கவனித்துக்கொள்ளுதல்

மனச்சோர்வு உள்ள ஒருவருடன் எப்படிப் பேசுவது?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

அன்புக்குரிய ஒருவருக்கு மனச்சோர்வு வந்துவிட்டது, அவரைக் கவனித்துக்கொள்கிறவர் தன்னுடைய கவலையை அவரிடம் எப்படிப் பகிர்ந்துகொள்வார்? அது பெரிய சவால்தான். அதுபோன்ற நேரங்களில் அவர்களுக்கு ஆதரவளிக்கும்வகையில் பேசுவதற்கான சில வழிகள் இங்கே.

செய்யக்கூடாதவை: அவருடைய அனுபவத்தை அலட்சியமாகப் பேசுவதுபோன்ற மொழியை அல்லது சொற்களைப் பயன்படுத்துதல். மனச்சோர்வு கொண்டோர் அடிக்கடி கேட்கும் வாசகங்கள் சில:

"எல்லாருக்கும்தான் சவால்கள் வருகின்றன"

"நீ ஏன் அதைத் தனிப்பட்டமுறையில் எடுத்துக்கொள்கிறாய்?"

"இதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி, மகிழ்ச்சியாக இரு!"

"நீ இன்னும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்தால், அல்லது ஒரு புதிய பொழுதுபோக்கில் ஈடுபட்டால் நன்றாகிவிடுவாய்."

செய்யவேண்டியவை: அவர்கள் சில சவால்களை எதிர்கொள்கிறார்கள், அது அவர்களுக்குச் சிரமமாக இருக்கக்கூடும், இதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

செய்யக்கூடாதவை: மனச்சோர்வின் அறிகுறிகளை அடக்கிக்கொள்ளுமாறு அவரைத் தூண்டுதல் அல்லது வற்புறுத்துதல். தாங்கள் ஏதோ ஒரு தவறான விஷயத்தைச் செய்கிறோம் என்று அவர்கள் எண்ணும்படியாக எதையும் சொல்லவேண்டாம்:

"நீ ஏன் அழுகிறாய்?"

"அழாதே"

"இப்படிச் சோகமாக இருக்காதே, மகிழ்ச்சியாக இரு!"

அவர்களுடைய மனநிலையிலிருந்து மாறுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தவேண்டாம், அவர்களே அதற்குத் தயாராகும்வரை எந்தவிதத்திலும் வற்புறுத்தவேண்டாம்.

செய்யவேண்டியவை: அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். 'எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் பேசலாம், நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்' என்று சொல்லலாம். அவர்களுடைய தோளில் கை போட்டுப் பேசலாம், அல்லது, அணைத்துக்கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை: அவர்கள் தங்களுடைய மோசமான மனநிலையிலிருந்து வெளிவந்ததும், பழைய நிலையை நினைவுபடுத்துவதுபோல் பேசுதல்

"அட, முன்பு இருந்த நிலைமைக்கு இப்போ தலைகீழா மாறிட்டியே!"

செய்யவேண்டியவை: வழக்கமான பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம். முன்பு நடந்ததைப்பற்றி அவர்களிடம் பேச விரும்பினால், அதை மென்மையாகச் செய்யவேண்டும்: "இப்போ நீ நல்லாயிருக்கியா?"

"எனக்கு எதாவது சொல்ல விரும்பறியா?"

"நான் ஏதாச்சும் உதவிசெய்யலாமா?"

அவர்கள் பேசத்தயாராக இருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் தன்னிடம் பேசலாம் என்பதையும், தான் அதைக்கேட்கத் தயாராக இருப்பதையும் தெரிவிக்கலாம். சொல்லல்லாத தகவல்தொடர்பைப் பின்பற்றலாம் (அவர்களுடைய முதுகில் தட்டுதல் அல்லது அணைத்தல் போன்றவை), இதன்மூலம் அவர்களுக்குத் தங்களுடைய ஆதரவு இருப்பதை உணர்த்தலாம்.

செய்யக்கூடாதவை: அவர்கள் பேச இயலாத சூழ்நிலையில் இருக்கும்போது, பேசும்படி வற்புறுத்துதல் அல்லது தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருத்தல்.

செய்யவேண்டியவை: அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். அவர்களுக்காகத் தாங்கள் இருப்பதை உணர்த்தலாம், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் தங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினால், அதைப் புரிந்துகொள்ளத் தாங்கள் விரும்புவதைச் சொல்லலாம். உதாரணமாக, இப்படிப் பேசலாம்: "இப்போது நீ பேசவிரும்பாமலிருக்கலாம், அது எனக்குப் புரிகிறது, அதை நான் மதிக்கிறேன்."

ஒருவர் தன்னுடைய அன்புக்குரியவருக்கு என்ன பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள விரும்புவது இயற்கைதான், அவர் குணமடையத் தான் என்ன உதவி செய்யலாம் என்பதே தெரியாதபோது, அதை எண்ணித் திகைப்பதும், தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என வருந்துவதும் இயற்கைதான். அதை மென்மையாகக் கேட்கவேண்டும், அவர்கள் அதை விரும்பவில்லை, எதிர்க்கிறார்கள் என்று தெரிந்தால், அதைப்பற்றிப் பேசக்கூடிய நிலையில் அவர்கள் இப்போது இல்லாமலிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

செய்யக்கூடாதவை: விமர்சனக் கருத்துகளைச் சொல்லுதல். உதாரணமாக:

"நீ எப்போதும் முன்னேறமாட்டாய்."

"நீ தினமும் இப்படிதான் இருக்கிறாய்."

"நீ இப்படி நடந்துகொள்வதைப் பார்த்துப்பார்த்து எனக்குச் சலித்துவிட்டது."

"நீ எப்போது மாறுவாய்?"

"நீ எப்போது குணமாவாய்?"

"குணமாவதற்கு நீ செய்யும் முயற்சிகள் போதாது."

"நீமட்டும் மன உறுதியோடு இருந்தால், நீ குணமாகிவிடுவாய்."

"நீ தொடர்ந்து இதேமாதிரி பேசிக்கொண்டிருந்தால், நான் உன்னோடு பேசவே விரும்பவில்லை."

இப்படிப் பேசுகிறவர்கள் நல்லதை நினைத்துதான் பேசுகிறார்கள், அதன்மூலம், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய பழக்கவழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தெரிந்துகொள்வார் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல நேரங்களில் இது எதிர்மறையாகவே செயலாற்றக்கூடும், பாதிக்கப்பட்டுள்ளவர் தன்னுடைய அனுபவங்களைத் தனக்குள் வைத்துக்கொண்டு முடங்கிவிடக்கூடும். தங்களையும் அறியாமல், அவர் ஏதோ தவறு செய்கிறார் அல்லது, தானே விரும்பி இந்தப் பிரச்னையை வரவழைத்துக்கொண்டிருக்கிறார் என்கிற கருத்து வரும்படியாக அவர்கள் பேசிவிடக்கூடும்.

இந்தக் கருத்துகளை அவர்களுடைய அன்புக்குரியவர்கள் மனத்தில் வைத்துக்கொள்ளாமலிருக்கலாம்; அதேசமயம், அவர்கள் பாதிப்புக்குள்ளாவதுபோல் உணர்ந்தால், அவர்களுடைய பிரச்னையின் அறிகுறிகள் மோசமாகக்கூடும். சில நேரங்களில், அவர்கள் ஏற்கெனவே தங்களை யாரும் விரும்புவதில்லை, தங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கக்கூடும், அந்த நேரத்தில் இதுபோன்ற தூண்டுதல்களால் அவர்கள் தங்களைத்தாங்களே காயப்படுத்திக்கொள்ள எண்ணக்கூடும், அல்லது, பிறரைக் காயப்படுத்துவதுபற்றி எண்ணக்கூடும்.

செய்யவேண்டியவை: அந்தப் பிரச்னை அவருடைய தவறால் ஏற்பட்டது என்ற கருத்து தோன்றாதபடி தன்னுடைய கவலையைத் தெளிவாகச் சொல்லலாம். உதாரணமாக, அவர்கள் இப்படிப் பேசலாம்: “நீ தினமும் சோகமாக இருக்கிறாயே. அதைப் பார்க்கும்போது எனக்கு உன்னை நினைத்துக் கவலை ஏற்படுகிறது. உனக்கு ஆதரவாக நான் ஏதாவது செய்யலாமா?”

மனச்சோர்வுள்ள ஒருவருடன் பேசும்போது நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய வேறு சில விஷயங்கள்:

  • பிரச்னை வருவதற்குமுன்பு அவரை எப்படி நடத்தினோமோ அதேபோல் இப்போதும் நடத்தவேண்டும். அவரே அந்தப் பிரச்னையைப்பற்றிப் பேசினாலன்றி, அதை விவாதிக்கவேண்டியதில்லை. மற்ற செயல்பாடுகள், திட்டங்கள், அல்லது பொது ஆர்வங்களைப்பற்றிப் பேசலாம்.

  • அவர்களுடைய பழக்கவழக்கங்கள், மனோநிலையைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம், ஆனால், அவர்களை மிகவும் தொந்தரவு செய்யக்கூடாது. ஒருவேளை அவர்கள் இதைப்பற்றிப் பேச விரும்பாவிட்டால், அவர்களை மென்மையாக அணைத்து, அல்லது முதுகில் தட்டி, அதன்மூலம் அவர்களுக்கு ஆதரவாகத் தான் இருப்பதை உணர்த்தலாம்.

  • அவர்களுக்கு ஆதரவு தேவை என்று எண்ணினால், அதை அவர்களிடமே கேட்கலாம்: "நீங்கள் பேச விரும்புகிறீர்களா?" அல்லது “வேறு ஏதாவது ஒருவிதத்தில் நான் உங்களுக்கு ஆதரவளிக்கலாமா?”

மனச்சோர்வில் உள்ளவர்களுக்கு: மற்றவர்கள் நல்லெண்ணத்துடன் சொல்லும் கருத்துகள் அல்லது ஆலோசனைகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது?

மனச்சோர்வில் உள்ள ஒருவரிடம் மற்றவர்கள் நல்லெண்ணத்தோடு சில கருத்துகள் அல்லது அறிவுரைகளைச் சொல்லலாம், அவை அவரால் ஏற்றுக்கொள்ள இயலாதவையாக இருக்கலாம், அவர் அதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாளத் தயாராகிக்கொள்வது நல்லது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மற்றவர்களிடம் எப்படிப் பதில்சொல்வது என்பதைப்பற்றி அவர் தனது மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் பேசலாம்.

பணிவான, ஆனால், தன் கருத்தைத் தெளிவாகச் சொல்லும் பதில்களை அவர் தயாரித்துவைக்கலாம்:

"உங்கள் அக்கறைக்கு நன்றி. நான் உதவி பெற்றுக்கொண்டிருக்கிறேன், இப்போது சிறப்பாக உணர்கிறேன்.”

சில கேள்விகள் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைப்பதாக இருக்கலாம், அவர் அவற்றுக்குப் பதில் சொல்ல அசௌகர்யமாக உணரலாம், அதுபோன்ற நேரங்களில் அவர் இப்படிச் சொல்லலாம்: "இதைப்பற்றிப் பேசுவதற்கு இது சரியான நேரமில்லை என்று நினைக்கிறேன்."

பிறருடைய கருத்துகள் அல்லது கேள்விகள் அவருக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கினால், அவர் தன்னுடைய மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரின் ஆதரவை நாடலாம், அவர்கள் உதவியுடன் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கலாம்.

கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)

அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை