)க்கூடப் பயன்படுத்தலாம்.
  • பேச்சுச் சிகிச்சை: குழந்தைகள் தங்களுடைய தகவல் தொடர்பை மேம்படுத்த இது உதவுகிறது. குழந்தைகளுக்குப் பலவிதமான பயிற்சிகள் சொல்லித்தரப்படுகின்றன, இவை அந்தக் குழந்தைகளுடைய பேச்சுத் திறன் மேம்பட உதவும். ஒரு வேளை அந்தக் குழந்தைக்குத் தீவிரமான பேச்சுக் குறைபாடு இருந்தால் சைகை மொழி போன்ற மாற்றுத் தகவல் தொடர்பு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. குழந்தைகள் தகவல் தொடர்பை நிகழ்த்துவதற்கான விசேஷக் கருவிகளும் சந்தையில் கிடைக்கின்றன, உதாரணமாக வாய்ஸ் சின்தஸைசருடன் இணைக்கப்பட்ட ஒரு கணிணி போன்றவை.
  • பணி சார்ந்த சிகிச்சைகள்:  இந்தச் சிகிச்சையை வழங்குபவர் குழந்தை தனது தினசரிப் பணிகளைச் செய்வதில் இருக்கக் கூடிய பிரச்னைகளை அடையாளம் காண்கிறார், அசைவுகள் தேவைப்படும் செயல்களைச் செய்வதற்குச் சிறந்த வழி என்ன என்று ஆலோசனை சொல்கிறார். உதாரணமாக கழிப்பறைக்குச் செல்லுதல், ஆடை உடுத்திக் கொள்ளுதல், சாப்பிடுதல் போன்றவை. பணி சார்ந்த பயிற்சி குழந்தையின் சுயமதிப்பை, அது சுதந்தரமாகச் செயல்படுவதை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவலாம். குறிப்பாக அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது இது மிக நல்ல பலன்களைத் தரும்.
  • விளையாட்டுச் சிகிச்சை: இதில் குழந்தைகள் தங்கள் விருப்பப்படி விளையாடி மகிழ்கிறார்கள். அதே சமயம் இந்த விளையாட்டு அவர்களுடைய உணர்வு நலனில் ஒரு நேர்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இங்கே விளையாட்டே சிகிச்சையாகவும் உளவியல் மேம்பாடாகவும் அமைகிறது, குழந்தைகள்  பிறருடன் உரையாடவும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள். விளையாட்டுச் சிகிச்சையானது ஒரு குழந்தையின் உடல் சார்ந்த திறன்கள், அறிவாற்றல் செயல்படும் நிலைகள் மற்றும் உணர்வுத் தேவைகள் ஆகியவற்றை ஒரு பாதுகாப்பான, ஆதரவான சூழலில் மேம்படுத்துகிறது. விளையாட்டுச் சிகிச்சை என்பது பொதுவாக ஒரு குழந்தை இளவயதில் இருக்கும்போது (0–2 ஆண்டுகள்) பயன்படுத்தப்படுகிறது, ஆனால் வளர் இளம் பருவத்தின் தொடக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் இதனைப் பயன்படுத்தலாம், அப்போது அவர்களுக்குச் சக நண்பர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிற மன அழுத்தம் அதிகமாக இருக்கும், அதைக் குறைக்க விளையாட்டுச் சிகிச்சை பயன்படும். விளையாட்டுச் சிகிச்சையை எவ்வளவு சீக்கிரமாகத் தொடங்குகிறோமோ அந்த அளவு குழந்தைக்குப் பலன் அதிகமாகக் கிடைக்கும். விளையாட்டுச் சிகிச்சையைச் சீக்கிரத்தில் தொடங்குவதன் மூலம் ஒரு குழந்தை இங்கே கற்றுக் கொண்ட விஷயங்களைப் பிற குழந்தைகள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் பயன்படுத்திப் பலனடையலாம்.
  • ஆலோசனை: ஓர் ஆலோசகர் அல்லது உளவியல் நிபுணர் குழந்தையிடமும் அதன் குடும்பத்தினரிடமும் பேசலாம், அவர்கள் இந்த நிலையைப் புரிந்து கொண்டு, சமாளித்து, தேவைப்படும் சேவைகளைப் பெற உதவலாம்.
  • விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கல்வித்திட்டங்கள்: கற்றல் குறைபாடுகள் அல்லது மன நலச் சிதைவு பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரவும் பயிற்சி அளிக்கவும் இவை பயன்படுகின்றன.

செரிபரல் பால்சி கொண்ட குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல்

ஒரு குழந்தை பிறக்கும்போது குடும்பத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். அந்தக் குழந்தைக்கு செரிபரல் பால்சி உள்ளது என்பதை அதன் பெற்றோர் தெரிந்து கொள்ளும்போது அது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கலாம், வருங்காலம் பற்றி பெற்றோர் கொண்டிருக்கிற கற்பனைகள் முற்றிலுமாக மாறிவிடலாம். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் வெளியே வரச் சிறிது நேரம் ஆகலாம், ஆனால் அவர்கள் கொஞ்சங்கொஞ்சமாக இந்த எதிர்பாராத சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். அவர்கள் முதலில் தங்களுடைய குழந்தையின் நிலையைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும், அதன்மூலம் அவர்கள் விரைவில் சிகிச்சையைத் தொடங்கி நல்ல பலன் பெறலாம்.

செரிபரல் பால்சி கொண்ட ஒரு குழந்தையை வளர்ப்பதும் பார்த்துக் கொள்வதும் மிகவும் சிரமமான பணிகளாக இருக்கலாம், ஆனால் அதை எண்ணி நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. பெற்றோர்தான் தங்கள் குழந்தையின் மிகப்பெரிய ஆதரவாளராக இருக்கவேண்டும், செரிபரல் பால்சியைப்பற்றி அவர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டால், தங்களுடைய குழந்தைக்கு அவர்கள் பல விதங்களில் உதவலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதரவுக்குழு ஒன்றிலும் அவர்கள் இணையலாம், அங்கே தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களையும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம், பிற பெற்றோரிடமிருந்து அவர்களுடைய அனுபவங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சாத்தியங்களை அதிகப்படுத்துதல்

செரிபரல் பால்சி ஒருவருக்கு வந்துவிட்டால் அது மேலும் மோசமாக வாய்ப்பில்லை. தற்போது இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை எதுவுமில்லை. அதே சமயம் செரிபரல் பால்சி கொண்டவர்கள் மிகப் பெரிய சவால்களைச் சந்தித்துள்ளார்கள், தங்களுடைய திறன்களைப் பயன்படுத்தி லட்சியங்களை எட்டுவது எப்படி என்று கற்றுக்கொண்டுள்ளார்கள். இப்போதெல்லாம் செரிபரல் பால்சி பிரச்னை கொண்ட குழந்தைகள் படிப்பதற்கும் தங்களுடைய பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களில் ஈடுபடுவதற்கும் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் பல மாற்று ஏற்பாடுகள், உதவிக் கருவிகள் உள்ளன.

செரிபரல் பால்சி கொண்ட குழந்தைகள் ஆரம்ப மதிப்பீடுகளை மிகவும் விஞ்சிச் செல்கிறார்கள் என்பதற்குச் சான்று உள்ளது. இந்தக் குழந்தையால் நடக்க இயலாது என்று கண்டறியப்பட்ட ஒரு குழந்தை, நடக்கக் கற்றுக் கொள்ள இயலாமல் தவித்த ஒரு குழந்தை மலையேறும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. இன்னும் சில குழந்தைகளால் பேசவே இயலாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் நன்கு பேசி, புத்தகங்களை எழுதி, தங்களுடைய புத்திசாலித்தனமான பேச்சின் மூலம் பிறரை நல்லவிதமாகப் பாதித்து முன்னேற்றியுள்ளார்கள். செரிபரல் பால்சி கொண்ட ஒரு குழந்தை தனக்கு ஆர்வம் உள்ள விஷயங்களில் ஈடுபடுவது, அடிப்படையான வாழ்க்கைத் திறன்களை நன்கு கற்றுக் கொள்வது ஆகியவற்றில் பெற்றோர் ஒரு முக்கிய பங்காற்றலாம். இதன் மூலம் அந்தக் குழந்தை ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற இயலும்.

செரிபரல் பால்சியின் வகைகள்

செரிபரல் பால்சியில் நான்கு வகைகள் உள்ளன.

  • ஸ்பாஸ்டிக் செரிபரல் பால்சி: இது தான் மிகவும் பொதுவாகக் காணப்படும் செரிபரல் பால்சி வகை ஆகும். இது பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பாதித்துள்ளது, இந்த நிலை மிதமானதாகவோ தீவிரமானதாகவோ இருக்கலாம். ஸ்பாஸ்டிசிட்டியில் நான்கு உட்குழுக்கள் உள்ளன:
    • ஹெமிபிலகியா - ஒரு பக்கத்தில் உள்ள கை, கால் பாதிக்கப்படுகிறது; பொதுவாகக் கை தான் அதிகம் பாதிக்கப்படுகிறது.
    • பாரபிலகியா - இரண்டு கால்களும் பாதிக்கப்படுகின்றன; கைகள் குறைவாகப் பாதிக்கப்படுகின்றன அல்லது பாதிக்கப்படுவதே இல்லை.
    • குவாட்ரிபிலகியா அல்லது டெட்ராபிலகியா - கை கால்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன, பொதுவாகக் கை கால்கள் எல்லாமே ஒரே மாதிரியாகப் பாதிக்கப்படுகின்றன.
    • டிப்பிலகியா - பாரபிலகியாவுக்கும் குவாட்ரிபிலகியாவுக்கும் இடையே உள்ள வடிவம்; இதில் இரண்டு கால்களும் பாதிக்கப்படுகின்றன.
  • அதெடாய்ட் அல்லது டிஸ்கைனடிக் செரிபரல் பால்சி: இந்தப் பிரச்னை கொண்டவர்களுக்கு குறைவான தசை இறுக்கம் இருக்கும், இவர்கள் மெதுவாகச் சிரமப்பட்டு அசையும் பாணியைக் கொண்டிருப்பார்கள், இவர்களுடைய தலை அல்லது கைகள் அல்லது கால்கள் இவர்களையும் அறியாமல் ஆடிக்கொண்டிருக்கும். இவர்களுக்கு உணர்வு சார்ந்த அழுத்தம் ஏற்பட்டால் இந்த அசைவுகள் பொதுவாக அதிகரிக்கும், இவர்கள் ஓய்வெடுக்கும்போது இந்த அசைவுகள் குறையும்.
  • அடாக்ஸிக் செரிபரல் பால்சி: இது அபூர்வமான ஒரு நிலை, இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பலவீனம் அதிகமாக இருக்கும், ஒருங்கிணைக்கப்படாத அசைவுகள் காணப்படும், நிலையற்ற தன்மை இருக்கும். பொதுவாக இந்தப் பிரச்னை கொண்டவர்கள் அகலமாகக் கால்களை விரித்து நடக்கலாம், நுணுக்கமான இயக்கவியல் திறன்களைப் பெறச் சிரமப்படலாம்.
  • செரிபரல் பால்சியின் கலவை வடிவங்கள்: இந்தப் பிரச்னை கொண்டவர்களிடம் மேற்கண்ட செரிபரல் பால்சி வடிவங்கள் கலந்து காணப்படும்; பொதுவாக ஸ்பாஸ்டிசிட்டியும் அதெடோஸிஸ்-ம் பலரிடம் இணைந்து காணப்படுகிறது.

மனநலப் பிரச்னைகளை ஆயுர்வேதம் குணமாக்குமா?