மனநலம் அல்லது உணர்வுநலம் என்பது ஒருவருடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நலனின் ஒரு முக்கியமான, அவசியமான பகுதியாகும். உலகில் பெரும்பாலானோர் ஏதோ சில உடற்பயிற்சிகளைச் செய்து தங்களை நன்றாக வைத்துக்கொள்கிறார்கள், சிலர் உடற்பயிற்சிசாலைக்குச் செல்கிறார்கள், சிலர் நடக்கிறார்கள், நீந்துகிறார்கள், ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அதுபோல, அவர்கள் தங்களது மனம் மற்றும் உணர்வுகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
ஒருவருக்கு மனநலப் பிரச்னை ஏதும் இல்லை என்றாலே, அவர் மனநலத்தோடும் உணர்வுநலத்தோடும் இருக்கிறார் என்று பலரும் தவறாக எண்ணிவிடுகிறார்கள். இதுபற்றி நிபுணர்களிடம் கேட்டால், 'ஒருவருக்கு மனச்சோர்வு இல்லை, பதற்றம் இல்லை, பிற குறைபாடுகள் இல்லை என்றால், அதைவைத்து அவர் மனத்தளவில் அல்லது உணர்வளவில் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று சொல்ல இயலாது' என்கிறார்கள்.
வாசியுங்கள்: ஒருவர் மன நலனுடன் இருக்கிறார்/ மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதைக் காட்டும் அடையாளங்கள் என்னென்ன?
உணர்வு நலனில் முதலீடு செய்வதன் அவசியம்
உணர்வுகளைக் கையாள்வது, சமநிலையில் வைத்திருப்பது ஒரு முக்கியமான திறன் ஆகும். ஒருவருக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், அவரது நலன் பாதிக்கப்படலாம், உறவுகளில் சிரமம் ஏற்படலாம், மன நலப் பிரச்னைகள் வரலாம். ஒருவர் மனத்தளவில், உணர்வுரீதியில் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால், அவரால் சவால்களை, அழுத்தங்களை, பின்னடைவுகளை நன்கு சந்திக்கவும் சமாளிக்கவும் இயலும். அவரால் தனது தினசரி வாழ்க்கைசார்ந்த பணிகளை இன்னும் செயல்திறனுடன் செய்ய இயலும். ஒருவர் மனநலம், உணர்வுநலத்துடன் இருக்கிறார் என்றால், அவரால் தன்னைத்தானே சிறப்பானமுறையில் புரிந்துகொள்ள இயலும், பிறருடன் நன்கு பழக இயலும், வாழ்க்கையின் சவால்களைச் சந்தித்துச் சமாளிக்க இயலும்.
“எல்லாருடைய வாழ்க்கையில் சவால்கள் உண்டு, தாங்கள் விரும்பாத நபர்களை, விஷயங்களை அவர்கள் கையாளவேண்டியிருக்கும். அதுபோன்ற நேரங்களில், அவர்கள் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முனைவார்கள். ஆனால் உண்மையில், அவர்களால் அதனைக் கட்டுப்படுத்த இயலாது. தங்களைச்சுற்றியிருக்கிற விஷயங்களைத் தாங்கள் எப்படிப்பார்க்கிறோம் என்பதைமட்டுமே அவர்களால் கட்டுப்படுத்த இயலும். ஆகவே, ஒருவர் சவால்களுக்கேற்பத் தன்னை மாற்றியமைத்துக்கொள்வதன்மூலம் அதிக மனநலன், உணர்வுநலனைப் பெறுகிறார்” என்கிறார் பெங்களூரைச்சேர்ந்த ஆலோசகர் மௌலிகா ஷர்மா.
ஒருவர் தனது மனநலனைக் கவனித்துக்கொள்ளுதல்
ஒருவர் தனது மனநலனைக் கவனித்துக்கொள்வது என்றால் என்ன? இது ஒரு தெளிவற்ற, சிக்கலான சவாலாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில், இது மிகவும் எளிதுதான் என்கிறார்கள் நிபுணர்கள். இதற்காக ஒருவர் தனது தினசரி வாழ்க்கையில் சில எளிய செயல்பாடுகளைப் பின்பற்றினாலேபோதும், அல்லது, தனது வாழ்க்கைமுறையில் சில சிறிய மாற்றங்களைச் செய்தாலேபோதும். இதற்கான சில வழிகள்:
1. உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுதல்
ஒருவருடைய மனநலம் நன்றாக இருக்கவேண்டுமென்றால், அவரது உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும். இதற்கு அவர் நன்றாகச் சாப்பிடவேண்டும், போதுமான அளவு ஓய்வெடுக்கவேண்டும், உடற்பயிற்சி செய்யவேண்டும், உடல்நலத்தைப் பராமரிக்கவேண்டும். ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவைப் புதிதாகத் தயாரித்து உண்டால், தினசரி அழுத்தங்களை உடலால் எளிதில் சமாளிக்க இயலும். வைட்டமின் B-12 மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்களைக்கொண்ட உணவுப்பொருள்கள் மூளையில் மனநிலையைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருள்களின் நிலையைச் சிறப்பாக வைக்கின்றன. போதுமான அளவு ஓய்வெடுப்பதும் முக்கியம்; ஒருவருடைய உடல் நாள்முழுக்கப் பல தேய்மானங்களைச் சந்திக்கிறது. அவர் தூங்கும்போதுதான் அவற்றையெல்லாம் ஆற்றிக்கொள்கிறது. ஒருவர் சரியாகத் தூங்காவிட்டால், அவர் களைப்பாகவும் அழுத்தமாகவும் எரிச்சலாகவும் உணரக்கூடும். போதுமான அளவு உடற்பயிற்சி செய்வதும் முக்கியம், இதன்மூலம் நன்கு பசியெடுக்கும், போதுமான அளவு தூக்கம் கிடைக்கும், இதனால் மனநலம் மேம்படும்.
2. உடற்பயிற்சி, தூய்மையான காற்று
சூரியவெளிச்சம் மேலே படும்போது, மூளையில் செரோட்டொனின் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த ரசாயனம்தான் மனோநிலையை ஒழுங்குபடுத்துகிறது. தினமும் சூரிய வெளிச்சம் மேலே பட்டுக்கொண்டே இருந்தால், மனச்சோர்வு குறைகிறது. உடலால் செய்யும் வேலைகள் மனத்துக்கும் நன்மைதருகின்றன. உடற்பயிற்சி ஆற்றலைத் தூண்டுகிறது, அழுத்தத்தைக் குறைக்கிறது, மனம் களைப்படைவதைக் குறைக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குப்பிடித்த ஒரு வேலையைக் கண்டறிந்து செய்யவேண்டும், அதுவே அவர்களுக்கு மகிழ்வைத்தரும்.
3. தன்னைக் கவனித்துக்கொள்ளுதல்
மன மற்றும் உணர்வுநலனுக்கு, ஒருவர் தன்னைக் கவனித்துக்கொள்வது மிக அவசியம். ஒருவர் தனது மன உணர்வுகளை நன்முறையில் வெளிப்படுத்தும்போது, அவரால் தனது அழுத்தங்களை முரண்களை எளிதில் சமாளிக்க இயலுகிறது. மக்கள் தங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும்; அந்த நேரத்தில் தங்களது சொந்த உணர்வுத் தேவைகளைக் கவனிக்கவேண்டும், உதாரணமாக, ஒரு புத்தகம் படிக்கலாம், மகிழ்ச்சியாக நேரம் செலவிடலாம், அல்லது, தினசரி வேலைகளைப்பற்றிக் கவலைப்படாமல் சும்மா மனத்துக்கு இதமாகப் படுத்திருக்கலாம்.
அந்த நேரத்தில், எலக்ட்ரானிக் சாதனங்கள் பக்கத்திலேயே வரக்கூடாது, தங்களைச்சுற்றி நடப்பதைக் கவனிக்கவேண்டும், அதில் மனத்தைச் செலுத்தவேண்டும். “மனமுழுமைநிலை என்பது, நிகழ்காலத்தில் இருத்தல், கடந்தகாலத்தைப்பற்றியோ எதிர்காலத்தைப்பற்றியோ சிந்திக்காமலிருத்தல்; தன் மனத்தில் தோன்றுகிற அல்லது, தான் அனுபவிக்கிற எல்லாவற்றையும் எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல், எதற்கு எதிர்வினையாற்றுவது என்பதைத் தேர்ந்தெடுத்தல், ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துதல், எதைப்பற்றியும் தீர்ப்புச் சொல்லாமலிருத்தல், பொருள்கள் மற்றும் சூழ்நிலைகள் நிலையற்றவை என்ற மனோநிலையை வளர்த்துக்கொள்ளுதல். இதன்மூலம் ஒருவர் தன்னுடைய அனுபவங்களைத் திறந்த மனத்துடன் அணுகலாம், அவற்றால் மிகையாகப் பாதிக்கப்படாமலிருக்கலாம்" என்கிறார் NIMHANS மருத்துவ உளவியல் கூடுதல் பேராசிரியர் டாக்டர் எம் மஞ்சுளா.
4. பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுதல்
ஒருவர் தனக்குப் பிடித்தவர்கள், தன்னுடன் நன்கு பழகுகிறவர்களுடன் நேரம் செலவிட்டால், அவருடைய சுயமதிப்பு உணர்வு பெருகும், தன்னைப் பிறர் மதிக்கிறார்கள் என்ற எண்ணம் உண்டாகும். ஒருவர் தனது நண்பர்கள், குடும்பத்தினர், சக ஊழியர்கள், அக்கம்பக்கத்துவீட்டுக்காரர்களிடமெல்லாம் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக்கொண்டால், அவரது உணர்வு நலன் மேம்படும், தான் பலருடன் இணைந்து வாழ்கிறோம் என்ற மெருகேறிய உணர்வு ஏற்படும். சக ஊழியர் ஒருவருடன் மதிய உணவு சாப்பிடலாம், அல்லது, பல நாளாகச் சந்தித்துப்பேசாத ஒரு நண்பரைச் சந்திக்கத் திட்டமிடலாம். ஒரு புன்னகை அல்லது ஓர் அணைப்புக்கு இணையான அனுபவத்தை எந்தத் தொழில்நுட்பத்தாலும் தர இயலாது.
5. ஒரு பொழுதுபோக்கு, அல்லது ஒரு புதிய செயல்பாடு
ஒருவர் தான் விரும்பும் வேலைகளில் ஈடுபட்டால், துடிப்புடனும் மகிழ்ச்சியாகவும் இருப்பார். இதன்மூலம், அவரது மனம் சுறுசுறுப்பாக இருக்கிறது, அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியும் கிடைக்கிறது. குறிப்பாக, அவர்கள் பிறரிடம் பகிர்ந்துகொள்ளச் சிரமப்படும் விஷயங்களை அவர்களால் வெளிப்படுத்த இயலுகிறது. நல்ல பொழுதுபோக்குகளால், ஒருவர் அழுத்தத்தை வெல்லலாம், சுய மதிப்பை மேம்படுத்திக்கொள்ளலாம்.
புதிய செயல்பாடுகளை முயன்றுபார்க்கும்போது, ஒரு புதுமையான பார்வைக்கோணம் கிடைக்கிறது, இதனால் ஒருவர் தனது சவுகர்யமான பகுதியிலிருந்து வெளியே வரப் பழகுவதால், அவர் சுறுசுறுப்பாகவும் இருப்பார். அவர் ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தும்போது, அந்தக் கற்றலின்மூலம் வழக்கமான சிந்தனைபாணிகள் உடைபடுகின்றன. ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்வதால், புதிய சவால்கள் வருகின்றன, கவனக்கூர்மை அதிகரிக்கிறது, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டோம் என்கிற மனத்திருப்தி ஏற்படுகிறது. இதன்மூலம், தங்களால் புதிய சூழ்நிலைகளை, புதிய சவால்களை, புதிய மனிதர்களைச் சந்திக்க இயலும் என்கிற நம்பிக்கை பெருகுகிறது.
6. உங்கள் அழுத்தத்தைக் கையாளுதல்
சிலருக்குச் சிலரை நினைத்தால் அழுத்தம் வரும், அல்லது, சில நிகழ்வுகளால் அழுத்தம் வரும். இப்படி ஒருவர் தனக்கு அழுத்தம் உண்டாக்கும் விஷயங்கள் என்னென்ன என்று சிந்திக்கவேண்டும், பிறகு, அந்தச் சூழ்நிலைகளை ஆழமாக அலசிப்பார்க்கவேண்டும். அழுத்தத்தைக் குறைப்பதற்காக, அந்தச் சூழ்நிலைகளிலிருந்து விலகியிருப்பது சாத்தியம்தான். ஆனால், எப்போதும் அப்படி இருந்துவிட இயலுமா? சில நேரங்களில், சில குறிப்பிட்ட வாழ்க்கைச் சூழல்கள் அல்லது நிகழ்வுகளைக் கையாள்வதற்கான வியூகங்கள் இல்லாததாலேயே அழுத்தம் ஏற்படக்கூடும். ஆகவே, ஒருவர் தனது அழுத்தத்தைக் கையாள்வதற்கான திறன்களைக் கற்றுக்கொள்வது அவசியம்.
"ஒருவருக்குத் தேர்வுகளால் அழுத்தம் வருகிறது என்றால், தேர்வுகளை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும், இந்த அழுத்தம் அவரது வாழ்க்கையைப் பாதிக்க அனுமதிக்கக்கூடாது. காரணம், தேர்வுகளைக்கண்டு விலகிச்செல்வது சாத்தியமில்லை, அவற்றைச் சந்தித்தே தீரவேண்டும். சில சூழ்நிலைகளில், அழுத்தம் தரும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பது சாத்தியமாகலாம், ஆனால், அவற்றை எப்போது தவிர்க்க இயலும் எப்போது தவிர்க்க இயலாது என்று வித்தியாசப்படுத்திப் புரிந்துகொள்வது அவசியம். அதைவிட, அழுத்தத்தைக் கையாள்வதற்கான வியூகத்தைக் கண்டறிவது நல்லது, அதன்மூலம் ஒருவர் தன்னைத்தானே நன்கு கவனித்துக்கொள்ள இயலும். உதாரணமாக, ஒரு நண்பருடன் பேசுவது, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது, சூழ்நிலைகளை மீண்டும் அலசிப்பார்த்து மதிப்பிடுவது, தியானம், நடைப்பயிற்சி, இசை கேட்பது, உடற்பயிற்சி போன்றவை உதவலாம்" என்கிறார் மௌலிகா ஷர்மா.
7. தன்னை ஏற்றுக்கொள்ளுதல், தன்னை நம்புதல்
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பலங்கள், பலவீனங்கள் உள்ளன. ஆகவே, மக்கள் எல்லாரும் தங்களுடைய பலங்களை அடையாளம் காணவேண்டும், ஏற்றுக்கொள்ளவேண்டும், பலவீனங்களையும் ஒப்புக்கொள்ளவேண்டும். இதன்மூலம், அவர்கள் தங்களை நம்புகிற தைரியத்தைப் பெறுகிறார்கள், தொடர்ந்து முன்னேறுவதற்கான வலிமையைப் பெறுகிறார்கள். எல்லாருக்கும் பலவீனங்கள் உண்டு. கச்சிதமான மனிதர் என்று யாரும் இல்லை. ஆகவே, ஒருவர் தனக்கு இருக்கிற பலவீனங்களை, தனக்குப் பிடிக்காத விஷயங்களை மாற்ற முனையலாம், அல்லது, அந்த பலவீனங்களுடன் வாழப்போவதாக எண்ணிக்கொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். இப்படி ஒருவர் தனக்கு இருக்கும் பலவீனங்களை ஏற்றுக்கொள்வதும், தான் கச்சிதமான ஒரு மனிதர் இல்லை என்பதை உணர்வதும் அவரது மன மற்றும் உணர்வு நலனுக்கு அவசியத் தேவை. எதார்த்தமான இலக்குகளை அமைக்கவேண்டும். ஒவ்வொருவரும் தங்களது சொந்த வரம்புகளை மதிப்பிட்டு அறியவேண்டும், அதற்கேற்ப எல்லைகளை அமைத்துக்கொள்ளவேண்டும். எது முக்கியம் என்பதை அவர்கள் தீர்மானிக்கப் பழகவேண்டும், நிறைய விஷயங்கள் கையில் உள்ளபோது, புதியவற்றை 'வேண்டாம்' என்று மறுக்கப்பழகவேண்டும். தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, தான் மதிப்புமிக்க ஒருவர் என்பதை அவர் அறியவேண்டும்.
8. கிடைத்தவற்றைக் கொண்டாடுதல்
கிடைப்பதை எண்ணி மகிழவேண்டும் என்று எல்லாரும்தான் சொல்கிறார்கள். ஆனால், அப்படிச் சிந்திக்கப் பழகிவிட்டால், இல்லாததை எண்ணி வருந்தும் பழக்கம் குறையும். இதுபற்றி நிகழ்ந்துள்ள பல ஆய்வுகளை வைத்துப் பார்க்கிறபோது, ஒருவர் தனக்குக் கிடைத்திருக்கும் விஷயங்களை எண்ணி மகிழ்ந்தால், அவர் தனது எதிர்காலத்தின்மீது நம்பிக்கையோடு வாழ்கிறார், அது அவரது மனநலத்தை மேம்படுத்துகிறது என்று தெரிகிறது. இதற்கு ஓர் எளிய வழி, நன்றியுணர்வுக் குறிப்பேடு ஒன்றை எழுதுவது. ஒவ்வோர் இரவும், தூங்கச்செல்வதற்குமுன்னால், அன்றைய தினத்தில் எந்தெந்த விஷயங்களுக்குத் தான் நன்றிசெலுத்த விரும்புகிறோம் என்று அதில் எழுதவேண்டும். ஒருவர் நன்றியுணர்வுடன் இருந்தால், தனக்குக் கிடைத்துள்ள ஆசிகளை நினைவில்கொண்டால், அவரது சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரி, ஒவ்வொரு நாளும் நன்றி சொல்வதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை அவர் உணர்வார்.
9. தன்னை வெளிப்படுத்துதல்
பல நேரங்களில், 'எதிர்மறை' என்று எண்ணுகிற உணர்வுகளை அல்லது உணர்ச்சிகளை மக்கள் வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள். ஒருவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினால், தனக்கு எது பிடிக்கிறது, எது பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாகச் சொன்னால், அவரது மனம் ஒழுங்காகிறது. ஆனால் பலரும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள், அதுவொரு சமாளிக்கும் தந்திரம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அது அவர்களுக்குப் பெரிய பிரச்னைகளை உண்டாக்கக்கூடும். இதுபற்றி நிகழ்ந்த பல ஆய்வுகள், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதால் அந்த உணர்வுகள் வலுவடைவதாகச் சொல்கின்றன. இதனால், அழுத்தம் அதிகரிக்கக்கூடும். அந்த அழுத்தத்தை ஒரு சாதாரணமான, சம்பந்தமில்லாத விஷயத்தின்மீது காட்ட நேரிடும்.
உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதால், மனச்சோர்வு அல்லது பதற்றக் குறைபாடுகள் வரலாம் என நம்பப்படுகிறது. கோபம் மற்றும் சோகம் போன்ற உணர்வுகள்கூட, வெளிப்படுத்த ஏற்றவைதான். அதேசமயம், அவற்றை வெளிப்படுத்துவதன்மூலம் ஒருவர் தனக்கோ, பிறருக்கோ, பிறருடன் உள்ள உறவுகளுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடாது, ஓர் உணர்ச்சியை எப்படிச் சரியாக வெளிப்படுத்துவது எனத் தெரிந்துகொள்ளவேண்டும். "எந்த உணர்வும் கெட்டதல்ல, எந்த உணர்வும் நல்லதல்ல. ஒவ்வோர் உணர்வும் முக்கியம்தான், அவசியம்தான். ஓர் உணர்வு ஏற்படுத்திய அனுபவத்தின் தீவிரத்தன்மை, அது எப்படி வெளிப்படுத்தப்பட்டது (மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக), அதனை வெளிப்படுத்திய சூழ்நிலையின் பொருத்தம், உணர்வு ஏற்படும் கால இடைவெளி போன்றவைதான் ஓர் உணர்வை ஆரோக்கியமானதாக அல்லது ஆரோக்கியமற்றதாக ஆக்குகின்றன" என்கிறார் டாக்டர் மஞ்சுளா.
10. சுமை அதிகரிக்கும்போது, உதவி கேட்கலாம்
இந்த உலகில் அழுத்தம் இல்லாத, பதற்றம் இல்லாத, தளர்ந்த மனநிலை இல்லாத கச்சிதமான வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. ஆகவே, ஒருவருக்குச் சோகம் வருகிறது, சவாலாக உணர்கிறார், எரிச்சலாக உணர்கிறார், குழப்பம், கோபம் வருகிறது, அல்லது, தாங்கமுடியாத சுமையைச் சமாளிக்க இயலாமல் தவிக்கிறார் என்றால், அது சகஜம்தான். அதுபோன்ற சூழ்நிலைகளில் அவர் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பேசவேண்டும்: கணவன்/மனைவி, நண்பர், தந்தை/தாய், உடன்பிறந்தோர், உறவினர்... இப்படி யாராவது! அதற்குமேலும் அவர்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால், ஒரு மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுகலாம். எவ்வளவு சீக்கிரம் அவர் உதவியை நாடுகிறாரோ, அவ்வளவு நல்லது. ஞாபகமிருக்கட்டும், உதவி கோருவதற்கு வெட்கப்படவேண்டியதில்லை - அது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள், உண்மையில் அது பெரிய பலம்! வாழ்க்கைச் சவால்களை ஒருவர் தன்னந்தனியாகச் சமாளிக்கவேண்டியதில்லை. எதையும் தாங்கும் தன்மைகொண்டவர்கள், தங்களைச் சுற்றியிருக்கிற ஆதரவு அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், அதன்மூலம் தங்களைப் பாதுகாத்துக்கொள்கிறார்கள்.