மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

அசைவுச் சிகிச்சை: ஓர் அறிமுகம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நாம் மிகவும் உணர்ச்சிமயமாக உணரும்போது அல்லது அல்லது நாம் பாதிப்புக்கு உள்ளாகிற சூழ்நிலை ஏற்படும்போது ஏதாவது ஒரு பாடல் பல தீவிர உணர்வுகளைத் தூண்டி விடுகிறது, அல்லது ஒரு நடனம் நாம் உணர்வுகளில் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. நாம் இந்த உலகை நாம் புலன்களின் வழியாகக் காண்கிறோம், தினசரி வாழ்க்கையில் நாம் கலைகளைப் பயன்படுத்துகிறோம். கலை சார்ந்த சிகிச்சைகள் என்பவை உடலுக்கும் மனதுக்கும் எந்தவிதத் தீங்கும் விளைவிக்காதவை, மற்ற சிகிச்சைகளுடன் இணைந்து செயல்படுகிறவை அதன்மூலம் நோய்கள், சவால்களைத் தீர்க்க உதவுகிறவை.

அசைவுச் சிகிச்சை அல்லது நடனச் சிகிச்சை என்பது அசைவுகளை பயன்படுத்தி ஒருவர் அவர் உடலில் உள்ள நோய்களை (உடல் ரீதியான நோய் அல்லது மனநோய்) சரிசெய்கிறது. சில நேரங்களில் ஒருவருடைய குறைபாடு, வாழ்க்கை மாற்றங்கள், போன்றவற்றைக் கூட இந்தச் சிகிச்சை சரிசெய்யும், அவர்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையிலிருந்து இயல்பான நிலைக்கு மாற்றித்தரும்,

அசைவுச் சிகிச்சையின் நோக்கம் ஒருவருடைய அறிவாற்றலை, உடல்நலத்தை, மனநலத்தை, உணர்வு நலத்தை உறுதி செய்வது. ஓர் அசைவுச் சிகிச்சை நிகழ்வில் பலவிதமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. உதாரணமாக கையைக்காலை விரித்து ஆடுதல், கட்டமைப்பற்ற நடனம் போன்றவை. இதன்மூலம் ஒருவர் உடல் அசைவுகளைக் கொண்டு தங்கள் உணர்வுகளை, எண்ணங்களை, யோசனைகளை ஒரு பாதுகாப்பான சூழலில் வெளிப்படுத்தலாம்

தனிப்பட்ட அசைவைப்பற்றிய அறிவு

இந்த உலகில் பிறந்திருக்கிற எல்லாருக்குமே அசைவைப்பற்றிய அறிவு இருந்திருக்கிறது. ஒவ்வோர் உடலுக்கும் தனித்துவமான ஒரு மொழி உள்ளது. ஆனால் நம்மில் சிலர் அந்த மொழியை, அந்த உணர்வை மறந்துவிடுகிறோம், காரணம் அசைவுகளை நாம் பயன்படுத்தத் தவறுவதாக இருக்கலாம். ஏதாவது ஒரு நோய் காரணமாக இருக்கலாம் அல்லது நம்மை நாமே எப்படிப் பார்க்கிறோம் என்பதில் உள்ள சில தடைகளாக இருக்கலாம். அசைவுச் சிகிச்சை அளிக்கிற நிபுணர் ஒருவருக்குள் இருக்கிற இந்த அசைவு உணர்வை தூண்டி எழுப்புகிறார், அதன் மூலம் அவர்கள் தங்களை வெளிப்படுத்த உதவுகிறார். குறிப்பாக அவர்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கக்கூடிய எண்ணங்கள் அல்லது பிரச்னைகளைப்பற்றி பேசச் செய்கிறார்.

“அசைவுச் சிகிச்சை என்பதை நான் உளவியல் சிகிச்சைக்கு இணையானதாகச் சொல்வேன்” என்கிறார் திரிபுரா காஷ்யப். இவர் ஓர் அசைவுச் சிகிச்சையாளர். கிரியேட்டிவ் மூவ்மெண்ட் தெரபி அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சக நிறுவனர், “ஓர் உளவியல் சிகிச்சையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஓர் நிபுணரிடம் சென்று பேசுகிறீர்கள் உங்கள் மனதில் என்ன உள்ளது என்பதை வார்த்தைகளின் மூலம் தெளிவு படுத்திக் கொள்கிறீர்கள், இல்லையா? அசைவுச் சிகிச்சையும் கிட்டத்தட்ட அதேமாதிரிதான். இங்கே உடல் மொழியைப் பயன்படுத்தி, நாம் என்ன உணர்கிறோம், நாம் என்ன சிந்திக்கிறோம், எது நம்மைத் தொந்தரவு செய்கிறது, எது நம்மிடம் இல்லை, எதை நாம் பெற விரும்புகிறோம், எதை நாம் எட்டித்தொட நினைக்கிறோம், எதை நாம் நமக்குள் தேட விரும்புகிறோம் என்பதையெல்லாம் தெரிவிக்க இயலுகிறது.”

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருக்கு அசைவுச் சிகிச்சை எப்படி உதவும்?

அசைவுச் சிகிச்சை என்பது மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்தாமல் போகலாம். ஆனால் மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் செயலுடன் இயங்குவதற்கு இது உதவும் என்கிறார்கள் நிபுணர்கள். மனநலப் பிரச்னைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்கிறவர்கள் சோம்பலாக உணரக்கூடும், வெவ்வேறு சூழ்நிலைக்களுக்காக வழங்குகின்ற தீர்வுகள் மாறியிருப்பதாக உணரக்கூடும். அது போன்ற நேரங்களில் அசைவுச் சிகிச்சை ஒரு நல்ல மாற்றுத் தீர்வாக விளங்குகிறது. அதாவது மருந்துகளால் உண்டாகும் மாற்றங்களை அது நேர் செய்கிறது. உடல் நலப் பிரச்னை உள்ளவர்களுக்கு பிஸியோதெரபி உதவுவது போல, மனநலப் பிரச்னைகளுக்கு அசைவ சிகிச்சைகள் உதவுகின்றன. இந்தச் சிகிச்சையில் தலையீடானது வெளியே எங்கிருந்தும் வருவதில்லை. உள்ளே ஒவ்வொருவருக்கும் இருக்கிறது, இது உணர்வு அடைப்படையிலானது, ஆகவே அவர் தன்னை வெளிப்படுத்தவேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறது, தங்களுடைய சுயத்துடன் இணைந்து தாங்கள் யார் என்பதை நிஜமாகப் புரிந்து கொள்கிறார்கள். அதன்மூலம் மனநோய் காரணமாக மற்றவர்கள் அவர்கள் மீது திணித்திருக்கும் பிம்பங்களைத் தாண்டி அவர்கள் முன்னேறுகிறார்கள்.

அசைவுச் சிகிச்சை என்பது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மட்டும்தானா?

அசைவுச் சிகிச்சை என்பது நோய் வாய்ப்பட்டவர்களுக்கு மட்டுமில்லை. யாரெல்லாம் தங்கள் உடலை இன்னும் நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களெல்லாம் இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொண்டு இன்னும் பயன்பெறலாம். இன்றைக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா நோய்வாய்ப்பட்டவர்களும் ஆரோக்கியமாக உள்ளவர்களும் அசைவுச் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்கள், அதன்மூலம் பலன் பெறுகிறார்கள். அசைவுச் சிகிச்சையானது ஒருவருடைய சிறிய மற்றும் பெரிய செயலிழப்புகளைக் கையாள உதவலாம், அவர்களுடைய ஆரோக்கிய உணர்வை மேம்படுத்தலாம். அசைவுச் சிகிச்சை என்பது ஒருவர் தன்னுடைய வாழ்வை மறுகட்டமைப்பு செய்ய முயற்சிக்கும்போதும், ஒரு நல்ல உத்தியாகப் பயன்படுகிறது; தாங்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி ஒருவர் சந்தேகங்களையோ தாழ்வான கருத்துகளையோ கொண்டிருந்தால், அவற்றைத் தாண்டி முன்னேறுவதற்கு அசைவுச் சிகிச்சைகள் துணைபுரிகின்றன.

இதற்காகச் சிகிச்சை பெற்ற ஒரு பயிற்சியாளர் தன்னிடம் வருகிற ஒவ்வொருவரையும் அலசுகிறார் அவருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை தேவை என்பதைத் தீர்மானிக்கிறார். அதன்பிறகு அவர்களுக்கு அவர் தனியே சிகிச்சை வழங்கலாம் அல்லது பிறருடன் சேர்ந்து சிகிச்சை வழங்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு உள்ள சவால்கள் அல்லது பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில், அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் என்னென்ன என்பதைத் தீர்மானித்து அவர் சிகிச்சை முறையை தீர்மானிக்கிறார். அதன்படி அவர் செயல்படுகிறார். உதாரணமாக ஒருவருக்கு கவனக்கூர்மை இல்லையென்றால் அசைவுச் சிகிச்சையாளர் தாளத்தைப் பயன்படுத்தி செய்யும் செயல்பாடுகளில் அவரை ஈடுபடுத்தக்கூடும், அதன்மூலம் கவனக்கூர்மையை அதிகரிக்கக்கூடும். இன்னொரு உதாரணம் ஒருவருக்கு சமூகத்தில் பிறருடன் பணிபுரியும் திறன் இல்லை என்றால், அசைவுச் சிகிச்சையின் போது அவர் பிறருடன் இணைந்து செயல்படும் கட்டாயத்தை அந்தச் சிகிச்சையாளர் தேர்ந்தெடுக்கக்கூடும். உதாரணமாக ஒரு பந்தை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றும் எளிய அசைவானது , ஒருவரோடு ஒருவர் கண்ணுக்குக் கண் பார்க்கும் செயல்பாட்டை தூண்டுகிறது. ஒருவரைப் போலவே செய்யவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது, ஒருவர் மற்றவரை பின்தொடரவேண்டிய நிலையை உருவாக்குகிறது. இது போன்ற செயல்பாடுகள் மிகவும் எளிதானதாகத் தோன்றினாலும் உண்மையில் அவை சில ஆழமான பிரச்னைகளை குணப்படுத்திவிடுகின்றன. “அசைவுச் சிகிச்சை என்று இல்லை எந்த ஒரு சிகிச்சையும் நோய்வாய்ப்பட்டவர்களுத்தான் என்று எண்ணி விடக்கூடாது” என்கிறார் காஷ்யப் “நாம் இயல்பாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு விதத்தில் பார்க்கபோனால் நாம் யாரும் இயல்பாக இல்லை என்பதுதான் உண்மை நாம் எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்கிறது”.

“இது பற்றி நான் பல பரிசோதனைப் பட்டறைகளை நடத்தியிருக்கிறேன். இந்தப் பட்டறைகளுக்கு வந்தவர்கள் சொல்லும் பிரச்னைகளை கேட்கக் கேட்க எனக்கு ஆச்சரியம் தான் ஏற்படுகிறது. சிலருக்கு உணர்வுப் பிரச்னைகள், சிலருக்கு நம்பிக்கைப் பிரச்னைகள், சிலரால் சில உணர்வுகளை விட்டுக்கொடுக்கமுடிவதில்லை, சிலரால் கோபத்தை, பயத்தை, பதற்றத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தப் பிரச்னைகள் எல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் வரும் என்று நாம் எண்ணுகிறோம் ஆனால் உண்மையில் நாம் சாதாரணமானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் இந்தப் பிரச்னைகள் வரக்கூடும், ஆகவே கலை சார்ந்த சிகிச்சை, குறிப்பாக அசைவுச் சிகிச்சை எல்லாருக்கும் தேவை.” என்கிறார் காஷ்யப்.

ஓர் அசைவுச் சிகிச்சை நிகழ்வு எப்படி நடக்கிறது?

அநேகமாக நாம் எல்லாருக்குமே நம்முடைய உடலைப்பற்றிய சில தயக்கங்கள் இருக்கின்றன ; உதாரணமாக சிலர் பொதுவில் மற்றவர்களின் முன் நடனமாட மாட்டார்கள். காரணம் தங்களுக்கு நடனம் ஆடத் தெரியாது என்று அவர்கள் உறுதியாக நம்புவதுதான். இதுபோல ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய சவால்களை மனத்தில் கொண்டுதான் அசைவுச் சிகிச்சை நிகழ்வுகள் வடிவமைக்கப்படுகின்றன. ஒவ்வோர் அசைவுச் சிகிச்சை நிகழ்விலும் நான்கு முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன.

  • வார்ம்-அப் அல்லது விளையாட்டுகள் அல்லது செயல்பாடுகளின் மூலம் அசைவை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், இங்கே அசைவுச் சிகிச்சைக்கு வந்திருக்கிறவர் நிகழ்வுக்குத் தயாராகிறார், தன்னுடைய அசைவுகளை தானே சௌகரியமாக உணரத் தொடங்குகிறார். உதாரணமாக பலூன் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஒரு சௌகரியமான உணர்வை உண்டாக்கி, அவர்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்துகிற சூழல் உண்டாக்கப்படும் .
  • கருப்பொருள் உண்டாக்கம் இங்கே பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்ட குழுவின் குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ற நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன, உதாரணமாக உடல் குறைபாடு கொண்ட சிலருக்கு பயிற்சி அளிக்கும்போது அவர்களுடைய உடல் ஒருங்கிணைப்பு மற்றும் இயக்க மேம்பாடு ஆகிய இலக்குகளை மனத்தில் கொண்டு அந்தக் கருப்பொருளுக்கேற்ற செயல்பாடுகள் சொல்லித்தரப்படும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல் ஒருங்கிணைப்பைத் தெரிந்துகொண்டு, அதனை மேம்படுத்துவதற்கு ஏற்ற செயல்களை சிகிச்சையாளர் உருவாக்குவார்.
  • குளிர்தல் கட்டம், இந்தச் செயல்பாடுகள் அசைவுப் பயிற்சி பெறுபவர் தங்களைத் தளர்த்திக்கொண்டு இயல்புநிலைக்குத் திரும்ப உதவுகின்றன. இதில் மூச்சுப் பயிற்சி மற்றும் சில குறிப்பிட்ட அசைவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • அலசுதல் அல்லது சிகிச்சையைப் பூர்த்தி செய்தல், இங்கே சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சையாளருடன் பேசுகிறார்கள். இந்த நிகழ்வு எப்படி இருந்தது என்று அலசுகிறார்கள். அவர்கள் ஒருங்கிணைப்பின் சாத்தியங்களைப்பற்றிப் பேசக்கூடும், உதாரணமாக இந்தப் பயிற்சியின்போது நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை அனுபவித்த உணர்வுகளை நிஜ வாழ்க்கையில் கொண்டுவந்து பயன்படுத்துவது எப்படி?

ஆனால் எனக்கு நடனமாடத்தெரியாதே!

ஓர் அசைவுச் சிகிச்சை நிகழ்வு என்பது ஒரு நடன வகுப்பு அல்ல, நடனம் தெரிந்தவர்கள்தான் இதில் கலந்துகொள்ளவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒருவர் நடன வகுப்புக்கு செல்கிறார் என்றால் அங்குள்ள ஆசிரியர்கள் அவருடைய பாணி, வடிவமைப்பு, உத்தி ஆகியவற்றை கவனிப்பார்கள். ஆனால் அசைவுச் சிகிச்சை வழங்குகின்ற நிபுணர்கள் அவருடைய உத்தியையோ, பாணியையோ வடிவமைப்பையோ கவனிக்கமாட்டார்கள். அவர் எப்படி நடனமாடுகிறீர்கள் என்பதை வைத்து அவரை யாரும் மதிப்பிட மாட்டார்கள், நடனமாடும்போது அவர் எப்படித் தோன்றுகிறார் என்பதை யாரும் கவனிக்க மாட்டார்கள். அவர் இப்படித்தான் நடனமாடவேண்டும், இதைத்தான் சாதிக்கவேண்டும் என்று எந்தவிதமான கட்டாயமோ அழுத்தமோ கிடையாது.

ஓர் அசைவுப் பயிற்சி நிகழ்வில் கலந்துகொள்கிறவர்கள் தங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை வெளிப்படுத்தவேண்டும் என ஊக்குவிக்கப்படுகிறார்கள். நடன வகுப்பில் இசையைக் கேட்டவுடன் ஒருவர் நடனமாடத் துவங்கிவிடவேண்டும். ஆனால் அசைவுச் சிகிச்சையில் அப்படி இல்லை. பயிற்சி தருபவர் அவருக்கு பலவிதமான அசைவு செயல்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துவார், படிப்படியாக உடலுக்கு பல்வேறு அசைவு அனுபவங்களை வழங்குவார். ஒரு கட்டத்தில் உடல் நன்கு சௌகரியமான நிலைக்கு வந்து தன்னைத்தானே வெளிப்படுத்தத் துவங்கிவிடும். அசைவுச் சிகிச்சை அளிக்கிற நிபுணர், ஒருவர் இப்படிதான் நடனமாடவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை, அவர் இப்படி அசையலாமே என்று யோசனைகளை மட்டுமே வழங்குகிறார். அதன்பிறகு எப்படி அசைவது என்பதை சிகிச்சை பெறுபவர்தான் தீர்மானிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அசையும் வேகம் அதிகரிக்கிறது, இந்த வேகம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் தங்களுக்கு எந்த வேகம் சௌகரியமாக இருக்கிறதோ அந்த வேகத்தில் அவர்கள் ஆசையைத் தொடங்குவார்கள், தாங்கள் எந்த அளவு தங்கள் உடலை அசைக்க விரும்புகிறோம் என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள். “இந்தச் சிகிச்சை பெறுகிற யார் மீதும் எந்தவிதமான தீர்ப்பும் வழங்கப்படுவதில்லை” என்கிறார் கீதாஞ்சலி சாரங்கன். இவர் பெங்களூரில் உள்ள ஸ்நேகதாரா அறக்கட்டளையின் கலை அடிப்படையிலான சிகிச்சை நிபுணர். “அசைவுச் சிகிச்சை அளிப்பவர் யாருக்கும் மதிப்பெண் போடுவதில்லை, அவர்களுடைய உருவாக்கம் எப்படி இருக்கிறது என்று தீர்மானிப்பதில்லை. இங்கே பலன் முக்கியமில்லை, செயலில்தான் கவனம் செலுத்தப்படுகிறது.”

அசைவுச் சிகிச்சை தனக்கு சரிப்படுகிறதா என்று ஒருவர் எப்படித் தெரிந்துகொள்வது?

பெரும்பாலான அசைவுச் சிகிச்சை நிபுணர்கள் ஒன்று அல்லது இரண்டு வகுப்புகளை பரிசோதனை அடிப்படையில் வழங்குகிறார்கள். சிகிச்சை பெற விரும்பும் ஒருவர் இந்தப் பரிசோதனை வகுப்புகளுக்குச் சென்று பார்த்து அவற்றின் அடிப்படையில் தாங்கள் இதைத் தொடர்வதா வேண்டாமா என்று தீர்மானிக்கலாம்.

அசைவுச் சிகிச்சை பெற விரும்பும் ஒருவர் தனக்கு ஏற்ற சிகிச்சையாளரை எப்படித் தீர்மானிப்பது?

ஒருவர் தனது பிரச்னைக்கு அசைவுச் சிகிச்சை அல்லது நடனச் சிகிச்சை மூலம் தீர்வு காண விரும்புகிறார் என்றால், தனக்கு ஏற்ற சிகிச்சையாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் அவர் சில விஷயங்களைச் செய்யவேண்டும். நன்கு நடனப் பயிற்சி பெற்றவர்கள், நடனக் கலைஞர்கள் எல்லாரும் நல்ல நடனச் சிகிச்சையாளர்கள் ஆகிவிடமுடியாது. நடனச் சிகிச்சையாளர் என்பவர், நடனச் சிகிச்சையில் தனிப்பயிற்சி பெற்றிருப்பார். மக்களுடைய பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு அசைவு மற்றும் நடனம் மூலமாக எப்படி சிகிச்சை தருவது என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்.

தனக்கு ஏற்ற சிகிச்சையாளரைத் தீர்மானிக்கும்முன் அவர் இந்தக் கேள்விகளை மனதில் வைத்திருக்கவேண்டும்:

  • அவர்களுடைய தகுதிகள் என்ன? அவர்கள் நடனச் சிகிச்சையில் பயிற்சி பெற்றிருக்கிறார்களா?
  • அவர்களுக்கு உளவியல் துறைப் பின்னணி இருக்கிறதா?
  • அவர்கள் எத்தனை நாளாக நடனச் சிகிச்சை வழங்கி வருகிறார்கள்?
  • அவர்கள் யாருக்கெல்லாம் நடனச் சிகிச்சை வழங்கியிருக்கிறார்கள்? அவர்களுடைய அனுபவமும் உங்களுடைய தேவைகளும் பொருந்திப் போகிறதா?
  • அவர்கள் இதற்குமுன்னால் யாருக்காவது நீண்டகாலம் நடனச் சிகிச்சை வழங்கியிருக்கிறார்களா? இதற்குமுன்னால் பலருக்கு நடனச் சிகிச்சை வழங்கியவர்கள், அந்தச் சிகிச்சை எப்படி, யாருக்கு பலன் தருகிறது என்பதை அறிந்திருப்பார்கள்.
  • அவர்களுடன் பழகும்போது தான் இயல்பாக உணர்கிறோமா?
  • தேவைப்பட்டால் அவர்களிடம் ஓரிரு பரிசோதனை வகுப்புகளுக்குச் செல்லலாம், அவர்களுடைய பாணி தனக்குப் பொருந்திப்போகிறதா, அவர்களுடைய பாணி மற்றும் அணுகுமுறைக்குத் தன்னுடைய உடல் எப்படி பதில்சொல்கிறது என்று சிந்திக்கலாம், அதன் அடிப்படையில் தீர்மானிக்கலாம்.

கற்றல் குறைபாடு

மனநல மருந்துகளின் நன்மைகள் அவற்றால் வரும் பக்க விளைவுகளைவிட அதிகமா?

உங்கள் குழந்தையின் சுய எண்ணக்கருவை மேம்படுத்த நீங்கள் எப்படி உதவலாம்?

ஆலோசனை வழங்குதல் என்றால் என்ன? அது எப்போது உதவலாம்?

இயங்கியல் பழகுமுறைச் சிகிச்சை: ஓர் அறிமுகம்