டிஸ்பிராக்ஸியா

Q

டிஸ்பிராக்ஸியா என்றால் என்ன?

A

டிஸ்பிராக்ஸியா என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சி ஒருங்கிணைப்பைப் பாதிக்கக்கூடிய ஒரு குறைபாடு ஆகும், இது அவர்களுடைய இயக்கவியல் ஒருங்கிணைப்பைச் சிறிய அளவில்/பெரிய அளவில் பாதிக்கிறது. டிஸ்பிராக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குப் பல் தேய்த்தல், ஷூ லேஸ்களைக் கட்டுதல், பொருள்களைக் கையில் பிடித்தல், பொருள்களை நகர்த்தி ஒழுங்குபடுத்துதல் அல்லது தான் உட்கார்ந்து இருக்கும் நிலையைச் சமாளித்தல் ஆகிய நுணுக்கமான செயல்பாடுகளைச் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

டிஸ்பிராக்ஸியா பொதுவாக மற்ற நிலைகளாகிய டிஸ்லெக்ஸியா, டிஸ்கால்குலியா அல்லது கவனக்குறைவு மிகைச் செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) ஆகியவற்றுடன் காணப்படுகிறது.

Q

டிஸ்பிராக்ஸியாவின் அறிகுறிகள் என்ன?

A

டிஸ்பிராக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குப் பின்வரும் செயல்பாடுகளில் சிரமங்கள் இருக்கலாம்:

பெரிய இயக்கச் செயல்பாடுகள்

 • பொருள்களைக் கீழே போடாமல் பிடித்துக் கொள்வது
 • விளையாடும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது தன்னுடைய உடலைச் சரியான ஒருங்கிணைப்போடு கையாளுதல்
 • நடத்தல், குதித்தல், பந்தை எறிதல் அல்லது பிடித்தல் அல்லது சைக்கிள் ஓட்டுதல்
 • எதன் மீதும் மோதாமல் எதையும் தள்ளிவிடாமல் நடத்தல்
 • கை - கண் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்றல்

நுணுக்கமான இயக்கச் செயல்பாடுகள்

 • நுணுக்கமான இயக்கச் செயல்பாடுகள் தேவைப்படும் வேலைகளைச் செய்தல்; உதாரணமாக பட்டன் போடுதல், ஒரு பென்சிலைப் பிடித்தல் அல்லது கத்திரிக்கோல் கொண்டு வெட்டுதல்
 • சிறிய பொருள்களைப் பயன்படுத்துதல், உதாரணமாக பில்டிங் பிளாக்ஸ் அல்லது களைத்துப் போடப்பட்ட புதிரின் துண்டுகள்

பேச்சு

 • குரலில் ஏற்ற இறக்கங்களோடு பேசுதல் (ஒலி அளவு, வேகம், தொனி, சுருதி (pitch) போன்றவை)
 • தெளிவாகப் பேசுதல், மிகவும் மெதுவாக அல்லாமல் இயல்பாகப் பேசுதல்

சமூக – உணர்வு நிலை சார்ந்த விஷயங்கள்

 • தன்னால் பல செயல்களைச் செய்ய முடியும், விளையாட முடியும், தகவல் தொடர்பில் ஈடுபடமுடியும் என நம்பிக்கையுடன் இருத்தல்
 • குழு விளையாட்டுகளில் பங்கேற்றல்
 • குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் உரையாடுதல்

ஞாபகசக்தி மற்றும் கவனம்: பள்ளியிலும் வீட்டிலும் சில வரிசையான செயல்பாடுகளை நினைவில் வைத்துக் கொண்டு செய்தல் (உதாரணமாக பள்ளிப் பையை எடுத்து வைத்தல், வீட்டுப்பாடத்தைச் செய்தல், மதிய உணவுப் பையை எடுத்துச் செல்லுதல் போன்றவை).

வெளி நிலை உறவு: பொருள்களைத் துல்லியமாக வைத்தல் அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகர்த்துதல்.

Q

டிஸ்பிராக்ஸியா எதனால் ஏற்படுகிறது?

A

டிஸ்பிராக்ஸியாவின் சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் மூளையிலிருந்து ஒருங்கிணைப்புக்கான சமிக்ஞைகளைத் தசைகளுக்கு அனுப்புகிற நரம்பு செல்களில் ஏற்படும் பாதிப்புகளால் இந்தப் பிரச்னை வரலாம் என நிபுணர்கள் கண்டுள்ளனர்.

Q

டிஸ்பிராக்ஸியா எப்படிக் கண்டறியப்படுகிறது?

A

டிஸ்பிராக்ஸியாவைக் கண்டறிவதற்குத் தனிப்பட்ட பரிசோதனை என்று எதுவுமில்லை. பணிநிலை சார்ந்த சிகிச்சை அளிப்பவர் போன்ற ஒரு நிபுணர் பின்வரும் அடிப்படையில் ஒருவருடைய நிலையை மதிப்பிடலாம்:

 • இயந்திரவியல் திறன்கள் தாமதமாக வளர்தல்
 • இயந்திரவியல் திறன்களில் ஏற்பட்டுள்ள பலவீனம் செரிபரல் பால்சி போன்ற பிற நரம்பு சார்ந்த நிலைகளால் ஏற்படவில்லை

Q

டிஸ்பிராக்ஸியாவிற்குச் சிகிச்சை பெறுதல்

A

இந்த நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் இதற்கு உதவி பெறவும் பெற்றோர் பணிசார்ந்த சிகிச்சையாளர், பேச்சு சிகிச்சையாளர், சிறப்புக் கல்வி நிபுணர் அல்லது எந்த ஒரு குழந்தைகளுக்கான உளவியல் நிபுணரையும் அணுகலாம்.

Q

டிஸ்பிராக்ஸியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

டிஸ்பிராக்ஸியா பிரச்னை கொண்ட ஒரு குழந்தைக்குத் தன்னுடைய எண்ணங்கள், உணர்வுகள் அல்லது பிரச்னைகளைச் சொல்வதில் சிரமங்கள் இருக்கலாம். அந்தக் குழந்தையைக் கவனித்துக் கொள்கிற ஒருவர், நீ நினைப்பதை வெளிப்படையாகப் பேசலாம், உன்னுடைய சிரமங்களைச் சொல்லாம் என்று குழந்தைக்கு ஊக்கம் தர வேண்டும். குழந்தையின் ஒருங்கிணைப்புத் திறன்களை மேம்படுத்தக் கூடிய எளிய உடல் சார்ந்த நடவடிக்கைகளைச் செய்யுமாறும் குழந்தைக்கு ஊக்கம் தரலாம், இதன் மூலம் அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org