குறைபாடுகள்

வலிப்பும் மனநலனும்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

வலிப்பு என்பது, மூளைசார்ந்த ஒரு நரம்பியல் குறைபாடு. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறவருடைய உடலில் இழுக்கப்படுவதைப்போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டைச் சிகிச்சை, மருந்துகளால் கட்டுப்படுத்தலாம், ஆனால், இதனால் பாதிக்கப்பட்டவர் சமூகத்தில் அழுத்தத்தையும் சந்திக்கிறார். "வலிப்புப் பிரச்னை கொண்டவர்களில் கிட்டத்தட்ட 80% பேர் சிகிச்சை, மருந்துகளைப் பெறுகிறார்கள்; தொலைநோக்கில் பார்க்கும்போது, அநேகமாக அவர்களில் எல்லாரும் வலிப்பிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள். சுமார் 20% பேர் வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள்: மனநலப் பாதிப்பு, செரிபரல் பால்சி அல்லது வேறு வகையான மூளைக் காயம்" என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஹெச். வி. ஶ்ரீனிவாஸ்.

வலிப்பும் மனநலனும்

வலிப்புக் குறைபாடானது குறிப்பிடத்தக்க உளவியல் விளைவுகளுடன் தொடர்புகொண்டுள்ளது. வலிப்புப் பிரச்னை கொண்டவர்களுடைய சுய மதிப்பு குறைவாக இருக்கலாம், அவர்கள் அதிகப் பதற்றம், மனச்சோர்வைச் சந்திக்கலாம். 

வலிப்புத் தாக்குதலை முதன்முறையாகச் சந்திக்கும் ஒருவர், இவற்றை அனுபவிக்கக்கூடும்:

·       அதிர்ச்சி, அச்சம், சோகம் அல்லது மறுப்பு

·       பள்ளியில், அலுவலகத்தில் அல்லது வேறொரு சமூகச்சூழலில் இந்தப் பிரச்னை தன்னைத் தாக்கிவிடுமோ என்கிற அச்சம்

·       தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து அல்லது அலுவலகத்திலிருந்து தங்களை வெளியே அனுப்பிவிடுவார்களோ என்கிற அச்சம்

இந்த அச்சங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கும் அழுத்தத்தை உண்டாக்கலாம்.

இந்தப் பிரச்னை உள்ள ஒருவர் நெடுநாட்களுக்கு ஏதோ ஒருவிதமான உணர்வு அழுத்தத்தை அனுபவிக்கிறார், அதனால் அவருடைய அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்றால், அவர் தன்னுடைய உணர்வு நலனை மேம்படுத்துவதற்காக ஒரு நிபுணரைச் சந்தித்து உதவிபெறுவது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

மன நல அம்சங்களைச் சமாளித்தல்

பல நேரங்களில், மக்களுக்கு வலிப்புபற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லை அல்லது, இந்தப் பிரச்னை குணப்படுத்த இயலாத ஒரு மனநோய் என்று தவறாகப் புரிந்துகொண்டுவிடுகிறார்கள். வலிப்பு நோய் கொண்டவரும் அவருடைய குடும்பத்தினரும் இதனால் வரும் அழுத்தத்தைச் சமாளிப்பதற்கு நிபுணர்கள் சில எளிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

·       தங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்; மருத்துவருடைய பரிந்துரைப்படி தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வதன்மூலமும் சிகிச்சை பெறுவதன்மூலமும் தொலைநோக்கில் தங்களுக்கு நன்மை உண்டு என்று நம்பவேண்டும்

·       விளையாட்டு அல்லது வேறுவிதமான உடல்சார்ந்த செயல்பாடுகளில் பங்கேற்றுத் தன்னை உடல்தகுதியுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளவேண்டும். அதேசமயம், நீச்சல், வண்டி ஓட்டுதல், மோட்டார் பந்தயங்கள் அல்லது மலையேற்றம் போன்றவற்றில் ஈடுபடவேண்டாம்; இவற்றில் ஈடுபடும்போது வலிப்புப் பிரச்னை தாக்கினால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்

·       போதுமான அளவு உறங்கவேண்டும். மதுப்பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும் அல்லது கட்டுப்படுத்தவேண்டும்

·       உணர்வு அழுத்தத்தைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறியவேண்டும்

·       ஒழுங்காக மருந்துகளை உட்கொள்ளவேண்டும்

வலிப்புப் பிரச்னை கொண்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களை அளவுக்கதிகமாகப் பாதுகாக்கவேண்டாம்; மற்றவர்களை நடத்துவதுபோலவே அவர்களையும் இயல்பாக நடத்தலாம்

பார்வைகள்

டி போயர் HM1, முலா எம், சண்டெர் ஜெடபிள்யூ.வலிப்புபற்றிய சர்வதேசச் சுமை மற்றும் களங்கவுணர்வு.வலிப்பு& நடவடிக்கை2008;12:540-546.

ஆலோசனை வழங்குதல் என்றால் என்ன? அது எப்போது உதவலாம்?

அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை

கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)