மனநலம் என்னும் அறிவு!

ஸ்கிஜோஃப்ரெனியா வந்த ஒருவர், தான் அதிலிருந்து மீண்டு சுதந்தரமாக வாழ்வதைப்பற்றிப் பேசுகிறார்

என்னுடைய பிரச்னை, 1970களில், அதாவது, என்னுடைய பள்ளி நாள்களிலேயே தொடங்கிவிட்டது. நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன், ஆனால், என்னுடைய பள்ளியில் பெரும்பாலானோர் உயர் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள், அங்கே என்னால் சரியாகப் பொருந்த இயலவில்லை. நான் என்னுடைய படிப்பில் கவனம் செலுத்த முயன்றேன். அதேசமயம், என்னுடைய நண்பர்கள், வகுப்புத்தோழர்கள் என்னைவிடச் சிறப்பாக உடுத்திக்கொண்டு வகுப்புகளுக்கு வந்தார்கள், அவர்களிடம் இருந்த பல வசதிகள் என்னிடம் இல்லை, இது என்னைத் தாழ்வாக உணரச்செய்தது. அப்போது, உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கான சீருடை அரைக்கால்சட்டையிலிருந்து முழுக்கால்சட்டையாக மாற்றப்பட்டது. ஆனால், என்னுடைய குடும்பத்தினரால் எனக்கு ஒரு முழுக்கால்சட்டையை வாங்கித்தர இயலவில்லை. ஆகவே, நான் பழைய சீருடையையே அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்றேன். இது எனக்கு மிகவும் சங்கடவுணர்வைத்தந்தது. சக மாணவர்கள் என்னை விநோதமாகப் பார்ப்பார்களோ என்று பயப்பட ஆரம்பித்தேன். அப்போதுதான், முதன்முறையாக, என்னைச்சுற்றியுள்ளவர்களைப்போல் நான் இல்லையே என்று எண்ணி நான் பயப்பட்டேன். 

ஒருவழியாக நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டேன், அதன்பிறகு, ஒரு சிறிய ஊரில் வசித்துக்கொண்டிருந்த நான், MBBS படிப்பதற்காக ஒரு நகரத்துக்குச் சென்றேன். என்னுடைய பிரச்னைகள் இப்போது இன்னும் அதிகரித்துவிட்டன. என்னால் நகர வாழ்க்கைக்கேற்ப மாற இயலவில்லை. அத்துடன், என் கல்லூரியிலும் ராக்கிங் பிரச்னைகள் அதிகமாக இருந்தன. நான் ராக்கிங்கை எண்ணி மிகவும் பயந்தேன், அதனால் என் மனத்தில் பல பய எண்ணங்கள் தோன்றின, அவற்றை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.

இதற்காக நான் ஒரு மருத்துவரைச் சந்தித்தபோது, நான் நகர வாழ்க்கைக்குப் பொருந்திப்போகச் சிரமப்படுகிறேன் என்றுதான் அவர் எண்ணினார். அவர் கொடுத்த மருந்துகள் என் பிரச்னையைத் தீர்த்துவிடும் என்று நான் நம்பினேன். ஆனால், அது நடக்கவில்லை. நான் கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்லவில்லை, தேர்வுகளைக்கூடச் சரியாக எழுதவில்லை. முதலாண்டு MBBS படிப்பின் நிறைவில், எனக்கு ஒரு மனநலப் பிரச்னை வந்திருப்பது கண்டறியப்பட்டது, ஆனால், அது என்ன என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இது தெரிந்தால் எல்லாரும் என்னைக் கேலிசெய்வார்கள் என்று நான் பயந்தேன், இரண்டாமாண்டில் கல்லூரியைவிட்டு நின்றுவிட்டேன். 

அந்த மனநலப் பிரச்னையிலிருந்து மீளும் நேரத்தில், நான் பல சவால்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. பணிவாழ்க்கை, சமூகவாழ்க்கை என்று பல இடங்களில், என்னுடைய மனநலப் பிரனை ஒரு களங்கவுணர்வுடனே பார்க்கப்பட்டது, அதையும் நான் சந்திக்கவேண்டியிருந்தது. என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவளித்தார்கள். நான் ஒரு பணிப்பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்றார்கள். நான் ஒரு மருத்துவரின் மகன். ஆகவே, நான் என் தந்தையின் மருத்துவமனையில் காசாளராகப் பணிபுரிந்தேன், அவருக்கு உதவினேன். அங்கே வந்த நோயாளிகளில் சிலருக்கு, நான் MBBS படித்துக்கொண்டிருந்தது தெரியும். ஆகவே, "நீ ஏன் இங்கே காசாளராக வேலைபார்க்கிறாய்?" என்று அவர்கள் கேட்டார்கள். "ஒன்று நீ மேலும் படிக்கவேண்டும், அல்லது, இன்னொரு மருத்துவமனையில் வேலைபார்க்கவேண்டும்" என்றார்கள். மனநலப் பிரச்னையிலிருந்து மீண்டுகொண்டிருந்த எனக்கு, இதுபோன்ற விமர்சனங்கள் மிகவும் வருத்தம் தந்தன. நான் என்னை மதிப்பற்றவனாக உணர்ந்தேன். என் தந்தையின் மருத்துவமனைக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன்

இன்னொரு சவால், என் உறவினர்களில் பலருக்குத் திருமணம் நடந்துகொண்டிருந்தது, நான்மட்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதைப்பற்றி யாராவது கேட்பார்களோ என்கிற சங்கடத்தில், நான் என்னுடைய வகுப்புத்தோழர்களின் திருமணங்களுக்குக்கூடச் செல்வதில்லை. அப்போது, என்னுடைய உறவினர்களில் சிலர், 'உனக்கு ஒரு திருமணம் நடந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்றார்கள். நல்லவேளையாக, நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அது சரியான தீர்மானம்தான் என்று இப்போது உணர்கிறேன். திருமணத்தின்மூலம் வந்திருக்கக்கூடிய பொறுப்புகள் எனக்கு மிகுந்த அழுத்தம் தந்திருக்கும், என் மனைவிக்கும் அழுத்தத்தைக் கொண்டுவந்திருக்கும்.

எனக்கு வந்திருந்த பிரச்னையைப்பற்றி எனக்கும் தெரியவில்லை, என் குடும்பத்துக்கும் தெரியவில்லை, ஆகவே, என்னால் விரைவாகக் குணம்பெற இயலவில்லை. எனக்கு வந்திருப்பது வெறும் தாழ்வுமனப்பான்மைதான் என்று நான் ஊகித்துக்கொண்டேன். 7-8 வருடங்கள் மருந்து சாப்பிட்டபிறகுதான், நான் ஸ்கிஜோஃப்ரெனியாவால் பாதிக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியவந்தது. நான் MBBS ஓராண்டு படித்தவன் என்பதால், இந்தப் பிரச்னையைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினேன். அதேசமயம், எனக்கு வந்திருந்த பிரச்னையின் இன்னொரு பக்கத்தை நான் அறிந்திருக்கவில்லை: ஆட்டிப்படைக்கும் எண்ணங்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு, நான் வெறுமனே மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டு வீட்டில் அமர்ந்திருந்தேன்.

இந்தப் பிரச்னையைச் சமாளிக்கக் கற்றுக்கொள்வது எனக்கோ என் குடும்பத்தினருக்கோ எளிதாக இருக்கவில்லை. 1970களில், 80களில் என் நகரத்திலிருந்த மனநல நிபுணர்கள் சிபாரிசு செய்த மருந்துகளுக்குப் பல பக்கவிளைவுகள் இருந்தன. அதனால் என் கண்கள் சுழலத்தொடங்கின. இந்தப் பக்கவிளைவுகளைச் சரிசெய்ய, நான் சில ஊசிகளைப் போட்டுக்கொண்டேன். ஆனால், அந்த ஊசிகளுக்கும் சில பக்கவிளைவுகள் இருந்தன. 1990களில், மனநல மருத்துவர்கள் எனக்கு ஒரு புதிய, மனநலப் பிரச்னைகளைக் குணமாக்கும் மருந்தைச் சிபாரிசு செய்தார்கள், அதுதான் என்னைப் பக்கவிளைவுகளிலிருந்து காப்பாற்றியது. சில ஆண்டுகளுக்குப்பிறகு, நான் இன்னும் சிறப்பான சிகிச்சை பெறவேண்டுமென்றால், பெங்களூரில் இருக்கும் NIMHANSக்குச் செல்லலாம் என்று என்னுடைய மனநல மருத்துவர் சிபாரிசு செய்தார்.

2010ல் நான் பெங்களூரு வந்தேன், அங்கே ஒரு மனநல ஆலோசகரைச் சந்தித்தேன். அவர் "மருந்துகள் 50%தான் ஒருவரைக் குணப்படுத்தும், மீதமுள்ள 50% அவரிடமிருந்து வரவேண்டும்" என்றார். அந்த மருத்துவர் என்னை ஒரு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பினார். 

அந்தப் புனர்வாழ்வு மையத்தில், நான் ஓர் ஒழுங்கைப் பராமரிக்கக் கற்றுக்கொண்டேன். நேரத்துக்கு எழுவது, தயாராவது, தொழில்சார்ந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது போன்றவை என்னுடைய சமூகத் திறன்களை மேம்படுத்த உதவின. நான் பணிபுரியக் கற்றுக்கொண்டேன், ஒரு குழுவில் இணைந்து செயல்படக் கற்றுக்கொண்டேன். நான் பெங்களூரு வந்தது சிகிச்சைக்காகதான், ஆனால் இப்போது, இங்கேயே தங்கிவிடத் தீர்மானித்தேன். நான் பணத்தைக் கையாளக் கற்றுக்கொண்டேன். நல்ல, பொறுப்பான மனிதன் ஆனேன். இப்போது, நான் சுதந்தரமாக ஒரு Paying Guest இல்லத்தில் வாழ்கிறேன், என்னை நானே கவனித்துக்கொள்கிறேன், என் பணத்தைக் கையாள்கிறேன். என்னுடைய மனத்தையும் உடலையும் அமைதியாக வைத்திருக்கும் விஷயங்கள், நான் சாப்பிடுகிற மருந்துகள், கலந்துகொள்கிற ஆலோசனை நிகழ்வுகள், அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை நிகழ்வுகள், நடைபயிற்சி, தொடர்ந்து பிராணாயாமம் செய்வது போன்றவை. இப்படி ஒரு மனநலப் பிரச்னையைச் சந்தித்ததன்மூலம், நான் ஆன்மிக உணர்வையும் வளர்த்துக்கொண்டேன். அதேசமயம், எனக்குள்ளும் என் மனத்துக்குள்ளும் என்ன நடக்கிறது என்பதைச் சரியாகத் தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டதால்தான் என்னால் குணமாக இயன்றது.  

இன்றைக்கு, நான் சுதந்தரமாக வாழ்கிறேன், என்னைநானே கவனித்துக்கொள்கிறேன் என்றாலும், மனநலப் பிரச்னை இல்லாத ஒருவரை நண்பராக்கிக்கொள்ள நான் தயங்குகிறேன், அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்களோ, கேலிசெய்வார்களோ என்று பயப்படுகிறேன். என் பெற்றோர் இறந்துவிட்டால் என்ன ஆகுமோ என்கிற கவலையும் எனக்கு உள்ளது. அதேசமயம், என்னுடைய சகோதரரும், NIMHANSம், புனர்வாழ்வு மையமும் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த மனநலப் பிரச்னையும், அதைச் சமாளித்துக்கொள்ளக் கற்றதும் என்னை ஒரு புதிய மனிதனாக மாற்றியுள்ளன. 

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனுக்குச் சொன்னபடி. சம்பந்தப்பட்டவரின் விருப்பப்படி, அவரது பெயர் இங்கே குறிப்பிடப்படவில்லை.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org