குறைபாடுகள்

இருதுருவக் குறைபாடு

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

இருதுருவக் குறைபாடு என்றால் என்ன?

இதுபற்றித் தெரிந்துகொள்வதற்கு ராமன் என்கிற ஐ.டி. துறை ஊழியரிடம் பேசுவோம்:

“என்னுடன் வேலை செய்த ஒருவர் சில நேரங்களில் மிகவும் விநோதமாக நடந்துகொண்டார். ஒருகணம் அவர் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுவார், ஏதோதோ விஷயங்களை நிறுத்தாமல் பேசுவார், அல்லது தான் ஒரு நிறுவனத்தைத் தொடங்கப்போவதாகவும் பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கப் போவதாகவும் மிகவும் ஊக்கத்தோடு பேசுவார். ஆனால், சில நாள் கழித்து அவர் திடீரென்று மிகவும் அமைதியாகிவிடுவார், யாருடனும் பேசமாட்டார், தனக்குத் தரப்பட்ட வேலைகளை நேரத்திற்குச் செய்ய மாட்டார்.

ஒரு முறை எங்கள் குழுவில் எல்லோரும் ஒன்றாக உணவு உண்ணச் சென்றோம். அப்போது, ஒரு வெயிட்டர் இவருடைய ஆர்டரைச் சரியான நேரத்துக்குப் பரிமாறவில்லை. அதற்காக அவர் ஒரு தட்டைத் தூக்கி அந்த வெயிட்டர்மீது அடித்துவிட்டார். அவர் இப்படி நடந்துகொண்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

சில நாள்களில் அவருடைய நடத்தை யாராலும் கணிக்க முடியாதபடி மாறிவிட்டது. அது அவருடைய பணியைப் பாதித்தது, சக ஊழியர்களுடன் அவர் கொண்டிருந்த உறவைப் பாதித்தது. ஒரு கட்டத்தில் நிறுவனம் அவரை வேலையிலிருந்து நின்றுகொள்ளுமாறு சொல்லிவிட்டது.

அவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று தெரிந்துகொள்வதற்கு எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. இதுபற்றி என்னுடைய குடும்ப மருத்துவரிடம் பேசினேன். அதன்பிறகுதான் என்னுடைய சக ஊழியர் இருதுருவக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததை நான் புரிந்துகொண்டேன்.”

இந்தக் கற்பனையான விவரிப்பு, நிஜ வாழ்க்கையில் இந்தக் குறைபாடு எப்படி அமையக்கூடும் என்பதைப் புரிந்து கொள்வதற்காகத் தரப்பட்டுள்ளது.

இருதுருவக் குறைபாடு (இதனைக் கிளர்ச்சி நிறைந்த மனச் சோர்வு நிலை என்றும் அழைப்பார்கள்) என்பது ஒரு தீவிரமான மன நோய் ஆகும். இது வழக்கத்துக்கு மாறான மற்றும் தீவிரமான மனோநிலை மாற்றங்களைத் தூண்டுகிறது. இதில் சம்பந்தப்பட்ட நபர் திடீரென்று 'உயர்வாக' (மருத்துவர்கள் இதனைக் கிளர்ச்சி நிலை என்று அழைப்பார்கள்) உணரலாம் மற்றும் திடீரென்று 'தாழ்வாக' (மருத்துவர்கள் இதனை மனச்சோர்வு என்று அழைப்பார்கள்) உணரலாம். இது சில நாள்களுக்குத் தொடரலாம் அல்லது பல வாரங்களுக்குத் தொடரலாம். ஒருவர் மனக்கிளர்ச்சி மற்றும் மனச் சோர்வு நிலைகளைத் தனித்தனியே அனுபவிக்கலாம், இந்த நிகழ்வுகள் திடீரென்று மாறலாம், ஒரே வாரத்தில்கூட பலமுறை மாறி மாறி வரலாம்.

தீவிர இருதுருவக் குறைபாடு உடைய ஒருவருக்கு, மனக் கோளாறு சார்ந்த அறிகுறிகளும் வரலாம். உதாரணமாக அவர்களுக்குப் பிரம்மைகள் தோன்றலாம், அல்லது மருட்சி தரும் காட்சிகள் தோன்றலாம், அவர்கள் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது அல்லது தற்கொலை செய்து கொள்வது பற்றிக்கூடச் சிந்திக்கலாம். இருதுருவக் குறைபாடானது ஒருவர் தினசரி வாழ்க்கையில் சாதாரணமாக இயங்கும் திறனைப் பாதிக்கலாம், இதனால் தொழில் சார்ந்த மற்றும் தனிப்பட்ட உறவுகள் சேதமடையலாம்.

குறிப்பு: இதய நோய் அல்லது நீரிழிவு நோய் போல இருதுருவக் குறைபாடும் நீண்ட கால நோய் ஆகும், இதனை வாழ்நாள் முழுவதும் சமாளித்துக் கையாளவேண்டும்.

எது இருதுருவக் குறைபாடு அல்ல?

நம் எல்லாருக்குமே அவ்வப்போது மனோநிலை மாறுகிறது, திடீரென்று மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம், திடீரென்று சோர்ந்துபோகிறோம், ஆனால் இவையெல்லாம் நம்முடைய தினசரி நடவடிக்கைகளைப் பாதிப்பதில்லை. இது இருதுருவக் குறைபாடு அல்ல.

மனச்சோர்வு என்பதும் இருதுருவக் குறைபாடு அல்ல. மனச்சோர்வுக்கும் இருதுருவக் குறைபாட்டுக்கும் இடையே  சில அறிகுறிகள் ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் அவற்றினிடையே முக்கியமான வித்தியாசம், இருதுருவக் குறைபாட்டில் மனக் கிளர்ச்சியும் மனச் சோர்வும் தீவிரமான மனோநிலை மாற்றங்களும் காணப்படும்.

இருதுருவக் குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்ன?

இருதுருவக் குறைபாடு கொண்ட மக்களுக்கு மனச் சோர்வு மற்றும் மனக் கிளர்ச்சி நிலைகளில் இரண்டு வெவ்வேறு விதமான அறிகுறிகள் ஏற்படலாம்.

மனக்கிளர்ச்சி நிலை: மனக்கிளர்ச்சி நிலையின்போது ஒருவர் திடுதிப்பென்று நடவடிக்கைகளில் இறங்குகிறார், ஒழுங்காகச் சிந்திக்காமல் தீர்மானங்களை எடுக்கிறார், வழக்கத்திற்கு மாறான ஆபத்துக்களை எதிர்கொள்கிறார். அதோடு, அவர்கள் இப்படி எதிர்பாராத விதமாக நடந்துகொள்வதால் ஏதேனும் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால் அவர் அதனை அலட்சியப்படுத்துகிறார் அல்லது அதுபற்றி அவருக்குத் தெரிவதேயில்லை.

  • மிகுந்த மகிழ்ச்சி உணர்வு, எதுவும் (ஒரு மோசமான செய்தி அல்லது சோகமான நிகழ்வு கூட) தன்னை எதுவும் செய்யாது என்று உணர்வது
  • திடீர் கோபம் அல்லது தீவிர எரிச்சல்    
  • மிகவும் உயர்ந்த, லட்சியவாதமான விஷயங்களை இவர்கள் மருள் காட்சிகளாகக் காணலாம் அல்லது, தர்க்கரீதியிலான காரணம் இல்லாத வலுவான நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக, ஒருவர் கடவுளுடன், பிரபலங்களுடன் அல்லது சரித்திரக் கதாபாத்திரங்களுடன் விசேஷ இணைப்பைக் கொண்டிருப்பதாகச் சொல்லலாம்.
  • ஒருவர் தன்னுடைய திறன்கள் மீது எதார்த்தமில்லாத நம்பிக்கைகளைக் கொண்டிருத்தல். உதாரணமாக ஒரு சிரமமான வேலையைத் தன்னால் செய்ய இயலும் என்றும், எதனாலும் தன்னைத் தடுக்க இயலாது என்றும் அவர் உணரலாம்.
  • திடீர் உணர்ச்சிக்கு ஆட்பட்டுச் செய்கிற செயல்களைக் கட்டுப்படுத்த இயலாமல் இருத்தல், ஆபத்தான பழக்க வழக்கங்களில் ஈடுபடுதல். உதாரணமாக, தேவையில்லாத பொருள்களை வாங்கித் தள்ளுதல், முட்டாள்தனமான தொழில் முதலீடுகள், பொறுப்பில்லாமல் வேகமாக வண்டி ஓட்டுதல் அல்லது அதீத பாலியல் செயல்பாடு.
  • மனத்தில் கட்டுப்படுத்த இயலாத சிந்தனைகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருத்தல்
  • தூங்க இயலாமல் இருத்தல், அதனால் அமைதியின்றியும் பரபரப்பாகவும் காணப்படுதல்
  • கவனம் செலுத்துவதில் சிரமம், சாதாரணமான வேலைகளைச் செய்ய இயலாமல் இருத்தல்
  • நாளில் பெரும்பகுதி நேரம் விரக்தியோடும் எரிச்சலோடும் இருத்தல்
  • வேகமாகப் பேசுதல், ஒரு சிந்தனையிலிருந்து இன்னொரு சிந்தனைக்குத் தாவிக் குதித்தல், சிந்தனையில் ஒழுங்கின்றி இருத்தல்
  • எதார்த்தம் என்ன என்பதை உணராமல் இருத்தல், இது சைக்கோசிஸ் (பிரம்மைகள் - உண்மையில் இல்லாத விஷயங்களைப் பார்த்தல் அல்லது கேட்டல்) நிலைக்கு வழிவகுக்கக் கூடும்
  • மிகவும் அதீதமான சுய மதிப்பு மற்றும் தன்னுடைய திறன்கள் மீது எதார்த்தமற்ற நம்பிக்கை
  • எண்ணச் சுழற்சிக் குறைபாடு - பொருள்களைச் சுத்தப்படுத்துதல் அல்லது ஒழுங்குபடுத்துதல், பல நாள்களுக்கு ஒரே இசையைக் கேட்டுக் கொண்டிருத்தல், பிறர் மீது ஆதிக்கம் செலுத்த முயலுதல் அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த முயலுதல்

மனச்சோர்வு நிலை: மனச்சோர்வு நிலையின் போது ஒருவருக்குப் பின்வரும் அனுபவங்கள் வரக்கூடும்:

  • தீவிர சோகம் அல்லது கவலை
  • நம்பிக்கையில்லாத உணர்வு
  • அவர்கள் முன்பு அனுபவித்துச் செய்த வேலைகளில் இப்போது ஆர்வமில்லாமல் இருத்தல்
  • ஆற்றல் இல்லாமல் இருத்தல், எளிதில் களைத்துப் போதல் மற்றும் சோம்பேறித்தனமாக இருக்க முயலுதல்
  • தூங்குவதில் சிரமங்கள்: மிகவும் அதிகமாகத் தூங்குதல் அல்லது தூங்காமலே இருத்தல்
  • பசியில் மாற்றங்கள், ஒழுங்காகச் சாப்பிட இயலாமல் இருத்தல், டயட் ஏதுமில்லாமலேயே குறிப்பிடத்தக்க எடைக் குறைவு
  • விஷயங்களில் கவனம் செலுத்துதல், ஞாபகம் வைத்துக் கொள்ளுதல் அல்லது தீர்மானம் எடுத்தலில் சிரமங்கள்
  • தன்னைக் காயப்படுத்திக் கொள்வது, மரணம் அல்லது தற்கொலை பற்றிய சிந்தனைகள்

உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது இந்த அறிகுறிகளில் எவற்றையேனும் நீங்கள் கவனித்தால் அவர்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுமாறு நீங்கள் ஊக்கப்படுத்தலாம்.

இருதுருவக் குறைபாடு எதனால் வருகிறது?

இருதுருவக் குறைபாட்டுக்கான உண்மையான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இருதுருவக் குறைபாடு என்பது பொதுவாக டீன் ஏஜ் அல்லது இளம்பருவத்தில் தொடங்குவது கவனிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறைபாடுபற்றி மக்களுக்குத் தெரியாத காரணத்தால், பெரும்பாலானோர் யாரிடமும் உதவி பெறாமல் நீண்ட நாள் சிரமப்படுகிறார்கள்.

இதில் சாத்தியமுள்ள ஆபத்துக் காரணிகள், ஹார்மோன் சமநிலையின்மை, மரபியல் காரணிகள், ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வு காரணமாக அதீத மன அதிர்ச்சி, போதை மருந்துகள் அல்லது பொருள்களைத் தவறாகப் பயன்படுத்துதல். இருதுருவக் குறைபாடானது தீவிர மனச் சோர்வு, சைக்கோசிஸ் அல்லது ஸ்கிஸோபெர்னியா போன்ற பிற நோய்களுடனும் காணப்படலாம்.

இருதுருவக் குறைபாட்டின் வகைகள்

இருதுருவக் குறைபாட்டில் நான்கு அடிப்படை வகைகள் இருக்கின்றன:

இருதுருவ I குறைபாடு: மனக்கிளர்ச்சி அல்லது கலந்த நிகழ்வுகள் குறைந்த பட்சம் ஏழு நாள்களுக்குத் தொடர்தல், அல்லது ஒருவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்குத் தீவிர மனக்கிளர்ச்சி அறிகுறிகள் காணப்படுதல். இத்துடன் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்குத் தொடரக்கூடிய மனச் சோர்வு நிகழ்வுகளும் இதில் வரும்.

இருதுருவ II குறைபாடு: மனச்சோர்வு நிகழ்வுகளும் தீவிர மனக்கிளர்ச்சி நிகழ்வுகளும் கலந்து காணப்படுதல், ஆனால் குறிப்பிடத்தக்க  மனக்கிளர்ச்சி அல்லது கலந்த நிகழ்வுகள் காணப்படாமல் இருத்தல்.

வேறு விதமாகக் குறிப்பிடப்படாத இருதுருவக் குறைபாடு (BP-NOS): இங்கே நோய்க்கான அறிகுறிகள் காணப்படுகின்றன, ஆனால் அதனை இருதுருவக் குறைபாடு I அல்லது II என்று வரையறுக்க இயலுவதில்லை. அதே சமயம் இந்த அறிகுறிகள் அந்த நபருடைய வழக்கமான நடவடிக்கைகளிலிருந்து தெளிவாக மாறுபட்டுள்ளன.

சைக்ளோதிமிக் குறைபாடு அல்லது சைக்ளோதிமியா: இது இருதுருவக் குறைபாட்டின் மிதமான வடிவம் ஆகும், இங்கே தீவிர மனக்கிளர்ச்சி மற்றும் மிதமான மனச்சோர்வு ஆகியவை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடரலாம்.

இருதுருவக் குறைபாட்டுடன் இருக்கக் கூடிய நிலைகள்

சில சூழ்நிலைகளில் இருதுருவக் குறைபாடு மற்ற குறைபாடுகளுடன் காணப்படலாம். உதாரணமாக ஸ்கிஜோஃப்ரெனியா அல்லது தீவிர மனச்சோர்வு. இதோடு இருதுருவக் குறைபாடு கொண்ட ஒரு நபருக்கு தைராய்டு, நீரிழிவு அல்லது பிற உடல் சார்ந்த நோய்கள் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

இருதுருவக் குறைபாடு எப்படிக் கண்டறியப்படுகிறது?

இருதுருவக் குறைபாட்டுக்கும் ஸ்கிஜோஃப்ரெனியா அல்லது மனச் சோர்வுக்கும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் இது தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. இருதுருவக் குறைபாட்டின் மிக முக்கியமான அறிகுறி அசாதாரணமான மனோநிலை உயர்வு (மனக்கிளர்ச்சி அல்லது அதீத மனக்கிளர்ச்சி). இந்த அறிகுறிகளுடன் வருகிற ஒருவருக்கு மனநல நிபுணர் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை நிகழ்த்துகிறார், அதன்மூலம் சூழ்நிலையைச் சரியாக அடையாளம் காணுகிறார், இந்த அறிகுறிகளை உண்டாக்கியிருக்கக் கூடிய மற்ற பிரச்சினைகள் அவரிடம் இல்லை என்பதை உறுதி செய்கிறார். அறிகுறிகளின் தீவிரத்தன்மையை மதிப்பிடுவதற்கு நிபுணர் அவரிடம் ஒரு தினசரிப் பதிவேட்டை எழுதி வருமாறு சொல்லலாம். இந்த தினசரிப் பதிவேட்டில் அவர்களுடைய மனோநிலை மாற்றங்கள், தூங்கும் பாணிகள் மற்றும் தினசரி நடவடிக்கைகளின் விபரங்களைப் பதிவு செய்யுமாறு நிபுணர் அவரிடம் கேட்கலாம். இது உரிய மருத்துவத்தை அவருக்குச் சிபாரிசு செய்வதற்கு உதவும். உளவியல் நிபுணர் அவருடைய சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை மதிப்பிடுகிறார். அந்த நிபுணர் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடமும் பேசி அவருடைய நிலையைப்பற்றி மேல் விபரங்களைத் திரட்டலாம். நோயின் தீவிரத்தன்மையை ஆராய்வதற்கு ஓர் உளவியல் சுய மதிப்பீட்டையும் நிகழ்த்தலாம்.

இருதுருவக் குறைபாட்டிற்குச் சிகிச்சை பெறுதல்

நீரிழிவு அல்லது இதய நோயைப் போல இருதுருவக் குறைபாடு என்பதும் ஒரு நீண்ட கால நிலையாகும். இதனை  ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கையாளவேண்டும். முறைப்படி இதனைக் கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால் ஒருவர் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழலாம். சரியான சிகிச்சை இருதுருவக் குறைபாடு தொடர்பான நிகழ்வுகள் அடிக்கடி நிகழாமலும், மிகவும் தீவிரமாகாமலும் பார்த்துக் கொண்டு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக் கூடும். இருதுருவக் குறைபாட்டைக் குணப்படுத்துவதற்கு மருந்துகள், சிகிச்சை மற்றும் ஆலோசனை (அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை) ஆகியவற்றைச் சேர்த்துப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். ஒருவருடைய வயது, மருத்துவ வரலாறு, குறைபாட்டின் தீவிரத் தன்மை அல்லது அவர் மருந்துகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சை மாறுபடலாம்.

ஒருவர் சிகிச்சை பெறாமல் இருந்தாலோ சிகிச்சை அல்லது மருந்துகளை நிறுத்தினாலோ இந்தக் குறைபாடு மோசமாகக் கூடும், அல்லது, அவர் பழைய நிலைக்குத் திரும்பக் கூடும். சில சூழ்நிலைகளில் அறிகுறிகள் எதிர்பாராதவிதமாகத் தூண்டப்படக்கூடும், சம்பந்தப்பட்ட நபருக்கு அது தெரியாமலே போகலாம் அல்லது அவரால் அதைக் கட்டுப்படுத்த இயலாமல் போகலாம்.

சிகிச்சையின் முக்கிய நோக்கம்:

  • குறைபாடு அடிக்கடி நிகழாமல், அதிகம் தீவிரமாகாமல் செய்தல்
  • சம்பந்தப்பட்ட நபர் தனது தினசரி வேலைகளைச் செய்துகொண்டு வீட்டிலும் அலுவலகத்திலும் தனது வாழ்க்கையை அனுபவிக்குமாறு செய்தல்
  • தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வதும் மற்றும் தற்கொலை ஆகியவற்றையும் தவிர்த்தல்

குறிப்பு: இந்த அறிகுறிகளில் சில, மனச்சோர்வு மற்றும் ஸ்கிஜோஃப்ரெனியா உள்ளவர்களிடமும் காணப்படுகின்றன. ஆகவே ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஒரு முழுமையான மதிப்பீடு மற்றும் நோயறிதல் ஆகியவற்றை நிகழ்த்திவிட்டுச் சிபாரிசு செய்யப்படும் சிகிச்சையைத் தொடர்வது முக்கியம்.

முக்கிய குறிப்பு: இருதுருவக் குறைபாடு கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொள்கிற ஆபத்து அதிகம். ஆகவே, எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் சிகிச்சையைத் தொடங்கவேண்டும்.

இருதுருவக் குறைபாட்டுடன் வாழ்தல்

இருதுருவக் குறைபாடு ஒருவருடைய வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் பாதிக்கக் கூடும். இந்தப் பிரச்னை கொண்ட ஒருவர், தனக்கு இருதுருவக் குறைபாடு இருக்கிற உண்மையை ஏற்றுக் கொண்டு அதைப்பற்றி இயன்றவரை நிறைய தெரிந்துகொள்ளவேண்டும். இந்த நிலையைச் சமாளித்து வாழ்வதற்கு அது அவர்களுக்கு உதவும்.

அவர்கள் செய்யக்கூடியவை:

  • மனநல நிபுணர் சிபாரிசு செய்யும் சிகிச்சையைப் பின்பற்றுதல்.
  • தொடர்ந்து பரிசோதனைக்குச் செல்லுதல், மருந்துகளை ஒழுங்காக எடுத்துக் கொள்ளுதல்.
  • தங்களுடைய ஊட்டச்சத்துத் தேவைகளைக் கவனித்துக்கொண்டு வழக்கமான அளவில் தூங்கி ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல்.
  • தங்களுடைய மனநிலையைத் தெரிந்து கொள்ளுதல், பிரச்னை அறிகுறிகளைத் தூண்டக்கூடிய சூழ்நிலைகள் அல்லது நிகழ்வுகளை அடையாளம் காணுதல்.
  • தங்களைக் கவனித்துக்கொள்பவர்களை (குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள்) அங்கீகரித்து மதித்தல்.
  • ஓர் ஆதரவுக் குழுவில் இணைந்து, இதே பிரச்னையைச் சந்திக்கும் பிற நபர்களுடன் பேசுதல். இந்த உரையாடல்கள் அவர்களை ஊக்கத்தோடு இருக்கச் செய்யும், அவர்களால் இந்த நிலையை இன்னும் சிறப்பாகக் கையாள இயலும்.

இருதுருவக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்

இருதுருவக் குறைபாடு கொண்ட யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை, சிகிச்சை பெறுவதற்கு அவர்களுக்கு ஊக்கம் தாருங்கள். அந்த நபர் தனக்கு ஒரு பிரச்னை உள்ளதையே ஏற்றுக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம். அந்தச் சூழ்நிலையில் நீங்கள் முதலில் மருத்துவரைச் சந்தித்து, பிறகு அவரை உங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கலாம். நீங்கள் செய்யக்கூடியவை:

  • அவர்களுடன் பேசும்போது அமைதியாகவும் பரபரப்பில்லாமலும் இருக்க முயற்சி செய்யுங்கள்.
  • நீங்கள் அமைதியாக இருந்தால் அது அவர்களுக்கு நேர்விதமாக ஊக்கம் தரக் கூடும்
  • அவர்கள் ஒரு செயல்திட்டத்தைப் பின்பற்றி அவர்களுடைய தினசரி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவேண்டும் என்று சொல்லி ஊக்கம் தாருங்கள். அறிகுறிகளைக் கட்டுபடுத்துவதற்கு அவர்களுக்கு இது உதவும்.
  • இருதுருவக் குறைபாட்டில் உணர்வுகள் மாறி மாறி வருவது எரிச்சல் தரலாம், அதனால் ஆபத்தும் வரலாம். எந்த விஷயங்கள் ஆபத்தான செயல்பாட்டை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் கவனித்து மதிப்பிட முயற்சி செய்யுங்கள், அந்த விஷயங்களைத் தவிர்ப்பதற்கு அவருக்கு உதவுங்கள். உதாரணமாக ஒழுங்கற்றுச் சாப்பிடுதல் அல்லது தூக்கத்தில் ஒழுங்கற்று இருத்தல் அல்லது எளிதில் பணம் கிடைத்தல்.
  • ஒருவர் இருதுருவக் குறைபாட்டின் தாக்கத்தில் எதையாவது செய்தபிறகு, அதை எண்ணி மிகவும் வெட்கப்படலாம், தங்களுடைய பொருந்தாத அல்லது ஆபத்தான, நோய் தொடர்பான நடவடிக்கையை நினைத்துக் குற்ற உணர்ச்சி கொள்ளலாம். அவர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள், அவர்கள் அப்படி நடந்துகொண்டது இந்தக் குறைபாட்டினால்தான், அவர்களே விரும்பி இவ்வாறு நடக்கவில்லை என்று அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
  • ஒழுங்காகச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவர்கள் குணமாகிவிடுவார்கள், இயல்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று அவர்களுக்கு உறுதி தாருங்கள்.
  • அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வது அல்லது தற்கொலை செய்துகொள்வதுபற்றிப் பேசுகிறார்களா அல்லது அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைத் தொடர்ந்து கவனியுங்கள், அப்படி ஏதேனும் நடந்தால் மருத்துவருக்கு உடனே தெரிவியுங்கள்.

கவனித்துக்கொள்பவரைக் கவனித்துக்கொள்ளுதல்

இந்தக் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கும் நிறைய அழுத்தம் மற்றும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் வரும். பொதுவாக கவனித்துக் கொள்ளும் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அழுத்தம், களைப்பு மற்றும் பரபரப்பு ஆகியவற்றை உணர்கிறார்கள். இதனால் இவர்களுக்கு மன அழுத்தம் வரக்கூடிய ஆபத்து உண்டு. கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தைப்பற்றி மிகவும் கவலைப்படுவதால், அவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள்.

இந்தக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளும் ஒருவருக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், அவருக்கு உதவி தேவைப்படலாம்:

  • இந்தக் கவனித்துகொள்ளும் பணியைத் தொடங்குவதற்குமுன்பு இருந்த நிலையோடு ஒப்பிடும்போது, அவர் இப்போது ஆற்றலுடனோ சுறுசுறுப்பாகவோ உணர்வதில்லை
  • அடிக்கடி ஜலதோஷம், நோய்த் தொற்று அல்லது ஜுரம் போன்ற உடல்நலப் பாதிப்புகள் அவருக்கு வருகின்றன
  • அவர் எப்போதும் களைப்போடு இருக்கிறார், குறிப்பிட்ட நேரம் தூங்கி ஓய்வெடுத்தபிறகும் களைப்பாகவே உணர்கிறார்
  • தன்னுடைய சொந்தத் தேவைகளையே அவர் அலட்சியப்படுத்துகிறார், இதற்குக் காரணம், இவர்களுக்கு வேலை மிகவும் அதிகமாக இருக்கிறது அல்லது இவர்களுக்கு அதுபற்றிய அக்கறையே இல்லை. தங்களுடைய வாழ்க்கை இன்னொருவரைக் கவனித்துக்கொள்வதைச் சுற்றியே ஓடுகிறது என்று நினைக்கிறார்கள், ஆனால் அது அவர்களுக்கு அதிக திருப்தி அளிப்பதில்லை
  • உதவி கிடைக்கும்போது கூட அவர்களால் இயல்பாக இருக்க இயலுவதில்லை
  • தாங்கள் யாரைக் கவனித்துக்கொள்கிறோமோ அந்த நபரிடமும் மற்றவர்களிடமும் அதிகம் பொறுமையின்றி, எரிச்சலோடு நடந்து கொள்கிறார்கள்
  • மிகவும் திகைத்துப்போனவராக, உதவி எங்கிருந்து வரும் என்றே தெரியாதவராக, நம்பிக்கையில்லாதவராக உணர்கிறார்கள்

இதுபோன்ற சூழ்நிலையில் உள்ள ஒருவர் தன்னுடைய உடல் மற்றும் மன நலத்தைக் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். அவர்கள் இவற்றைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்:

  • சரியான அளவு ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும், ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடவேண்டும்
  • தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்
  • அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தவேண்டும்
  • குற்ற உணர்ச்சி இல்லாமல் தங்களுக்காக நேரம் ஒதுக்கவேண்டும்
  • ஏதாவது ஒரு பொழுதுபோக்கை மேற்கொள்ளவேண்டும், அல்லது, தாங்கள் இயல்பாக உணரக்கூடிய ஒரு வேலையைச் செய்யவேண்டும்
  • மற்றவர்களுடைய உதவியைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும்
  • ஒரு நம்பிக்கையான ஆலோசகர் அல்லது நண்பருடன் பேசவேண்டும், தங்களுடைய சிந்தனைகள் மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்

எப்போது பெற்றோரிடம் பேசவேண்டும்?

க்ளஸ்ட்ரோஃபோபியா என்றால் என்ன?